Monday, April 20, 2009

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு "ஓ"


தில்லித் தமிழ்ச் சங்கம் 19 ஏப்ரல் 2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருவள்ளுவர் கலையரங்கில் கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் "பாரதியார் வந்தார்" என்னும் தலைப்பில் வில்லிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குடும்பத்தில் அநேகமாக எல்லோரையும் தன்னுடைய கலையில் ஈடுபடுத்தி இருக்கிறார் சுப்பு ஆறுமுகம். இதுவே எனக்குப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சுப்பு ஆறுமுகத்துடன் அவருடைய மகள் திருமதி பாரதி திருமுகம். ஹார்மோனியம் வாசித்தார். அவருடைய கணவர் முனைவர் எஸ்.திருமகன் கடம். இவர்களுடைய மகன் டி.கலைமகன் வாய்ப்பாட்டு. சுப்பு ஆறுமுகத்தின் மகன் எஸ்.காந்தி உடுக்கை மற்றும் பின்பாட்டு - குடும்பத்துக்கு வெளியே ஒரே ஆளாக மிகவும் அமர்க்களமாக தபேலா வாசித்த பி.கணேஷ் ராவ்.

ஞாயிற்றுக்கிழமை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாலையை ஏக அமர்க்களப்படுத்தி விட்டார்கள் இந்தக் குழுவினர்.

வில்லுப்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி அவர்களின் வந்தனம் பகுதி. இந்த பத்ததியில் அவர்கள் ஆசானுக்கு வைக்கும் வணக்கம் கோடி அட்சரம் பெறும். தன்னுடைய ஆசான்கள் ராம அய்யர் மற்றும் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோருக்கு சுப்பு ஆறுமுகம் முன்வைத்த வணக்கம் ரொம்ப நாட்களுக்கு நினைவில் நிற்கும்.

தனக்கு 82 வயது நடக்கிறது என்று சொன்னார். நடக்கும்போது மட்டும் சற்று லேசான தடுமாற்றறம் தெரிகிறது. மற்றபடி அவர் மேடையில் அமர்ந்தபின் அதை நம்புவது சற்று கடினமாக இருக்கிறது. குரலை என்னமாகப் பதப்படுத்தி வைத்திருக்கிறார் மனிதர்? ஒரு பட்டுத் துணியைக் கையாளுவதுபோல மிகவும் பதமாகக் குரலைக் கையாளுகிறார். அந்தக் குரலில் அநியாயத்துக்கு நெல்லை குசும்பு அள்ளித் தெறிக்கிறது. கதையைத் துவங்குவதற்கு முன்பே நெல்லையின் பெருமை. டி.கே.சி வீட்டு வட்டத் தொட்டியின் பெருமை. அதில் இவர் கலந்து கொண்ட வைபவம் எல்லாவற்றையும் சுவைபடச் சொன்னார். (அந்த தோசை மேட்டர் மட்டும் விட்டு விட்டார். டி.கே.சி வீட்டு தோசை பற்றி எழுதாத பெருசுகள் யாரும் இல்லை என்று சத்தியமடித்துச் சொல்லலாம்). அன்று நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மைய கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பனையும் தன் கட்சிக்குள் இழுத்துக் கொண்டார். சுப்பு ஆறுமுகம் புதுக்குளம் - ராமசுப்பன் கருங்குளமாம். நெல்லை பற்றி சுப்பு ஆறுமுகம் பெருமை பொங்க விவரித்துக் கொண்டிருந்தபோது அரங்கில் இருந்த சுமார் 99 சதவிகித நெல்லைக் காரர்கள் பெருமையில் பூரித்துத் துள்ளித் துள்ளிக் கரகோஷம் எழுப்பினார்கள். நெல்லைவாசிகளுக்குத் தங்கள் ஊரைப் பற்றி எப்போதும் பெருமை உண்டாம். பாரதிக்கும் அது நிரம்ப இருந்ததாம். புதுமைப்பித்தனுக்கு இல்லாததா? திகசிக்கு இல்லாததா? வண்ணநிலவனுக்கு இல்லாதா?(அது சரி, என் காதிலும் மற்ற துவாரங்களையும் சுற்றி ஏன் இப்படிப் புகை மண்டுகிறது?)

அற்புதமான வித்வத். ஆழ்ந்த இசைஞானம். பரந்த படிப்பு. இவை எல்லாம் இல்லாமல் வில்லுப்பாட்டுப் பக்கம் வருவது சற்றுக் கடினமான காரியம். மிக விசாலமாக விரிந்து விரிந்து படர்கிறது அவருடைய விவரணங்கள். அதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கோட்டை விடுகிறார் சுப்பு அண்ணாச்சி. அதுதான் கதை. அந்தக் கதையை மீண்டும் மீண்டும் இழுத்துக் கரை சேர்ப்பதற்கு படாத பாடு படவேண்டி இருக்கிறது அவருக்கு. அந்த வேலையை மிகவும் சாதுரியமாகச மாற்றி மாற்றிச் செய்கிறார்கள் அவருடைய குமாரர் காந்தி அல்லது மருமகன் திருமகன். இடையில் கதையின் இழையை நினைவுபடுத்தி அவர்கள் இழுக்கும் ஒரு சரிகைக்குரல் வெகுநேர்த்தி.

புலவர் விசுவநாதன் அப்புறம் என்னிடம் கொஞ்சம் குறைபட்டுக் கொண்டார். வில்லுப்பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. அதில் பாரதி மட்டும்தான் இல்லை என்று. அதில் உண்மையும் இருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் இது மெத்தப் படித்த, அதிகமாக ஞானம் கொண்ட பல பிரசங்கிகளுக்கும் நேரும் சோகம்தான் இது. நிறைய கதாகாலட்சேபம் செய்பவர்களிடம் இது ரொம்ப வெளிப்படையாகத் தெரியும். அவர்களும் கூடை கூடையாக விஷயங்களை வைத்துக் கொண்டு கதைக்கு வராமல் படுத்தி எடுப்பார்கள். ஒருமுறை இதே மேடையில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாருக்கும் இதுதான் நடந்தது. இவருக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் இடையில் சில அற்புதமான சங்கதிகளை சொன்னார். அவற்றை ஆய்வு பூர்வமாக அணுகி கெடுக்காமல் இருந்தால் அவற்றின் சுவாரசியமே தனி. வில்லுப்பாட்டுக்காரர்கள் சொல்லும் ஆமா வுக்கு ஒரு அற்புதமான விளக்கம் சொன்னார். அது ஆண்டாளையும் மாணிக்க வாசகரையும் குறிப்பது என்றார். அதில் இன்னொரு விசேஷம் ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில் மாணிக்கவாசகரைக் குறிப்பது போல "மா"ர்கழித் திங்கள் என்று துவங்கினாள். மாணிக்க வாசகர் தன்னுடைய திருவெம்பாவையில் "ஆ" தியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" என்று ஆண்டாளைக் குறிப்பிட்டு இருப்பார் என்று சொன்னார்.

இந்த நிகழ்ச்சியின் அழகியலின் உச்சகட்டமாக நான் எடுத்துக்கொண்டது சுப்பு ஆறுமுகத்தின் பேரன் டி.கலைமகன் பாடிய கிட்டப்பாவின் "கோடையிலே இளைப்பாறி..." ராகமாலிகையில் இன்னும் முற்றாத இளசான குரலில் கிட்டப்பாவின் அதே கார்வைகளுடன் அதே சங்கதிகளுடன் பாடினான் பாருங்கள். கண்கள் கலங்கின எனக்கு. அந்தப் பையன் பாடும்போது முழு அரங்கிலும் ஒரு நிசப்தம் பாருங்கள். உண்மையாகவே மகுடிக்குக் கட்டுண்ட நாகங்களாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் நாங்கள்.

பையன் பாடி முடித்த பிறகு கிட்டப்பாவுடன் ஆர்மோனியம் வாசித்த காதர் பாட்சா பற்றிச் சொன்னார் சுப்பு ஆறுமுகம். காதர் பாட்சாவைத் தூக்கில் போடப்போகிறது ஆங்கிலேய அரசு. இறுதி ஆசையைக் கேட்கிறார்கள். முருகனைப் பற்றிய பாடல்கள் பாடவேண்டும் எனக்கு. ஒரு ஆர்மோனியம் வேண்டும் என்கிறார் காதர் பாட்சா. ஆர்மோனியம் வரவழைக்கப்பட்டது. முருகன் மேல் விடிய விடிய பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார் காதர்பாட்சா. எல்லா அதிகாரிகளும் பாடல்களில் மயங்கி இருக்கிறார்கள். மணி விடிகாலை ஐந்தே முக்கால். ஐந்தரைக்கு அவரைத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது. ஆங்கில அரசின் நியதிப்படி அவருடைய தூக்குத் தண்டனை ரத்தாகிவி்ட்டது.

இப்படியான சுவாரசியமான விஷயங்களை சொல்லிப்போனார் பெரியவர்.

அற்புதமான மாலை. வழக்கமாக தமிழ் சங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு இருக்கும். அதைத் தொடர்ந்த சிக்கல்கள் இருக்கும். நிகழ்ச்சியை ஒழுங்காகக் ரசிக்க முடியாது. வேண்டும் என்றே தாமதமாக வருபவர்கள் மற்றவர்களை இம்சித்துக் கொண்டிருப்பார்கள். பசி பொறுக்க முடியாத குழந்தைகள் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி உதைத்து அரங்கத்துக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

நல்ல வேளை. அன்று இரவு உணவு ஏற்பாடு செய்யாமல் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் செயற்குழுவினர். நல்ல கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தரமான கூட்டமாக அன்று இருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மைய அரசு கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பன் மிகவும் அற்புதமாகப் பேசினார். அவருடைய பேச்சிலும் ஊர்ப்பெருமை மிதந்தது. பரவசப்பட்டு இருந்தார் மனிதர். ஏற்கனவே சிரித்த முகம் அவருக்கு. அன்று அவர் சுப்பு ஆறுமுகத்தை மனதாரப் பாராட்டிப் பேசியபோது முகம் எல்லாம் சிரிப்பாக இருந்தது. மைய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆணையத்தின் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி திருமதி பாலா விஸ்வநாதன் (பிரபலமான எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.) அன்று அவருடைய பேச்சும் மிக அற்புதமாக இருந்தது. எண்ணெய் வளங்களைப் பற்றி சுப்பு ஆறுமுகத்திடம் ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டபோது அவர் மிக அற்புதமாக நடத்திக் கொடுத்தார் என்று பூரித்தார். இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால் தெலுங்கு மொழிக்காரர்கள் முயற்சிக்கக் கூட முடியாமல் ஓடி விட்டார்களாம். உண்மையிலேயே பெருமையாக இருந்தது.
கிட்டப்பாவின் பாடலை மிக அற்புதமாக வழங்கிய அந்தப்பையன் 150 ஆண்டுகள் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்தினேன். சுப்பு ஆறுமுகம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தெண்டனிட்டு ஒரு வேண்டுகோள். பலமுறை இதை நான் காலில் விழுந்து கூட கேட்டு விட்டேன். ரட்சிக்க மாட்டேன் என்கிறார்கள். மேடையில் இவருக்கு இவர் பொன்னாடை போர்த்துவார் என்று அக்கிரமம் செய்கிறார்கள். பொதுவாக எதுக்காவதுதானே போர்த்துவார்கள்? பெரியவர்களுக்கு மரியாதை செய்யும்போது பொன்னாடை அணிவிப்பது அல்லது அலங்கரிப்பது என்று அல்லவா சொல்லவேண்டும். பாலமூர்த்தி கடைசி வரை இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அறிவிப்பு செய்து கொண்டு இருந்தார். எதற்கு இந்த இறுக்கம்? பேச்சுப்பட்டறை எல்லாம் வேறு நடத்தப் போகிறார்கள். யாருக்கு யார் பட்டறை நடத்துவது என்று தெரியவில்லை.
ஆனால் இந்தச் சிறுசிறு குறைகளை மறக்கலாம். சரி செய்து கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டுநல்லதொரு மாலையை வழங்கிய சுப்பு ஆறுமுகத்துக்கும் பெருமாளுக்கும் அவருடைய செயற்குழு கோஷ்டிக்கும் கண்டிப்பாக ஒரு ஓ போட்டே ஆகவேண்டும். மிகவும் முனைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சக்தி பெருமாள். ஓடி ஓடி உழைத்தார் இணை செயலாளர் பாலமூர்த்தி. அற்புதமாக ஒத்துழைத்தார்கள் அனைவரும்.

தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு முன்பு தில்லி வந்த சூட்டோடு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் அவருக்காக பிரத்யேகமாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறர்கள் இந்தக் குழுவினர். நிகழ்ச்சியின் செறிவில் கவரப்பட்டு இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக புழல் சிறைவாசிகளுக்காக ஒருமுறை நிகழ்த்த வேண்டும் என்றும் அதற்கான செலவினைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார் கலாம்.

இதைவிடப் பெரிய "ஓ" என்னவாக இருக்க முடியும்?


7 comments:

  1. அன்புடையீர்,
    வணக்கம். சுப்பு ஆறுமுகம் பற்றிய உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.நிகழ்ச்சி உண்மையில் அட்டகாசமாகத்தான் இருந்தது. ஆனாலும் நீங்களும், புலவர் விஸ்வனாதனும் குறிப்பிட்டதைப் போல பாரதியைத்தான் தேட வேண்டியதாகி விட்டது.பயனுள்ள பல தகவல்களை அவர் தந்தாலும் கூடப் பட்டிமன்றக்காரர்களைப் போல இந்த அளவு பாதை விலகிப் போயிருக்க வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து.
    என் இளம் வயதில் கொத்தமங்கலம் சுப்புவின் காந்தி மஹான் கதையை வில்லில் கேட்டிருக்கிறேன். அதன் அருகில் இந் நிகழ்ச்சி வரமுடியாது என்றபோதும் அழிந்து வரும் கலைக்கு இந்த அளவாவது உயிரூட்டிக் கொண்டிருக்கிறாஎர்களே என்பதற்காக நாம் உறுதியாக நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லைதான்.
    நானும் என் ஆசிரிய நாட்களில் நீலி கதை முதலிய சில வில்லுப் பாட்டுக்களை எழுதி மாணவியர்களை இயக்கியதுண்டு.
    வாழ்த்துக்களுடன்,
    எம்.ஏ.சுசீலா.

    http://www.masusila.blogspot.com

    ReplyDelete
  2. வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

    என்னை மிகவும் மலைக்க வைத்தது பெரியவர் விரல் நுனியில் வைத்திருக்கும் தகவல்கள். அவர்களின் இசை ஞானம். பாதை விலகிப்போனாலும் பற்பல நல்முத்துக்களை இறைத்துக் கொண்டே சென்றிருக்கிறார்களே. பட்டிமன்றத்துக் காரர்கள் பாதையும் விலகி வழியெங்கும் இயன்றவரையில் குப்பைகளைத்தானே இறைத்து விட்டுச் செல்வார்கள். அவர்களுடன் இவர்களை ஒப்பீடு செய்தது கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிந்தது. ஆசிரிய நாட்களில் வில்லுப்பாட்டுக்களை எழுதிய உங்கள் இன்னொரு பக்கம் இன்று அறியமுடிந்தது. மகிழ்ச்சி.

    அன்புடன்
    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. Dear Sir

    It would not be an exaggeration to say that I *tremendously* enjoyed your write-up on Subbu Arumugam’s villuppaattu concert for the Delhi Tamizh Sangam. It was a very comprehensively written review and apart from the concert, you have detailed the various nuggets of information that was given out during the recital. One of these was the one about Kader Badshah. That he sang bhajans on Muruga throughout the night, captivating his captors so much that the execution time itself was forgotten and thus enabling his not being hanged was a wonderfully heartwarming episode. Another VERY charming piece of information was the interpretation of the word ‘aama’ – signifying Andal and Maanickavasagar!

    It is evident that the evening’s recital touched a special chord with you and the delightful, all-inclusive write-up by you is extremely well written, especially the tail bits about your palpable relief at Tamizh Sangam NOT arranging for the night’s dinner (thus enabling a smooth end to an elevation and exhilarating evening!) really made me laugh out loud.


    You are much more senior to me in terms of age and experience and I feel privileged to have read this piece on an evening’s villupattu by a connoisseur who truly knows, appreciates and values good art.

    Keep them coming sir!

    Best regards

    Mohan
    Mohan.Santhanam@bwir.com

    ReplyDelete
  4. Dear Mohan

    Thank you for your kind words.

    With your permission, I will post this in my blog.

    regards

    raghavanthambi

    ReplyDelete
  5. விவரமான பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  6. My dearest KP, you have kept your words. A beautiful and lovely write up. I enjoyed thoroughly. And about Aandal and Manickavasagar...fantastic KP.

    L Muthuramalingam
    muthu_2803@yahoo.com

    ReplyDelete
  7. Muthu

    Thanx.

    But the complement "Fantastic" must go to Periyavar subbu Arumugam.

    KP

    ReplyDelete