Thursday, February 26, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 3

தில்லி சாகித்ய பரிஷத் அமைப்புக்காக கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞரின் சாந்த் கா மூ டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) கவிதையை மேடை நாடகமாக்க முயற்சித்தது பற்றிக் கடந்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்து வருகிறேன்.

இந்த இதழில் எங்கள் ஒத்திகைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சற்று வெளிப்படையாக இருந்தாலும் இந்தப் பதிவுகள் தேவை என்று நினைக்கிறேன். இந்த இதழில் சற்றுத் தூக்கலாக சொந்தக் கதை இருக்கும். இந்த நாடகத்தைப் பற்றிப் பதிவுசெய்யும் போது கண்டிப்பாக இவற்றை விலக்கி எழுத முடியாது என்ற நினைக்கிறேன்.

நாளை யாராவது நாடகம் செய்ய வருபவர்கள் இவற்றைப் படித்துவிட்டு நிறைய தவறுகளில் இருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள இது உதவி புரிந்தால் நான் பிறவி அடைந்ததன் பயனை அடைவேன் என்று நினைக்கிறேன்.
சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி போன்ற வாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் ஒத்திகைகள் துவங்கியது பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

இந்த மூவரும் சக்கூர்புரில் இருந்து ஆட்டோ பிடித்து வருவார்கள். ஒத்திகையில் வாசித்து முடித்த கையோடு அவர்களுக்கு மதுவைத் தயாராக வைக்க வேண்டும். வெறும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது ஒரு சிறிய தயிர்சாத பாக்கெட்டின் உதவியுடன் ஒரு முழு பாட்டில் விஸ்கி அல்லது ரம்மை ஒரு மடக்கில் காலி செய்யும் வல்லமை படைத்திருந்தார்கள் அவர்கள்.

எங்களுக்குள் ஒரு ஒழுங்கினை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்தோம். அதாவது ஒத்திகை நடக்கும் பரப்பில் அல்லது கூடத்தில் யாரும் புகை பிடிக்க மாட்டோம். குடித்து விட்டு வந்தவர்கள் யாரும் என்னுடைய ஒத்திகைகளில் எப்போதும் கலந்து கொள்ள முடியாது. அதே போல நாங்கள் ஒத்திகை நடத்தும் இடங்களில் யாரும் குடிக்க முடியாது. குடிப்பவர்கள் என் வீட்டுக்கு வந்து குடிக்கலாம். அல்லது வேறு யாராவது நண்பர்களின் அறைகளில் குடிக்கலாம். நாங்கள் ஒத்திகைகள் நடத்திய தமிழ்ப்பள்ளி வளாகங்களில் எப்போதும் யாரையும் புகை பிடிக்கவோ மது அருந்தவோ நான் என்றும் அனுமதித்தது இல்லை. நானும் என்றும் இக்காரியங்களை செய்தது இல்லை.

ஒத்திகைகளை முடித்து விட்டு மதுவில் குளிக்கலாம். ஆனல் ஒரு துளிகூட மது அருந்திவிட்டு என்னுடைய ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியாது. விஷயம் தெரியாதவர்கள் அப்படிக் குடித்து விட்டு வந்தபோது முக்கியமான ஒத்திகைகளைக் கூட ரத்து செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். என் அன்னையின் அருள் மற்றும் சத்குருநாதன் திருவடியின் கருணையால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதை திடீரென்று நிறுத்திய போது முன்னர் நானே விதித்துக் கொண்ட இவை போன்ற கட்டுப்பாடுகள் தான் என்னை இந்த இரண்டு சாபக்கேடுகளின் பக்கமும் மீண்டும் திரும்பாமல் இருக்கப் பெருமளவில் உதவியது என்று நினைக்கிறேன். (தடம் மாறிப் போகிறேன். என்னைத் திருத்த முடியாது).

சரி. விஷயத்துக்கு வருவோம். வாத்தியக் கலைஞர்களுக்கு ஒத்திகையின் இறுதியில் மது உண்டு என்று உறுதிப்படுத்தி விட்டு எங்களுக்கும் உண்டு என்று உறுதிப்படுத்திக்கொண்டு நேரம் செல்வது தெரியாமல் ஒத்திகைகளில் ஈடுபட்டு இருப்போம். மற்றவைகளுக்கு எல்லாம் செலவு அதிகமாகிப்போனதால் சாப்பாட்டுச் செலவுக்குப் பணம் இருக்காது. சுமார் இருபத்து ஐந்து பேர்களுக்கு தினமும் என் மனைவி வீட்டில் இருந்து சமைத்து அனுப்புவாள். சில நாட்களில் வெங்கட், மகேந்திரன், குணசேகரன், ஏஞ்செல்ஸ் போன்றோர் என் வீட்டின் சமையலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கினர். மளிகைக் கடையில் கடன்கள் ஏறி அந்தத் திசைப் பக்கம் செல்லாமல் பல நாட்கள் இரண்டு நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை சுற்றியடித்து ஒரு மணிநேரம் நடந்து சென்ற நாட்களும் பின்னளில் வந்தன.

இரவு சத்தியமூர்த்தி அரங்கில் நெடுநேரம் ஒத்திகைகள் நடத்தி விட்டு கும்பலாக என் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு உரக்கப் பேசி, வாதாடி, சண்டைகள் போட்டு, அடுத்த நாள் செய்ய வேண்டிய ஒத்திகைகளை ஏழுகட்டைக் குரலில் விவாதித்து நாங்கள் செய்துவந்த ரகளையால் என்னுடைய இரண்டு வயது மகள் பாரதியின் தூங்கும் பழக்கம் சீர்கெட்டு அவள் படிக்கும் வயதிலும் அந்தப் பிரச்னை தொடர்ந்து வந்தது. இரவு இரண்டு மணிவரை விழித்து வாதாடி ஓய்ந்து தூங்கச் செல்லுவோம் எல்லோரும். வீட்டின் முன்னறையில் குறைந்தது பதினைந்து பேராவது தூங்குவார்கள். காலையில் எல்லோரும் தலைதெறிக்க அலுவலகங்களுக்கு ஓடிப்போவோம். காலையில் சீக்கிரம் போனல்தான் மாலையில் ஏதாவது அல்வா கொடுத்துவிட்டு ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியும்.

சரி. மீண்டும் ஒத்திகைகளுக்கு செல்வோம். இந்தக் கட்டுரையை எழுதும்போது என்னுடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களின் நினைவுகளும் கண்முன் நின்று விழியோரம் சற்று ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது. அவர்களைப் பற்றியும் இங்கே சற்றுப் பதியலாம் என்று இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் நிறைய இடங்களில் அவர்களுடைய பெயர்களைச் சொல்லிச் செல்கிறேன். எனவே அவர்கள் குறித்த சிறிய குறிப்பினை இங்கு பதிந்து வைத்தால் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடம் உள்ள பல ஒழுங்கீனங்களில் முறையான ஆவணங்களைச் சேமித்து வைக்காத பழக்கமும் ஒன்று. இந்தக் கட்டுரையில் பேசப்படும் நாடகத்தின் புகைப்படமோ அல்லது என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் புகைப்படங்களோ உடனடி என் கைவசம் கிட்டவில்லை. இந்தக் கட்டுரைகள் நூலாக வடிவம் பெறும் போதாவது அந்தப் புகைப்படங்களைத் தேடி வைக்க வேண்டும். எனவே ஒரு சிறிய அளவில் என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களைப் பற்றிய பதிவினை இங்கே செய்து வைக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்குத்தான் பாவம்.

முதல் காட்சியாக கொள்ளி வைக்கும் சடங்கினை ஒத்திகையாகத் துவங்கினோம் என்று எழுதியிருந்தேன். நான்கு பேர் பிணம் தூக்கும் பாவனையில் கைகளைத் தூக்கிச் செல்வார்கள். பின்னணியில் கந்தசாமியின் உறுமி ஒற்றைக்கொட்டும் ஒற்றை இழுப்புமாக அமானுஷ்யமான ஒலி எழுப்பும். சங்கர் சிந்தசைஸரில் இரவு நேர ஒலிகளை எழுப்புவார். மணிகண்டன் ஒத்திகையிலேயே மீசையை மழித்துவிட்டு மிகவும் தத்ரூபமான சோகத்துடன் தீச்சட்டி தூக்கி வருவது போன்ற பாவனையில் வருவான். என்னுடன் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த மணிகண்டன் எங்கள் அலுவலகத்திலும் அதேபோன்ற முகபாவனையுடன் உலவிவந்தான். சரி. ஒருவேளை நாடகத்தில் தத்ரூபமாக வரவேண்டும் என்று பகலிலும் ஒத்திகைகளைத் தொடர்கிறான் போலிருக்கிறது என்று நானும் சுரேஷூம் சிரித்துக் கொள்வோம். செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு நேர்த்தியுயம் தீவிரத்தையும் வலியுறுத்துகிறவன் மணிகண்டன். நிரபராதிகளின் காலம் என்னும் நாடகத்தில் சுமார் இரண்டு பக்க வசனங்களை ஒத்திகை நடந்த இரண்டு மாத காலங்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி தினமும் ஒரே மாதிரி பேசிக்காட்டியவன் அவன்.

அதே போல வெங்கட் நரசிம்மன். இவனை போன்லெஸ் ஒன்டர் என்று வெங்கட்சாமிநாதன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவனும் அளவுக்கு அதிகமான பிரயாசைகள் எடுத்துக் கொள்வான். உடல் அவன் சொன்னபடிக்குக் கேட்கும் மாயவித்தையைத் தன்வசம் வைத்திருந்தான். நம்முடைய வயோதிக நடிகர்கள் சண்டைக் காட்சிகளில் கயிறு கட்டிகொண்டு செய்யும் காமெடியை கயிறு இல்லாமலேயே செய்து காண்பிக்கும் வல்லமை படைத்தவன்.

இயற்கையிலேயே அற்புத நடிப்புத் திறன் கொண்டவன் குணசேகரன். யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய பாவனையிலேயே பேசுவான். அவர்களின் உடல்மொழியை உடனே தனதாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவன். சொந்தப் பிரச்னைகள் அவனை இளமைப் பருவத்தில் சூழ்ந்ததால் அவனல் பிரகாசிக்க முடியாது போனது. இல்லையென்றால் தமிழ்த் திரையுலகம் இந்நேரம் தேசிய அளவில் பெருமையுடன் பேசப்படும் ஒரு நடிகனைத் தன்வசம் வைத்திருக்கும். தன் சொந்தப் பிரச்னைகளால் எல்லா உறவுகளையும் சீராகப் பராமரிக்க முடியாமல் போனவன். இப்போது பெங்களூருவில் இருக்கிறான் என்று என்னிடம் அவனை நினைவுபடுத்தும் பழைய நண்பர்கள் யாராவது சொல்வது உண்டு.

இடதுசாரி சிந்தனைகள் கொண்ட மகேந்திரன் எல்லாவற்றையும் உரக்க விவாதிப்பான். அவன் போடும் கூச்சலில் குறைந்தது ஐம்பது பேராவது அக்கம்பக்கத்தில் தூக்கம் இழப்பார்கள். நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த படிப்பும் அக்கறையும் உள்ளவன் மகேந்திரன். ஒத்திகையின்போது ஒவ்வொரு காட்சியின் லாஜிக்கை உறுதி செய்து கொண்டுதான் அடுத்த அடிக்கு நகருவான். அவனை சமாளித்து காட்சிக்குள் அனுப்புவதற்குள் உயிரேபோய்விடும். இப்போது ஈரோடு பக்கம் வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறான். இப்போதும் அதே இடதுசாரி சிந்தனைகளுடன் யாருடனவது சண்டை போட்டுக்கொண்டு இருப்பான என்று தெரியாது.

இன்று திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் இளஞ்சேரன் இயற்கையிலேயே அற்புதத் திறமைகள் கொண்டவன். பராசக்தி வழக்காடு மன்றக் காட்சியை ஒரே மூச்சில் சொல்லி நிறுத்துவான். மிக அரிய நகைச்சுவை உணர்வு உள்ளவன் அவன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். முரண்டு பிடிப்பதைக் கூட சிரித்துக் கொண்டே செய்வான். அவனுடைய குரல் வளம் இன்று திரையில் முன்னணியில் இருக்கும் பல பெண்மைச் சாயல் கொண்ட கதாநாயகர்களிடம் காணாத ஒன்று. சொல்லிக் கொடுப்பதை விட அதிகம் காட்டி நெகிழ வைப்பவன். இங்கிலாந்து என்னும் நாடகத்தில் அவன் கட்டைக்கால் கட்டிக்கொண்டு காந்தியாக வந்து பேசிய வசனங்கள் இன்னும் பல இரவுகளில் என் கனவுகளில் வரும்.

நாங்கள் அன்புடன் வீரு என்று அழைக்கும் வீரராகவன். மெத்தப்படித்த வீரு அப்போதே மிகவும் உயரிய பதவியில் இருந்தாள். ஆனல் அவனுடைய பதவியோ நாங்கள் இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத ஊதியத்தை அப்போதே வாங்கிக் கொண்டிருந்த வீரு, வெற்றியும் பதவியும் தன் தலைக்கேறாது பார்த்துக் கொண்டவன். நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவன்.

இன்னும் சிலருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு விஷயத்தைத் தொடர்வேன். என்றாவது முடித்துதானே ஆகவேண்டும்?

No comments:

Post a Comment