Thursday, February 16, 2012

அணைந்து போன சினத்தீ - ஏ.ஆர்.ராஜாமணி

மூச்சே நின்று போவது போல மிக அழுத்தமாகக் காற்றை உள்வாங்கி ஒலி எழுப்பிச் சிரிக்கும் ஏ.ஆர்.ராஜாமணியின் சிரிப்பு இப்போது நம்மிடையில் இல்லை.  

திங்கட்கிழமை (13 பிப்ரவரி 2012) அன்று சவக்கிடங்கில் இருந்து  பெற்றுக் கொண்டபோது அந்தச் சிரிப்பு வாய் பிளந்து உறைந்து போயிருந்தது.  அந்தச் சிரிப்போடு பிளந்திருந்த வாயுடன்தான் அந்த மனிதனுக்கு கரோல்பாக் மயானத்தில் சிதை மூட்டினேன்.




அந்த மனிதர் என்னிடம் போடும் சண்டைகளும் கொள்ளும் பிணக்குகளும் நினைவுகளாக மட்டுமே நெஞ்சில் உறையத் துவங்கியிருக்கின்றன. 

ஏதோ அந்நிய தேசத்தில் பயணிக்கும் ஒரு வசதிக் குறைவான யாத்திரிகனைப் போலத் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் ராஜாமணி.  அவருடைய ஏச்சும், அன்பும், நெகிழ்தலும் எவ்வகையான திட்டங்களும் இல்லாது அப்போதைக்கு அப்போதே தெறித்து விழுந்த உணர்ச்சிச் சிதறல்களாக எடுத்துக் கொண்டு சிரித்தும் கோபப்பட்டும் எதிர்வினையாற்ற இப்போது அவர் எங்களிடையில் இல்லை.

ஏறக்குறைய என்னுடைய அலுவலகத்தின் காலைப்பொழுதுகளில் எனக்காகப் பல நாட்கள் காத்திருந்த ஒரு நட்பு  இப்போது இல்லை.  

என்னைப் போலவே, எங்கள் அலுவலகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் அவரால் மிகவும் நேசிக்கப்பட்ட ராணி என்னும் நாயும் அவருடைய பிரிவை உணர்ந்திருக்கக் கூடும்.  நண்பர்களிடம் பெற்றுக் கொள்ளும் சின்னஞ்சிறு உதவிகளில் இருந்தும் கூட அந்த ராணிக்கு அநேகமாக தினமும் பாலும் முட்டையும் வாங்கி வருவார். அவருடைய கொஞ்சலான அதட்டலுக்கு மாலை நேரங்களில் எங்கள் அலுவலக வாசலில் காத்திருக்கும் அந்த ராணி.

ராஜாமணி இல்லாத வடக்கு வாசல் அலுவலகத்தை சகித்துக் கொள்ளவும் பழகிக் கொள்ளவும் எங்கள் இருவருக்கும் சில நாட்களாவது ஆகலாம்.

துவக்க கால வடக்கு வாசல் இதழ் ஒன்றில்   அவருடைய நேர்காணல் ஒன்றை வெளியிட்டேன். ராஜாமணி தன்னுடைய   உணர்ச்சி மிகை கலந்த  கருத்துக்களையும்  மிகவும்   பட்டவர்த்தனமாகத் தெறித்து வீசி எறிந்த பதிவுகள் இந்த நேர்காணலில் உள்ளன. 

வடக்கு வாசல் நேர்காணல்கள் தொகுப்பில் இந்த நேர்காணல் இடம் பெற்றுள்ளது.

அந்த நேர்காணலை இங்கு நாளை பதிவிடுகிறேன்.

No comments:

Post a Comment