Monday, August 13, 2007

மனக்கவலை அளிக்கும் ஒரு அறிக்கை

சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் சர்வதேசக் கல்வி மற்றும் திட்ட மையம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அந்தக் கருத்தாய்வின் முடிவுகள் அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. அந்தக் கருத்தாய்வின் படி இந்தியக் கல்வி முறை ஊழல் சகதியில் சிக்கித் தவிக்கிறது என்றும் இதற்கான முக்கியக் காரணங்களாக ஆசிரியர்களின் திறமைக் குறைபாடும், ஊழல் மனப்பான்மையுமே என்று இந்தக் கருத்தாய்வு தெரிவிக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை அல்லது சமாதானத்தைப் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையாக இன்று (திங்கள்) சமர்ப்பிக்கப் போகிறது.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமையில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது இந்தியா என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. இந்த விஷயத்தில் ஒப்பிடத் தகுதியுள்ள நாடு உகாண்டா மட்டுமே என்கிறது. உகாண்டாவில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தராமை 25 சதவிகிதம் என்றால் இந்தியாவில் அது 20 சதவிகிதம். அவ்வளவுதான். இந்த விஷயத்தில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கும் பெருமையை இந்தியா அடைகிறது.





பீகாரில் ஐந்துக்கு இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. உத்தர பிரதேசத்தில் இது மூன்றில் ஒன்று. இது போன்ற ஆசிரியர்களின் வருகை தராமை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கல்விக்காக செலவழிக்கும் தொகையில் 22.5 சதவிகிதத்தை வீணடிக்கிறது.

ஆசிரியர்கள் இப்படிப் பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமைக்கு சில காரணங்களை முன்வைக்கிறது இந்த ஆய்வு. ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஒரு சீரான முறையைக் கடைப்பிடிக்காமை, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் நெறிமுறைகளில் ஒரு சீரான தன்மையைக் கடைப்பிடிக்காமை போன்றவை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக வராமைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் நிறைய ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காக செல்வதில்லை. அவர்கள் தனிப்பட்ட வகையிலான டியூஷன் வகுப்புக்களை எடுப்பதில் அதிகமான நேரங்களை செலவிடுகிறார்கள். இது போன்ற தனியார் டியூஷன் மையங்களும் அவற்றில் ஆசிரியர்களின் ஈடுபாடும் இந்தியாவின் கல்வித் திட்டத்தில் ஊழலைப் பெருமளவில் பெருகச் செய்கிறது;

கல்வித் தரம் குறைவதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தேர்வுகளில் ஏமாற்றுவேலைகளை செய்தல்;

இந்தியப் பல்கலைக் கழகங்களில் தேர்வுகளின் போது நடைபெறும் ஏமாற்றுவேலைகள் பெருகி வருகின்றன என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேர்வுகளில் கேள்வித்தாள்களைப் பெறவும் விடைகளை ஏமாற்றுமுறையில் ஏற்பாடு செய்யுவம் ரூ.8000 லிருந்து மூன்று லட்சம் ரூபாய்கள் வரை செலவிடப்படுகின்றன. இந்த ஊழல் கணிணி விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் அதிகம் காணப்படுகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கான என்ன விடை வைத்திருக்கிறது நம்முடைய அரசு என்று பார்க்க வேண்டும். என்னதான் இதற்கு விடையாக இருந்தாலும் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் கவலையும் வேதனையும் அளிப்பவையாக உள்ளன. நம்முடைய வேத காலங்களிலும் சங்க இலக்கியங்களிலும் ஆசிரியர்களுக்கு நம்முடைய சமூகம் அளித்து வரும் இடம் என்பது தெய்வத்துக்குச் சற்று அருகாமையில் வரும் இடம்.

நம்முடைய இந்தியக் கல்வி முறை மற்றும் அரசுப் பணிச் சட்டங்களின் கீழ் பல இடங்களில், பல தனியார் கல்வி மையங்களில், அரசு உதவி பெற்று சில தனிநபர்களின் மேலாண்மையில் நடைபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை என்பது அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை.

யுனெஸ்கோவின் இந்த அறிக்கை வெளிவந்த நேரம் நம்முடைய அரசின் சிந்தனையும் செயல்முறைகளும் இந்த விஷயத்தில் இன்னும் விரிவடைய வேண்டும். அந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருப்பதைப் போல ஆசிரியர்களின் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சீரின்மையை சமன்படுத்த முயற்சிக்க வேண்டும் அரசு.

நம்முடைய ஆசிரியர்கள் என்றும் வணக்கத்துக்கு உரியவர்கள். ஒரு மெழுகுவர்த்தியாக இருந்து மாணாக்கர்களுக்குக் கல்வி ஒளியேற்றும் எத்தனையோ ஆசிரியப் பெருமக்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்து ஆசிரியர் சமூகமும் ஒரு பின்னோக்கிய மறுபார்வையை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

No comments:

Post a Comment