Saturday, August 11, 2007

அடிப்படைவாதத்தின் கோரமுகம் - தஸ்லிமா மீதான தாக்குதல்

ராகவன் தம்பி


ஹைதராபாத் பிரஸ் கிளப் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் வங்கப் படைப்பாளி தஸ்லிமா நஸ்ரின் மதவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

அவருடைய "ஷோத்' (வஞ்சம்) என்னும் நூலின் தெலுங்கு மொழிபெயர்ப்பினை வெளியிடுவதற்காக ஹைதராபாத் வந்த அவருக்கு இந்த மாபெரும் ஜனநாயக ரீதியிலான வரவேற்பு கிட்டியுள்ளது.

தஸ்லிமாவைத் தாக்கியவர்கள் யாரும் குண்டர்களோ அடியாட்படைகளோ அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களால். மஜ்லிஸ்-இ-இல்தேஹதுல் முஸ்லிமின் அமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தாக்குதலுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார்கள்.


ஊடகங்களில் இந்த சம்பவம் படமாக்கப்பட்ட காட்சி நறுக்குகளில் தாக்கியவர்களின் ஆவேசமும் தஸ்லிமைக் காப்பாற்ற முயன்ற தோழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுமான காட்சிகள் நம்மைப் பதற வைக்கின்றன. பத்திரிகையாளர் தோழர் இன்னையா தஸ்லிமாவைக் காப்பாற்றும் முயற்சியில் கடுமையாக அடி வாங்கியிருக்கிறார்.

இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான தஸ்லிமாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அவரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் தூஷணம் செய்த கைக்குக் கிடைத்ததை அவர் மீது எறிந்து தாக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகவும் அங்குள்ள மதவாதிகள் தூண்டிவிடும் வன்முறைவாதத்துக்கு எதிராகவும் தன்னுடைய எழுத்துக்களை ஆயுதமாக வைத்துப் போராடிவருகிறார் தஸ்லிமா. அங்குள்ள மதவாதிகளின் அச்சுறுத்தல் அவரைக் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பங்களாதேஷை விட்டு வெளியே வாழக் கட்டாயப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தஞ்சம் புகுந்த தஸ்லிமாவை இங்கிருக்கும் மதவாதிகள் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த ஓராண்டாகக் கொல்கத்தாவில் வசிக்கும் தஸ்லிமாவுக்கு அங்கும் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. ஜøன் மாதம் ஒரு வங்காள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அங்குள்ள திப்பு சுல்தான் மசூதியின் இமாம் நூருல் ரஹ்மான் பர்காதி என்பவர், தஸ்லிமாவுக்கு எதிராக அவர் ஒரு ஃபத்வா வெளியிட்டிருப்பதாகவும் அதன் படி தஸ்லிமாவின் முகத்தைக் கரியால் பூசி அவமானப்படுத்துபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கள் வெகுமதியாக அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். தஸ்லிமாவை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அந்த இமாம்.

சமீபத்தில் நடந்த இத்தத் தாக்குதலைத் தொடர்ந்து தஸ்லிமாவுக்கான பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யவும் மேலும் பலப்படுத்தவும் மேற்கு வங்க அரசு முயற்சிகள் எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜாவேத் அக்தர் போன்ற அறிவுஜீவிகள் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து இருக்கிறார்கள். தில்லி சிறுபான்மையினர் வாரியத்தின் தலைவர் கமல் ஃபரூக்கி இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்த கையோடு இசுலாமியர்களின் மத உணர்வையோ நம்பிக்கையினையோ புண்படுத்தும் வண்ணம் எழுதுவதை தஸ்ரிமா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசு உடனடியாக அவருக்கான கடவினை ரத்து செய்து அவரை பங்களாதேஷøக்கோ பாகிஸ்தானுக்கோ அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மிகவும் ஜாக்கிரதையாக அறிக்கை விடுத்துள்ளார்.

பெண்ணிய உரிமைகளுக்காகவும் மதரீதியிலான அடிப்படைவாதங்களுக்கு எதிராகவும் தன்னுடைய போர் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றும் இவை போன்ற தாக்குதல்களால் தன்னுடைய குரலை நசுக்க முடியாது என்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் தஸ்ரிமா.

இது தஸ்லிமாவின் இணையப்பக்கத்தில் காணப்படும் ஒரு நல்ல மேற்கோள்.

பெண்கள் கிழக்கில், மேற்கில், வடக்கில் தெற்கில் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் உள்ளேயும் வெளியேயும் ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மத நம்பிக்கையுள்ளகவோ நம்பிக்கையற்றவளாகவோ இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். அழகாக இருந்தாலும், குரூரமாக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறாள். ஊனமுற்றோ அல்லது இல்லாமலிருந்தோ, ஏழையாகவோ படித்திருந்தாலும் படிக்காவிட்டாலும் ஒடுக்கப்படுகிறாள் அவள். முழுக்கப் போர்த்திக் கொண்டிருந்தாலும் நிர்வாணமாக இருந்தாலும் அவள் ஒடுக்கப்படுகிறாள். ஊமையாக, கோழையாக அல்லது மிகுந்த தைரியசாலியாக இருந்தாலும் ஒரு பெண் எப்போதும் ஒடுக்கப்படுகிறாள்.


www.taslimanasrin.com

என்னும் தளத்தில் தஸ்லிமா நஸ்ரினின் அனைத்துப் படைப்புக்களையும் நீங்கள் காணலாம்.

1 comment:

  1. siluvaihal, moorthyhal aahiyavattrirku paadhaham vilaivikka maattom....This is a part of the promise made by Nabihal Nayaham (sal) to the Christians of Nazran.

    May Allah pardon these poor Muslims No MLA

    ReplyDelete