Tuesday, August 25, 2015

என்ன வெங்காய எழவோ...

டெல்லியில் சமீபத்தில் கண்களில் நீரை வரவழைக்கும் வெங்காய விலை ஏற்றத்தில் ஒரு புதிய டகால்டி -

டெல்லியின் அனைத்து மதர் டைரி  காய்கறி விற்பனை மையங்களில் வெங்காயம் கட்டுப்பாட்டு விலையில் 30 ரூபாய்க்கு கிடைக்கிறது.

காலை 7.00 மணியில் இருந்து 1 மணி நேரத்துக்கு விற்பனை செய்கிறார்கள்.

அந்த நேரத்தில் வியாபாரிகள் கூட்டமாக வந்து நிறைய வெங்காயத்தை அள்ளிச் சென்று கடைகளில் அதே வெங்காயத்தை 70 ரூபாய்க்கு கூசாமல் விற்கிறார்கள்.

இது அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் எந்த கேள்வியும் கேட்பது இல்லை.  எந்த நடவடிக்கையும் எடுக்க துணிவது இல்லை.

உணவு பொருட்களை பதுக்குகிறவர்கள் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்கிறவர்களுக்கு எதிராக பல சட்டங்களும் அந்த சட்டங்களை நிறைவேற்ற அரசுத் துறையும் இருக்கிறது.

ஆனால் யாரும் எதையும் கண்டுகொள்வது இல்லை.

ஆனால் எவனாவது ஏழை தெருவோர வியாபாரி எங்காவது மாட்டினால் இந்த துறை அதிகாரிகள் ஏறத்தாழ ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு வேட்டையாடி அவர்களை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்.

வெங்காயம் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சி டெல்லியில் பறிபோனது ஏனோ நினைவுக்கு வருகிறது.

இந்த வெங்காய விலையேற்றத்தை பழிவாங்க மொத்தமாக வெங்காயத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துவோம் என்று மூக்கு புடைக்க வாட்ஸ் அப் குழுக்களில் செய்திகளை அனுப்பி அதனை ஷேர் செய்யச் சொல்லி நடுராத்திரியில் பயமுறுத்தி வருகிறார்கள்.

இதற்கு வெங்காய விலையேற்றமே தேவலை என்று சமயத்தில் தோன்றுகிறது.

1 comment:

  1. வேதனையுடன் சிரிக்க வைக்கும் பதிவு! இங்கே கொஞ்சம் (ஶ்ரீரங்கம்) பரவாயில்லை. 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்குள் கிடைக்கிறது!

    ReplyDelete