Monday, April 23, 2012

செம்மை - சிறுகதைகளுக்கான காலாண்டிதழ்

இன்று உலகப் புத்தக தினத்தில் செம்மை காலாண்டிதழ்  கூரியர் வழியாகக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  தமிழில் சிறுகதைகளுக்கு என்றே ஒரு இதழ் என்ற விஷயம் அதை விட மகிழ்ச்சி அளித்தது. 

சில நாட்களுக்கு முன்பு  தூறல் சிற்றிதழில் செம்மை இதழின் விளம்பரம் காணநேர்ந்தது.  ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இதழை என் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டினேன். 

இதழை அனுப்பி வைத்த ஆசிரியர் நஞ்சுண்டனுக்கு என்னுடைய  அன்பான நன்றி.

அதைவிட முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்து அவருக்கு.  சிறுகதைகளுக்கு மட்டுமே என்று ஒரு இதழை துவங்குவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  சிறுகதைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் உதாசீனப்படுத்தத் துவங்கியிருக்கும் நேரம் இது.  பல பிரபல பத்திரிகைகளில் சிறுகதைகள் இப்போது காணப்படுவது இல்லை.  அவற்றில் வந்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்ற ஒரு வரையறைக்குள் அடங்காவிட்டாலும்.  பெரும்பத்திரிகைகளில் சிறுகதைகளின் இடங்களை இப்போது வேறு ஏதேதோ பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன.
சிற்றிதழ்களிலும் இப்போது பல இடங்களில் சிறுகதைகளுக்கு விஷ்ணு இலைதான்.  பேரிதழாகிப் போன சிற்றிதழ் வித்தகர்கள் பலவித பின்நவீனத்துவ, சித்தாந்த, வேதாந்த, உளவியல் ரீதியான சிக்கல்கள், இந்த லோகாயத உலகத்தில் மனிதனின் இருப்புபோன்ற பெரிய பெரிய விஷயங்களில் உழன்று தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதால் சிறுகதைகளை கவனிக்க அவர்களுக்கு நேரம் இருப்பது இல்லை,  ஏதாவது ஒன்றிரண்டு வக்கிரங்களை சிறுகதைகள் என்ற சிமிழியில் அடைத்து அனுப்பி விடுகிறார்கள்.

வடக்கு வாசல் துவங்கிய புதிதில் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக, பிடிவாதமாக இரு சிறுகதைகள் வெளியிட்டு வந்தோம்.     அவற்றில் பெரும்பாலும் ஒன்று கண்டிப்பாக மொழிபெயர்ப்புக் கதையாக இருக்கும்.  டெல்லியின் தமிழ் வாசகர்கள் இடையில் கடினமான வாசிப்புக்கு ஆட்கள் நிறையக் குறைவு.  அவர்களைப் பத்து விரல்களுக்குள் எண்ணி விடலாம்.  அதிலும் ஓரிரண்டு இலக்கிய அறிவுஜீவி ஜாம்பவான்கள் வடக்கு வாசல் இதழை ஒரு ரெண்டுங்கெட்டானாகப் பார்ப்பது வழக்கம்.   விஷயம் புரியாத ஒரு சிலர் ஹிந்தி, பஞ்சாபி, உருதுன்னு கதைகளை காப்பி அடிச்சி போட்டுக்கறான் வெக்கமே இல்லாமே என்ற அபகீர்த்தியை பரப்ப முயற்சித்தார்கள்.  வடக்கு வாசல் இதழில் துவக்கத்தில் எடுத்த முயற்சிகள் டெல்லியில் சில தமிழ் வட்டாரங்களில் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.   கன்னடத்தில் ‘எட கை சொண்டிகே’ என்பார்கள். இடது கையால் வேண்டா வெறுப்பாக இடப்படும் வடாம்.  ரொம்ப வருத்தமாக இருந்தது.

இந்தியில் ஒரு பழமொழி - “டோபி கா குத்தா நா கர்கா நா காட்கா”  என்பார்கள்.  வண்ணான் வளர்க்கும் நாய் வீட்டில் இருந்தால் வண்ணாத்தி துரத்தி அடிப்பாள்.  படித்துறைக்குப் போனால் வண்ணான் கல் எறிந்து வீட்டுக்குத் துரத்துவான்.  அதற்கு வீடும் கிடையாது.  படித்துறையும் கிடையாது,.  வடக்கு வாசல் இதழை இப்படித்தான் துவக்கத்தில் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

எனவே இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் போனதால் சில மாதங்களுக்குப் பிறகு வடக்கு வாசல் ஒரு சிறுகதையுடன் மட்டுமே தொக்கி நின்று போன   வருத்தம் எப்போதுமே எனக்கு உண்டு.

இப்போது ஐந்து சிறுகதைகளுடன், சிறுகதைக்காகவே மட்டுமே ஒரு இதழ்.  அதுவும் செம்மை என்ற மிக அருமையான பெயருடன் என்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.  ஒரு வகையில் நஞ்சுண்டனைப் பார்த்து பொறாமையாக இருந்தது.

தன்னுடைய கைப்பணத்தில் இருந்தும் நண்பர்களின் உதவியுடனும் இந்த இதழைக் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் நஞ்சுண்டன்.  செம்மையாக்கக் குழு, நடுவாண்மையாளர்கள் என்று இரு குழுமங்கள் இந்தப் பத்திரிகையின் செழுமைக்கு   உதவுகின்றன. 

முதல் இதழ் என்பதால் நண்பர்களிடம் கேட்டு வாங்கி அந்தக் கதைகளை நடுவாண்மைக் குழுவினரிடம் கொடுத்து அவர்களுடைய ஆலோசனைகளை செயல்படுத்தச் செய்து பிறகு பல அடுக்குகளில் செம்மையாக்கப்பட்டதாக ஆசிரியர் தன்னுடைய முதல் இதழ் பிரகடனத்தில் அறிவிக்கிறார்.

அச்சாக்க செலவுகளைக் குறைத்துக் கொண்டு கதைகளை மிகுந்த கவனத்துடனும் நேர்த்தியுடனும் பதிப்பிப்பதே செம்மை இதழின் நோக்கம் என்றும் அறிவித்து இருக்கிறார்.

எல்லா வகையான கதைகளுக்கும் இதில் இடம் உண்டு என்றும் சொல்லி இருக்கிறார்.  இதனை முதல் இதழிலேயே ஸ்பஷ்டமாக நிரூபிக்கும் வேலை தொடங்கி  விட்டது. 

ஐந்து கதைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.  என்.ஸ்ரீராம் எழுதிய ‘அந்தி வெயில்’, ஆங்கரை பைரவியின் ‘வீனியக்கா’, கே.ஆர்.மணியின் ‘அருள்பாலித்தான்’, வா.மு.கோமுவின் அய்யேங்ங் மற்றும் க.வை.பழனிச்சாமியின் ‘அழவில்லை’ என ஐந்து சிறுகதைகள். 

இந்தக் கதைகள் ஐந்தும் ஏறத்தாழ ஒரு சரடில் பயணிப்பவை.  வாழ்க்கையின் ஒரு பக்கத்தை கொஞ்சம் நிர்த்தாட்சண்யமாகப் பார்க்கின்ற கதைகள்.  கொஞ்சம் சகட்டடியாக எடுத்து முகத்தில் அறைபவை.  அதிர்ச்சி மதிப்பீட்டைத் திணிப்பவையாக அமைந்திருந்தாலும் ஒருவரால் எவ்வகையிலும் உதாசீனப்படுத்த முடியாத கூறுகளைப் பற்றி நேரடியாகவும் தைரியமாகவும் சொல்கின்ற கதைகள்.  நான் சொல்லும் இந்தத் தன்மை ஐந்து கதைகளிலுமே ஒரு சரடாக, உள்ளீடான விஷயமாக தொடருகிறது.

இந்த சிறுகதைக்கான இதழில் வெளிவந்துள்ள சிறுகதைகளை இவை போன்ற கதைகளின் வாசிப்பில் பரிச்சயம் உள்ளர்வளால் மிகவும் நல்ல முறையில் வரவேற்கப்படும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளன.

அதே நேரத்தில் புதிதான ஆர்வத்தில் இந்தக் குறிப்பிட்ட  இதழில் பிரவேசிப்பவர்கள் எதிர்கொள்வது அதிர்ச்சி சார்ந்த மதிப்பீடுகளாகத்தான் இருக்கும். 

இந்த இதழில் வெளிவந்த சிறுகதைகள் குறித்து தனித்தனியாக பாஷ்யங்களை இங்கே தருவது நியாயமாக இருக்காது.  இதழை அறிமுகப்படுத்துவது மட்டுமே நோக்கமாக வரையறுத்துக் கொள்ளலாம் என்று மட்டுமே  நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஐந்து கதைகள் பற்றியும் தனித்தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன்.  பார்க்கலாம்.  எத்தனை தூரம் சாத்தியப்படுகிறது என்று.

பாவண்ணன் இந்த இதழ் குறித்து அளித்துள்ள குறிப்புரைகளும் விஷயத்தை  நேரடியாக சொல்லாது ஒருவகையான சூட்சுமம் நிறைந்ததாக சுற்றிச் சுழன்று ஜிலேபி சுற்றிக் கொண்டிருக்கிற மாதிரி தோன்றுகிறது.  இது என்னுடைய குஆனால்றைந்த ஞானத்தின் விளைவாகவும் இருக்கலாம்.   இருக்கின்றன.  எதையோ சொல்ல அவர் லேசாகத் தயங்குவது கொஞ்சம் தெளிவாகவே தெரிகிறது.

இந்த முதல் இதழைப் படிக்கும் போது இனி வரும் இதழ்களில் செம்மை குழுவினர் தங்கள் கதைத்தேர்வில்  மையப்படுத்தப் போகும்  விஷயங்கள் குறித்த ஆர்வமும் கூடவே ஒரு எதிர்பார்ப்பு கலந்த வலுவான நம்பிக்கை   சரடாகத் தொடர்ந்து வருகிறது.

செம்மை இதழ் தொடர்ந்து வெற்றி அடையப்போகும் புள்ளியும் அதுதானோ என்று தோன்றுகிறது. 

இவை போன்ற முயற்சிகள் கண்டிப்பாக வெற்றி அடையவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசைப்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.


செம்மை
இதழ்-1 அக்டோபர்-டிசம்பர் 2011
ஆசிரியர் - நஞ்சுண்டன்
101, Roopa Elegance
Upadhyaya Layout
Jnanabharathi
Bangalore-560056
semmai.idhazh@gmail.com
விலை- ரூ50





2 comments:

  1. Nice to know such magazines exist. Thanks dear Penneswaran.

    Chandra

    ReplyDelete
  2. சிறுகதைக்காக ஒரு இதழ் வரவேற்க படவேண்டிய செயல்பாடு.. தங்கள் அறிமுகத்திற்கு நன்றி

    வாசகன்
    தேவராஜ் விட்டலன்

    ReplyDelete