Wednesday, August 1, 2007

நான் உயிர்ப்புடன் நடித்த படம்...

சனிமூலை




ராகவன் தம்பி

சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் பல்ஸ் மீடியா என்னும் விளம்பர நிறுவனம் ஏசிசி சிமெண்ட் நிறுவனத்துக்காக எடுத்த ஒரு விளம்பரப் படத்தின் வசனங்களை இந்தியிலிருந்து மொழி பெயர்த்து அந்த நீண்ட விளம்பரப் படத்தை தமிழில் இயக்கும் வேலையையும் எனக்குக் கொடுத்தார்கள். அது ஒரு விளம்பரப் படமாக மட்டும் அல்லாது, வீடு கட்டுவதைப் பற்றிய செயல்விளக்கப் படமாகவும் இருந்தது என்றும் சொல்லலாம். புதிதாக வீடு கட்ட முன்வரும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் þ நிலம் வாங்குவதிலிருந்து, அதன் பத்திரங்களை சரி பார்த்துக் கொள்ளுதல், வீடு கட்ட திட்டமிடுதல், அடித்தளமிடுதல், தரமான சிமெண்ட் வாங்குதல், காங்கிரீட் கலவை தயாரித்தல் போன்றவைகள் தொடங்கி கிருகப் பிரவேசம் செய்து வைக்க ஒரு களையான சாஸ்திரிகளைத் தேடுவது வரை சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிப் புரிய வைக்க முயற்சி செய்த படம் அது. யதார்த்தாவில் இருந்து தயாளன், பெரியசாமி, அறிவழகன், முத்துராமலிங்கம், ஜாநி சுரேஷ் ஆகியவர்கள் நடித்தார்கள். வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்து மனிதனாக தயாளன் மிகவும் அற்புதமாக நடித்தான். முறுக்கிய மீசையும் அகலக்கரை வேட்டியும் கக்கத்தில் சொருகிய பையுமாக முத்துராமலிங்கம் அச்சு அசலாக ஒரு நில புரோக்கராகவே உருமாறியிருந்தார். ஒரே டேக்கில் மிக அநாயாசமாக நடித்து முடித்து விட்டு தமிழ்ச் சங்கத்தில் ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடிப்போனார்.

கட்டிடம் கட்டும் மேஸ்திரிகளின் தொழில்முறை சார்ந்த வார்த்தைப் பிரயோகங்களை பாண்டிச்சேரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டிடப் பொறியாளரான என் தமக்கையின் கணவர் சத்தியநாராயணனைக் கேட்டு எழுதினேன்.

ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆசைப்பட்டு, கனவு கண்டு, அந்த ஆசையும் கனவுகளும் தந்த மயக்கங்களால் சரியாகப் படிப்பில் கவனம் செலுத்தாது, ஊழ்வினையின் பயனாக உள்துறை அமைச்சகத்தின் குமாஸ்தாவாகி, யதார்த்தா துவங்கி, நாடகங்களை இயக்கி, ஓரிரு ஆவணப்படங்களும் எடுத்து செருப்படி பட்டு பின்னர் திரைப்படங்களும் வேண்டாம் எந்த அதுவும் வேண்டாம் என்னும் நல்ல புத்திக்கு திரும்பியபின் கிடைத்த வாய்ப்பு இது. அதுவும் நான் ஆசைப்பட்ட மாதிரியான ஒரு நல்ல இலக்கியப் படைப்பை திரைப்படமாக்கும் வாய்ப்பாக அல்லாது ஏதோ சில்லறைக்காக, கடனுக்கு சங்கு ஊதியது போன்ற காரியம் அது. (அதிலும் பேசிய தொகையை அவர்கள் இன்று வரை முழுதாகக் கொடுக்கவில்லை. அது என் ஜென்ம ராசி. அது வேறு விஷயம்).

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நான் எதிர்பார்த்தது போல் சுலபமாக அமையவில்லை. ஊருக்கு வெளியில் ஒரு பண்ணை வீட்டில் ஓய்வேயில்லாமல் படப்பிடிப்பு. விடிகாலை மூன்று மணிக்கு பேக்அப் சொல்லி நான்கு மணிக்கு வீட்டில் விடுவார்கள். ஆறு மணிக்கு மீண்டும் கீழே கார் நிற்கும். தூக்கக் கலக்கத்தில் சென்று மறுநாள் காலை மூன்று மணி வரை மீண்டும் படப்பிடிப்பு. இது அந்தப் பண்ணை வீட்டில் தயாளனுடன் மட்டுமே, அவனையும் அவன் மனைவியாக நடித்த பெண்மணியையும் அவன் மகன் ஆஞ்சநேய் ஆகியவர்கள தனியாக வைத்து எடுக்கப் பட்ட காட்சிகள். பிறகு பெரியசாமி, ஜாநி சுரேஷ், அறிவழகன், முத்துராமலிங்கம் நடித்த காட்சிகளுக்குத் தனியாக வெளிப்புறப் படப்பிடிப்பு. இப்படியாக கண்கள் எல்லாம் செருகிப்போய் கிட்டத்தட்ட ஒரு நடைப்பிணம் போல முகத்தை வைத்துக் கொண்டு ஓரிரு வாரங்கள் அலைய வேண்டியிருந்தது.

பண்ணை வீட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு காட்சி. கதைப்படி தயாளன் தனக்கான சொந்த வீடு கட்ட முனைபவன். அவன் கனவுகள் நனவாகத் துவங்கும் நேரம். தகப்பனாரின் படத்துக்கு முன்னால் நின்று கொண்டு கண்ணீர் மல்க, அந்தக் காலத்தில் அவர் அவனுக்கு உபதேசித்து அருளிய உபதேச மொழிகள் வீடு கட்டுவது பற்றி, நல்ல நிலம் வாங்குவது பற்றி, ஏசிசி சிமெண்ட் போன்ற நல்ல சிமெண்ட் வாங்குவது பற்றி அவனுடைய சிறுவயதில் அவனுடைய தந்தையார் அருளிய அறிவுரைகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூருவது போல ஒரு காட்சி.

உருக்கமான அந்தக் காட்சிக்கு ஒரு புகைப்படம் þ ஒரு தென்னிந்தியரின் படம் வயதானவர் படம் வேண்டியிருந்தது. தயாரிப்பு உதவியாளன் கணேஷ் என்னை, வீட்டில் இருந்து என் அப்பாவின் புகைப்படத்தை எடுத்து வரச் சொன்னான். எடுத்துப் போனேன். படத்தில் அப்பா மாத்வ பிராமணர்கள் அணியும் திருச்சின்னமான கரிக்கோட்டு நாமம் தரித்திருப்பார். அது கணேஷ÷க்கு ஒத்துவரவில்லை. மதச்சின்னம் ஏதும் தரிக்காத ஒரு படமாக வேண்டும். பொதுவான ஒரு தென்னிந்திய முகம் வேண்டும் என்றான். சரி. மறுநாளைக்கு ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன்.

அந்தப் படத்துக்கு கலை இயக்கம் செய்த கொஞ்சம் அதிக வயதுடைய வங்காளிப் பெண் கொஞ்ச நேரம் என்னையே சுற்றிச் சுற்றி வந்தது. சிறிய கண்களை இடுக்கி மனதைக் கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் என்னையே அடிக்கடி உற்றுப்பார்த்தது. சட்டென்று பார்த்தால் எதையோ உடனடியாகச் சொல்ல வேண்டும் என்பதைப் போல அந்தப் பெண்ணின் உதடுகள் எப்போதும் குவிந்து கொண்டே இருப்பது எல்லோரையும் அவளை அடிக்கடி திரும்பப் பார்க்க வைக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நானும் அடிக்கடி திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்ணும் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்தது எனக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்படியே ஒரு பகல் பொழுது கழிந்தது. பகல் உணவு வேளை வந்தது. அங்கங்கு கொத்துக் கொத்தாக நின்றும் பேசிக்கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்சம் தள்ளி தயாளனின் மனைவி ஜெயா, அவனை ஏதோ மிரட்டிக் கொண்டிருந்தாள்.

அந்த வங்காளிப் பெண் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு என்னை நோக்கி வந்தது. அந்தப் பெண்ணின் கவனத்தைக் கவர, வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் நாடகம் ஒன்றைத் தமிழில் இயக்கியிருப்பதாக சொன்னேன். என் துரதிருஷ்டம், அந்தப் பெண்ணுக்கு பாதல் சர்க்கார் யாரென்று தெரியவில்லை. வங்காளத்தின் ரித்விக் கட்டக் இயக்கிய ""மேகே டாக தாரா போன்ற படங்கள் பற்றிப் பேசினேன். அதைப் பற்றியெல்லாம் எவ்விதத்திலும் சட்டையும் செய்யாது சிரித்துக் கொண்டே, ""உங்களை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து வைத்துக் கொள்ளலாமா?'' என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்டுக் கொண்டது.

புரிந்தது. நான் வேறு மாதிரி பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணும் வேறுமாதிரி பார்த்து இருக்கிறது. பார்வைக்குப் பார்வை எப்போதும் வித்தியாசப்படும் இல்லையா?

தோட்டத்தில் நிறுத்தி, ஒப்பனையாளரை அழைத்து ஒப்பனைகள் செய்து, தயாளனின் செத்துப்போன அப்பாவாக நடிக்க வேண்டிய புகைப்படமாக என்னைப் படம் பிடித்தார்கள். அடுத்த நாள் அந்தப் படத்தைப் பெரிதாக்கி லாமினேட் செய்து எடுத்து வந்தார்கள். அதைப் பிரிக்கும்போது கணேஷின் உதவியாளன் முகத்தில் கொஞ்சம் நக்கலான சிரிப்பு இருந்ததைப் போல எனக்குத் தேவையில்லாமல் தோன்றியது.

"சும்மா சொல்லக்கூடாது. உங்கள் முகத்தில் ஒரு பொறுப்பான அப்பாவுக்கான களை மிகவும் அற்புதமாக இருக்கிறது'' என்று கணேஷ் சிரித்துக் கொண்டே சொன்னான். அவன் சொல்ல வரும் களை என்னவென்று நன்றாகவே புரிந்தது. ஐந்து நாட்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இழந்த தூக்கம் புகைப்படத்தின் கண்களில் நிழலாடியது. இதுவே அந்தப் புகைப்படத்துக்கு ஒரு விசேஷமான களையைக் கொடுத்திருக்க வேண்டும். மேலும் என் முகத்தின் லட்சணம் எனக்குத் தெரியாதா என்ன? நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே!

எது எப்படியோ தயாளன் கண்ணீர் மல்க நின்று வசனம் பேச பின்னணியில் ஒரு புகைப்படம் தயார். அந்தக் கலை இயக்குநர் பெண் என்னைக் கடக்கும் போதெல்லாம் மிகவும் குறும்பான பார்வை ஒன்றை வீசிவிட்டுச் சென்றது. இப்போது அந்தப் பெண்ணை அதிகமாகப் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சி செய்தேன்.
அந்தக் காட்சி படமாக்கும்போது, கணேஷ் என்னைக் கூப்பிட்டு, "தென்னிந்தியாவில் இறந்து போனவர்களின் படத்தை எப்படி அலங்கரிப்பார்கள்?'' என்று கேட்டான். படத்துக்கு மிகவும் அழகாக சந்தனம் வைத்து நெற்றியில் பொட்டு இட்டேன். மலை மந்திரில் துரை கடையிலிருந்து ஒரு நல்ல மாலையாக வாங்கி வரச் சொல்லி படத்துக்கு சார்த்தினேன். எல்லோரும் மிகவும் தத்ரூபமாக அமைந்து இருக்கிறது என்று ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொண்டார்கள். எனக்கும் ஓரிருவர் கை கொடுத்தார்கள்.

தயளாளன் படத்துக்கு முன்னால் நின்று மிகவும் உருக்கமாக, தன்னுடைய தகப்பனார் வீடு கட்டுவது குறித்து என்னென்ன அறிவுரைகள் வழங்கினார் என்று உலகத்துக்குச் சொல்லியதைப் படமாக்கினோம்.

படப்பிடிப்பு முடிந்ததும் கணேஷிடம் அந்தப் படத்தை எனக்குக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ""உங்களுக்கு எதற்கு? எங்களிடம் இருந்தால் இன்னும் வேறு சில தென்னிந்திய மொழிகளில் இது போன்ற படங்கள் தயாராகும்போது உபயோகித்துக் கொள்வோமே'' என்று சிரித்துக் கொண்டே சொன்னான். அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாகப் பட்டது. எனவே நானும் அதிகம் அழுத்திக் கேட்கவில்லை.

இன்னும் எத்தனை மொழிகளில் நடித்து இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. கணேஷையோ அல்லது எதையோ சொல்ல வருவது போல எப்போதும் வாயைக் குவித்து வைத்திருக்கும் அந்த வங்காளிப் பெண்ணையோ என்றாவது, எங்காவது மீண்டும் சந்திக்கும்போது கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.

3 comments:

  1. உயிரில்லாமல் நடித்த படத்தின் சோகம்,
    முகத்தில் அறைகிறது. நீங்கள் விரும்பியபடி ஒரு நல்ல இலக்கிய தரமுல்ல
    படம் இயக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தாமோதர் சந்துரு

    உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. "நான் உயிர்ப்புடன் நடித்த படம்"
    ஓம். அன்புடையீர்!வணக்கம்..
    ஒரு கூட்டு முயற்சியாய் படைப்பினை நல்க எத்துணைப் பணியும் முன்னேற்பாடும் செய்யவேண்டியுள்ளது. நாடகங்களின் கட்டமைப்பு அனுபவமும் தொலைநோக்கும் ஆர்வமும் இங்கே தெரிகின்றது. அன்பால் குழந்தை கடிக்கின்றது; அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது; தடவிப் பார்த்தால் இனிக்கின்றது. தாய்மை இன்பம் தெரிகின்றது. வலியின் பின்னே சுகம்!
    வாழ்த்துகள்.
    அன்புடன் வெ.சுப்பிரமணியன், ஓம்

    ReplyDelete