Tuesday, August 7, 2007

சஞ்சய் தத் என்னும் தியாகச் செம்மல்...

ராகவன் தம்பி

சஞ்சய் தத் என்றொரு நடிகர்.

இவர் இந்தியாவில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் என்னும் புனிதமான நோக்கில் வணிகநோக்கில்லாது பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் உலக அளவில் இந்தியத் திரைத் துறையினருக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தன. நடிப்பினால் இவருக்குக் கிடைத்த மாபெரும் தனத்தை ஏழை எளியவர்களுக்கு இடையே வாரி வழங்கினார். அன்னசத்திரங்கள் கட்டினார். பாடசாலைகள் ஏற்படுத்தினார். சாலைகளில் மரங்கள் நட்டார். ஏழைப் பெண்களுக்கு திருமணங்கள் செய்து வைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கார்கில் எல்லையில் நடந்த போரில் போர்க்களம் புகுந்து ஒற்றைக் கையாலும் இரட்டைக் கால்களாலும் எதிரிகளைப் பந்தாடி நம் எல்லையைக் காத்தார்.தன் வீர தீர பராக்கிரம செயல்களைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. எனவே வெள்ளை மனதுடன், தேச நலனை மனதில் கொண்டு சில ஆயுதங்களை தேசபக்தர்களிடம் சிலரிடம் இருந்து வாங்கித் தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஆயுதங்களைக் கையளித்தவர்கள் அவரை விட மிகப்பெரிய தேசபக்தர்கள். இந்தியாவின் இறையாண்மையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு சமாதானமே வாழ்வென்று திகழ்கின்ற மாமணிகள். அந்தத் தியாகச் சுடர்களிடம் இருந்து சஞ்சய் தத் என்னும் தியாகப் பெருஞ்சுடர் ஆயுதங்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தார்.

இது பொறுக்காத இந்திய அரசும் காவல்துறையும் அவரைக் கைது செய்து கைகளில் விலங்கு பூட்டி மும்பையின் வீதிகள் வழியாக இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தினார்கள். அரசு அவர் மேல் தொடுத்திருந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு ஒரு வழியாக தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் தீவிர தேசபக்தராகிய திரு சஞ்சய் தத் அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி கேட்டு நாட்டு மக்கள் அனைவரும் அலறித்துடித்து அழுதும், கண்ணீர் விட்டுக் கதறியும் தெருக்களில் அலைந்து வீதிகளில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இது சமூகப் பொறுப்பு மிகவும் அதிகம் உள்ள ஊடகங்களை மிகவும் வருத்தியது. எனவே ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் தியாகச்சடர் சஞ்சய் தத் அவர்களைப் பற்றியே மீண்டும் மீண்டும் காட்சிகளைக் காட்டின.

ஒரு காவல்காரர் அவரை சோதனை செய்வதும் அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் கட்டியணைத்துக் கொள்வதையும் மீண்டும் மீண்டும் காண்பித்து நாட்டு மக்களின் நாட்டுப் பற்றை இன்னும் தீவிரமாக்கினர். திண்ணைகளில் பார்வையாளர்களை அமரவைத்து தியாகச் செம்மல் சஞ்சய் தத் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு குறித்து கருத்துக் கணிப்புக்களும் விவாத மேடைகளையும் படமாக்கினர். சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட சௌகரியம் மற்றும் அசௌகரியங்கள் சாங்கோபாங்கமாக அலசப்பட்டன.

இந்தத் திண்ணைப் பேச்சுக்களில் அரசல் புரசலாக சில விஷயங்களும் வெளியில் வந்தன.

சஞ்சய் தத் விஷயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே தினம் அசந்தர்ப்பவசமாக இந்த வழக்கில் ஏதோ வகையில் மாட்டிக் கொண்ட சில அப்பாவிகள் குறித்தும் பேசப்பட்டன.
எங்களைப்போன்ற தேச நலன் மேல் அக்கறை கொண்டவர்களுக்கு அவைகளைக் கேட்க அக்கறை இல்லை. எங்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி? சும்மா விளையாட்டுக்காக வீரதீர பராக்கிரமத்துடன் தொடர்புடைய விளையாட்டுச் சாமான்களை வாங்கி வைத்ததற்காக ஒரு மாபெரும் கலைஞனுக்குக் கிடைத்த தண்டனைதான் எங்களை மிகவும் வாட்டுகிறது.
ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எவ்வளவு அற்புதமான ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது?

இதை எப்படி நாங்கள் விட்டு வைப்போம்?

எங்கு மனித உரிமைகள் மிதிக்கப்பட்டால் எங்களுக்கு என்ன?

எங்கு யார் நாசமாகப் போனால் எங்களுக்கு என்ன?

1 comment:

  1. உண்மைஇயில் எனக்கும் வருத்தம் தான். இந்தத் தியாகசுடருக்கு நியாயமாக சொல்வாதானால்...சொர்க்க வாழ்க்கை தான் கொட்டுத்து உலகத்தை விட்டு துரத்தி இருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நீங்களாது பரிந்துரை செய்யக்கூடாதா?

    டெல்லியிலிருந்து

    ReplyDelete