Saturday, February 20, 2016

ஆத்துலே வெள்ளம் போகுது...

இதுவரை சுமார் 3 கோடியே 70 லட்சம் பாக்கியவான்கள் இணையம் வழியாக ஃப்ரீடம் 250 மொபைல் போன் வாங்குவற்காக பதிவு செய்துள்ளார்கள் என்று எங்கோ ஒரு செய்தி படித்தேன்.

இத்தனை பேருக்கும் விருதாவாக நிறைய நேரம் இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது.

ஏனென்றால் பல மணி நேரங்கள் செலவழித்தால் மட்டுமே ஒருவரால் இந்த பாக்கியத்தை பெறமுடியும் என்று சொன்னார்கள்.

இதற்கு நான் எந்தவகையான முயற்சியும் எடுக்கவில்லை.
வெகுவிரைவில் கரோல்பாக் கஃபார் மார்க்கெட்டில் இந்த போன் 200 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்படும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.  இது தவிர இணையத்தில் பதிவு செய்து வாங்கிய சில தர்மவான்கள் மாலை நேர க்வார்ட்டர் தாகத்துக்காக 300 ரூபாய் அல்லது அதிகபட்சம் 450 ரூபாய்க்கு விற்க முன்வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.

எனக்கென்னவோ எப்போதும் கெட்ட சிந்தனைதான்.


இந்த போன் அநேகமாக யார் கையிலும் கிடைக்காது என்றும் ஏதாவது ஒரு வழக்கின் பிடியில் சிக்கி கொஞ்சம் படுத்தி எடுக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

ஆனால் ஒருசிலரைத் தவிர அநேகமாக பெரும்பாலானவர்கள் இந்த மொபைல் செட் கிடைக்கவில்லை என்றாலும் பதட்டம் அடைய மாட்டார்கள்.  ஏதோ மயிரே போச்சு என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு பேசுவார்கள்.

இன்னும் சாமர்த்தியம் நிறைந்த சிலர் தான் இந்த மொபைல் போனுக்காக பதிவு செய்யவே இல்லை என்று அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொள்வார்கள்.

ஒரு சிலர்-“அய்யோ-காந்தியை சுட்டுட்டாங்களா?” பாணியில் அப்படி ஏதாவது ஒரு அறிவிப்பு வந்ததா என்ன என்று அசமஞ்சமாக கேட்டுக்கொண்டு திரிவார்கள்.

அப்புறம் நான் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா?

நிலைமை எப்படி போகிறது என்பதை பார்த்து என்னுடைய மேலான கருத்தையும் நான் என்ன செய்தேன் என்பதையும் நண்பர்களுடன் நேர்மையுடன் பகிர்ந்து கொள்வேன்.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
20 பிப்ரவரி 2016


2 comments:

  1. Last heard, Department of Telecommunications have ordered a probe into the Company selling its product at such ridiculously low price

    ReplyDelete
  2. pennesa adikkadi ezuthuvaai ena ethir paarkkiren

    ReplyDelete