Friday, May 30, 2008

குழந்தைகளும் தேர்வுகளும்...

பிப்ரவரி மாத வடக்கு வாசல் இதழில், மேல்நிலை வகுப்புத் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில நல்ல அறிவுரைகளை வழங்கியிருந்தார் சனத் குமார். அது பெற்றோர்கள் பலருக்கும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். மாணவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியாது.


இது ஒருவேளை ஒரு தற்செயலான விஷயமாகக் கூட இருக்கலாம். பல ஆங்கில நாளேடுகளில் பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் சுமார் அரைப்பக்கத்துக்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக்குத் தயார் செய்து கொள்வதற்கான அறிவுரைகளும் மனநல நிபுணர்களிடம் பேட்டிகள், கட்டுரைகள், அறிவுரைகள் என்று தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாமே மிகவும் அற்புதமான விஷயங்கள். மிகவும் தேவையானவை. ஆங்கில நாளேடுகளில் வந்த ஒட்டு மொத்த கட்டுரைகளில் சாராம்சமாக ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக இருந்தது.


அந்தக் கட்டுரைகளில் மாணவர்களுக்குச் சொன்னதை விடப் பெற்றோர்களுக்குத் தந்த அறிவுரைகள்தான் மிகவும் பிரதானமாக இருந்தன. நாமும்தான் நேரில் பார்க்கிறோமே, பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய பாடத் திட்டங்கள் இழைக்கும் கொடுமையை விட பெற்றோர்கள் அதிகமாகக் கொடுமை இழைக்கிறார்களோ என்று சில சமயங்களில் தோன்றும். சமீப ஆண்டுகளாக இது ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. சில சமயங்களில் நம்மைக் கவலை கொள்ளக் கூட வைக்கிறது.


இப்போது பிளஸ் டூ பரிட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறோமோ என்று தோன்றுகிறது.


ஆனால் குழந்தைகள் மீதான கொடுமைகள் அவர்கள் நர்சரிப் பள்ளி செல்லும் பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் சுமக்கும் மூட்டைகள், வீட்டுப் பாடங்கள், அவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்தல், அவர்களுக்குப் பாட்டு வகுப்புக்கள், நடன வகுப்புக்கள், கராத்தே வகுப்புக்கள், அபாக்கஸ் வகுப்புக்கள், நீச்சல் பயிற்சி, குதிரை ஏறும் பயிற்சி, வேத வகுப்புக்கள், திருப்புகழ் வகுப்புக்கள், விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்புக்கள் இப்படி ஏகமாகப் பயிற்சிகள், வகுப்புக்கள். குழந்தைகளைத் தீயிலும், கயிற்றின் மேலும் தண்ணீரின் மேலும் நடக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாததுதான் பாக்கி. அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எல்லாம் ஆகவேண்டும். எல்லாவற்றிலும் முதலிடம் வேண்டும். துரதிருஷ்டவசமாக முதலிடம் என்பது ஒன்றுதான். அதை யாராவது ஒரு குழந்தைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலிடத்தைப் பிரிக்க முடியாது.


அப்படி முதலிடம் வராத குழந்தையை உண்டு இல்லை என்று ஆக்கும் பெற்றோர்களைப் பார்த்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து பஞ்சமா பாதகங்களில் ஒன்று, சிறு பிஞ்சுக் குழந்தைகளுக்கு இடையில் போட்டி வைக்கும் காரியம். முன்பு, சில வேளைகளில் தில்லியில் சில தமிழ் அமைப்புக்கள் குழந்தைகளுக்கு இடையே பாடல்கள் ஒப்பிக்கும் போட்டி போன்ற விஷயங்களுக்கு வலுக் கட்டாயமாக நடுவராக உட்கார வைத்து விடுவார்கள். வேண்டாம் என்று அதிகமாக மறுத்தால் அதை வேறுவகையாக எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் வழக்கமாக ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனை ஏற்றுக் கொண்டு விடுவேன். அந்தப் போட்டியில் குழந்தைகளை பாரதியாரின் பாடல்களைப் பாட வைத்தார்கள்.


நீங்களும் கவனித்து இருக்கலாம். பிள்ளையார் படத்தை யார் எப்படி எந்த வகையில் கோணலாகப் போட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் அழகாகவே தோன்றுகிற மாதிரி காட்சியளிக்கும். அதே போல, கோணல்மாணலாக ஒரு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாக மீசையை வரைந்து கொண்டு நின்றாலும் பாரதி வேஷம் கட்டிக் கொண்ட குழந்தைகளை உடனே உச்சிமுகர்ந்து முத்தமிடத் தோன்றும். பாரதியின் பாடல்களை எந்த மோசமான பாடகர் அல்லது பாடகி எப்படிக் கண்றாவியாகக் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்தாலும் அந்தப் பாடல் நன்றாகவே இருப்பது போல இருக்கும். பாரதியார் பாடல்களுக்கு, ஒப்பனையால் ஒரு ஐம்பது வருடங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கிற நடனமணிகள் காமாசோமா என்று ஆடினாலும் அதுவும் மிக நன்றாகவே இருப்பது போல இருக்கும். இந்த நிலையில், குழந்தைகள் பாரதியின் பாடல்களைப் பாடினால் கேட்க வேண்டுமா? அதுவும். தலைநகரில் தமிழ்ச்சூழலில் அதிகம் வளராத குழந்தைகள். ஆரம்பப் பாடங்களைத் தமிழில் படிக்காத குழந்தைகள். அவர்கள் மிகவும் சிரமங்கள் எடுத்துக் கற்றுக் கொண்டு கணீரென்று முயற்சிப்பதைக் கேட்கும் போது உண்மையில் மெய் உருகும். மழலைக் குரல்களில் பாரதியின் பாடலைக் கேட்பது அதிசுகம். நதிக்கரையோரம் நீரோட்டத்தின் திசையுடன் சேர்ந்து மாலை வேளைகளில் நடந்து செல்வதைப் போன்ற சுகமான விஷயம் அது. இதில் போட்டிகள் வைத்து ஏன் அவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று தோன்றும். பாடல் உச்சரிப்புக்கு எதற்கு அவர்களுக்குத் தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? வயதான கிழங்கட்டைகளே “பாரத தேஷம் என்று பெயர் ஷொல்லுவார்” “”ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம், ஷொல்லடி ஷிவஷக்தி” என்று மேடைக்கு மேடை பிய்த்து எறியும்போது குழந்தைகள் எப்படி உச்சரித்தால் என்ன? மழலைப் பிஞ்சுகள் பாரதியின் பாடலை எப்படி உச்சரித்தாலும் அதில் எங்கிருந்தோ ஒரு தனி அழகு கூடிவிடுகிறதே? அப்புறம் என்ன ஒரு இதுக்கு உச்சரிப்புக்கும் வெளிப்பாட்டுக்கும் மதிப்பெண்கள்?


இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், பரிசு பெறாத குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது அம்மாக்களும் அப்பாக்களும் அந்தக் குழந்தையைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இழுத்துச் செல்வார்கள். திக்கித் தடுமாறும் குழந்தைகளுக்கு அன்று பரிசு கிடைக்காது. ஆனால், அந்தக் குழந்தைகள் திக்கித் தடுமாறுவதும் ஒரு கவித்துவமான விஷயமாக ஏன் இந்த அமைப்பாளர்களுக்குத் தெரிய மாட்டேன் என்கிறது?நான் ஒரு அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான பாரதியார் பாட்டுப் போட்டியின் போது சொல்லிக்கூட சொல்லி இருக்கிறேன். அதாவது 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் போட்டி என்று எதுவும் வேண்டாம். கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது நினைவுப் பரிசு கொடுக்கலாமே என்று சொன்னேன். தமிழ் அமைப்புக்களின் சாஸ்திர சம்பிரதாய வழக்கப்படி இந்த ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. நினைவுத் திறன், உச்சரிப்புத் திறன், வெளிப்பாட்டுத்திறன் என்று பிரித்துப் பிரித்து தலா 10 மதிப்பெண்கள் வழங்குமாறு நடுவர்களுக்கு நிபந்தனை விதித்து இருந்தார்கள். நான் எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாவற்றுக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கினேன். அடுத்த ஆண்டுப் போட்டிகளில் இருந்து என்னை நடுவராக அழைப்பதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் அது மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது.


அடுத்து, குழந்தைகளை அவர்களுடைய வயதுக்கு மீறிப் பேச வைப்பது. இந்த வி‘யம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது. வயதுக்கு மீறிய, நடை உடை பாவனைகளில் அவர்களைத் திணிப்பது. தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜா மலரின் மீது துணி காயப்போடும் கிளிப்பைக் குத்தி வைப்பது போன்ற காரியம் இது. பெற்றோர்கள் குழந்தைகளைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்வார்கள். அந்தக் குழந்தையை இயற்கையாகப் பேச அனுமதித்தால் அது தூள் கிளப்பி விட்டு வந்து விடும். அம்மாவோ அப்பாவோ அக்காவோ ஆசிரியரோ அல்லது பக்கத்து வீட்டு மாமாவோ அந்தக் குழந்தை போட்டியில் பேசுவதற்கான பேச்சைத் தயார் செய்வார்கள். இது முதல் கட்டம். இந்தக் கட்டத்தில் அந்தக் குழந்தையின் மன முதிர்ச்சி, அந்தப் பிஞ்சு மனம் உள்வாங்கக் கூடிய விஷயங்கள், அதன் கிரகிக்கும் சக்தி, வெளிப்பாட்டுக்கான ஒரு நேரிடையான உத்தி போன்றவற்றை சுத்தமாக உதாசீனப்படுத்துவார்கள். குழந்தைகள் உரக்கக் கத்த வேண்டும். பைத்தியம் பிடித்தது போலக் கைகால்களை உதறிப் பேசவேண்டும் என்பதை மிக முக்கியமாக சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது பெற்றோர்களின் வேலை மிகவும் சுலபமாகி விட்டது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ரூபங்களில் பல தமிழ்ச் சானல்களில் வரும் பட்டிமன்றங்களையும். அரட்டை அரங்கங்களையும் குழந்தைகளோடு சேர்ந்து பார்த்து இந்த நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது போன்ற போலியான பாவங்களும், தொனிகளும், அங்க அசைவுகளும் அந்தக் குழந்தைகளின் மனங்களில் ஏற்றப்படும். அதே பாவனைகளில்.தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் திறந்த மனத்துடன் என்றாவது பாருங்கள். அதில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கண்களையும் பாவனைகளையும் சற்று உற்றுப் பாருங்கள். அவற்றில் எத்தனை பொய்மைகள் கலந்து இருக்கின்றன என்று தெரியும். சில நேரங்களில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் வெளிக்காட்டும் பாவனைகள், வெடிக்கும் சிரிப்பு, மூக்கு சிந்தி அழுவது இவையெல்லாம் ஏதோ ஒரு மனநல விடுதிக்குச் சென்று மனநலம் பீடித்தவர்களை நாம் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு அவை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

இதைப் பற்றி ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் நம்முடைய சமூக அக்கறைகள் பற்றிய கேள்விகளை மிக உரக்க எழுப்புவார்கள். வெறும் கூச்சலும் அழுகையும் மட்டுமே ஒருவருடைய சமூக அக்கறையை உறுதிப்படுத்தாது என்று இவர்களுக்கு யார் சொல்வது? இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மனநோய் பீடித்த கண்றாவிகளை, அந்த பாவனைகளை, அந்தத் தொனிகளை, அந்த அங்கச் சேஷ்டைகளை நம் குழந்தைகளின் மனங்களில் ஏற்றி, அதே போன்ற சிந்தனா முறைகளை உட்புகுத்தி அவர்களை மேடை ஏற்றினால், வாழ்நாளெல்லாம் அவர்களுடைய ரசனை, மதிப்பீடுகள் வேறு எந்த வகையில் அமையும்? எந்த விதமான அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சி அவர்களுக்குள் காரியமாற்றும்? வயதாகி வளர்ந்து ஒரு மூன்றாம் தர நடிகனின் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்யாமல் அவனால் வேறு என்ன செய்ய முடியும்? எந்த சமூக அக்கறையும் அரசியல் ஞானமும் இல்லாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டாடுவதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? எனவே, ஊடகங்கள் வழியாகவும் நாம் குழந்தைகளின் மீது அறிவு ரீதியான வன்முறைகளைப் பிரயோகித்து வருகிறோம். நம்மிடம் உள்ள மூர்க்கங்களையும் மூடத்தனங்களையும் அவர்கள் மீது ஏற்றி நம்முடைய பிம்பங்களாக மட்டுமே அவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். எது எப்படியாக இருந்தாலும் அவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் மட்டும் பெற்றுக்கொண்டு வந்தால் போதும். அசட்டுத்தனமான பேச்சுப் போட்டிகளிலும் படு அபத்தமான பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு தொண்டை கிழியக் கத்தியாக வேண்டும். ஏதாவது ஒரு செங்கல்லையாவது பரிசாக வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதற்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?வடக்கு வாசல் மார்ச் 2008 இதழில் வெளியான கட்டுரை


2 comments:

 1. ராகவன் தம்பியின் தார்மீக கோபத்தை சனி மூலையில் கொட்டுவதைத் தவிர தற்போதைக்கு வேறு எதுவும் செய்ய முடியாது.
  டார்வின் தியரி சரி என்றால் மேதைகள் இவால்வ் உருவாக்கப் படுவதில்லை சேக்ஷ்பியரின் கூற்றுப் படி என்றால். some one born great someone achieve greatness and for someone greatness is thrust upon them.
  குழந்தைகளை அவர்களாகவே வளர விடுங்கள் என்பதை கலீல் ஜிப்ரான் Your children and our children are not our children they might come through us but they dont belong to us. They are like an arrow comes from a bow does not belong to the bow goes to a place not belonging to the bow என்று.
  கோபங்களை சனிமூலையில் இறக்கி வையுங்கள் தரிசிப்பவர்கள் தரிசிக்கட்டும்.

  ReplyDelete
 2. உண்மைதான் விஜயன். மிகவும் சரியாக சொல்கிறீர்கள்.

  உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ராகவன் தம்பி

  ReplyDelete