நவம்பர் 2005 வடக்கு வாசல் இதழில் வெளியான நேர்காணல்.
நேர்காணல் - ராகவன் தம்பி மற்றும் சுரேஷ் சுப்பிரமணியம்
தில்லிக்கு வரும் எந்தத் தமிழ் எழுத்தாளரும் தவறாமல்
- மறக்காமல் எப்போதும் விசாரிக்கும் ஒரு பெயர் ஏ.ஆர்.ராஜாமணி.  கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத்
தலைநகரில் தனியொருவராக, எழுத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்.  தீவிரமான படைப்புலகில் ஈடுபடவில்லை என்றாலும்,
குறிப்பிடத்தகுந்த
படைப்பு எதையும்  படைக்கவில்லை என்றாலும்
அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பல
பத்திரிகைகளில் பத்தியாளராகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப எழுத்துத் துறைகளில்
தன்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து வருபவர். 
மனதில் பட்டதை  எதிராளியின்
எதிர்வினைகளைப் பற்றி எவ்விதக் கவலையும் தயக்கமும் இல்லாது சொல்பவர்.  இந்தப் பேட்டியிலும் இவர் பலரைப் பற்றி மிகவும்
வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 
பல விஷயங்களை உறுதி செய்யாத நிலையிலும் நம்மிடையே இல்லாதவர்களைப் பற்றிய அவருடைய கடுமையான விமர்சனங்களை வெளியிடுவது அத்தனை நாகரிகமும் நேர்மையான செயலுமாக இருக்காது எனத் தோன்றுவதால் அவருடைய சொல்லாடல்கள், கருத்துக்கள் பலவற்றை இங்கு தவிர்த்திருக்கிறோம். பேட்டியின் இடையே அவர் அடிக்கடி "இதையெல்லாம் வெட்டித் தள்ள மாட்டீர் இல்லையா? தைரியமாப் போடுவீர் இல்லையா'' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். தலைநகரின் இலக்கியச் சூழலில் ஏ.ஆர்.ராஜாமணியின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்களில் அவசியமானவையும் கூட. அவருக்கு மிகவும் உடல் நலிந்திருந்த நேரத்தில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. உடலில் பல உறுப்புக்கள் வீக்கமடைந்து நடமாடவும் இயல்பாகப் பேசவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர் பேட்டியின் போது காண்பித்த ஆவேசமும் அவருடைய உடல் மொழியும் பிரமிக்க வைப்பதாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்..
பல விஷயங்களை உறுதி செய்யாத நிலையிலும் நம்மிடையே இல்லாதவர்களைப் பற்றிய அவருடைய கடுமையான விமர்சனங்களை வெளியிடுவது அத்தனை நாகரிகமும் நேர்மையான செயலுமாக இருக்காது எனத் தோன்றுவதால் அவருடைய சொல்லாடல்கள், கருத்துக்கள் பலவற்றை இங்கு தவிர்த்திருக்கிறோம். பேட்டியின் இடையே அவர் அடிக்கடி "இதையெல்லாம் வெட்டித் தள்ள மாட்டீர் இல்லையா? தைரியமாப் போடுவீர் இல்லையா'' என்று கேட்டுக் கொண்டே இருந்தார். தலைநகரின் இலக்கியச் சூழலில் ஏ.ஆர்.ராஜாமணியின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்களில் அவசியமானவையும் கூட. அவருக்கு மிகவும் உடல் நலிந்திருந்த நேரத்தில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. உடலில் பல உறுப்புக்கள் வீக்கமடைந்து நடமாடவும் இயல்பாகப் பேசவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர் பேட்டியின் போது காண்பித்த ஆவேசமும் அவருடைய உடல் மொழியும் பிரமிக்க வைப்பதாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்..
எப்போது எப்படி எதற்காக தில்லி
வந்தீர்கள்? 
1950-ம் ஆண்டு டிசம்பர் வாக்கில்
தில்லி வந்தேன் என நினைக்கிறேன்.  
வேலூர்  ஊரிஸ் கல்லூரியில்
படிப்பு.    அங்கு  மாவட்ட நீதிபதியாக இருந்த
ஏ.எஸ்.பி..அய்யரும்  மாவட்ட ஆட்சியராக
இருந்த ஆர்.சி.எஸ்.பெல் என்கிற ஆங்கிலேயரும்  
ஆங்கில இலக்கியத்தில் மிகவும் புலமை பெற்று விளங்கினார்கள்.  ஏ.எஸ்.பி..அய்யர் பின்னாட்களில் மிகவும் புகழ்
பெற்ற ஆங்கில நகைச்சுவை எழுத்தாளராக அறிமுகமாகி பெயர் பெற்றவர்.  இவ்விருவருக்கும் நெருக்கமாக இருந்த
டி.செங்கல்வராய அய்யர் என்ற வழக்கறிஞரின் 
உறவினர்  கே.என்.வி.சாஸ்திரி என்று
ஒருவர்.   தில்லி மத்திய செயலகத்தில்  சரித்திர ஆய்வுத் துறையில் ஆய்வாளராகப்
பணியாற்றி வந்த அவருக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டது.  அந்த உதவியாளர் தில்லியிலேயே இருக்க வேண்டும்
என்று செங்கல்வராயனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.  செங்கல்வராயன் அவர்கள் உடனே என்னை தில்லிக்குக்
கிளம்புமாறும் வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாகவும் சொன்னார்.  நான் உடனே தில்லி கிளம்பினேன்.  பழைய தில்லி ஜங்ஷனில் வந்து இறங்கினேன்.  அப்போதெல்லாம் சென்னை ரயில்கள் நேராக பழைய
தில்லிக்குத்தான் வரும்.  புது தில்லி
என்கிற பெயரே கிடையாது.   எல்லாம் ஒரே
தில்லிதான்.     தில்லியில் என் கால்கள்
பதிந்ததன் துவக்கம்.  ஆனால் எந்த
நோக்கத்துக்காக சாஸ்திரியார்  என்னை
தில்லிக்கு உதவியாளராக வரவழைத்தாரோ அது அவருக்கு திருப்தி தராத விஷயமாகப்
போனது.  காரணம் - நான்  ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் மற்றும்
பல    இலக்கியப் படைப்புக்களை எந்த
நேரமும்  வாசித்துக்  கொண்டிருந்ததனால், தான்    செலவு செய்து என்னை அழைத்து வந்ததன் பலன்
கிட்டவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது. 
என்னிடம் "உடனே ஊருக்குக் கிளம்பு'' என்றார்.   சென்னைக்கு டிக்கெட் எடுத்து தில்லி ரயில்வே
நிலையத்துக்கு என்னுடன் வந்து  பெட்டி
படுக்கைகளை ரயிலுக்குள் வைத்து என்னை வழியனுப்ப வந்தார்.  நான் 
மதுரா ஸ்டேஷனில் இறங்கி சாஸ்திரியார் கொடுத்த வழிச்செலவுக்கான பைசாவை
எடுத்துக் கொண்டு மீண்டும் தில்லி வந்து அடைந்தேன்.   தில்லி கான் மார்க்கெட்டில் பத்மநாபன் என்று
ஒரு நண்பரின் வீட்டில் தங்க   இடம்
கிடைத்தது.  ஆனால் வேலை?  அப்போது சேஷசாயி 
நிறுவனத்தில் சக்ரவர்த்தி ஐயங்கார் என்பவரிடம்  உதவியாளனாகச் சேர்ந்தேன்.  அதற்குப் பிறகுதான் தில்லி வாழ்க்கை
நிரந்தரமாகவும் சுமுகமாகவும் ஆனது.   
எழுத்துத் துறையில் பரவலாக ஈடுபட முடிந்தது.  தில்லியில்  
அகில இந்திய வானொலி நிலையத்தில் கிழக்காசிய நேயர்களுக்கான ஒலிபரப்பு
துவங்கிய நேரம்.  அதில் கண்ணம்மா சர்மா
என்று ஒரு பெண்மணி இருந்தார்.  அப்போது
திறமை இருந்தால் மட்டுமே வாய்ப்பு.  
ஒப்பந்தம் எல்லாம் கிடையாது. 
வெள்ளிவீதியாரைப் பற்றி ஒரு கட்டுரை அல்லது காக்கைப் பாடினியாரைப் பற்றிய
ஒரு உரையை தயார் செய்யுங்கள் என திடீரென்று சொல்வார் அந்த அம்மையார்.   வாயில் யதேச்சையாக என்ன தலைப்பு வருகிறதோ
அதைப் பற்றி எழுதச் சொல்வார்.  அப்படி
ஓரிரண்டு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தேன்.  
அதற்கான  பணம் எனக்குக்
கொடுக்கப்பட்டது.   எனக்கு ஒரே
ஆச்சரியமாகப் போய்விட்டது.  இதற்கெல்லாம்
பணம் கிடைக்குமா என்று. இது நடந்தது 1956. 
அப்போதிலிருந்து
எனக்கு அகில இந்திய வானொலியின் தொடர்பு ஏற்பட்டது.  கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள்
முடியப்போகின்றன.  1956-லிருந்து இன்று வரை
தில்லி வானொலியின் தென் கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ் ஒலிபரப்புப் பிரிவில் என்
மொழியாக்கப் பணி தொடர்கிறது.   அகில இந்திய
வானொலியில் பிறகு வாணிகம், பத்திரிகை விமர்சனங்கள் குறித்த மொழிபெயர்ப்புக்கள் என்று
ஆர்வம் தொடர்ந்தன.  அதே பைத்தியமாக அலைய
வேண்டியதாகியது.  அதன் வழியாக சர்வதேச
அரசியலை அறிமுகப்படுத்திக் கொள்ள அற்புதமான வாய்ப்புக்கள் கிடைத்தன.  அதனால் வேறு வகையான படைப்புக்களில் ஈடுபட
முடியவில்லை.   விருப்பமும் இல்லை.   நேரமும் 
கிடைக்கவில்லை.  காரணம் எழுத்தாளர்
சங்கம் அது இது என்று ஏகப்பட்ட சமூகப்பணிகள்.  
சிந்தித்து இலக்கியம் படைக்கக்கூடிய ஆற்றலும் எனக்கு இல்லை என்பதும் ஒரு
விஷயம்.  அந்த ஆற்றல் இல்லாமல் போனதால்
என்னால் இலக்கியப் படைப்புக்களில் ஈடுபடமுடியாமல் போனது என்பதுதான்  உண்மையான நிலை.  
முழுநேர எழுத்தாளராக நேர்ந்தது
எப்படி?  அது தற்செயலாகவா  அல்லது திட்டமிட்டு நேர்ந்ததா? 
ஆர்.சி.ஐயங்கார் என்று ஒரு பெரியவர்.     கல்கிக்கும் விகடனுக்கும் சிபாரிசு
செய்கிறேன்.   எங்கள் சேஷசாயி   நிறுவனம் 
பற்றி ஒரு  விசேஷக் கட்டுரை எழுதிக்
கொடுங்கள் என்று சொல்வார்.  அப்போது
சேஷசாயி நிறுவனத்தின் உரிமையாளர் வந்திருந்தார். 
அவைரைப் பற்றி எழுதியிருக்கிறேன். 
குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பத்திரிகைகள் வெளிவந்தனவோ
எல்லாவற்றிலும் எழுதியிருக்கிறேன். 
எம்ஜிஆரின் பத்திரிகை ஒன்று.   சம
உரிமை  என்று நினைக்கிறேன்.  எம்.ஜி.ஆரே ஆசிரியராக இருந்து நடத்தினார்.     சிங்கப்பூரில் இருந்து தமிழ் முரசு, தமிழ் நேசன், இலங்கையிலிருந்து
வீரகேசரி, கதம்பம்   போன்ற அத்தனை பத்திரிகைகளுக்கும் துக்ளக்
ஸ்ரீனிவாசன் தில்லி பிரதிநிதி.  
கிடுகிடுவென்று கட்டுரைகளை ஆங்கிலத்தில் டைப் செய்வார்.  அப்போது 
கணினி கிடையாது. ஒவ்வொன்றாக என்னிடம் கொடுத்து இதனைத் தமிழ்ப் படுத்தி,  தினமணிக்கு அனுப்பு,  இதனை வீரகேசரிக்கு 
அனுப்பு, இதை சிங்கப்பூர் தமிழ்நேசனுக்கு அனுப்பு என்று கொடுத்து விடுவார்.  அந்தப் பத்திரிகைகள் அனைத்தும்  ஸ்ரீனிவாசனுக்கு உடனுக்கு உடன் வரும்.  அவர் வீட்டில் அத்தனை பத்திரிகைகளையும்
தொடர்ந்து ஒன்று விடாமல் படிப்பேன்.  அந்த
வகையில் பரவலான பத்திரிகை தொடர்புகள் எனக்கு உண்டு.  இதைத் தவிர பெருமையாகச் சொல்லிக் கொள்ள
வேண்டுமென்றால் கல்கியில் வட்டமேஜை என்றொரு பகுதி.  அது வாராவாரம் பிரசுரமாகும் வாசகர் கடிதம்
பகுதி.  அதில் எழுதியதைப் பெருமை என்று
சொல்லவில்லை.  ஆனால்   பெருமை 
தருமாறு அமைந்த சம்பவங்கள்தான் சுவாரசியம்.  தமிழ் எழுத்தாளர் சங்கம்.  கல்கியின் தலைமையில் இயங்கியது.   அந்த எழுத்தாளர் சங்கத்தின் அகில இந்திய
மாநாடு சென்னையில் நடக்கிறது.  முதல்வராக
இருந்த ராஜாஜி தலைமை வகிக்கிறார். 
அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தலைவர் குமாரசாமி ராஜா சிறப்பு
விருந்தினர்.  வடக்கில் இருந்த அத்தனை
பிரபல எழுத்தாளர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு
ஆற்றுகின்றனர்.  மாநாட்டு அமைப்பாளர்களாக
க.நா.சு. மற்றும் கொடுமுடி ராஜகோபாலனும் செயல்பட்டனர். மணிக்கொடி  சீனிவாசன், பி.எஸ்.ராமையா போன்ற ஜாம்பவான்கள்
எல்லாம் கலந்து கொண்டு மூன்று நாட்கள் நடந்த மாநாடு அது.  அந்த மாநாடு முடிந்த மறுநாள் கீழ்ப்பாக்கத்தில்
இருக்கும் கல்கி கார்டனில் எல்லா பிரதிநிதிகளுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு
செய்திருந்தார் கல்கி சதாசிவம் அவர்கள். 
நாங்கள் அத்தனை பேரும் போயிருந்தோம். 
காசா.சுப்பராவ் என்று ஒருவர். 
ஸ்வராஜ்யா பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார். பெரிய பத்திரிகையாளர்.  ராஜாஜி பக்கத்தில் அமர்ந்திருந்தார்.  அது டிசம்பர் மாதம்.  எல்லோரும் குளிருக்குத் தலைக்கட்டுக் கட்டிக்
கொண்டு தோட்டத்தில் உட்கார்ந்து இருந்தனர். 
இலக்கியம் குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.  கல்கி சதாசிவம் மாடியில் வீட்டில்
இருந்தார்.   கீழே தோட்டம்.  வலது புறம் கல்கி அச்சகம்.  கீழே இறங்கி வந்தார் சதாசிவம்.  "இந்த வாரக் கல்கி தயாராகிக்
கொண்டிருக்கிறது.  வந்து பார்க்கலாமே''
என்று
சொன்னார்.  பத்திரிகைத் துறையில் கொட்டை
போட்ட பெரியவர்களைத் தவிர இளைஞர்களாக இருந்த நான், ஜெயகாந்தன், விந்தன், (விந்தன் கல்கியில் துணை
ஆசிரியராக இருந்தவர்) ஆகியோரை கல்கி பத்திரிகை அச்சாகிக் கொண்டிருந்த இயந்திரத்தை
நோக்கி அழைத்துக் கொண்டு போனார் சதாசிவம். 
வலது கையில் என்னையும் இடது கையில் ஜெயகாந்தனையும் தாங்கிப் பிடித்துக்
கொண்டு  அழைத்துக் கொண்டு போனார்.  ஜெயகாந்தன் பிற்காலத்தில் இலக்கியத்தில் ஒரு
பிரம்ம ராக்ஷஸனாக மாறி இருக்கலாம்.  ஆனால்
அப்போது தன்னுடைய எழுத்துக்களை அச்சினில் பார்க்கத் துடிக்கும்  ஒரு 
சிறுபிள்ளையின் ஆர்வம்  அவரிடம்
இருந்தது.  அதனால் ஜெயகாந்தன் தன்னுடைய
எழுத்துக்கள் அச்சான அந்தப் பக்கத்தை உன்னிப்பாகப் பார்க்கிறார்.  கல்கி சதாசிவம் என்னிடம் கேட்டார்.  தில்லியிலிருந்து வாராவாரம் ராஜாமணி என்று
எழுதிக் கொண்டு வருவது நீதானா?'' என்று கேட்டார். 
ஒரு வாசகர் கடிதம் பகுதியில் எழுதியதற்கு இதுபோன்ற ஒரு கவனிப்பா என்று
இன்று வரை எனக்குப் பிரமிப்புத்தான். 
"உம்ம வளர்ச்சியின் துவக்கம் வட்டமேஜையில்தான்யா'' என்பார்
வெங்கட்சாமிநாதன். வட்டமேஜைக்குப் பிறகுதான் நான் கட்டுரையாளன் ஆனேன்.  வானொலியில் மொழிபெயர்ப்பாளன் ஆனேன்.  
பல இலக்கிய ஜாம்பவான்கள் உங்கள்
நண்பர்களாகவோ எதிரிகளாவோ இருந்திருக்கிறார்கள். 
தில்லியில் அவர்களுடனான உங்கள் தொடர்பு மற்றும் நட்பு பற்றிக் கொஞ்சம்
சொல்லுங்கள்...
தில்லியில் இலக்கிய ஜாம்பவான்கள் அதிகமாக இருந்த
காலகட்டம் அது.  குறிப்பாக
சொல்லவேண்டுமென்றால் தி.ஜானகிராமன். 
து.முத்துசாமி என்று  ஒரு பத்து
எழுத்தாளர்களாவது இருந்திருப்பார்கள். 
அதிகமாக பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.  மறதி அதிகமாகிக் கொண்டு வருகிறது.  இத்தனை எழுத்தாளர்களில்
க.நா.சுப்பிரமணியத்துடன் மட்டும் நல்ல தொடர்பு இருந்திருக்கிறது.   சுஜாதா... ஆதவன்... சுந்தா...  சுஜாதா தற்போது ராமானுஜம் மெஸ் அமைந்திருக்கும்
தெருக்கோடியில் இருந்தார்.  அப்போது அவர்
சுஜாதா இல்லை.  ஸ்ரீரங்கம்
ரங்கராஜன்தான்.  சுஜாதா என்றால் யாருக்கும்
தெரியாது அப்போது.  கணையாழியில் மட்டும்
எழுதிக் கொண்டு இருந்தார்.  ‘இடைவெளி' சம்பத், வாசந்தி, கிருத்திகா, அம்பை, லக்ஷ்மி கண்ணன், என்.எஸ்.ஜெகன்னாதன்,   கஸ்தூரிரங்கன், மாயாவி அடங்கலாக ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள்
தில்லியில்  வசித்த  காலகட்டம் அது.   மூத்த பெண் எழுத்தாளர் அநுத்தமா அவர்கள் நான்
சென்னைக்கு எழுத்தாளர் கூட்டங்களுக்குச் செல்லும்போது என்னைக் கையைப் பிடித்து
அழைத்துச் செல்வார்.  கல்கி
போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். 
கல்கி சதாசிவம் "இவன் உங்கள் பையனா?'' என்று கேட்பார்.  இல்லை. 
தெரிந்தவர்கள் வீட்டுப் பையன் என்று சொல்வார் அநுத்தமா.  எனக்கு 
அனைத்து எழுத்தாளர்களின் கையெழுத்துக்களையும் வாங்கிச் சேகரிக்கும் பழக்கம்
உண்டு.  மிகப்பெரிய வால்யூமாக அந்தக்
கையெழுத்து நோட்டினை பராமரித்துக் கொண்டு வந்தேன்.  மஞ்சரி ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதன் அவர்கள்
எனக்குக் கடிதம் எழுதும் போது கையெழுத்து வேட்டைப்புலி ராஜாமணி அவர்களே என்றுதான்
தன் கடிதத்தைத் துவங்குவார். 
உலகத்தலைவர்களில் இருந்து கல்கி, கநாசு உள்பட அனைவரின் கையெழுத்துக்களையும் வாங்கி
வைத்திருக்கிறேன்.  நான் பிரமிக்கக்கூடிய
குணச்சித்திரவாதிகள் அனைவரும் அதில் உண்டு. 
ஒரு பெரிய தலையணை அளவுக்கு அது இருக்கிறது.  
க.நா.சு வுடன் மிகவும் நெருங்கிப்
பழகியவர் நீங்கள்.  அவரைப் பற்றிக் கொஞ்சம்
சொல்லுங்கள்.
க.நா.சு பற்றி நான் ஒரு புத்தகமே எழுதலாம்.  அந்த அளவுக்கு அவருடன் நெருக்கமும் பழக்கமும்
உண்டு.  கநாசு அடிக்கடி சொல்வார்þ   தில்லிக்கு என்னை வரவழைத்தது ராஜாமணி தான் என்று.  காரணம் அவர் தில்லி வந்தால் தங்கக்கூடிய இடம்,
ஜீவனோபாயத்துக்கான
வழிமுறைகள் என்று ஒரு விஸ்தாரமான பட்டியலை அவரிடம் கொடுத்தவன் நான்.  க.நா.சு.வின் தங்கையின் பிள்ளை ஒருவர்.  ராமு என்று பெயர்.  ரஜோரி கார்டனில் இருந்ததாக நினைவு.   தனியாக இருந்தார்.  அவருடன் தங்கியிருந்தார் க.நா.சு.    அப்போது என் அறைக்கும் அவர் தங்கியிருந்த
வீட்டுக்கும் ஒரு பர்லாங் தூரம்தான் இருந்திருக்கும்.  அதனால் அடிக்கடி அவரைப் போய்ப்
பார்ப்பேன்.  யாரைச் சந்தித்தாலும்,  இந்த ராஜாமணிதான் எனக்கு வழிகாட்டி என்று சொல்வார்.  தில்லியில் யாராவது பத்திரிகைக்காரர்களை
அறிமுகப்படுத்து என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.  தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய செயலாளர்
எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மாமனார் திரு.ரங்காச்சாரி.  அவர் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் ஆசிரியராக
இருந்தார்.  க.நா.சுவை ரங்காச்சாரியிடம்
அழைத்துக் கொண்டு போனேன்.   க.நா.சுவை அவர்
மிகவும் கனிவாக நடத்தியது மட்டுமல்ல. 
வாராவாரம் ஞாயிறு மலரில் எழுதுமாறும் பணித்தார்.   ஸ்டேட்ஸ்மேன் வழக்கமாக ஒரு எழுத்தாளனுக்குத்
தரும் ஊதியத்தைவிட மூன்று மடங்கு உங்களுக்குத் தருமாறு நான் பேசுகிறேன்
என்றார்.  அதே போல ரங்காச்சாரி காலமாகும்
வரை கநாசுவை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினார். 
ஸ்டேட்ஸ்மேனில் எப்போதும் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகம்.  குறிப்பாக தில்லிப் பல்கலைக்கழகத்தில்
பேராசிரியாராக இருந்தவர் ஆர்.கே.தாஸ் குப்தா.  
தமிழரான கநாசுவுக்கு ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் வாராவாரம் ஒரு பக்கம்
ஒதுக்கப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் கல்கத்தாவுக்கே சென்று
ஸ்டேட்ஸ்மேன் தலைமை அலுவலகத்தில் கலகம் செய்தார். 
ஆனால் அவர்கள் ஆசிரியர் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று
கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.  ரங்காச்சாரி
அவர்கள் க.நா.சுவுக்குக் கொடுத்த வாய்ப்பினால் உலக இலக்கியங்கள் பற்றியெல்லாம்
எழுதி வந்த  தாஸ்குப்தாவின் செல்வாக்கு
படிப்படியாக இறங்கியது.  அப்படி இறங்கியதை
அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  எனவே
அவர் கநாசுவுக்கு எதிரான வேலைகளில் இறங்க வேண்டியதாயிற்று.  சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற
அமைப்புக்களின் கூட்டம் அல்லது விருந்துகளின் போது கநாசுவைப் பார்த்தால் அவருக்கு
சினத்தீ மூண்டு எழும்.  கநாசுவின்
வாழ்க்கையோடு ஒன்றிப்போனதால் கநாசுவின் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதிக் கொடுங்கள்,
நான் பிரசுரிக்கிறேன்
என்றார் சமீபத்தில் மறைந்த வலம்புரி ஜான் அவர்கள்.   கும்பகோணத்தில் தேனுகா - கநாசுவைப் பற்றி நீங்கள்
எழுதுங்கள்.  என்னுடைய செலவில் நான்
பதிப்பித்துத் தருகிறேன் என்றார். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குக் க.நா.சுவுடன்
நெருங்கிப் பழகியிருக்கிறேன்.  
உங்களைப் போல் அப்போது க.நா.சு.
வும் தில்லியில் வானொலிக்கு கட்டுரைகள், மொழிபெயர்ப்புக்களை எழுதி வந்தாரா?
க.நா.சுவுக்கும் அகில இந்திய வானொலி நிலையத்துக்கும்
கீரியும் பாம்பும் போன்ற ஒரு உறவு.  காரணம்,
ஸ்டேட்ஸ்மேன்
பத்திரிகையில் தில்லி வானொலி பற்றியும் அகில இந்திய வானொலி பற்றியும் மிகவும்
கடுமையாக எழுதி வந்தார் கநாசு.   க.நா.சு
வால் தயாரிக்கப்பட்ட இலக்கியப் பட்டியலில் தொடர்ச்சியாக இடம் பெற்ற துறைவன்
என்கின்ற கந்தசாமி தில்லி வானொலி நிலையத்தில் இருந்தார்.  பல எழுத்தாளர்கள்  "தங்கள் பட்டியலில் நான் இடம் பெற
வேண்டும்.  அந்தத் தகுதி எனக்கு இல்லையா
எனப் பக்கம் பக்கமாக அவருக்குக் கடிதங்கள் எழுதுவார்கள்.   அறுபது பக்கம் எழுபது பக்கங்கள் கடிதம்
எழுதுவார்கள்.  அதை அலட்சியமாகப் புரட்டிப்
பார்த்துவிட்டு படிய்யா இதை என்று என்பக்கம் தூக்கிப் போடுவார்.  க.நா.சுவின் இலக்கியப் பட்டியல் ஏராளமான
விரோதிகளை அவருக்குத் தேடித்தந்த பட்டியல். 
அதில் இடம் பெறவேண்டும் என்று ஆசைப்பட்ட படைப்பாளிகளில்  சிவசங்கரி போன்றவர்கள் இருந்தார்கள்.   ஆனால் அவர்களை அந்தப் பட்டியலில் சேர்க்கத்
தயாராக இல்லை க.நா.சு.  துறைவன் ஒரு
சாரமற்ற கவிஞர்.  க.நா.சு.வின் மேன்மையான
பட்டியலில் இடம் பெற்றிருக்கிறோம் என்கிற ஞானமோ அல்லது அந்தப் பட்டியலின்
மேன்மையினைப் பற்றியோ யாதும் அறியாமல் இயங்கிய ஒரு சின்னப் படைப்பாளி.   க.நா.சு. பெருமையாகச் சொல்வார் -
"துறைவன்
அங்கே இருக்கார்.  என்னை அழைச்சிக்கிட்டுப்
போ'' என்று.  அவருடைய நச்சரிப்புத் தாங்காது தில்லி வானொலி
நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தேன்.  
துறைவன் அறைக்கு வந்தோம். அவர் எனக்கு மேலதிகாரி.  அதனால் கநாசுவை அனுமதியில்லாமல் அழைத்துப்
போகிறோம் என்பதனால் க.நா.சுவை வெளியில் உட்கார வைத்து துறைவன் அறைக்குப் போய்
"க.நா.சு. உங்களை சந்திக்க வந்திருக்கிறார்'' என்று சொன்னேன்.  அழைத்து வா என்றார். பின்னர் சம்பிரதாயமாக
இலக்கியம் எல்லாம் பேசிவிட்டு "ஏதாவது தொடர்ச்சியாக உதவ முடியுமா என்று
பாருங்கள்'' என்று க.நா.சு. கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் ஒன்று சொல்லியே
ஆகவேண்டும்.  க.நா.சு. வேறு.  சி.சு.செல்லப்பா வேறு. காரணம், க.நா.சுவுக்கு சுயமரியாதை
அதிகம். செல்லப்பாவுக்கு அதை விட ஒரு கிலோ அயோடின் உப்பு கலந்த சுயமரியாதை அதிகம்.
க.நா.சுவுக்கு சுயமரியாதை எப்போது வருமென்றால் அவரை நாம் புறக்கணித்தால் வரும்.
செல்லப்பா நம்மை புறக்கணிப்பார். சரி. அகில இந்திய வானொலிக்கு வருவோம்.  க.நா.சு. அப்படிக் கேட்டுக் கொண்டதும் துறைவன்
"அதுக்கென்ன ஓஹோ..'' என்றார்.  பிறகு
க.நா.சு வை தமிழ்ப்பிரிவில் அமரவைத்து விட்டு மீண்டும் துறைவன் அறைக்குச் சென்று
நன்றி சொன்னேன்.  "இவரை ஏன் இங்கு
அழைத்து வந்தாய்'' என்று என்னைக் காட்டமாகக் கேட்டார் துறைவன். அவர் அப்படிக் கேட்டதற்குக்
காரணம் என்னவென்றால் பாவம் அவரால் கநாசுவுக்கு ஒன்றும் செய்ய முடியாது.  அதற்குக் காரணம் - வானொலியின் தலைமை அலுவகத்தில்
க.நா.சு.வை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்திருந்தார்கள். க.நா.சு. என்கிற
எழுத்தாளருக்கு தலைமை நிலையத்தில் எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் தரக்கூடாது என்று
கறுப்புப் பட்டியலில் அவரை சேர்த்திருந்தார்கள். அதனால் துறைவனால் ஒன்றும்
செய்யமுடியவில்லை.  அதை பாவம் அவரால்
வெளியில் சொல்லிக் கொள்ளவும் முடியவில்லை. பிறகு ஒரு தமிழர் டெபுடி டைரக்டர்
ஜெனரலாக வந்தார்.  அவர் பெயர் சொல்ல
வேண்டாம். சொல்லவும் கூடாது.  ஏனென்றால்
அதற்கு அரசியல் சாயம் பூச வாய்ப்புக்கள் உள்ளன. எனவே பெயர் வேண்டாம். அவரிடம்
கேட்டேன்.  "க.நா.சுவுக்காக இந்த
ஜென்மத்துலே வானொலியிலே ஒண்ணும் பண்ண முடியாதுய்யா'' என்று சொன்னார் அவர்.  இதை நான் க.நா.சு. விடம் சொன்னேன்.  "ரொம்ப சந்தோஷம்.  இந்த அமைப்புக்களை நம்மாலே மாத்த
முடியாது.  அப்படி மாத்த முயற்சி பண்ணா பழி
வாங்குவாங்க.  தெரிஞ்சதுதான்.  ஆனாலும் நம்மைக்கூட தன்னோட பட்டியல்லே
சேர்த்திருக்கான் இவன் என்று என்னைப்பத்தித் தெரியாத அந்த மனுஷன் கிட்டே போனோமே
அதைச் சொல்லும்''  என்றார்.  
இதே வானொலியில் பேசுவதற்கு காந்தி பிறந்து நடந்த
மண்ணை எல்லாம் தரிசித்து விட்டு பாரதமணி ஆசிரியர் சீனிவாச அய்யங்காருடன் இந்தியா
முழுக்க சுற்றிவிட்டு வந்த செல்லப்பா யு.என்.ஐ புல்வெளியில் நின்று
கொண்டிருந்தார்.  நான் சீனிவாச அய்யங்காரை
மட்டும் ஆகாஷவாணிக்கு அழைத்துக் கொண்டு போனேன். 
செல்லப்பா வந்திருப்பதையும் சொன்னேன். அவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்
என்று சொன்னார்கள்.  செல்லப்பாவிடம்
சொன்னோம் - முன்னூற்று ஐம்பது ரூபாய் உங்களுக்குக் கொடுப்பார்கள். பத்து நிமிஷம் நீங்கள்
காந்தியத்தைப் பற்றியோ இலக்கியத்தைப் பற்றியோ பேசலாம் என்றோம்.  "முப்பத்து ஐயாயிரம் குடுத்தாலும் உங்க
ஆகாஷவாணியிலே காலை வைக்க மாட்டேன்''  என்றார் செல்லப்பா. 
க.நா.சுவைப் பொறுத்த வரையில் தன்னுடைய
பொருளாதார நிலைமையைப் பொறுத்து சில சமரசங்கள் செய்து கொள்பவர் என்ற பரவலான
அபிப்ராயம் உண்டு.  அதில் உண்மையும் உண்டு.
ஒரு எழுத்தாளன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு பொருளாதார ரீதியாக வளமாக இருக்க
வேண்டும் என்பதற்கு க.நா.சு. ஒரு மகத்தான முன்னுதாரணம். அவருடைய குடும்பமே  ஏளனம் செய்யும்.  "ராஜாமணி கரோல்பாக்கில் இருந்து உங்களிடம்
வருவார் - ஐந்து
ரூபாய் கேட்டு - நீங்கள் அவரிடம் ஐந்து ரூபாய் கேட்பீர்கள். 
என்ன பிழைப்பு பிழைக்கிறீர்கள்?'' என்று கேலி பேசுவார்கள்.  பின்னாளில் பிரதமராக இருந்த செüத்ரி சரண்சிங், கிஸôன் டிரஸ்ட் என்று ஒரு
அமைப்பைத் துவங்கினார். அந்த அமைப்பின் ஆங்கிலப்பத்திரிகைக்கு க.நா.சு. ஆசிரியர்.
எக்கச்சக்க சம்பளம். தன் வாழ்நாளில் க.நா.சு. அவ்வளவு பணம் பார்த்திருக்க
மாட்டார். ஒரு நாளைக்குத் தன் பாக்கெட்டில் ஆயிரம், இரண்டாயிரம் என்று அடக்கி
வைத்துக் கொண்டுதான் அலுவலகம் வருவார். நான் அங்கு போவேன். ராஜாமணி வந்திருக்கிறேன்
என்று தகவல் சொன்னால் அவர் பங்களாவின் வெளியே உள்ள புல்வெளிக்கு வருவார்.
"என்னய்யா பணம் வேணுமா?'' என்று கேட்பார். நான் பதில் சொல்வதற்குள் பாக்கெட்டில்
கைவிட்டு நூறோ இருநூறோ எவ்வளவு வருமோ அதை என் கையில் திணித்து விடுவார். அது
க.நா.சு. ஐந்துக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்ட க.நா.சு. தனக்கு வசதி வந்தபோது
நலிந்த நிலையில் என் போன்ற எழுத்தாளனை எப்படிப் பராமரித்தார் என்பதற்கு உதாரணம்
சொல்ல இதனைச் சொல்கிறேன். எனக்கு மட்டுமல்ல. இப்படி எத்தனையோ பேருக்கு இதுபோல  பணம் வந்தபோது உதவியிருக்கிறார் க.நா.சு. 
மறைந்த எழுத்தாளர்
சி.சு.செல்லப்பாவுடனும் உங்களுக்கு நெருங்கிய நட்பு இருந்திருக்கிறது.  நாங்கள் சென்னைக்குச் சென்று
சந்திக்கும்போதெல்லாம் செல்லப்பா கேட்டுக் கொண்டிருந்த முதல் கேள்வி "ராஜாமணி
எப்படி இருக்கான்?''  அவருடன் கூடிய உங்களின்
நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாமே?
செல்லப்பா ஒரு வணங்கத்தக்க மரியாதைக்குரிய
இலக்கியவாதி. அவரைப்பற்றி நிறைய சொல்லலாம். காந்தியவாதியாக வாழ்ந்தவர். அவருடைய
சிக்கனம் நம்முடைய ரத்தக்கொதிப்பை ஏற்றிவிடும். திருவல்லிக்கேணியில் உள்ள அவருடைய
வீட்டுக்குப்போனால், ""வாய்யா சிதம்பர சுப்பிரமணியத்தைப் பார்த்துட்டு வருவோம்''
என்பார்.
சிதம்பரசுப்பிரமணியம் கோடம்பாக்கத்தில் விஜய வாஹினி  ஸ்டூடியோவில் இருப்பார்.  திருவல்லிக்கேணியிலிருந்து கிளம்பி
கோடம்பாக்கம் கிளம்புவோம். நடந்துதான். வழியில் ஒரு டீ சாப்பிடுவோம் என்பேன்.  "ஏன்யா இப்போதானே கிளம்பறப்போ மாமி டீ
குடுத்தா. அதுக்குள்ளே எதுக்குய்யா என்பார். அவருடன் போகும்போது பசியைக்கூட
அடக்கிக் கொண்டே தான் போகவேண்டும். வாகினி ஸ்டூடியோவில் தாய் மகளுக்குக் கட்டிய
தாலி என்று அபத்தமான ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்.  சிதம்பரசுப்பிரமணியம் அங்கு ஒரு டீ வாங்கித்தருவார்.
அவ்வளவுதான்.  அவரைப் பார்த்து விட்டு
திரும்ப வரும்போதும் செல்லப்பாவுடன் நடைதான். 
செல்லப்பா தன்னுடைய எழுத்து பத்திரிகை நடத்திய போது
ஐந்து ரூபாய் ஆண்டு சந்தாவுக்கு ஐம்பது தபால் கார்டு எழுதுவார். எனக்கு எரிச்சலாக
வரும்.  என்னால் அப்போது ஐந்து ரூபாய்
கொடுக்க முடியாத நிலை. அவருக்கும் அந்த ஐந்து ரூபாய் இல்லாமல் பத்திரிகையை நடத்த
முடியாத நிலை..  அவராலும் பாவம் இலவசமாக
நடத்த முடியாது. எனவே அந்த ஐந்து ரூபாயைக் கேட்டு ஐம்பது முறை கடிதம் எழுதுவார்.
நான் உடனே எழுத்து பத்திரிகையை அனுப்புவதை நிறுத்துங்கள் என்று கடிதம் எழுதுவேன்.
அடுத்தமுறை அவரை சென்னையில் சந்திக்கும்போது அவர் எழுத்து பத்திரிகைக் கட்டைத்
தலையில் சுமந்து கொண்டு ரயில் நிலையம் சென்று பார்சல் அனுப்புவார். கடைகளில்
போட்டு வருவார். அதைப்பார்க்கும்போது அந்த ஐந்து ரூபாய் அவருக்கு எவ்வளவு
முக்கியமான பணம் என்று எனக்குத் தோன்றும். ஐந்து ரூபாய்க்கு ஐம்பது கடிதம்
எழுதுகிறாரே என்கிற அறிவிலித்தனமான நினைப்பு என்னுள்ளிருந்து மறைந்து அவருடைய
லட்சியப் பயணம் எனக்கு உரைக்கத் துவங்கியது. செல்லப்பா போன்று தியாகங்கள் செய்து
பத்திரிகையை நடத்திய எழுத்தாளன் எவனுமே இதுவரை பிறக்கவில்லை. அவர் வித்தியாசமாக
தமிழில் ஒரு விதிவிலக்காக இருந்தார். அவர் ஒரு சகாப்தம். செல்லப்பா சகாப்தம்
என்பது தனி. அவருக்கு தனி வாழ்க்கை. தனிப்பாதை. தனி நெறிமுறை. வாழ்ந்ததெல்லாம்
பிரம்மாண்டமான வாழ்க்கை.  செல்லப்பாவைப்
பற்றி எவ்வளேவா சொல்லலாம். அவரைப்பற்றி நான் சொல்லத் துவங்கினால் மற்றவர்களைத்
தாக்கிப்பேசும் அவஸ்தைகள் நேரலாம். நீர் பிரசுரிக்க மாட்டீர். அதனால் அவரை எந்த
அளவுக்குப் புகழணுமோ அதைமட்டும் செய்து நிறுத்திக் கொள்வது நாகரிமாக இருக்கும்
என்று நினைக்கிறேன்.  நல்லவர்களைப் பற்றிப்
பேசும்போது மோசமானவர்களுடன், அடுத்தவர்களுடன் அவர்களை 
ஒப்பிடவேண்டிய நிர்ப்பந்தங்கள் எல்லாம் வந்து தொலைக்கும். 
முன்பு ஒருமுறை எங்கோ
எழுதியிருக்கிறீர்கள் - பாரதிதாசனுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டு என்று.  அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...
பாரதிதாசனை சந்திக்க சாலை இளந்திரையன் மற்றும் சாலினி
இளந்திரையனுடன் பாண்டிச்சேரி போனேன். 
பாரதிதாசனுக்கும் சாலை இளந்திரையனுக்கும் ஆசான்þமாணவன் உறவு.   அதனால் 
அவருடன் போனபோது மிகவும் அற்புதமாக எங்களை வரவேற்றார் பாரதிதாசன். வீட்டின்
உள்ளே அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 
என்னைப் பார்த்து "யார் இவன்? 
பார்த்தால்
அய்யர் வீட்டுப் பிள்ளை போல் இருக்கிறோனே'' என்று சிரித்துக் கொண்டே
சாலையிடம் கேட்டார்.  அவர் சொன்னார்
"அய்யர் வீட்டுப்பிள்ளைதான்.  ஆனால்
அய்யர் வீட்டு ஆசாரங்களும் குணாதிசயங்களும் சாமர்த்தியங்களும் இல்லாதவன் இவன்.  அதனால்தான் உங்களிடம் அழைத்து வந்தேன்''
என்று சொன்னார்.
அந்த சந்திப்புக்குப் பிறகு சில தடவைகள் பாரதிதாசனை பாண்டிச்சேரியில் சந்தித்து
இருக்கிறேன்.  அவருடைய பல படைப்புக்கள்
எனக்கு அறிமுகமாயின.  உண்மையில்
சொல்லவேண்டுமென்றால் பாரதியை விட பாரதிதாசனால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்.
பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களுடைய படைப்புக்களை அதிகம்
நேசித்ததினாலேயே எனக்கு எப்போதும் ஒரு கோபாக்கினி உள்ளுக்குள் உண்டு.  நம் இந்தியா கேட்டில் அணையாமல் அமர் ஜோதி  என்று ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்குமே அது
போல. அந்த சோதி,  போல ஒரு தீ தொடர்ச்சியாக எரிந்து
கொண்டே இருக்கும்.  அது சினத்தீ.  அந்த சினத்தீ எப்போதும் படைப்பாளியிடம் இருந்து
கொண்டே இருக்கவேண்டும்.  பாரதியிடம் அதிகம்
பக்தி þ இறைவன்
துதி, தத்துவம்  போன்றவை உண்டு. எல்லாம் கலப்படமாக மூளையை
அவியல் செய்து வைத்தமாதிரி.  ஆனால்
பாரதிதாசன் படைப்புக்களில் ஒரு தெளிவு உண்டு. 
யாரைத் தாக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் இருக்கும். எனவே எனக்கு
பாரதிதாசனில் ஈடுபாடு உண்டு. உடன்பாடு உண்டு.
விமரிசகர் வெங்கட்சாமிநாதனும் பல
வருடங்களாக தில்லியில் இருந்திருக்கிறார். 
அவருடன் தொடர்பு இருந்ததுண்டா?
வெங்கட்சாமிநாதன் எனக்கு ஒருநாள் இருநாள் அல்ல.
பதினாறு வருடங்கள் என் அறைத்தோழர். நாங்கள் இருவரும் ஒரே அறையில் பதினாறு
வருடங்கள் வாழ்ந்திருக்கிறோம். அந்தக் காலத்தில் ஞானரதம் என்று ஒரு
பத்திரிகை.  தேவபாரதி என்று ஒரு இசுலாமிய
இளைஞர்.   வெங்கட்சாமிநாதன் தொடர்ச்சியாக
அந்த ஞானரதத்தில் எழுதி வந்தார். என்னையும் எழுதச் சொன்னார். திருத்தங்கள்
வேண்டுமென்றால் செய்து தருகிறேன் என்றார். ஞானரதத்தின் ஐந்தாறு இதழ்களில் நான்
எழுதியிருக்கிறேன். அதனால் வெங்கட்சாமிநாதனின் வழிகாட்டுதல் எனக்கு உண்டு என்று
சொல்லிக் கொள்ளலாம்.  
வெங்கட்சாமிநாதனுடனான என்னுடைய பதினாறு வருட பழக்கத்தில் எனக்கு ஆங்கில
இலக்கியவாதிகள் பலர் பரிச்சயமானார்கள். 
மனிதர் ராத்திரியெல்லாம் படிப்பார். அவருடைய சில துர்க்குணங்களை நாம் கண்டு
கொள்ளாமல் விட்டோம் என்றால் அவரைப்போல ஆங்கில இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புள்ள
ஆழ்ந்த படிப்புள்ள தமிழ் விமர்சகன் க.நா.சு வுக்கு அடுத்து அவர்தான் என்று
சொல்வேன். க.நா.சு.வே "வெங்கட்சாமிநாதன் மாதிரி படிச்சவன் யாருய்யா?''
என்று அடிக்கடி
சொல்வார். "அவன் எனக்கு ஒண்ணும் பண்ணலே. 
ஆனா அவன் மாதிரி படிப்பாளி யாருய்யா'' என்பார் க.நா.சு.  வெங்கட்சாமிநாதன் நம்மில் தனி ரகம்.  ஜெயகாந்தன் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு
"க.நா.சு.வை ஒழுங்கா எழுதச் சொல்லுய்யா'' என்று எச்சரிக்கை விடுவார். ஆனால்
"வெங்கட்சாமிநாதன் நலமா? என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கோ'' என்பார் ஜெயகாந்தன்.  இதிலிருந்தே வெங்கட்சாமிநாதனின் படிப்பும்
புலமையும் ஆழமும் தமிழில் அவருடைய அவசியமும் நமக்குப் புலனாகும். 
தில்லித் தமிழ் எழுத்தாளர்
சங்கத்தின் செயலராகப் பல வருடங்களாக இருந்திருக்கிறீர்கள்.  அதனுடைய தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்துக்
கொஞ்சம் சொல்லுங்களேன்...
தமிழ் எழுத்தாளர் சங்கத்தை நான் தோற்றுவிக்க
முக்கியமான காரணமாக இருந்தவர் சாலை இளந்திரையன். 
தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார் அவர். அப்போது தமிச்சங்கத்தின்
தலைவராக இருந்தவர் சி.பிஐ இயக்குநர் சி.வி.நரசிம்மன் அவர்கள். தமிழ்ச்சங்கம் கடன்
பளுவில் மூழ்கி ஏலத்துக்குப் போவது போல இருந்த நேரத்தில் தன்னுடைய அதிகாரத்தையும்
தொடர்புகளையும் பயன்படுத்தி தமிழ்ச் சங்கத்தைக் காப்பாற்றியவர் திரு.நரசிம்மன்
அவர்கள்.  சாலை இளந்திரையன் அவருடன் மோதிக்
கொண்டே இருப்பார். நரசிம்மனின் சாதிப்பெயர் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரம். 
அந்த அம்மையாருக்கும் 
நரசிம்மனுக்கும் ஆகவில்லை.  அதனால்
அவரை எப்படியெல்லாம் பந்தாடவேண்டுமோ அப்படியெல்லாம் செய்தார்கள்.  அவருடைய பதவியே ஆட்டம் கண்டது.  இவர் பிரார்த்தனையாக ஆவடிப் பூசத்தின் போது
அடியார்களோடு அடியாராக மலைமந்திர் முருகனுக்கு நரசிம்மன் காவடி எடுத்தார். அதை
நான் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.   
அதன் பிறகு சாலை இளந்திரையன், நரசிம்மனை "காவடிப் பார்ப்பான்'' என்று பரிகாசம் செய்ய
ஆரம்பித்தார்.  ஆனால் எனக்கு உடல்நிலை
சரியில்லாத போது பல நேரங்களில் காலையில் என் அறைக்கு வந்து என்னுடனேயே இருந்து
உதவிகள் செய்வார். சாலை  பிறகு போகும் போது
எனக்குத் தெரியாமல் என் தலையணை அடியில் நூறு இருநூறு எனப் பணம் வைத்துவிட்டுச்
செல்வார்.  இப்படி மிகவும் கண்ணியமாக தான்
செய்யும் உதவியைக் கூட பிறர் அறியாத வண்ணம் செய்த மனித நேயம் மிகுந்தவராக
விளங்கினார் சாலை.  தமிழ்ச் சங்கத்தில்
அதன் தலைவர் நரசிம்மனுடன் உறவு கெட்டுப்போனதால் தமிழ்ச் சங்கம்
கிருஷ்ணமூர்த்திக்கு மிகப்பெரிய தலைவேதனையாக இருந்தார் சாலை இளந்திரையன். சாலை
இளந்திரையனின் தமிழுக்காக அவருக்குத் துணைத்தலைவர் பதவியைக் கொடுத்திருந்தார்
கிருஷ்ணமூர்த்தி.  அதை நாசம் பண்ணிக்
கொண்டிருந்தார் சாலை. அதனால் கிருஷ்ணமூர்த்தி அவரை வெளியேற்ற
வேண்டியதாயிற்று.  கிருஷ்ணமூர்த்தி தன்னை
வெளியேற்றியதால் அவரையும் பார்ப்பான்கள் பட்டியலில் சேர்த்தார் சாலை. கொஞ்சகாலம்
கரோல்பாக்கில் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் திட்டிக்
கொண்டிருந்தார்.  வாராவாரம் அவரை
சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவருடைய மனநிலையும் உடல்நிலையும் சீர் கெட
ஆரம்பித்திருக்கும். நாங்கள் சொல்வோம். இந்தத் தமிழ்ச் சங்கத்தை விடுங்கள்.  நாம் 
தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிப்போம் என்று சொன்னோம்.  ஆரம்பித்தோம். 
தன் வீட்டில் நடந்த முதல் எழுத்தாளர் சங்கக்
கூட்டத்தில்  ஜானகிராமனைத் தலைவராகவும்
என்னை செயலாளராகவும் இருக்கச் சொன்னார் சாலை.  
உடனே ஜானகிராமன் தன்னால் ராஜாமணியை சமாளிக்க முடியாது என்றும் சாலையையே
தலைவராக இருக்குமாறும் சொன்னார்.  என்னுடைய
மனநிலையும் எப்படியென்றால் ஜானகிராமன் தலைவராக உள்ள அமைப்பில் செயலாளராகப்
பணியாற்ற எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் ஜானகிராமன் மீது பல வருத்தங்கள் எனக்கு
உண்டு.   பிறருக்குக் கசப்பும் கஷ்டமும்
என்மேல் பிறப்பிக்கக் கூடிய  குணங்கள்
என்னிடமும் உண்டு.   அந்தக் கோபம்தான்
என்னுடைய மூலதனம்.  அந்த மூலதனத்தை
எனக்குத் தந்தவர்கள் பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்  தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் சாலை இளந்திரையன் தலைவரானார்.
நான் செயலாளரானேன்.  இருபத்து நான்கு
வருடங்கள் நடத்தினோம். அதில் பின்னர் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு
இல்லையென்றால் பல மாநாடுகளை எங்களால் வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது. அவர்
இல்லையென்றால் சங்கமே நடத்தியிருக்க முடியாது. பிறகு ஆளுக்கு ஆள் தன் கைக்காசை
செலவு செய்து சங்கத்தை நடத்தினோம். பிறகு எழுத்தாளர்களே தில்லியில் இல்லாமல்
போனார்கள். யாரை வைத்து நடத்துவது? அப்போதெல்லாம் தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்துவோம்.
க.நா.சு. சலித்துக் கொள்வார். "மாசம் பதினைந்து கூட்டங்கள் நடத்துறீங்க.  யார் செüத் எக்ஸ்டென்ஷனிலிருந்து காசு
செலவழித்துக் கொண்டு வருவது? என்னாலே முடியலே. பணம் கிடையாது. மாசம் ஒண்ணு அல்லது ரெண்டு
மீட்டிங் போடுங்கய்யா போதும்'' என்பார். அந்த அளவுக்கெல்லாம் சுறுசுறுப்பாக இயங்கிய தமிழ்
எழுத்தாளர் சங்கம் இருபத்தி நான்கு வருடத்தில் என்ன மாதிரி ஆட்களைக் கொண்டு
வந்தாலும் ஒருவிதப் பிரதிபலனும் இல்லாது லாப நஷ்டம் இல்லாது நடத்தி வருவது கஷ்டமாக
இருந்தது. பொருள்ரீதியான நஷ்டம் என்றால் அது ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திக்குத்தான்
ஏற்பட்டது. எனக்குப் பொருள்ரீதியான நஷ்டம் என்பது கிடையாது. என்னிடம் பொருளே
கிடையாதே. என்னுடைய வேலை என்பது பத்திரிகைத் தொடர்புகள். விளம்பரம் போன்றவை.
எழுத்தாளர் சங்கத்தில் என்ன கூட்டம் நடந்தாலும் மறுநாள் அது தினமணியில் வரும்.
காசு பணம் சாப்பாடு எல்லாம் ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி. அவர் இல்லையென்றால்
எழுத்தாளர் சங்கம் கிடையாது. துவக்கியவர் சாலை இளந்திரையன். ஆனால் அதன் ஆணிவேர்,
ஆதாரம் எல்லாம்
ஆனந்தம் கிருஷ்ணமூர்த்திதான். அந்த சங்கத்துக்கு இருபத்து நான்கு வருடங்கள்
ஆயுளைக் கொடுத்தவர் அவர்தான். ஒரு காலத்தில் தமிழ்ச் சங்கமே எழுத்தாளர்
சங்கத்துடன் இணைந்து கூட்டங்கள் நடத்தலாம் என்று முன்வந்தார்கள். அப்படிப்பட்ட
காலமெல்லாம் இருந்தது.  எழுத்தாளர் சங்கம்
ஏற்பாடு செய்திருக்கும் பாராட்டுக்கூட்டத்தை ரத்து செய்து தமிழ்ச் சங்கத்துடன்
இணைந்து தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பார் தமிழ்ச் சங்கம்
கிருஷ்ணமூர்த்தி.  அப்படி கம்பீரமாக
இயங்கிய சங்கம் எங்கள் எழுத்தாளர் சங்கம். 
நவீன இலக்கியவாதிகளுடன் உங்களுடைய
நட்பும் தொடர்பும் எப்படி?
ஜெயமோகன் போன்ற சிலரெல்லாம் கொஞ்சம் பழக்கம்.
தில்லியிலேயே இருப்பதனால் அபூர்வமாக இந்தப் பக்கம் வருபவர்களுடன் பழக்கம். புது
இலக்கியவாதிகளுடன் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாம்
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான். போக்கிரித்தனம் மிகுந்த நவீன
இலக்கியவாதிகளுடன் எனக்குத் தொடர்பு அவ்வளவாகக் கிடையாது. தமிழ்நாட்டுப்
பத்திரிகைகளைப் படிக்கும் போது இந்த எழுத்தாளன்கள் ஒருத்தனை ஒருத்தன் பல்லை
உடைப்பது, கையை
உடைப்பது காலை உடைப்பது போன்ற வீர தீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்று
பத்திரிகைகளில் செய்திகள் வரும்.  இது
சற்று பயம் அளிக்கும் விஷயம். அதனால் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்போது
விக்கிரமன் போன்றவர்கள் தலைமையில் அமைந்த எழுத்தாளர் சங்கக் கூட்டங்கள் தவிர இந்த
முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டம் நவீன இலக்கியவாதிகள் நடத்தும் கூட்டம்
போன்றவைகளுக்கு நான்போவது கிடையாது. காரணம் அந்த மாதிரிக் கூட்டங்களுக்குப் போனால்
உடம்பு சேதமில்லாமல் திரும்புவோமா என்று பயம் வரும்.  அது கைகலப்பில் ஆர்வமுள்ள கூட்டம்.
ஜெயகாந்தனைப் பற்றியும் ஆரம்பத்தில் சில அபிப்ராயங்கள் உண்டு. ஜெயகாந்தன் நல்ல
படைப்பாளி. ஆனால் பழக லாயக்கில்லாத மனிதர். போக்கிரி  இப்படியெல்லாம் சொல்வார்கள்.  ஜெயகாந்தன் அசரமாட்டார். "ஆமாய்யா. நான்
போக்கிரிதான். வெறும் போக்கிரி கிடையாது. புளியந்தோப்புப் போக்கிரி நான்'' என்று அவர்களுக்குப்
பதில் தருவார். வீட்டை விட்டுக் கிளம்பும் போதே ஒரு பிரகடனத்துடன் தான் வெளியே
வருவார். தென்னாற்காடு மாவட்டத்தின் கண்டுபிடிப்பு நெய்வேலியின் நிலக்கரி
மட்டுமல்ல. இந்த ஜெயகாந்தனும்தான்'' என்பார். அதன் பின்னர் நிகழ்ந்த அவருடைய
பிரம்மாண்டமான வளர்ச்சி இந்த நிலக்கரி போன்ற உவமானங்களை அர்த்தமற்றுப் போகச்
செய்துவிட்டன. அதேமாதிரி தன்னைப் புளியந்தோப்புப் போக்கிரி என்று தன்னைச் சொல்லிக்
கொண்டு வளைய வந்தவர் அவர்.  காலம் -
ஞானம் அவரைக் கனிய
வைத்தது. ஜல்லிக்கட்டுக் காளை மாதிரி துள்ளிக் கொண்டு திரிந்த அவரைக் காலமும்
அனுபவமும் கட்டிப்போட்டு வைத்தது. 
ஜெயகாந்தன் போல துள்ளிக் கொண்டு திரியும் ஜல்லிக்கட்டு மாடுகள் இப்போது
நவீன இலக்கியத்தில் நிறையவே உண்டு. அந்த ஜல்லிக்கட்டு மாடுகளின் தனிப்பட்ட தொடர்பு
உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அபாயகரமானவை என்ற ஒரு கருத்துக் காரணமாக அவர்களுடன்
பழக எனக்கு விருப்பமும் தைரியமும் 
இல்லாமல் போனது. 
பத்திரிகையாளராக உங்களால் மறக்க
முடியாத ஒரு நிகழ்வு என்று எதைக் கருதுகிறீர்கள்?
காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள்
வியாச பூஜை நடத்திய போது நான் கலவையில் இருந்தேன். பெரியவர் வட இந்திய யாத்திரை
மேற்கொள்ளத் திட்டம் தீட்டினார். அப்போது தினமணியில் என்ன விசேஷம் என்றால் காஞ்சி
மடத்துக்காக தினமணியின் ஒரு 
பத்திரிகையாளர் எப்போதும் பெரியவருடனேயே இருப்பார். அவர் பிரயாணம் செய்யும்
இடத்துக்கெல்லாம் உடன் போய் எழுதுவார். "நான் வட இந்திய விஜய யாத்திரை
மேற்கொள்கிறேன். யாராவது பத்திரிகையாளரை இரண்டு வருடங்களுக்கு என்னுடன்
அனுப்புங்கள் என்று தினமணிக்கு பெரியவர் கோரிக்கை வைத்தார். அவருக்கு,  தில்லியில் ராஜாமணி இருக்கிறார், அவரை அழைத்துக் கொள்ளுங்கள்.
சென்னையிலிருந்து இரண்டு வருடங்களுக்குத் 
தொடர்ச்சியாக யாரும் வரத்தயாராக இருக்கமாட்டார்கள் என்று தினமணி சிவராமன்
சொல்லிவிட்டார். உடனே அப்போதைய தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த
குப்புசாமி அவர்கள் பெரியவருடன் என்னைப் போய்வருமாறு சொன்னார். வட இந்தியா முழுக்க
ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு சிறிய கிராமத்திலும் பெரியவருடன் சுற்றினேன். விமான
நிலைய வசதிகள் உள்ள ஒவ்வொரு பெரிய நகரத்திலும் ஆர்.வெங்கட்ராமன் வந்து கலந்து
கொள்வார். அவர்தான் விஜய யாத்திரை கமிட்டித் தலைவராக இருந்தார். சைக்கிள்
ரிக்ஷாவில்தான் பயணிப்பார் பெரியவர். அந்த ரிக்ஷாவின் முன் இருவர் தீவட்டியை
எடுத்துக் கொண்டு போவார்கள். நான் பெரியவரிடம் அத்யந்த பக்தி கொண்டவன். அவரிடம்
நான் சைக்கிள் ரிக்ஷாவைத் தள்ளிக் கொண்டே வருகிறேன் என்று சொன்னேன். "உனக்கு
எதுக்கு இந்த வேலையெல்லாம்.  முன்னோலே
போலீசு எஸ்கார்ட் வண்டி போகிறது. அதில் லட்சணமாக மரியாதையாக பத்திரிகையாளனாகப் போ
என்று சொல்வார். எனக்கு அப்போதெல்லாம் தொடர்ச்சியாக சிகரெட் புகைக்கும் பழக்கம்
இருந்தது. வெறித்தனமாக சிகரெட் புகைக்கும் பழக்கம். பெரியவருடன் போகும்போது
சிகரெட் குடிக்க முடியாது. அதனால் என்ன செய்வேன் என்றால் முதல் நாள் இரவு பெரியவர்
இருக்கும் கேம்பை விட்டு வேறு ஒரு கேம்பில் சேர்ந்து கொள்வேன். மறுநாள் காலை
கிளம்பும் வரை இரவு முழுக்க இடைவிடாது சிகரெட் புகைத்துக் கொண்டே இருப்பேன்.
ஏனென்றால் பெரியவருடன் சேர்ந்ததும் அடுத்த சிகரெட் எப்போது என்று தெரியாது. அதனால்
வெறி பிடித்தது போல் இரவு முழுக்க சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பேன். மறுநாள்
காலை பெரியவரின் கேம்பில் போய் சேர்ந்து கொள்வேன். இப்படியே போய்க்கொண்டிருந்தது.
மடத்தில் என்ன உத்தரவு என்றால் வாரம் ராஜாமணிக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து
விடவேண்டும். சோப்பு, டீ போன்ற செலவுகளுக்காக. மடத்தின் மாடு, குதிரை, யானை போன்றவைகளைப் பராமரிக்கும்
ஆட்கள் மடத்து நிர்வாகிகளிடம் அந்த ஐயரு சோப்பும் வாங்கறது இல்லை. டீயும்
குடிக்கிறது கிடையாது. வெறும் சிகரெட் தான் வாங்குகிறார். தீப்பெட்டியும்
எங்களிடம்தான் வாங்கிக் கொள்கிறார் என்று போய்ச் சொல்வார்கள். அந்தச் செய்தி
பெரியவரிடம் போய்ச் சேர்ந்து விடும்.  
பெரியவர் ஒன்றும் சொல்லவில்லை. அது குறித்து அவர் வாயே திறக்கவில்லை.   ஒருநாள் என்னிடம் சொன்னார் "நீ
இஷ்டத்துக்கு ரிபோர்ட் பண்றே. அவங்களும் அதை அப்படியே போடறாங்க. சீனியர் டெபுடி
எடிட்டர் ராமரத்தினம். அவரை உடனே வரச்சொல்லு'' என்றார்.  தினமணி அவருக்குச் செலவுக்குக் காசு கொடுத்து
அவரை அனுப்பி வைத்தது.  பத்ரிநாத் போகும்
வழியில் ருத்திரப்பிரயாகையில் கேம்ப். அங்கு தன்னுடைய துணைவியாருடன் வந்தார்
ராமரத்தினம்.   அவரிடம் காஞ்சிப் பெரியவர்
"உங்க நிருபருக்கு நீங்கதான் சொல்லணும். நாங்க சொன்னாக் கேட்க மாட்டேங்கறார்''
என்றார்.  என்ன பிரச்னையானது என்றால் கேம்ப் போகும் வழியில்
முகமதன்பூர் என்று ஒரு சிறிய கிராமம். 
அங்கு வசிப்பவர்கள் எல்லோருமே இசுலாமியர்கள்.  அங்கு காஞ்சிப் பெரியவரைத் தரிசிக்க எல்லா
முஸ்லிம்களும் வருவார்கள்.  முகத்திரை
அணிந்த இசுலாமியப் பெண்மணிகளும் வருவார்கள். 
பெரியவர் பூஜையை முடித்ததும் மடத்தின் பிரசாதம் அவர்கள் அனைவருக்கும்
வழங்கப்படும். இந்துக்களுக்கு என்ன மாதிரி பிரசாத விநியோக முறைகள் உண்டோ அவை
அத்தனையும் அந்த முகமதன்பூரின் இசுலாமியர்களுக்கும் நடக்கும். எல்லா பிரசாதங்களும்
வழங்கப்படும். அந்தக் கிராமத்தின் அனைத்து இசுலாமியத் தோழர்களும் மிகவும்
பிரியத்துடன் பிரசாதங்களை ஏற்றுக்கொண்டு பெரியவரின் பாதம் பணிந்து வணங்குவார்கள்.
அந்த முகமதன்பூரின் மொத்த ஜனத்தொகையே 150 பேர்கள் தான்.  
பெரியவர் என்னைப்பற்றி புகார் செய்தார். வெறும் 150 பேர் உள்ள இந்த கிராமத்தைப்
பற்றி எழுதும்போது அந்த கிராமத்தின் 4500 பேர்கள் மட்டுமல்லாது சுற்றுப்புற கிராமங்களில் உள்ள
இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து நேற்றைய தினம் மட்டும் சுமார் பத்தாயிரம்
பேர்கள் ஆச்சாரியாரைத் தரிசித்தனர் என்று எழுதியிருக்கிறார்.  என்ன கொடுமை? 150 பேர் உள்ள ஜனத்தொகையில் சுமார் 40 அல்லது 50 பேர்தான் வந்து தரிசனம்
செய்தார்கள்.  இந்த மனிதர் பத்தாயிரம் பேர்
என்று எழுதுகிறார்.  நீங்களும்
பிரசுரிக்கிறீர்கள்.   எதை அனுப்பினாலும்
எனக்குக் காண்பித்துவிட்டுத்தான் அனுப்ப வேண்டும் என்று  ராஜாமணிக்கு சொன்னால்.  அந்த ஆள் எனக்கு ஒன்றைக் காண்பிக்கிறார்.
திருட்டுத்தனமாக உங்களுக்கு வேறு ஒன்றை அனுப்பி விடுகிறார்.  அதை நீங்கள் பிரசுரிக்கிறீர்கள்.  இது எங்களுக்கு மிகவும் அதிருப்தியைத் தருகிறது''  என்றார் பெரியவர். 
ராமரத்தினம் சொன்னார் - "ராஜாமணி செய்வது சரிதான்.  மக்களுடைய மனநிலையின் பிரதிபலிப்பு
மடத்துக்குத் தெரியாது. நிருபருக்குத் தெரியும். இப்போது தமிழ்நாட்டை விட்டுத்
தொலைதூரத்தில் இருக்கிறீர்கள். உங்கள் நிலைமை என்ன? உங்களுக்கு வடக்கில் வரவேற்பு
எப்படி உள்ளது? உங்களிடம் பக்தி செலுத்த இங்குள்ளவர்கள் எத்தனைபேர் வருகிறார்கள் என்பதைத்
தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ள ஒரு பெரிய படையே தமிழகத்தில் இருக்கிறது. அவர்களைத்
திருப்தி படுத்தவேண்டும். இதுதான் பத்திரிகை தர்மம். இதைத்தான் ராஜாமணி
செய்கிறார்.  இதைத்தான் ராஜாமணி
செய்யவேண்டுமே தவிர எத்தனை பேர் வருகிறார்கள் என்று சரியாக எண்ணி, 30 ஆண்கள், 20 பெண்கள், 10  குழந்தைகள் என்று கணக்கு எடுத்துச் சொல்ல
முடியாது.  பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து
தரிசித்தார்கள் என்று சொன்னால்தான் பெரியவாளைப் பற்றியும் மடத்தைப்பற்றியும்
வடக்கில் பிரக்யாதி  பரவியுள்ளது என்று
தமிழ்நாட்டில் ஒரு கீர்த்தி நிலவும்.  இது
எங்களுக்கு அவசியமான தகவல் என்று ராமரத்தினம் சொன்னார். பெரியவரின் முகத்தில்
ஈயாடவில்லை. அதற்குப் பிறகு அவர் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை.  வடக்கில் விஜய யாத்திரை முடித்து காஞ்சி
திரும்பும் வழியில் திருப்பதியில் 1008 சங்காபிஷேகம் நடத்தினார் காஞ்சிப் பெரியவர்.  பிறகு பட்டணப்பிரவேசம். காஞ்சிபுரம்
போகவேண்டும்.  காஞ்சி அடைந்தபிறகு நான்
பெரியவரிடம் சென்றேன்.  "நான் டெல்லி
கிளம்புகிறேன்.  பிரசாதம் வேண்டும் என்று
கேட்டேன். மடத்தின் அந்த மஞ்சள் சால்வை, பணம், பிரசாதம் போன்றவைகளை எனக்குக் கொடுத்தார் பெரியவர்.  பெரியவர் தன்னுடைய தினசரி பூஜையின் போது  சந்தனத்தில் ஒரு சிவலிங்கத்தை உருட்டி எடுத்து
பூஜை செய்வார். அதை பெட்டியில் பாதுகாத்து வைத்து நேபாள மன்னர் போன்ற பெரிய ஆட்கள்
மடத்துக்கு வரும்போது அதைக் கொடுப்பார்கள். அது ஒரு கெüரவம். நான் கொஞ்சம் தயங்கி நின்று
அவரிடம் அந்த சந்தன சிவலிங்கத்தைத் தருமாறுகேட்டேன்.  அப்போதுதான் பெரியவர் சொன்னார்
"இதையெல்லாம் ஆச்சாரமாக வச்சுக்கணும். 
நீ சிகரெட் எல்லாம் பிடிக்கிறே. யாத்திரையின் போது சிகரெட் குடிச்சிண்டே
அலைஞ்சிருக்கேன்னு கேள்விப்பட்டேன். அதையெல்லாம் உனக்குக் கொடுக்க மாட்டேன்''
என்று சொன்னார்.
(உரக்கச் சிரித்துக் கொண்டே) மூணு வருஷமா மனசுலேயே வச்கிக்கிட்டு வன்மத்தைத்
தீர்த்துக்கிட்டார் ஆச்சார்யாள்.  பிறகு
பூஜை செய்யும் ஒரு சாஸ்திரிகளைப் பிடித்து அதை வாங்கிவிட்டேன். அது தனிக்கதை.
பெரியவர் தன் கையால் அதை எனக்குத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். விஜயம் முடிந்தபிறகு
அதை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து மஞ்சரியில் ஒரு கட்டுரையை எழுதினேன்.  வெளிவந்த பிறகு பரமாச்சாரியாளிடம் அதைக்
கொடுத்தேன்.  அதை அவர் ஒரு லாந்தரை
வைத்துக் கொண்டு ஒரு மூன்று நாட்கள் படித்தார். பரமாச்சார்யாளின் கைபட்ட அந்த
மஞ்சரி பத்திரிகையின் பிரதியை அவரிமிருந்து வற்புறுத்தித் திரும்ப வாங்கினேன்.
அவர்  எனக்குப் போர்த்திய சால்வையில்
மடித்து இன்னும் பத்திரமாக வைத்துப் பாதுகாத்து 
வருகிறேன். 
நாட்டில் அவசர நிலைச் சட்டம்
பிரகடனம் செய்தபோது தில்லியில் தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும்
அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருந்தது?
எமர்ஜென்ஸி காலத்தின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த
பத்திரிகையாளர்கள்தான் தில்லியில் அதிகமாக இருந்தார்கள். அவர்களில் பலர்
குறிவைத்துப் பழிவாங்கப்பட்டார்கள். அதிலும் அமெரிக்கப் பத்திரிகைகளில்
நிருபர்களாக இருந்த பலபேர் கொடூரமான வகைகளில் பந்தாடப்பட்டார்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்களும்
தமிழர்களே.  பெயர் எல்லாம் சொல்ல
வேண்டாம்.  புது தில்லி முனிசிபல் கமிட்டி
போன்ற இடங்களில் பெரிய பதவிகளில் தமிழர்கள் இருந்தார்கள். அவசரச் சட்டத்தின்
பிடிகளில் சிக்கி அவதிப்பட்ட தமிழகத்தை சார்ந்த பல பத்திரிகையாளர்கள் தில்லியில்
இருந்தார்கள்.  தணிக்கை முறையில்
மிகப்பெரும் பாதிப்புக்கள் இருந்தன. 
அந்தத் தணிக்கை அமுல்படுத்தலில் இந்திரா காந்திக்கு உதவிகரமாக சில
தமிழர்கள் இருந்தார்கள். அவருக்கு ஒத்துழைத்து பல சலுகைகளை அனுபவித்த  அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகளும்
உண்டு.  எதிர்த்து நின்று பல கஷ்டங்களை
அனுபவித்த பத்திரிகையாளர்களும் உண்டு. அவசரச் சட்டத்தின் போது கஷ்டம் தகவல்
துறைக்குத்தான். 
பத்திரிகையாளர்களுக்குத்தான். 
அதிகாரிகளுக்கு ஒன்றுமில்லை. 
அவர்கள் ஆமாம் சாமி போட்டுக் கொண்டு இருந்தார்கள். மக்கள் வழக்கம் போல
ஒன்றும் தெரியாமல் இருந்தார்கள். அதனால் கஷ்டம் எல்லாம்
பத்திரிகையாளர்களுக்குத்தான். 
மணிவிழாக் கொண்டாடும் தில்லித்
தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
தமிழ்ச் சங்கத்தின் அத்தனை பேரும் என்னுடைய
நண்பர்கள். ஒரு காலத்தில் தமிழ்ச் சங்கம் என்பது அதன் தலைவர்களின் பிராபல்யத்தால்
அறியப்பட்டது. இப்போது யார் தலைவர் என்பது அதிக முக்கியமாகப் படவில்லை.  செயலாளர்கள்தான் சகல சக்திகளும் வாய்ந்தவர்களாக
இருக்கிறார்கள். அதில் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கிருஷ்ணமூர்த்தி. அவர்
துவக்க நாட்களிலிருந்தே இருப்பவர். தமிழ்ச் சங்கத்தைத் தவிர வேறு எந்தப்
பிரக்ஞையும் இல்லாத நல்ல மனிதர். உழைப்பாளி.  
தமிழ்ச்சங்கம் அப்போது ரீகல் சினிமா அரங்கத்துக்கு எதிரில் உள்ள ஒரு சிறு
அறையில் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே எனக்குத் தொடர்பு உண்டு.  அந்த சங்கத்தின் மீது எந்தவிதமான அபிப்ராயமும்
சொல்வதற்கு உரிமை உள்ளவன் நான். அங்கு அரசியல் அதிகம்.  தமிழ்ச்சங்கம் போன்ற கலாச்சார அமைப்புக்களில்
அரசியல் இருக்கக்கூடாது. உறுப்பினர்கள் சேர்க்கையில் அரசியல். யாருக்கு எப்படி
வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பதில் அரசியல். இப்படி நிறைய தவறுகள்
நிலவக்கூடிய அமைப்பாக மாறிவிட்டது. துணிச்சலானவர்கள் எடுத்துச் சொல்லவேண்டும்.
ஒருத்தர் சொன்னால் போதாது. பலர் சொல்லவேண்டும். என்னால்தான் தமிழ்ச்சங்கம்
வளர்ந்தது என்று யாரும் சொல்ல முடியாது.  
சங்கத்தின் மேல் நிஜமான அக்கறை கொண்டு முன்வருபவர்களை சரியான பதவிகளில்
அமர்த்த வேண்டும். அப்படி செய்தால்தான் பல குறைகள் நீங்கும். போர்க்கால வேகத்தோடு
நடவடிக்கைகள் எடுத்தால்தான் தமிழ்ச்சங்கத்தில் நிலவும் பல சீர்கேடுகள் மறையும்.
உறுப்பினர் சேர்க்கையில் அரசியல் என்று சொன்னேன்.   சில விரும்பத்தகாத சக்திகளும்
தமிழ்ச்சங்கத்தைக் கைப்பற்றத் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடமும்
ஜாக்கிரதையாக இருந்து தமிழ்ச் சங்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும். தமிழ்ச்
சங்கத்தில் அரசியலும் அல்பத்தனமும் விலகினால் எல்லாம் சரியாகி விடும்.
**************************
நேர்காணல்: ராகவன் தம்பி - சுரேஷ் சுப்ரமணியம்
புகைப்படங்கள்: ஜாநி சுரேஷ்
**************************
நவம்பர் 2005

 
 
இந்த நேர்முகத்தை வெளியிட்டதன் வழி நண்பரின் நினைவுக்குப் பொருத்தமான அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு. பரிச்சயமான பெயர்கள் பல வருகின்றன. ஆரம்பகாலத்தில், திரு.ராஜாமணிக்கு இடம் கொடுத்த பத்மநாபன் ரயில்வே போர்டில் இருந்தவரா? திரு.சக்ரவர்த்தி ஐயங்காரை பார்த்திருக்கிறேன். இந்த நேற்காணலை 'பாமரகீர்த்தி ~இன்னம்பூரான்' தொகுப்பில், உரிய நன்றி அறிவிப்புடன் இணைக்க அனுமதி கோருகிறேன். திரு.பென்னேஸ்வரின் இரு அஞ்சலிகளையும் போற்றுகிறேன்.
ReplyDeleteஇன்னம்பூரான்