Tuesday, February 28, 2012

கோடிட்ட இடங்களை நிரப்புதல் - சுமதி ராம்

வடக்கு வாசல் இதழ் துவக்கிய நேரத்தில்  இதழுக்குப் படைப்புக்கள் வரத் துவங்கி இருந்தன.  கவிதையும் கட்டுரைகளும் சிறுகதைகளும் வரத் துவங்கிய நேரம் அது. அநேகமாக 2005 இறுதி மாதங்களில் ஒன்றாக இருக்கலாம்,

வடக்கு வாசல் அலுவலகத்துக்கு வந்த கவிதைகளில் ஒன்று தனியாகக் கவனத்தை ஈர்த்தது. ஒற்றைக் கவிதை அது.

தன்னைப் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லை.  நேரடியாக ஒரு கவிதை. வெறும் பெயரும் முகவரியும் தாங்கிய ஒற்றைத்தாளில் வந்த படைப்பு.
கவிதை எழுதியவர் பெயர் சுமதி ராமசுப்பிரமணியம் என்று இருந்தது. இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.

இப்போது, சுமதி ராமசுப்பிரமணியம், சுமதி ராம் ஆக புனர் நாமகரணம் செய்து கொண்டு விட்டார். இருக்கட்டும். இதுவும் அவருடைய இயற்பெயரைப் போலவே வெற்று ஆரவாரங்கள் ஏதும் இன்றி நேரடியாக இருக்கிறது. மகிழ்ச்சிதான்.

கவிஞரின் நேரடியான பெயர் தந்த ஆச்சரியம் ஒருபுறம். அந்தக் கவிதையின் எளிமையான அணுகுமுறை ஒருபுறம் என இரு முனைகளில் இருந்து அந்தக் கவிதை யோசிக்க வைத்தது.  

அந்தக் கவிதை அப்போது பார்வைக்கு வந்த மற்ற கவிதைகளில இருந்து  இருந்து சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஓரிரு மாதங்கள் கழித்து ஜனவரி-2006வடக்கு வாசல் இதழில் பிரசுரம் ஆனது, அந்தக் கவிதை இங்கே -

கவனத்திற்கு...

என் புத்தக அலமாரியைப் 
பயன்படுத்துகின்றவர்களின்
கவனத்திற்கு.

மூடிய கண்ணாடி மற்றும்
மர அலமாரிகளுக்குள்ளாக
அவர்கள்
சலனமின்றி நிற்கிறார்கள்.

அவர்களை முன்னோ பின்னோ
மேலோ கீழோ
மாற்றியமைக்கும் உரிமை
எவருக்கும் இருந்ததில்லை.

அரித்துத் தின்னும்
பூச்சிகளையும் தூசுகளையும்
அணுக விடாமல்
பாதுகாக்க வேண்டும்
கவனமாக மூடிவிடுங்கள்.

முன்பின் தெரியாதவரிடம் சென்று
மீளும் குழந்தையாய்
கிழிபடாமல் திரும்பியாகவேண்டும்.

மணமூட்டவும் மகிழ்விக்கவும்
மூலைக்கொன்றாக
ஒளித்து வைத்திருக்கிறேன்
சில வெள்ளைப் பந்துகளை
உருண்டுவர நேர்கையில்
கையிலெடுக்கவோ உடைத்துவிடவோ வேண்டாம்.

நேற்று முன்தினம்
சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.
சில நண்பர்கள்
கிடைக்கப் பெற்றேன்.

அவர்கள்
மேல்வரிசையில் வலப்பக்கமாய்
நிற்கிறார்கள்.

சிரத்தையுடனும் நேர்த்தியுடனும்
நீங்கள் நடந்து கொள்கையில்
குழந்தையின்
அழகான கன்னம்போல
வசீகரித்துக் கொண்டே
இருப்பார்கள்
எப்போதும் என் நண்பர்கள்

ஒத்துப்போக நேர்கையில்
புதிதாகத் தோன்றுகையில்
வண்ண மைகளையும்
கார்பன் குச்சிகளையும்
பயன்படுத்தாதீர் தயவு கூர்ந்து.

இது அநேகமாக அவருடைய ஆரம்ப காலக் கவிதையாக இருக்க வேண்டும்.  இல்லாமலும் இருக்கலாம். தெரியாது. ஆனால் ஆரம்ப காலக் கவிதை இதுவென்றால் 2010ல் வெளிவந்திருக்கும் முதல் தொகுப்பில் உள்ள கவிதைகளும் இவருடைய முதல் கவிதையைப் போலவே பாசாங்குகள் ஏதுமற்று வெளிப்படையாக, நேரடியாக, சிக்கல்கள் ஏதுமற்று, வாழ்க்கையை யதார்த்தமாக நேரடியாக தரிசித்து நிற்கின்றன. இக்கவிதை கோடிட்ட இடங்களை நிரப்புதல் தொகுப்பில் இடம் பெறவில்லை. 
ஆனால் இந்தக் கவிதையை சற்று மாற்றி முயற்சித்து இருப்பது போன்ற சாயலைத் தரும் பெண்களின் புத்தகங்கள் என்னும் கவிதையில் (பக்-38-39) மேலே எடுத்தாளப்பட்டிருக்கும் ‘கவனத்திற்கு’ என்னும் கவிதையில் பொதிந்திருக்கும் பொருள் அமைதியும் அடர்த்தியும் முற்றிலும் சிதைந்து போய் விஷயத்தை மிகவும் உரக்கவும் ஒருவகையான சீற்றம் கொண்ட தொனியிலும் இன்னொரு பார்வையில் தன்னிரக்கம் பொதிந்த தொனியிலும் மாறிப்போய் நிற்கிறது. புத்தகங்களை எப்படி எல்லாம் கையாளவேண்டும் என்கிற போதனைகளை முடித்து விட்டு இறுதியில் இப்படி எல்லாம் செய்யாதீர்கள். அந்தப் புத்தகங்கள் எங்களைப் போல வன்புணர்ச்சிக்கு இன்னும் பழக்கப்படவில்லை என்னும்போது ஏதோ வலிய வரவழைத்துக் கொண்ட ஒரு தொனியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயலுவதைப் போலத் தோன்றுகிறது. ஒருவகையான அதிர்ச்சி ஊட்டலுக்கான முயற்சியை வலிந்து எடுப்பது போலக் காட்சியளிக்கிறது.

இந்தத் தொகுதி முழுதும் இருக்கும் இவருடைய மென்மையான குரலுக்கு நேரெதிராக வன்மையான ஒரு வேஷத்தைப் புனைந்து கொண்டதைப் போலத் தோற்றம் கொள்கிறது. இத்தொகுதி முழுமைக்கும் வேறு எங்கும் காணமுடியாத ஒரு தொனியை இந்தக் கவிதை சுமந்திருக்கிறது. 

இதனைக் கவிஞரின் தன்னிச்சையான வெளிப்பாட்டு உத்தியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தில் அறைந்து பல்லை உடைக்கும் அதிர்ச்சிக் கவிதைகளை அள்ளித் தெளிக்கும் அதிமஹா பெண்ணியக் கவிஞர்களின் வரிசையில் சேர எத்தனிக்கும் சோகையான முயற்சியாக இதனை எடுத்துக் கொள்ளலாம். பெண்களின் புத்தகங்கள் என்னும் கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் நேர்த்தியை இந்த சோகையான முயற்சி களைந்து எறிந்து விடுகின்றது.

ஆனால் தன்னுடைய நெடிய கவிதைப் பயணத்தில் நல்ல வேளை இந்த அதிர்ச்சி வைத்தியத்தைத் தொடர முயற்சிக்கவில்லை சுமதி ராம்.
சுமதி ராமின் சுமார் ஐந்து அல்லது அதற்கு ஓரிரு ஓண்டுகள் அதிகமாக இருக்கக் கூடிய கவிதைப் பயணம் மிகவும் சீராக நேர்க்கோட்டில்தான் பயணித்து இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு, பின்னாளில் இவருடைய கவிதைகளில் ஒன்றில் மிருகங்கள், பறவைகள், ஊர்வன, தவழ்வன போன்றவற்றின் தொலைக்காட்சிப் படிமங்கள் இவருடைய பார்வையில் ஒரு அழகான சட்டத்தில் குழப்பங்கள் அதிகம் இல்லாத ஒரு ஓவியம் தரும் அதிர்வை மிகவும் அநாயாசமாக ஒரு கவிதை தந்து செல்கிறது.ஆதி என்னும் கவிதையில்

....   .....
....   .....

இரத்தம் ஒழுகிய வாய்கள்
வெறிகொண்ட கண்கள்
கூர் மழுங்காப் பற்கள்
இறந்த உயிர்களின் மிச்ச சொச்சங்கள்
ஆர்ப்பாட்டத்துடன் நடந்து முடிந்த
மாபெரும் விருந்து போல்
காட்டப்படும் இறுதிவரை,

....   .....
....   .....

வன ஆர்வலர்களுக்கான தொலைக்காட்சியின் காட்சிப் படிமங்களை மிகவும் யதார்த்தமாக எண்ணப் பரப்பில் காட்சிப் படுத்திவிட்டு இறுதியில் விஷயத்துக்கு வந்து கனமாகத் தேங்கி நிற்கிறது கவிதைக்கான ஆளுமை. 

அணைக்கப்படாமல் பார்க்கப்படும்
வண்ண பிம்பங்களும்
பின்னணி இசையும்
பறைசாற்றுகின்றன
தொடரும் ஆதிமனிதனின்
வேட்டையை.

ஆதிமனிதனின் வேட்டையின் நீட்சியாக அந்த வண்ண பிம்பங்களும் பின்னணி இசையும் தொடருவதாக அமைத்திருப்பதை ஒரு முற்றுப் பெற்ற விஷயமாக அமைத்திருக்கிறார். அதாவது அப்படியா விஷயம் என்கிற மாதிரியும் அதனை உறுதிப் படுத்துகிற முயற்சியில் இப்படித்தான் இருக்கலாம் என்கிற தொனியிலும் மேலும் தொடராமல் அப்படித்தான் விஷயம் என்று சொல்கிற மாதிரியும் அமைந்திருக்கிறது இந்தக் கவிதையின் கட்டமைப்பு.  


மாலையின் மந்திர ஒளியில்
நிலவின் கசங்கிய இருளில்
விதவிதமான நிறங்களோடு
நீ தானிய வார்த்தைகளை
வீசிக்கொண்டே இருக்கிறாய்.

ஒரு தானியத்திற்கும் மற்றொரு தானியத்திற்கும்
ஆன இடைவெளியில்
உன் குரோதமும் என் காதலும்.

மாலையின் ஒளி மந்திர ஒளியாகிறது கசங்கிய இருளை நிலவு தன்னுள் பொதித்திருக்கிறது. இந்த மந்திர ஒளியில், கசங்கிய இருளில் தானிய வார்த்தைகள் வீசப்படுகின்றன. அப்படி வீசப்படும் ஒரு தானியத்திற்கும் மற்றொரு தானியத்திற்கும் ஆன இடைவெளியில் கவிஞரின் காதலும் எதிராளியின் குரோதமும் வெளிப்படுகிறது. முதலில் சூழலின் வர்ணனை சிந்தையில் மேகம் போலக் கவியத் துவங்குகிறது. அந்தச் சூழலில் விதவிதமான சிறங்களோடு வீசப்படும் தானியங்கள் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் ஆன இடைவெளியில் குரோதமும் காதலும் மாறிச் சிதறுகின்றன. 

இந்தக் கவிதை தரும் அனுபவம் ஒரு மிக நல்ல இசையில் அமைக்கப்பட்ட கஜல் பாடல் அனுபவத்துக்கு எந்த வகையிலும் குறையாது வாசக மனத்தைத் தொடுகின்ற மாயத்தை ஓரிரு முறைக்கு மேல் தொடர்ச்சியான மறுவாசிப்பில் இதனை உணர முடியும். இது போன்ற கவிதையை வாசித்து விட்டு அடுத்த கவிதைக்குத் தாவுவது சற்று சிரமமான காரியமாகிப் போகிறது. கனகச்சிதத்துடன் பொருத்தப்பட்ட வார்த்தைகளின் கனத்தின் அடியில் தேங்கியுள்ள மௌனத்தை ஸ்பரிசித்து விட்டு பிறகு அடுத்த கவிதைக்கு நகர்ந்து செல்லும் போது மட்டுமே அந்த மௌனத்தை அடுத்த கவிதைக்கும் சுமந்து செல்ல முடிகிறது.

மனித வாழ்க்கையின் சின்னச் சிறிய கணங்களும் கவிமனம் கொண்டவர்களின் பார்வையில் பொருள் பொதிந்த விஷயங்களாக மாறிவிடுகின்றன. உதாரணத்துக்கு ‘இப்படிப் பலவும்’ என்னும் கவிதையில் (பக்-60)

அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும்
அதை எனக்குப் பிடிக்கவில்லை.

வலையைச் சிதைத்தேன்
பயத்தில் ஓடியது.

துரத்திய குச்சி துரத்தாத போதும்
திரும்பிப் பாராமல்
ஓடிக்கொண்டே இருந்தது.

வெகுளித்தனமான அதன் உயிர்வேட்கை
எரிச்சலூட்டியது.

காலால் தேய்க்க
அதன் உயிரின் நிறம்
சிமெண்ட் தரையில்
குழந்தையின் கிறுக்கலை
மஞ்சளாய் வரைந்தது.

கைப்பேசியில் நீ என்னை
ஓயாது துரத்திக் கொண்டிருந்தபோது
நான் இப்படிப் பலவும் செய்து கொண்டிருந்தேன்.

இந்தக் கவிதையில் பாடுபொருள் மிகவும் அடர்த்தியான பனிமூட்டமாகப் படர்ந்து மனப்படலத்தில் மிதக்கின்ற ஒரு அனுபவம் வாய்க்கின்றது.  அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அது சிலந்தியாக இருக்கலாம். மோகமாக இருக்கலாம். வலையைச் சிதைத்த போது பயத்தில் ஓடியது ஆசையாக இருக்கலாம். வெகுளித்தனமான உயிர்வேட்கை கொண்டு எரிச்சல் மூட்டும் காமமாக இருக்கலாம். துரத்தாத போதும் திரும்பிப் பார்க்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் மனவேட்கையாக இருக்கலாம். இப்படிப் பன்முகவயம் கொண்ட அர்த்தங்களை நோக்கித் துரத்தும் ஜாலத்தை இந்தக் கவிதை நிகழ்த்துகிறது. 

வெகுகாலமாய்க் கைவிடப்பட்ட ரயில் தடத்தில்
வெகுகாலத்திற்கு முன் யாரோ தவறவிட்ட
இனிப்புத் துணுக்கை இரும்பின் துருவோடு
எடுத்துத் தின்று ருசிக்கிறது நினைப்பு.

என்ன ஒரு அற்புதமான படிமம் கையாளப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். வெகுகாலமாகக் கைவிடப்பட்டு துருப்பிடித்த ரயில் தடம்.  அந்தத் துருப்பிடித்த தடத்தில் என்றோ யாரோ தவறவிட்ட இனிப்புத் துணுக்கை இரும்பின் துருவோடு எடுத்துத் தின்று ருசிக்கிறது நினைப்பு. பொருள் கனம் பொதிந்த மௌனம் இந்தச் சிறுகவிதை தரும் அனுபவம் பெரும் பரப்பில் விரிகிறது.

இப்போது இந்தத் தொகுப்பின் முக்கியமான விஷயத்துக்கு வருகிறேன்.  இந்தத் தொகுப்பைப் பற்றி எழுதிய, பலரும் ஒரே குரலில் சிலாகித்த சுமதி ராம் காட்டிய இன்னொரு உலகம். பெற்றோர், குழந்தை அடங்கலான அதிசுவாரசியம் நிறைந்த ஒரு உலகம். பெண் குழந்தை ஒன்றின் பார்வையில் சிக்கும் அதி சுவாரசியமான உலகம். அந்தப் பெண்ணின் மனச்சன்னல் வழி எட்டிப் பார்க்கும் பாசமிகு தாயின் உலகம். தந்தையின் உலகம். குழந்தையின் பார்வையில் பெற்றோரும் அதன் வளர்ப்பு மிருகமும் அடங்கிய சுவாரசியங்கள் பொதிந்த உலகம். 

இது நம் கவிதை உலகுக்குக் கொஞ்சம் புதியதுதான். இந்த உலகத்தை இத்தனை அழகாக இதுவரை தரிசிக்க வைத்தவர்கள் மிகவும் குறைவே என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.

எல்லோரும் சிலாகித்து எழுதிய அப்பா மகள் கவிதை. 

ஆறு வயது மகள் நாள் முழுக்கப் பேசவில்லை. அப்படி ஒரு கோபம்.  திருமண ஆல்பத்தில் அவள் இல்லையாம். என்ன சொல்லியும் அவள் கோபம் தீருவதில்லை. ஒருவழியாக அவளே பேசி முரணைத் தீர்த்து வைக்கிறாள். அப்பாவை நாளைக்கு அவள் கல்யாணம் செய்து கொள்ளும்போது அம்மா வரக்கூடாது என்று.

இதை விட அழகாக ஒரு குழந்தையின் மனதைக் கவிதையாக்கி முன் வைத்து இருக்கிறார்களா யாராவது? 

தன்னுடைய பார்பி பொம்மைக்கும் திருநூறு பூசும் பூசாரித் தாத்தா இருக்கும் கோயிலுக்கு மட்டும் திரும்பப் போகலாம் என்று அடம் பிடிக்கும் மகள்.  பிரியத்திற்கு உயர்திணை, அஃறிணை இல்லை என்று தமிழாசிரியரான தாய்க்கு சொல்லிக் கொடுக்கும் மகள். நிலா வந்து அல்லி பூக்கும் வரை இருந்தாக வேண்டும் என்றவள் நிலா வந்த போது அதைப் பார்க்காமலேயே தூங்கிப் போன செல்ல மகள். தன்னுடைய பிறந்த நாள் ஏன் வருடத்திற்கு இரண்டு முறை வருவதில்லை என்று கேட்கும் மகள். அப்பா பரிசளித்த ஆமைத் தலையணைகள் சூழ துயில் கொண்டாலும் எல்லா விடிகாலையிலும் அன்னையின் இடது கை முஷ்டியில் சரிந்து உறங்குகின்ற மகள். இப்படி ஒவ்வொன்றும் தனித்தனியாக பல்வேறு உலகங்களாக படர்ந்து விரிந்து பயணிக்கின்றன. இந்தக் கவிதைகளில் ஒரு பஞ்சு மிட்டாயைக் கையாளுகின்ற லாவகத்தைப் பேணித் தீரவேண்டியிருக்கின்றது வாசகனுக்கு. ஏனெனில் ஒரு பஞ்சு மிட்டாயைக் குச்சியில் படர வைக்கும் லாவகத்தில் கவித்துவம் படரவைக்கப்பட்டிருக்கிறது.

நாம் அன்றாடம் தரிசிக்கும் விஷயங்களை, நம்மை மிகவும் அநாயாசமாகக் கடந்து செல்லும் விஷயங்களை, நம்மை ஏதோ ஒரு கணத்தில் தொட்டுச் செல்லும் விஷயங்களை மிகவும் கவித்துவமான நேர்த்தியுடன்  முன்வைக்க முயற்சித்திருக்கிறார் சுமதி ராம், மிகவும் கவனமாக விஷயங்களைக் கையாண்டு இருக்கிறார். பொதுவாக ஒரு கவிஞனின் கிடங்கில் சொற்கள் அம்பாரமாகக் குவிந்திருக்க வேண்டும். அதை விட அதிகமாக மௌனமும் கவிந்திருக்க வேண்டும்.இந்த இரண்டையும் மிகுந்த சிரமத்துடன் ஒன்றிணைத்து இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளைப் படைத்து இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இந்தக் கவிதைளுக்கு மேலும் அழகு ஊட்டுபவை, மிகவும் கவித்துவமாக நெய்யப்பட்ட செ.சீனிவாசன் அளித்திருக்கும் கோட்டோவியங்கள். இந்தக் கோட்டோவியங்கள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கவிதையாக தொகுப்பு முழுதும் மிளிர்வது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 


கோடிட்ட இடங்களை நிரப்புதல்
சுமதி ராம்
வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை
9444867023/9443222997
vamsibooks@yahoo.com
www.vamsibooks.com


2 comments:

  1. //இது போன்ற நேரடிப் பெயருடன் கவிதை அல்லது கவிதை எழுதுபவர்கள் அதிலும் பெண் படைப்பாளிகளை அதிகம் காண நேருவதில்லை. இந்த நேரடிப் பெயர் எனக்கு சற்று ஆச்சரியம் அளித்தது.//

    சரியாகச் சொன்னீர்கள் சார். ஏனோ இன்னும் அந்த சுதந்திரம் எடுத்துக் கொள்ளத் தடையாக பல காரணிகள் உள்ளதும் கண்கூடு அல்லவா...?

    நல்ல ஆரம்பம்... வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  2. கவிதைகள் பற்றிய தங்களது விமர்சனம்.. கவிதைகளை நேசிக்கும், வாசிக்கும் வாசகர்களுக்கு மேலும் பல புரிதல்களை தருகிறது.

    நன்றி சார்...

    ReplyDelete