Thursday, February 16, 2012

அணையாத சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி


 நவம்பர் 2005 வடக்கு வாசல் இதழில் வெளியான நேர்காணல்.
நேர்காணல் - ராகவன் தம்பி மற்றும் சுரேஷ் சுப்பிரமணியம்


தில்லிக்கு வரும் எந்தத் தமிழ் எழுத்தாளரும் தவறாமல் - மறக்காமல் எப்போதும் விசாரிக்கும் ஒரு பெயர் ஏ.ஆர்.ராஜாமணி.  கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தலைநகரில் தனியொருவராக, எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்.  தீவிரமான படைப்புலகில் ஈடுபடவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த படைப்பு எதையும்  படைக்கவில்லை என்றாலும் அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பல பத்திரிகைகளில் பத்தியாளராகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப எழுத்துத் துறைகளில் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து வருபவர்.  மனதில் பட்டதை  எதிராளியின் எதிர்வினைகளைப் பற்றி எவ்விதக் கவலையும் தயக்கமும் இல்லாது சொல்பவர்.  இந்தப் பேட்டியிலும் இவர் பலரைப் பற்றி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

அணைந்து போன சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி

மூச்சே நின்று போவது போல மிக அழுத்தமாகக் காற்றை உள்வாங்கி ஒலி எழுப்பிச் சிரிக்கும் ஏ.ஆர்.ராஜாமணியின் சிரிப்பு இப்போது நம்மிடையில் இல்லை.  

திங்கட்கிழமை (13 பிப்ரவரி 2012) அன்று சவக்கிடங்கில் இருந்து  பெற்றுக் கொண்டபோது அந்தச் சிரிப்பு வாய் பிளந்து உறைந்து போயிருந்தது.  அந்தச் சிரிப்போடு பிளந்திருந்த வாயுடன்தான் அந்த மனிதனுக்கு கரோல்பாக் மயானத்தில் சிதை மூட்டினேன்.