Monday, March 9, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள்

என்னுடைய முதல் மேடை நாடக அனுபவம் பற்றி சில மாதங்கள் தொடர்ச்சியாக வடக்கு வாசல் இதழின் சனிமூலை பகுதியில் வெளிவந்த கட்டுரைகளை சில நாட்களாக தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வந்தேன். நல்ல வேளையாக இன்றுடன் இந்தத் தொந்தரவு உங்களுக்கு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.

சனிமூலையில் இந்தக் கட்டுரைகளைப் படிக்காதவர்களுக்காக இந்தத் தண்டனை. இனி நாளையிலிருந்து சமர்த்தாக அரசியல் நிகழ்வுகள் பற்றியும் நூல் மதிப்புரைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி.

நீங்கள் எப்போதும் அளித்து வரும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கு மிக்க நன்றி.


ராகவன் தம்பி

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை சில மாதங்களாக உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

இந்த இதழுடன் அந்தப் பதிவுகளை ஒருவழியாக முடித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தி கண்டு உடனே அவசரப்பட்டு ஏதும் சந்தோஷம் அடைய வேண்டாம். இக்கட்டுரையின் இறுதியில் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியையும் வைத்திருக்கிறேன்.

சென்ற இதழில் நாடக மேடையேற்றத்துக்கு சில நாட்களே இருந்த நிலையில் அப்பாவின் மரணச் செய்தி கேட்டு நாடகத்தைத் தள்ளி வைத்து ஊருக்குக் கிளம்பிப் போனதுடன் நிறுத்தியிருந்தேன். கிருஷ்ணகிரியில் அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. மொத்தம் பதின்மூன்று நாட்கள் நடைபெற்றன சடங்குகள். ஒருபுறம் அப்பாவின் இழப்பு, இன்னொருபுறம் தில்லியில் அறைகுறையாக விட்டு வந்த நாடகம் என மனது எதிலும் நிலையாது சித்திரவதைப் பட்ட நாட்கள் அவை. அப்பாவின் தினசரி திவச காரியங்களை முடித்து தலைதெறிக்க தில்லி நோக்கி ஓடிப்போனேன். அப்பாவின் அஸ்தியை தில்லியில் யமுனையிலும் ஹரித்வார் சென்று கங்கையிலும் கரைத்து விட்டு மீண்டும் நாடக ஒத்திகைகளில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். சவுத் இந்தியா கிளப் சத்தியமூர்த்தி அரங்கில் ஒத்திகைகள் தொடர்ந்தன.
குளிர் மிகுந்த டிசம்பர் மாத இரவுகள் மற்றும் பிற்பகல் நேரங்களில் ஒத்திகைகள் நடைபெற்றன. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் வெறும் 8 நாட்களே இருந்தன. மிகுந்த பரபரப்பில் ஒத்திகைகள் தொடர்ந்தன. மேடை நாடகத்தில் எவ்வித அனுபவமும் எனக்குக் கிடையாது. இதற்காகப் பலரின் உதவியை நாடினேன். தேடித்தேடி அரங்கப் பொருட்களை சேர்த்தோம். ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உடைகளை நச்சு கவனித்துக் கொண்டான். முக்திபோத் கவிதையில் சுவரொட்டிகள் இரவு நேரங்களில் சுவர்களில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியே வந்து நடனமிடும். தங்களுக்கான உரிமைகளை முழக்கமிடும். இதற்காகப் பெரிய பெரிய சுவரொட்டிகளை நச்சுவே வரைந்தான். வெங்கட்டும் இளஞ்சேரனும் ஓடி ஓடி ஒப்பனைப் பொருள்களைச் சேர்த்தார்கள்.ஒலி, ஒளி ஒத்திகைகளைப் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. சொல்லப் போனால் நாங்கள் பார்த்த முதல் ஒலி, ஒளி ஒத்திகை என்பது நாடக அரங்கேற்றத்தின் போது மேடையில் பார்த்ததுதான். அந்த நாடக மேடையேற்றத்தைத் தான் நாங்கள் பின்னாளில் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை என்று கேலியுடன் பேசிக்கொள்வோம். (சொல்லப் போனால் நான் இயக்கிய ஒவ்வொரு நாடக மேடையேற்றமும் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை மட்டுமே என்று நேர்மையுடன் நம்புகிறேன். முழுமை என்பது முடிவில்லாதது இல்லையா-?
1988ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் கலையரங்கில் யதார்த்தா நாடக இயக்கத்தின் முதல் மேடை நாடகமான "சாந்த் கா மூ டேடா ஹை'' வெற்றிகரமாக மேடையேறியது. சப்ரூ ஹவுஸ் அரங்கில் தமிழர்களும் வட இந்தியர்களும் அடங்கிய கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒவ்வொருவரும் மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு உயிரைவிட்டு நடித்தார்கள். கிடைத்த மிகக் குறைந்த ஒளியமைப்பு வசதியில் ரவீந்திரனும் மாயத்தை நிகழ்த்தியிருந்தார். என்னுடைய இயக்கத்தின் குறைபாடுகளை ரவீந்திரன் அமைத்த ஒளியமைப்பின் அழகியல் நேர்செய்து தொடர்ந்தது. சக்கூர்பூரின் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி அன்று மிகவும் அருமையாக வாசித்தார்கள். அன்று சரியில்லாத ஒரே விஷயம் என்னுடைய இயக்கமாகத்தான் இருந்திருக்க முடியும்.
இந்த நாடகத்தை இன்னொரு முறை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் சற்று நன்றாகவே செய்ய முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன். சொல்லப் போனால் ஒவ்வொரு நாடகம் முடிவடையும் போதும் இந்த ரகசியக் குறை எனக்குள்ளே குடைந்து கொண்டே இருக்கும். சாகித்ய கலா பரிஷத் எற்பாடு செய்த விழா என்பதால் விமர்சகர்கள் குவிந்திருந்தனர். பல ஆங்கில நாளிதழ்களிலும் இந்தி நாளிதழ்களிலும் பல விமர்சனங்கள் வெளியாகின. ரேவதி சரண் சர்மா, திவான் சிங் பஜேலி போன்ற அந்தக் கால நாடக விமர்சன ஜாம்பவான்கள் விமர்சனம் எழுதினார்கள். அனைவரும் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இந்த இந்திக் கவிதையை மேடையேற்றிய என்னுடைய (அசட்டுத்) துணிச்சலைப் பாராட்டி இருந்தார்கள். கூடவே அந்த நாடகத்தில் துருத்திக் கொண்டிருந்த பல குறைகளையும் மிகவும் அழகாகச் சுட்டிக் காட்டி இருந்தார்கள். தேசிய நடகப் பள்ளியில் இயக்குநராக இருந்த அங்கூர் அப்போது இந்தி நாளிதழ்களில் நாடக விமர்சனங்கள் எழுதி வந்தார். ஒரு இந்தி நாளிதழில் அவர் என்னுடைய இந்த நாடக மேடையேற்றத்தைக் கிழிகிழியென்று நார்நாராகக் கிழித்து எறிந்திருந்தார். நாடகத்தில் என்னுடைய ஞானத்தைப் பற்றியும் இந்தி அறிவு பற்றியும் உண்டு இல்லை என்று கிழித்திருந்தார். மொத்தத்தில் சாகித்ய கலா பரிஷத் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்ததே தவறு என்கிற அளவில் எழுதியிருந்தார்.
அந்த நிலையில் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகராக இருக்கும் ஆர்.வெங்கட்ராமன் தி பேட்ரியாட் நாளிதழில் எனக்கு மிகவும் ஆதரவாக ஒரு கட்டுரை எழுதினார். இந்த நாடகத்தின் வழியாக தமிழில் ஒரு நாடக இயக்குநர் தோன்றியிருக்கிறார் என்று எழுதினார். வெங்கட்சாமிநாதன் லிங்க் இதழில் ஆங்கிலத்தில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் நாடகத்தில் உள்ள எல்லாக் குறைகளையும் பட்டியலிட்டு இத்தனை குறைகள் இருந்தாலும் ஒன்றை புதிதாகச் செய்ய முன்வந்திருக்கின்ற இவனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். என்னுடைய வெளிமுற்ற நாடகங்கள் பற்றியும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். "தன்னுடைய தவறுகள் வழியாக நாடகங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் பென்னேஸ்வரன்'' என்று அந்தக் கட்டுரையில் எழுதினார் வெங்கட்சாமிநாதன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை-? பல தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ளும் என்னுடைய முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நாடகங்களாகட்டும், நான் முயற்சித்த ஆவணப் படங்களாகட்டும் அல்லது இப்போது நடத்தி வரும் இதழாகட்டும். எல்லாவற்றிலும் பலவகையான தவறுகளை இழைத்து அந்தப் பலவகையான தவறுகளின் வழியாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.
அண்ணாமலையின் கணையாழி நேர்காணல் மற்றும் ஷாஜஹான் தில்லியில் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை இதழிலும் வெளிவந்த என்னுடைய நேர்காணல் ஒன்றிலும் நாடகம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்ற ஒரு கேள்விக்கு நாடகம் எனக்கு எனக்கான ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறது. யதார்த்தா என்னும் அற்புதமான ஒரு குடும்பத்தைக் கொடுத்திருக்கிறது. பல நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறேன். அதைத் தீவிரமாக நம்புகிறேன்.
ஒரு சிலரின் ஓரிரு சிறு அளவிலான துரோகங்களும் நன்றி மறத்தல்களும் மிகச் சிறிய காலத்துக்கு மனதைச் சற்று வருத்தியிருந்தாலும் இந்த முதல் நாடக மேடையேற்றம் போலவே யதார்த்தாவின் ஒவ்வொரு நாடக மேடையேற்ற நினைவும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துப் பார்க்கும் அந்தக் கணங்களை மிகவும் இனிமையாக மாற்றுபவை. மனதுக்குப் பரவசம் ஊட்டுபவை. வாழ்ந்த வாழ்க்கைக்கு சிறிதளவிலாவது அர்த்தம் கொடுத்த பரவசக் கணங்கள் அவை. அந்தக் கணங்களை, அந்த அனுபவத்தை மீண்டும் ஒரு நொடியேனும் வாழ்ந்து பார்க்கத் தூண்டுபவை. அந்தக் கணங்களின் வலிகள், துன்பங்கள் மற்றும் துயரங்கள் எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேறு ஏதோ ஒரு உலகில் வாழ்ந்து வெளியே வந்தது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகின்றன. வலிகளை மறக்கும் மாயத்தை நாடக மேடை நிகழ்த்தியது. மேடை எனக்கு உயிர்ப்பை அளித்தது. என்னுடைய நாடக அனுபவங்களில் இறைவன் எனக்கு வரமாக அருளிய பல நல்ல உள்ளங்களைப் பற்றிய பாசம் கலந்த நெகிழ்வுடன் கூடிய நினைவுகளை இறுதி மூச்சு உள்ள வரை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் என் ஆன்மாவுக்கு உயிர்ப்பு ஊட்டிக் கொள்வேன். அந்தக் கணங்களின் மகிழ்வே அலாதியானது தான். அதற்கு எந்த விலையும் கிடையாது.
முதல் மேடை நாடகமேடையேற்றம் பற்றிய என்னுடைய பதிவுகளை சில மாதங்களாக சகித்துக் கொண்டதற்கும் இது குறித்து கடிதங்கள் எழுதி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய நன்றி.
அதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொன்ன விஷயத்துக்கு மீண்டும் வருகிறேன். வடக்கு வாசல் தொடங்கிய பின் நாடக மேடைப் பக்கம் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு இதழைக் கொண்டு வருவது ஒரு பெரிய போராட்டம் என்னும் போது நாடகத்துக்கு எங்கே நேரம் ஒதுக்குவது-? நான் உயிரோடு இருக்கும் வரை கடன் தொல்லைகள் என்னை விடப்போவது இல்லை. இப்போது எல்லாம் பழகிவிட்டன. மீண்டும் நாடகத்தின் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விரைவில் நானே ஒரு நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றலாம் என்று இருக்கிறேன். அதற்காக திட்டமிட்டு வருகிறேன்.
பாவம் தலைநகர் தமிழர்கள்.

1 comment:

  1. உணர்ச்சிகரமான உங்கள் நாடக மேடையேற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது, எல்லோருக்கும் உரியதே. என்ன, பலரும் சொல்ல மாட்டார்கள்; நீங்கள் வெளிப்படையாகச் சொல்கிறீர்கள். தன்னைச் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் வகையில் நீங்கள் காந்தியின் தடங்களைப் பின் தொடர்கிறீர்கள். இந்த மதுவையும் புகையையும் விட்டுவிட்டால் நல்லது. இன்னும் ஒரு நாடகம் என்ன, ஒரு நூறு நாடகங்களை எழுதி இயக்கலாம்.

    ReplyDelete