Wednesday, February 25, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 2


ஒரு இந்தி நாடக மேடையேற்றத்துக்காக விண்ணப்பித்ததையும் அது தொடர்பாக தில்லி சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலர் என்னை அழைத்துக் குடைந்து கொண்டிருந்ததையும் அவருக்கு நான் அல்வா கிண்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது பற்றியும் சொல்லி சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

பல இடங்களில் நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். வழக்கமாக சிலருக்குத் தங்களுடைய நாடக மேடையேற்றம் குறித்து பிற்காலத்தில் எழுதும்போது ஒரு அதீதமான வசதி கிடைத்து விடுகிறது. அந்த நாடக மேடையேற்றம் என்ன கண்றாவியாக இருந்தாலும், பார்வையாளர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வதைத்து அவர்களைக் கதறக் கதற ஓடவிட்டு இருந்தாலும் பின்னாளில் அதைப் பற்றி எழுதும்போது வசதியாக பல அல்பமான டுபாக்கூர்களை விட்டுக் கொள்ளலாம். நாடகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாதவர்கள், மேடையில் நடிக்கும்போது தானே எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அடுத்தவர்களை எப்படி நிறுத்தி வைக்க வேண்டும், அவர்களை எப்படிப் பேசவைக்க வேண்டும் என்று கூடத் தெரியாதவர்கள் அல்லது சில அரசியல் காரணங்களால் அல்லது தங்களின் பதவியின் அதிகாரம் வழி கிட்டும் சில வசதிகளால் நாடகம் தயாரிக்க மேடைக்கு வரும் பலர் நிகழ்காலத்திலேயே இப்படிப் பேசியும் எழுதியும் வருவதை நிறைய பார்த்து இருப்பீர்கள்.

எனவே ஒரு நாடகத்தின் மேடையேற்றம் குறித்துப் பின்னர் எழுதும்போது இவை போன்ற விபத்துக்கள் நேரக்கூடாது என்று மிகவும் கவனம் எடுத்து எழுத வேண்டியிருக்கிறது. கூடிய வரையில் நேர்மையான பதிவாக அமைய வேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னுடன் மேடையில் இருந்தவர்களின் முகங்களை மீண்டும் தைரியத்துடன் பார்க்கவும் என்னுடைய முகத்தையே கண்ணாடியில் தைரியமாகப் பார்த்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது இல்லையா?

சரி. விஷயத்துக்கு வருவோம்.

சாகித்ய கலா பரிஷத் செயலர் முக்திபோத் கவிதையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? அது நாடக ரூபத்தில் இல்லையே என்று கேட்டார்.

அந்த நேரத்தில் மேடை நாடகத்தின் சூட்சுமங்கள் அதிகம் கைவசப்படாத நிலை. நாடக சம்பவங்களைக் காட்சிப்படுத்துதல் குறித்த பயிற்சி எதுவும் பெறாத நிலை. நான்கைந்து ஆண்டுகள் தலைநகரில் பார்த்த (தமிழல்லாத) வேற்றுமொழி நல்ல நாடகங்கள், படித்து அரைகுறையாகப் புரிந்து கொண்ட நாடகக் கோட்பாடுகள். செ.ரவீந்திரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய நண்பர்கள் உடன் இருந்த பலம். எல்லாவற்றுக்கும் மேலாக வெட்கத்தைத் துறந்த நிலை. இதுவே ஒரு மேடை நாடகத்தை அதுவும் இந்தி மேடை நாடகத்தை மேடையேற்றும் அசட்டுத் துணிச்சலை எனக்குத் தந்திருக்கிறது என்று இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

சரி. செயலர் கேட்ட கேள்விக்கு கவிதைப் படிமங்களைக் காட்சிப் படிமங்களாக மாற்றி மேடையேற்றுவேன் என்று பதிலளித்து விட்டேன். அவரும் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு சரி. முயற்சி செய். ஆனால் நாடகத்தில் ஏதாவது ஒரு காட்சியை எங்களுடைய ஆலோசகர்களின் முன்னிலையில் நடித்துக் காட்ட வேண்டும். அதன் பின்னர்தான் நாடகத்தைத் தேர்வு செய்வோம் என்றார். உடனே சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். உடன் வெங்கட்டும் குணசேகரனும் இருந்தார்கள். குணசேகரனுக்கு கைகால்கள் உதறத் துவங்கி இருந்தன. ""என்னண்ணா இப்படி ஒரு நிபந்தனையைப் போட்டுட்டானே'' என்று பினாத்திக் கொண்டே வந்தான். வெங்கட் அதிக நம்பிக்கையுடன் இருந்தான். ""பாத்துக்கலாம்டா'' என்று குணசேகரனுக்கு சொல்வது போல தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு வந்தான்.

அடுத்து என்ன செய்வது என்ற திட்டம் தீட்ட உட்கார்ந்தோம். வழக்கமாக இதுபோன்ற திட்டமிடல்கள் அந்த நாட்களில் மதுக்கிண்ணங்களில் துவங்கி, உளறல்களில் தொடர்ந்து, போதை வலு சேர்க்கும் உதார்களில் முடிந்து போகும். திட்டமிடல் ஏதுமில்லாது போதையில் கரையத் துவங்கின என்னுடைய இரவுகள். என்ன செய்யப்போகிறோம் என்கிற பய உணர்ச்சி போதை நாடுதலை அதிகப்படுத்தியது. லேசான தாடி, கையில் எப்போதும் புகையும் சிகரெட் மற்றும் மாலை வேளைகளின் போதையை மட்டுமே ஒரு இயக்குநருக்கான லட்சணமாக எடுத்துக் கொண்டேன். திறமையை வளர்த்துக் கொள்ளவோ மேலும் நாடகம் குறித்துப் படிக்கவோ முயற்சிக்க வில்லை. என் எதிரே நின்று கொண்டு ஒரு பெரிய சவால் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது. அதன் மிரட்டல் தாளாது இன்னும் அதிகம் குடித்தேன்.

போதை இல்லாத நேரங்களில் கிட்டிய தெளிவின் வீச்சில் சிறு கீற்றுப்போல ஒரு திட்டம் பிறந்தது. இந்திக் கவிதையின் பின்னணி. மேடையில் பின்னணியில் முக்திபோத்தின் இந்திக் கவிதைகள் படிக்கப்படும் போது அரங்க அமைப்பு, ஒப்பனைகள் போன்றவை ஏன் தமிழ்நாட்டுப் பின்னணியில் இருக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றும் இல்லாததற்கு எதையாவது வித்தியாசமாக செய்தாக வேண்டுமே?

இது நன்றாக இருக்கும்போல இருக்கிறது முயற்சிக்கலாமே என்றார்கள் வீருவும் மகேந்திரனும். வீரமணிகண்டனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அவன் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் ஒத்துழைப்பேன் என்றான். நச்சு (நரசிம்மன்) அவன் பங்குக்குக் கத்தினான். ராமசாமிக்கு இந்தத் திட்டம் பிடித்து விட்டது. (ராமசாமி இப்போது அமெரிக்காவில் குழந்தைகளுக்கான நாடகங்கள் குறித்துத் தன் ஆய்வுகளை முடித்து பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பாலஸ்தீனப் பெண்மணி ஒருவரை மணந்து கொண்டிருக்கிறார். அவரும் நாடக ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறவர்). மோகன் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் மேடையில் பங்கேற்கவில்லை என்றாலும் நாடகத் தயாரிப்புக்களில் அதிகப் பங்கேற்றார். அந்நாட்களில் எங்களுக்கான மதுச்செலவை அதிக அளவில் பார்த்துக் கொண்டு நாடகத் தொண்டு ஆற்றியவர் மோகன். அவருக்கு என் திட்டம் பிடித்திருந்தது. ரவீந்திரனுக்கும் பிடித்தது. சாரு நிவேதிதா எங்கள் ஒத்திகைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வருவார்.

சரி. தமிழ் நாட்டின் பின்னணி. இந்தி வரிகளுக்கு தமிழக கிராமியப் பின்னணி. நம்முடைய மரபு இசைக்கருவிகள். நாட்டுப்புற இசை என்று திட்டங்கள் வகுத்துக் கொண்டேன். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது சங்கீத் நாடக் அகாதமி போன்ற அரசு அமைப்புக்கள் மரபுசார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்திய நாடக வல்லுநர்களும் அளவுக்கு அதிகமாக எவ்விதத் தொடர்பும் இல்லாது மரபுக் கலைகளை நாடக மேடைகளில் கொண்டு வந்து பார்வையாளர்களை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மரபாக நிறுவப்பட்டது. அதைத் தவிர்த்த முயற்சிகளை நாடகங்கள் என்று கூறத் தயாராக இல்லாத ஜோல்னாப் பைக் கூட்டம் ஒன்று மந்தை மந்தையாக இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருந்தது. எனவே அந்த மரபை அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற போலியான பாவனையில் நாங்களும் ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு மரபு இசைக் கலைஞர்களைத் தேட ஆரம்பித்தோம்.

ஊரில் இருந்து கலைஞர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்றால், கடுமையாக உழைத்து ஏதாவது சொத்து சேர்த்துக் கொண்டு பிறகு அதை விற்றுத்தான் அவர்களை தில்லிக்குக் கொண்டு வரவேண்டும். அதற்கு அப்போது போதிய நேரம் இல்லை. எனவே உள்ளூரிலேயே யாராவது கிடைப்பார்களா என்று தேடல் துவங்கியது.

என்னுடைய தேடல் முடிந்த இடம் சக்கூர்பூர். தில்லியின் மேற்குப் பகுதியில் பஞ்சாபி பாக் அருகில் உள்ள இடம். சேலம், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இடம். அங்கு மாரியம்மன் கோயில் திருவிழாக்களிலும் இறப்புக்களிலும் மேளம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நானும் ராமசாமியும் அங்கு சென்று பலரை விசாரித்தோம். இறுதியில் எங்களுக்குக் கிடைத்தவர்கள் முத்துசாமியும் கந்தசாமியும். முத்துசாமி வயதானவர். பறை வாசிக்கிறவர். கந்தசாமி உறுமி வாசிப்பவர். இருவரும் முதலில் எங்களை நம்பவில்லை. நீ எதுக்கு எங்களைக் கூப்பிட்டு நாடகம் போடணும்? என்று கேட்டார்கள்.

எனக்குக் கிடைத்த இன்னொரு கலாச்சார அதிர்ச்சி என்னவென்றால், என்னை அவர்களிடம் கூட்டிச்சென்ற நண்பர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர். முத்துசாமியும் கந்தசாமியும் இருந்த தெரு வந்ததும் அவர் வீதிமுனையில் நின்று கொண்டு நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அப்புறம் சந்திக்கலாம் என்றார். நானும் ராமசாமியும் அவரை அழுத்திக் கூப்பிட்டோம். அவர் தயக்கத்துடன், இது அவங்க இருக்கிற வீதி. நீங்க போயிட்டு வாங்க'' என்று அனுப்பி வைத்தார். நண்பரின் மறுப்பு பெரும் அதிர்ச்சி அளித்தது. நாங்கள் முத்துசாமி வீட்டுக்கு போனோம்.

எங்களுடைய தொடர்ந்த இரண்டு மூன்று சந்திப்புக்களில் எங்களுக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள் முத்துசாமியும் கந்தசாமியும். மூன்றாவது நாளில் என்னைத் தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார் முத்துசாமி. இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள ராஜ் காலனியில் சிவாஜி என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் முகவீணை (நாயனம்) வாசிப்பதாகவும் சொன்னார். எங்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அங்கு சென்று சிவாஜியை சந்தித்தோம். மாலை வேளையில் போனதால் அவருடன் சரியாகப் பேச முடியவில்லை. மறுநாள் காலையில் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். தங்களுடைய வாத்தியங்களைக் கொண்டு வந்தார்கள். இரண்டு அறைகள் கொண்ட அரசுக் குடியிருப்பு வீடு அது. அவர்கள் குழுவாகக் கிடைத்த சந்தோஷத்தில் கொஞ்சம் வாசித்துக் காண்பிக்கச் சொன்னேன். என்னுடைய வீட்டின் சிறிய முன்னறையில் மூவரும் வாசிக்கத் துவங்கினார்கள். உற்சாகம் கரைபொங்கியது எனக்கு. ராமசாமி அப்போதெல்லாம் எப்போதும் என் உடனே இருப்பார். குணசேகரன் என் வீட்டிலேயே தங்கி இருந்தான். இப்போது தலைநகர் மேடைகளில் மெல்லிசை முழங்கும் ஏஞ்ஜெல்ஸ் என்னுடனேயே வீட்டில் இருந்தான். சங்கர் என்னும் நண்பரும் இருந்தார். அவர் இசைக்குழுத் தலைவர். என்னுடைய உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. பாதி நாடகம் முடிந்து போனது போல இருந்தது எங்களுக்கு.

சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி ஆகியோர் வாசிக்கத் துவங்கியதும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த எனக்கு நாடகத்தில் என்ன செய்யலாம் என்று ஒரு காட்சியாக என்முன் விரிந்தது போலத் தோன்றியது. சிவாஜி குழுவினர் உற்சாகமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இந்தக் குடியிருப்பில் அதிகம் வாசித்தால் பூமாலை ஊதுவத்திக் கட்டுக்களுடன் அதிகம் பேர் வீட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்ததாலும் ஏற்கனவே சிலர் சோகமான சந்தேகத்துடன் என் வீட்டை எட்டிப் பார்க்கத் துவங்கியதாலும் அப்போதைக்கு வாசிப்பை நிறுத்திவிட்டு மந்திர் மார்கில் உள்ள சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைகளைத் துவங்கலாம் என்று திட்டமிட்டோம்.

சௌத் இந்தியா கிளப் என்னும் சூதாட்ட விடுதியாக மாறிப்போன ஒரு நல்ல அமைப்பின் பொறுப்பில் இருந்த ஹரிஹரன் என்ற நண்பரின் உதவியால் சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைக்கு இடம் பிடித்தோம். நாடகம் மேடையேறி முடிந்த பிறகுதான் பணம் கிடைக்கும். ஆனால் செலவு தினமும் கரைபுரண்டு கொண்டு இருந்தது. மோகன் உதவினார். ரவவீந்திரன் உதவினார். அலுவலகத்தில் கடனுக்கு விண்ணப்பம் செய்தேன். ஒத்திகைகளில் நன்றாக சாப்பிட்டோம். ஒத்திகைகள் முடிந்ததும் நன்றாகக் குடித்தோம். வாத்தியம் வாசிப்பவர்கள் வரும்போதெல்லாம் அவர்களுக்குப் பணம் தரவேண்டியிருந்தது.

சரி. சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் ஆலோசகர்களுக்கு ஒரிரு காட்சிகளை நடித்துக் காட்ட வேண்டுமே? கவிதையின் முதல் வரி, இரவின் அமைதியில் இருந்தும் ஆந்தைகள் ஊளையில் இருந்தும், சுடுகாட்டில் உள்ள அரசமரத்தில் பொதிந்திருக்கும் அமைதி மற்றும் உழைப்பாளர்களின் சேரியில் முழங்கும் கொண்டாட்டங்களைப் பற்றியும் துவங்கும். இரவின் கனத்தைக் கூட்ட என்ன செய்வது? சோகத்தைக் கூட்ட என்ன செய்வது?
ஒரு பிணத்துக்கு ஈமச் சடங்குகள் செய்வதைப் போன்ற காட்சியுடன் துவங்கலாம் என்று தோன்றியது. கந்தசாமியின் உறுமியில் ஒற்றைத்தாள ஓசையை ஒலிக்கச் செய்தேன். அது சோகத்தின் பரிமாணத்தைக் கூட்டியது போல இருந்தது. மணிகண்டன் கொள்ளிவைப்பவன். வெங்கட்நரசிம்மன், குணசேகரன், நரசிம்மன், வீரராகவன் ஆகியோர் பிணந்தூக்கிகள்.

எனவே அந்த நாடகத்தின் முதல் காட்சியாக ஒரு பிணத்தைத் தூக்கி வந்து கொள்ளி வைப்பதுடன் ஒத்திகையைத் துவங்கினேன். நிறைய நண்பர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். என்னுடைய முதல் மேடை நாடகப் பிரவேசத்தின் முதல் ஒத்திகையே இப்படிப் பட்ட காட்சியுடன் துவங்க வேண்டுமா என்று என் மனைவி கூடக் கேட்டாள். ஆனால் அதையே தொடர்ந்தோம்.

ஒத்திகை துவங்கிய இருபது நாட்கள் கழித்து, என்னுடைய மேடை நாடகப் பிரவேசமாக நான் வடிவமைத்து நாங்கள் ஒத்திகை பார்த்த முதல் காட்சி கிருஷ்ணகிரியில் என் குடும்பதில் நிஜத்தில் அரங்கேறியது. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு இடையில் நடந்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அது நாளை...

1 comment:

 1. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

  ReplyDelete