Wednesday, February 11, 2015

தானே வைத்துக் கொண்ட ஆப்பு - டெல்லி தேர்தல் முடிவுகள்

டெல்லியில்  இத்தனை ஆண்டுகளாக வசித்து டெல்லி மக்களின் மனநிலையை எப்படி உன்னால் கணக்கிட முடியாமல் போனது என்று முகநூலில் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.

அவர் கேட்டது சரியான கேள்வி.  டெல்லி சட்டசபை தேர்தல் குறித்த என்னுடைய அனுமானம் முற்றாக தவறிப் போனதை ஏற்றுக் கொள்கிறேன்.   தொங்கு சட்டசபையை டெல்லியில் என்னைப்போலவே  பலரும் எதிர்பார்த்தனர்.  பாஜகவுக்கு 20 இடங்களுக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்தது.  காங்கிரசுக்கும குறைந்தது 10 இடங்கவளாவது வரும் என்றும் எதிர்பார்த்தது.  ஆனால் நடந்தது முற்றிலும் வேறாகிவிட்டது.

அதற்காக வருத்தம் எதுவும் இல்லை. ஆனால் டெல்லியில் நடக்கப்போகும் அரசியல் விளையாட்டுக்கள்  குறித்து கொஞ்சம் பயம் இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று தோன்றுகிறது.  அப்படி  பேசுவதும் நியாயமாகவும் இருக்காது.     


டெல்லி தேர்தல் குறித்த கணிப்பை கூறுவதுபோல 7 பிப்ரவரி 2014 அன்று என்னுடைய பதிவின் இறுதியில்  கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன். 
 
என்னுடைய மனக்குறளி மீண்டும் மீண்டும் எனக்கு வலியுறுத்திக் கொண்டே வருவது இதுதான் – டெல்லியில் மீண்டும் தொங்கு சட்டசபை வருவதற்கான அறிகுறிகள் தான் அதிகம் உள்ளன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
 
நான் டெல்லியின் நீரை  34 வருடங்களாகப் பருகி வருகிறேன்.  டெல்லியின் காற்றை சுவாசித்து இருக்கிறேன்.  டெல்லி எனக்கு 34 ஆண்டுகளாக சோறிட்டு இருக்கிறது.  டெல்லியில் ஜீவசமாதியாக அடக்கமாகியுள்ள மகாபுருஷர்கள்  பலரும் என் மீது தங்கள் அருள் மழையை பொழிந்து உள்ளனர்.
  

எனவே இதனை டெல்லியின்  மீதான என்னுடைய  சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அப்படி தொங்கு சட்டமன்றமாக வரவில்லை என்றால் உங்களைப் போலவே நானும்  மிகுந்த   மகிழ்ச்சி அடைவேன்.

தற்போது டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருத்த வெற்றி அபார வெற்றி அல்லது வரலாறு காணாத வெற்றி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தை – 

உண்மையில் டெல்லியின்  வாக்காளர்கள் அதகளம் செய்துள்ளனர்.


இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினரே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கண்டிப்பாக பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள்.

டெல்லியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஆளாளுக்கு நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று மாறி மாறி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  இது இயற்கைதான்.  யாரும் செய்யும் காரியம் தான்.
தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி ஆதரவு கேட்டால் நாங்கள் தர மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர்களும் நாங்கள் தோற்றாலும் காங்கிரசிடம் ஆதரவு கேட்க மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூறும் அளவில் சென்று கொண்டு இருந்ததையும் யாரும் மறக்க முடியாது.



இப்போது எல்லாமே தலைகீழாகி விட்டது.

இன்று காலை பாஜக கட்சியின்   முக்கியமான தலைவர்கள் சிலருடன்  பேசிக் கொண்டிருந்தபோது தங்கள் தோல்விக்கான காரணங்களாக அவர்கள் கூறியவை –

  • பாஜக தலைவர்கள் பலரும்  பதவிக்கு வந்ததும் தாங்கள் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவர்கள் போல நடந்து கொண்டார்கள்.   தலைவர்களில் பலரும் யாரையும் மதிக்காமல் சிறுமைப்படுத்தி வந்தார்கள்.     இதில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் பெயர்கள் – அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், செய்தித் தொடர்பாளராக இருந்து இப்போது பொதுச்செயலாளர்களில் ஒருவராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீகாந்த் சர்மா ஆகியோர் நடந்து கொள்வது கட்சியிலேயே பலருக்கும் பெருத்த அதிருப்தியும் வெறுப்பும் ஏற்படுத்தியுள்ளது.
  • போதும் போதும் என்று மக்களுக்கு திகட்டும் அளவில் மோடியை கட்சி முன்னிறுத்தியது.

  • டெல்லி பாஜகவில் கடுமையான உழைப்பை நல்கிய பல தலைவர்கள் இருக்கும்போது திடீரென்று கட்சியில் இணைந்த கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக்கியதால் மாவட்ட அளவில் கட்சி வேலைகளை பார்த்து வந்த தலைவர்கள் யாரும் துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.    பாஜக தோற்க வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர்களே பிரார்த்தனையில் ஈடுபட்டதாகக் கேள்வி. (அவர்கள் பிரார்த்தனை பலித்ததில் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்களா என்று அவர்களைக் கேட்க வேண்டும்).

  • பொதுவாக டெல்லியில் பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ்.பெரும்பலமாக பின்னணியில் உள்ள அமைப்பு.  அவர்களின் கடுமையான உழைப்பு எப்போதுமே கட்சிக்கு பேருதவியாக இருந்து வருகிறது.  இந்தத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் தேர்தலில் வேலை செய்யவில்லை.

  • மோடி டெல்லியில் மேற்கொண்ட மிகவும் மலிவான பிரச்சார உத்திகள் – பல இடங்களில் மோடி கெஜ்ரிவாலை மிகவும் கீழ்த்தரமாக தாக்கியிருக்கிறார்.  இது ஒருவகையான எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

  • காங்கிரசின் வாக்கு வங்கி  அப்படியே மொத்தமாக பாஜக எதிர்ப்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றிருக்கிறது.  அந்த ஓட்டுக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமே பெரிதும் உதவியிருக்கிறது.

இப்படி பல காரணங்களை பாஜக நண்பர்கள் கூறி வருகிறார்கள்.

மொத்தத்தில் பாஜகவுக்கு எதிரான டெல்லி மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சியை இந்த அளவுக்கு வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறது.

இந்த தேர்தல் முடிவு மிகவும் விசித்திரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு தொலைக்காட்சி  விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் சேகர் கூறியதுபோல இந்த முடிவு மூன்று அணியினரையும் அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது உண்மையிலேயே விசித்திரமான விஷயம்தான்.  மூன்று தரப்புக்கும் மகிழ்ச்சி எப்படியென்றால்-

  • இத்தனை பெரிய, தாங்களே அதிகம் எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை அடைந்த ஆம் ஆத்மி கட்சியினர் அடையும் அளவற்ற மகிழ்ச்சி.

  • மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு, மோடி அலை நாடு முழுதும் வீசிவருகிறது என்று மார்தட்டி வந்த பாஜகவுக்கு தலைநகரில் வெறும் 3 இடங்களே கிட்டி முட்டி கிடைத்ததில் காங்கிரஸ் கட்சியினர் அடைந்த ரகசிய குதூகலம்,   

  • மூன்று முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு இடம் கூட பெறாமல் – 63 இடங்களில் டெபாசிட் இழந்ததில் பாஜகவினரின் ஆனந்த புளகாங்கிதம்

இப்படி அனைத்து தரப்பினரையும் ஆனந்த சாகரத்தில்  திளைக்க வைத்த தேர்தல் முடிவு இதுவாகத்தான் இருக்கும்.

கெஜ்ரிவால் அரசு எப்படி இருக்கும் என்று இப்போதைக்கு ஹேஷ்யம் எதையும் சொல்வது நன்றாக இருக்காது. இப்போதைக்கு எதையாவது அச்சு பிச்சென்று சொல்லி வைத்தாலும் புரட்சியாளர்கள் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்.  நிறைய பேர் நேற்றில் இருந்து கொலை வெறியில் அலைகிறார்கள்.  அவர்களிடம் சிக்கினால் கதை கந்தலாகி விடும்.

மோடி மயக்கம் தெளிந்தது போல  மயக்கங்களும்   கொஞ்சம் தெளியட்டும்.

அதனால் இப்போதைக்கு வேடிக்கை மட்டுமே  பார்க்கலாம்.  சும்மா வேறு எங்கோ முழித்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான் சமர்த்தான காரியம்.

முடிக்கும் முன்பு ஒரு விஷயம் –

இதனை எழுதிக் கொண்டிருக்கும்போதே டிவியில் ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.  


நரேந்திர மோடிக்கு எங்கோ கோயில் கட்டி அவருடைய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன்.  நிறைய தொண்டரடிப் பொடிகள் அபிவாதயே செய்து கொண்டிருக்கின்றன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுக்கு இன்னும் பெரிய ஆப்பு தயாராகி வருகிறது என்பதைத்தான் இது காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.



2 comments:

  1. நல்ல அலசல். ஆனாலும் பாஜக ரொம்பவே பித்துப் பிடிச்சுத் தான் அலைஞ்சது. :(

    ReplyDelete
  2. மக்கள், 'வார்டன்னா அடிப்போம்'கற மன நிலைக்கு வந்துட்டாங்கன்னு தோணுது! :)

    ReplyDelete