Monday, June 2, 2008

கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் ஊடகங்களில் மாறி மாறிக் கடித்துக் குதறித் துப்பிய பின் எங்கேனும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் என் பங்குக்கு நானும் பிளேடு போடலாம் என்று இந்தப் பதிவு.

இரு வாரங்களுக்கு முன்பு மைய அரசில் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தோல்வி என்பது சற்று ஆட்டம் கொடுக்க வைக்கிற விஷயம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் 25 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி தொடர்ச்சியாக 16 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர பிரதேசம், அருணச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டது ஆனால் கர்நாடகா, ஒரிஸ்ஸô, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2005ல் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே வெற்றியைப் பறித்த காங்கிரஸ் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியது. 2006ல் அஸ்ஸôமில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதே ஆண்டு மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோல்வி கண்டது. 2007ல் குட்டி மாநிலங்களான மணிப்பூர் கோவா போன்ற இடங்களில் வெற்றிகண்ட காங்கிரஸ், பஞ்சாப், உத்தரகாண்டம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2008ல் நிலைமை படுமோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று வரமுடியவில்லை. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.

நான் மேலே சொன்ன எல்லா மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது அவர்கள் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக, அவர்கள் அறிவித்த திட்டங்களின் தோல்விகளுக்கு தோல்விகளுக்கு எதிராகத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது.

(அடடே... நானும் ஒரு அழுக்குக் கோட்டு போட்டுக் கொண்டு தூர்தர்ஷன் பேட்டிகளில் உட்காரலாம் போலிருக்கிறதே?)

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிட்டிய வெற்றி தென்னகத்தில் அவர்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு தீர்ப்பாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ முழு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கர்நாடகத் தேர்தல் வெற்றி அவர்களுக்குப் பாராளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விடுமா என்று இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.

தேவே கௌடா மற்றும் குமாரசாமி கோஷ்டிகள் செய்த அரசியல் துரோகத்துக்கு அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம்.

எப்போதும் நாம் கல்யாண வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கும் சாஸ்திரிகளை மறந்து விடுகிறோம்.

பொதுவாக வட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வன்முறை அதிகம் இருக்கும். Muscle Power அதிகம் பாவிக்கப்படும். தென்னகத்தில் நடக்கும் தேர்தல்களில் Muscle Power குறைந்து Money Power அதிகம் இருக்கும்.

Muscle Power காட்டுபவர்களைக் கூட நான்கு தட்டுத் தட்டி விழுக்காட்டலாம். Money Power காட்டுபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆசாமிகள். அவர்கள் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போய் விளையாட்டுக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட விளையாட்டு வித்தகர்கள் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் மிக அதிகம். Money Power காட்டி விளையாட்டுக் காட்டும் வித்தகர்களுக்கும் விளையாட்டுக்காட்டி இந்தத் தேர்தலை மிகவும் நேர்மையாகவும், திறமையாகவும் அருமையாகவும் நடத்திக் காட்டிய கோபால்சாமியும் அவருடைய அதிகாரிகளும் நம்முடைய பாராட்டுக்கும் தலைவணக்கங்களுக்கும் உரித்தானவர்கள்.


கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.

ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.

இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

12 comments:

  1. ///கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.

    ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.

    இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

    இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்////

    நல்லா சொன்னீங்க,ஆனா எங்க,நம்ம மக்கள் விழுந்தா இந்த ரெண்டு திராவிடக் கட்சிக்கிட்டதானே விழறாங்க..
    வேற யாராவது புதுசா வந்தாலும்,வரும் வாய்ப்பிருந்தாலும்,அவங்களையும் தன்னோடு இழுத்து எல்லோரும் ஒரே குட்டையின்னு சங்கமம் ஆயிடறாங்களே...
    மக்கள் இன்னும் TV பெட்டிக்கும்,பிரியாணி பொட்டலத்துக்கும் வாக்கை விக்கிறாங்க..
    ரொம்பக் கஷ்டம்தான்,தமிழகம் விடியுறது...

    ReplyDelete
  2. நன்றி அறிவன்.

    நீங்கள் சொல்வது மிகவும் வாஸ்தவமான பேச்சு.
    நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

    சந்தடியில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இலவச தொலைக்காட்சிப் பெட்டி போன்ற சலுகைகளை அறிவித்தது. அதை அந்த மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

    இன்னொன்று, அடுத்தவர்களுக்கு பதவி ஆசை காட்டி அல்வா கொடுத்து துரோகம் செய்த தேவே கௌடா கோஷ்டியினருக்கு அருமையான பாடத்தைக் கற்பித்து இருக்கிறார்கள்.

    இதுவும் முக்கியமான விஷயம்.

    இதையும் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டால் பாவமில்லை என்று தோன்றுகிறது.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ராகவன்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நல்லதொரு அலசல் ராகவன்... நீங்கள் நிச்சயமாக கோட்டு போடலாம் :)

    ReplyDelete
  5. நன்றி Bee'morgan.

    நன்றி, முரளி.

    அப்புறமென்ன?

    இப்போதே மனைவியிடம் அனுமதி வாங்கி யாரிடமாவது ஒரு பழைய கோட்டு வாங்கி வைக்கிறேன்.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  6. //கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம்.
    //

    தவறு. இதை தூண்டுவதோ செய்வதோ மக்கள் அல்ல. அரசியல் மிருகங்கள். பெருமளவில் அவர்கள் இந்தத் தேர்தலில் புறக்கனிக்கப் பட்டாலும்... இது தொடரும் கதை.

    எடியூரப்பாவும் அதே ,, வாட்டாள் நாகராஜும் அதே. இருவருக்கும் எந்த புண்ணாக்கு வித்தியாசமும் கிடையாது.


    //ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.//

    ReplyDelete
  7. நன்றி ஜீவ்ஸ்.

    நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. Dear Editor Your Editorial under coloumn SANI MOOLAI on the verdict of Karnataka Assembly election is an eye opener for all especially to the politicians belonging to the southern states. I appreciate you for your boldness in bringing out the true picure.Your article rightly mentions that it is the electorates who are the supreme authorities in the democratic set up to choose their own representatives, who are capable of delivering the good things. Of course politicians can only bow down before the electorates for trheir success in the election and therefore they can't assume themselves that they are the supreme authorities. Let me also congratulate our Election Commissioner and his officers for having conducted this assembly elections in an organised and smooth manner, without any problems to the electorates especially in the present political set up. Let us hope that the elected representatives will realise the problems of the people and do not diappoint them by chnanging their colours in the coming days. .
    N.SANTHANAM New Delhi.

    ReplyDelete
  9. நெஞ்சத்தில் இருந்து சொல்கிறேன் உங்கள் நடை மிக அற்புதம்
    சுகுமாரன்

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி, சுகுமாரன் ஐயா. உங்கள் வருகை மற்றும் பதிவுக்கு மிகவும் நன்றி.

    நன்றி, திரு.சந்தானம் அவர்களே.


    ராகவன் தம்பி

    ReplyDelete
  11. Mr Blogger!

    You write nicely. You have a lot of stuff to convey to readers. However, I find the following unnecessary:

    முந்தின ஜென்மத்தில் மற்றும் இந்த ஜென்மத்தின் துவக்கத்தில் எண்ணற்ற பாவங்களைப் புரிந்து அற்புதமான ஊரான கிருஷ்ணகிரியை விட்டு வடக்கில் பிழைப்புக்காக ஒண்டிப்போன சாபத்தை வாங்கிய ஆத்மா.

    Next, you call the visitors to your blogs துன்புற்றவர்கள். Then, you call your writings மொட்டை பிளேடுகள். Yourself as booth, a monster.

    I dont understand this self-loathing. You pretend to be very humble with such words. But, I have read, a person who pretends to be humble, is, in fact, trying to hide his feeling of arrogance and sense of unqualified superiority.

    You are not the only person who has migrated to places outside homestate. Today, the wave of migration of Tamilains is very moving very fast.

    Nostalgia for home town is understandable, and all such emotions are genuine. But in your case, you seem to use such things, which are basic human feelings and emotions, for self-aggrandisement.

    If you put across your views and ideas in various ways like essays etc. here, readers will no doubt appreciate them for their worth.

    Why to resort to unnecessary gimmicks like pretending to be humble?

    Parithi Ilam vazuthi
    from Chennai.

    ReplyDelete
  12. Dear Mr.Vazhuthi

    Everything was with a pinch of humour and i believe, it was not properly conveyed.

    It was for fun.

    I did not imagine, you will take this so seriously.

    raghavanthambi

    ReplyDelete