Saturday, November 3, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய முடிவுறாத ஒரு ஆவணப்படம் - 4

ராகவன் தம்பி

சி.சு.செல்லப்பாவின் வீட்டில் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்கான படப்பிடிப்பு துவங்கியதைப் பற்றிய குறிப்புக்களோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.

செல்லப்பா பேசிக் கொண்டே இருந்தார். நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார். பிறந்த ஊரான வத்தலக்குண்டு பற்றிய மகாத்மியத்தை, பள்ளி, கல்லூரி நாட்கள் பற்றி, தகப்பனார் பற்றி, தான் சரசாவின் பொம்மை மூலமாக எழுத்தாளர் ஆனது பற்றி, புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, க.நா.சு., கு.பரா. ஆகியோருடைய நட்பு கிடைத்தது பற்றி, அவர்களுடன் சண்டை போட்டது பற்றி, தினமணி அனுபவம் பற்றி, ஏ.என்.சிவரானுடன் போட்ட சண்டை பற்றி, எழுத்து இதழ் நடத்தியது பற்றி, தன்னுடைய இலக்கியக் கோட்பாடு பற்றி, இன்றைய இலக்கிய முயற்சிகள் பற்றி, சமகால எழுத்தாளர்கள் பற்றி, இலக்கிய விமர்சகர்கள் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசத்துவங்கினார் செல்லப்பா. ஓரிடத்தில் அவருடைய வீட்டில் 1924ல் ஏற்றப்பட்ட காங்கிரஸ் கொடி, அவருடைய தகப்பனார் நெய்த கதர் வேட்டி, அவருடைய தாயார் நூற்ற கதர் நூல்கள், கராச்சி காங்கிரஸ் மாநாட்டுக்குப்போன அவருடைய சித்தப்பா அணிந்திருந்த கோட் பொத்தான்கள், சுதந்திரப் போராட்டத்தில் செல்லப்பா சிறை சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைதிகளுக்கான கைதி எண் பதிக்கப்பட்ட பித்தளைத் தகடு (""எல்லோரும் திருடிட்டு ஜெயிலுக்குப்போவா. நான் ஜெயிலுக்குப் போய் இதைத் திருடிண்டு வந்தேன்''- என்று சொல்வார் செல்லப்பா) இவற்றையெல்லாம் காண்பித்து அவற்றைக் குறித்த விளக்கம் அளித்தார்.

ஏதோ ஒரு புது சக்தி அவருக்குள் நுழைந்து கொண்டதைப் போலத் தோன்றியது எனக்கு. நாங்கள் களைத்துப் போனாலும் அவர் களைக்கவோ சளைக்கவோ இல்லை. அவர் பேசிக் கொண்டு இருக்கிறார் --கேமரா ஓடிக் கொண்டு இருக்கிறது. கிடைக்கிற நேரத்துக்குள் ஒரு புகை போட்டுக் கொண்டு ஓடிவந்து விடலாம் என்றும் செல்லப்பாவுக்குத் தெரியாது என்று நினைத்து மெல்ல நழுவி வெளியே போவேன். திரும்பி வந்ததும் ""நான் இதை சொல்லிக் கொண்டிருந்தேன். நீ சிகரெட் பிடிக்க வெளியே போயிட்டே'' என்று மீண்டும் தான் சொன்னதில் முக்கியமான விஷயங்களை மீண்டும் சொல்லத் துவங்குவார். பதிவு ஆகியிருக்கும் என்று சொன்னாலும் விடமாட்டார். அன்று ஒரு குழந்தையைப் போல எங்களுடன் ஒத்துழைத்தார் செல்லப்பா.

இடையில் மாமியை அழைத்து சுப்பிரமணியன் கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வரச் சொல்லியும் காபி போட்டுக் கொடுக்கச் சொல்லியும் அதட்டுவார். நாங்கள் விருந்தாளிகள் என்றும் எதையும் வெளியில் இருந்து தருவித்துக் கொள்ளக் கூடாது என்றும் மாமியிடம் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருந்தார். நானும் ரவீந்திரனும் அவரைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியில் இருந்து மதிய உணவை வரவழைக்க ஒப்புதல் அளிக்க வைத்தோம்.

மாமியையும் இந்தப் படத்துக்காக சிறிய நேர்காணல் செய்தேன். தொகுக்கப்படாத இந்தப் படத்தின் மிகவும் நெகிழ்வான கணங்கள் அவை. செல்லப்பா பற்றியும் அவருடைய கோபத்தைப் பற்றியும் வெறுமனே ஒரு கோடு காண்பித்தார் மாமி. நான், ""உங்களிடம் அவர் அப்படிக் கோபித்துக் கொண்ட ஓரிரு சம்பவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். ""புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன்கிட்டே சொல்லிண்டிருக்க முடியாது'' என்று சொல்லும் இடம் ஒரு கவிதையைப் போல இருக்கிறது என்று தொகுக்கப்படாத பட நறுக்குகளைப் பார்த்த சுந்தரராமசாமி நெகிழ்ந்து போய் சொன்னார்.

மாலை ஆறு மணிக்குப் படப்பிடிப்பை நிறுத்தினோம். மீண்டும் மாமியின் கையால்தான் எங்களுக்குக் காபி என்பதை வலியுறுத்தினார். எல்லாம் முடிந்தது. நாங்கள் கிளம்ப வேண்டும்.

செல்லப்பாவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ரவீந்திரனிடம் கேட்டேன். அவர் நாசூக்காக நீங்கள் கொடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்களே அவரிடம் பேசிக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டுத் காற்று வாங்கப் போகும் சாக்கில் வெளியில் போய் நின்று கொண்டார். எனக்குப் பெரிய உதறல். சமையலறையில் மாமியிடம் சென்று அந்தத் தொகை அடங்கிய உறையை மெல்ல சாமிப் படத்தின் முன் வைத்தேன்.

"இது மாமாவுக்கு...

"மாமாக்குன்னா மாமா கிட்டே குடுத்துக்கோ. இங்கே எதுக்கு வைக்கணும். அதெல்லாம் உங்க விவகாரம். மாமா என்னை வைவார். இங்கே வைக்க வேணாம். அவர் மகா கோபக்காரர். கொன்னுடுவார்'' என்று சொல்லி உறையை எடுத்து என் கையில் திணித்து விட்டார். சரி. சண்டைக்காரரிடமே போகலாம் என்று கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு செல்லப்பா அருகில் போய் உட்கார்ந்தேன். ஓரிரு விஷயங்கள் ஏதேதோ பேசினேன். பிறகு மெல்ல உறையை எடுத்து அவர் முன் வைத்தேன்.


என்ன இது

"ஒண்ணுமில்லை. இதை உங்களுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்-. எடுத்துக்கோ. கையில் இருந்து எதுக்கு நீ செலவு பண்ணணும்?''

இல்லை சார். நாளைக்கு இந்தப் படம் முடிஞ்சா எனக்கு எங்கிருந்தாவது பணம் கிடைக்கும். பரவாயில்லை''.


பணம் கிடைச்சப்புறம் கொண்டு வந்து கொடு. இப்போ வேணாம். எனக்குத் தெரியும். இதெல்லாம் நானும் பட்டதுதானே. என்னைப்போல இருக்காதே'

"நீங்க வாங்கிண்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்''

பணம் கிடைச்சப்புறம் குடு. நான் இல்லையா, மாமி கிட்டே குடு''

இதைப் பல நேரங்களில் தனியாக இருக்கும்போதும் நினைத்துக்கொள்ளும் போதும் இப்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதும் போதும் நெகிழ்ச்சியில் கரைந்து போகிறேன். தன்னிச்சையாகப் பெருகும் கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. கரைந்து அழுகிறேன்.

இப்போது செல்லப்பாவும் இல்லை. மாமியும் இல்லை. படமும் முடியவில்லை. அந்த ஒளிப்பேழைகள் மற்றும் குறுந்தகடு மட்டுமே என் நினைவுகளைப்போல மௌனமாக என் வீட்டுப் பரணில் தூசினைச் சுமந்து தவம் புரிந்து வருகின்றன.

சில விஷயங்களை எழுதாமல் விட்டால் பலருக்கு சௌகர்யமாக இருக்கும். முக்கியமாக எனக்கு சௌகர்யமாக இருக்கும். இருக்கிற விஷயத்தை சொல்லப்போய் ஏற்கனவே கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் என்னால் இன்னும் சில சில்லறை விரோதங்களையும் பழி வாங்கல்களையும் தாங்கிக் கொள்ள முடியாது.

இந்தப் படத்தை எப்படித் திட்டம் இட்டிருந்தேன் என்றால், வத்தலக்குண்டில் துவங்கி, சின்னமன்னூரில் அவருடைய வீடு மற்றும் தெருக்களைப் படம் பிடித்து, செல்லப்பா பதிவினில் குறிப்பிட்டிருக்கும் சில இடங்கள் (புதுமைப்பித்தன், மௌனி ஆகியோரை சந்தித்த திருவல்லிக்கேணி மேன்ஷன், தினமணி அலுவலகம், அவருடைய வாடிவாசல் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள், அவருடைய நூல்கள், எழுத்து இதழ்கள் போன்றவற்றை இப்படத்தில் சேர்க்கத் திட்டம் இட்டிருந்தேன். செல்லப்பா எங்களுக்காகப் படத்தில் பேசியது எல்லாம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை ஒட்டியது. அது குறித்த பல தகவல்களை விரித்துச் செல்கிறது அவருடைய பேச்சு நவீனத் தமிழிலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பல விஷயங்களை மிகவும் அனாயாசமாகத் தரும் இப்பதிவுகள். அந்தப் பதிவுகளை அங்கங்கு இடைசெருகி மாமியின் நேர்காணலுடன் முடிக்க நினைத்திருந்தேன். இதற்கான பணம் வேண்டும்.

கண்ணப்ப தம்பிரான் படம் முடித்து விட்டு பிறகு செல்லப்பாவைப் பற்றிய இந்தப் படத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காத்திருந்த எனக்கு ஒரு கிறுக்குப் பிடித்தது. முழுநேரத் திரைப்படத் தயாரிப்பாளன் ஆகவேண்டும் என்கிற கிறுக்கு அது. அந்தப் பைத்தியத்தின் தொடர்ச்சியாக அலுவலகத்தில் விடுப்பு எடுத்தேன். பல மாதங்கள் தொடர்ந்தது அந்த விடுப்பு. அலுவலகத்தில் பணியில் உடனடியாக சேரச்சொல்லி நெருக்கடி வந்தது. அதே நேரத்தில் ஒரு பஞ்சாபிக் கயவன் இந்தியில் தொடர் தயாரிக்கலாம் என்று ஆசை காண்பித்து அலுவலகத்தில் என் சேமிப்பில் இருந்த ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய்களை செலவழிக்க வைத்து ஒரே மாதத்தில் என்னை ஏமாற்றினான். அதே நேரத்தில் எங்களுடன் தங்கியிருந்த என்னுடைய மைத்துனன், காலையில் ஆரோக்கியமாக அலுவலகம் சென்றவன் மாரடைப்பு ஏற்பட்டு மாலையில் பிணமாக வீடு திரும்பினான். என் மீதும் என் குழந்தைகள் மீதும் அபாரமான அன்பைச்சொரிந்த அவன் எங்களை விட்டுப் பிரிந்தபோது அவனுடைய வயது 32. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு சற்று நிமிர்ந்தபோது என் அலுவலகத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத ஒரு பொய் வழக்கில் சில நல்லவர்களால் மாட்டி வைக்கப் பட்டேன். பின்னர் சகல மரியாதைகளுடன் மீண்டு வந்து அலுவலகத்தில் மீண்டும் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் வடக்கு வாசலுக்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டேன்.

எதற்கு இத்தனை கதை என்றால், இந்த சோதனைகள் இல்லாது இருந்திருந்தால் ஒருவேளை செல்லப்பா படத்தை முடித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இடையில் உதவி கேட்டு சிலரிடம் சென்றேன். யாரோ சொல்லி சென்னைத் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு அதிகாரி ஆவணப்படங்களைப் பார்த்துக் கொள்பவர் என்றும் அவரை அணுகினால், இந்தப் படத்தை முடிக்க உதவி கிடைக்கலாம் என்றும் சொன்னார்கள். அவர் சொன்னதை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறேன்.

"யார் சார் செல்லப்பா? எழுத்தாளர்னா எங்களுக்கு நல்ல பாப்புலர் ஆன எழுத்தாளர்களைப் பத்திப் படம் பண்ணணும். (அவர் சொன்ன பெயர்களை இங்கு எழுதினால், உங்களுக்கு உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் இருந்தால் நீங்கள் குமட்டிக் குமட்டி வாந்தி எடுப்பீர்கள். உங்கள் மீது எனக்குக் கருணை உண்டு. வேண்டாம்). போன வேகத்தில் திரும்பி விட்டேன். அந்த நேரத்தில் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் படம் சாத்தியப் பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நான் தயாரித்து இயக்கிய கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையுடன் தொலைக்காட்சி நிலையத்தில் நடராஜனை சந்தித்தபோது என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. எவ்வித சிபாரிசையும் கொண்டு செல்லவில்லை நான். அவரை முதன்முதலாக சந்தித்த அந்த நாள் அவருடைய பணிக்காலத்தின் இறுதிநாள். என்னை யார் என்று அப்போது தெரியாத போதும் கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையைக் கொடுத்ததும் தன்னுடைய உதவியாளரை அழைத்து உடனே என்னுடைய கடிதத்தின் மீது அந்தப் படத்தைத் தேர்வு செய்து குறிப்பு எழுத வைத்தார். அந்தப் படம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. இப்போது செல்லப்பாவின் படத்துக்காக நான் சந்தித்தது வேறுமாதிரியான அதிகாரி ஒருவரை. வேறு என்ன? எல்லாம் என் நேரம்தான்.

பிறகு தலைநகரில் சாகித்ய அகாடமியில் அப்போது செயலராக ஒரு மலையாள இலக்கியவாதி இருந்தார். செல்லப்பாவின் மீது அதீதமான மதிப்பு வைத்திருப்பதாகவும் நான் சிபாரிசுக்காக யாரிடமும் போகக்கூடாது என்றும் தானே செய்து தருகிறேன் என்றும் சொன்னார். நம்பியிருந்தேன். யாரிடமும் போகவில்லை. ஆனால் அந்த ஆண்டு வேறு யாரோ யாரிடமோ போய் பலத்த சிபாரிசு வாங்கிவந்து வேறு ஏதோ படம் எடுக்க சாகித்ய அகாடமி நிதி உதவி அளித்தது. எனவே அந்த முயற்சியும் தோற்றுப்போனது. இணையத்தில் பல நண்பர்களிடம் வேண்டினேன். அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்குக் கடிதம் அனுப்பினேன். கடிதத்தை வீட்டுக்குத் தொலைநகலில் அனுப்பி வைத்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை. என் நினைவுகளைப் போல அதுவும் உறங்கிக் கிடக்கலாம். ஒருவேளை படத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால் இன்னும் பல தமிழ் படைப்பாளிகளை படம் பிடித்திருப்பேன். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

செல்லப்பா படம் எடுக்கத் துவங்கியபோது நண்பர்கள் கேட்டதற்கு இறுமாப்புடன் சொன்னேன். ""யாரும் ஆதரிக்கலைன்னா பரவாயில்லை. பொழுது போகாதப்போ எல்லாம் வீட்டிலே தனியா போட்டுப் பாத்துக்குவேன். செல்லப்பா ஞாபகம் வர்றப்போ எல்லாம் தனியாப் பேட்டுப் பாத்துக்குவேன்''.


அதைத்தான்செய்துகொண்டிருக்கிறேன் இப்போது.

3 comments:

  1. Sir. Really Great work. Great works will generally go unnoticed. Thats the nature of great work. But in later stages people will celebrate like that anything, like we are celebrating Puthumai Pithan stories. Praying god to give you strength and finance to complete this awesome project- Panneer Selvam

    ReplyDelete
  2. Sir, Very nice article on the Documentary on Sri. Si. Su. Chellappa. I want to get a copy of Suthanthira Thaagam. But it is not available anywhere. Apparently after Si. Su. passed away,a relative got the rest of the copies sold at Chennai Book Fair a few years ago for Rs. 100 for those 3 Volumes.1700 pages. Do you have any extra copies? I can pay for them and get.Thanks.
    M.Narayanan
    kahanam@yahoo.com

    ReplyDelete
  3. Sir, Very nice article on the Documentary on Sri. Si. Su. Chellappa. I want to get a copy of Suthanthira Thaagam. But it is not available anywhere. Apparently after Si. Su. passed away,a relative got the rest of the copies sold at Chennai Book Fair a few years ago for Rs. 100 for those 3 Volumes.1700 pages. Do you have any extra copies? I can pay for them and get.Thanks.
    M.Narayanan
    kahanam@yahoo.com

    ReplyDelete