Tuesday, March 3, 2009

பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்


பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை யதார்த்தாவின் முதல் மேடை நாடகமாக மேடையேற்றிய அனுபவம் குறித்து எழுதத் துவங்கி எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். உருப்படியாகச் செய்த ஒரு காரியம் என்னவென்றால் அந்த நாடகத்தில் பங்கேற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்புக்கள் தந்து இருந்தேன். எழுதும் போதே ஏதோ பழைய நாட்களில் பயணித்து வந்ததைப் போன்ற ஒரு நெகிழ்வு இருந்தது.

சரி. விஷயத்துக்கு வருவோம். மந்திர் மார்க்கில் உள்ள சவுத் இந்தியா கிளப்பின் சத்தியமூர்த்தி ஹால் அரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாடகத்தில் பங்கு கொண்ட எல்லோரையும் பற்றிச் சொன்ன போது எங்களுக்கு ஒத்திகைகள் நடத்தக் கிடைத்த இடத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தவறில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற பதிவு இங்கே மிகவும் அவசியமானது என்றும் நினைக்கிறேன்.

இப்போது முழுக்கவும் பாழடைந்து போன இந்த சத்தியமூர்த்தி கலையரங்கம் என்னும் அற்புதமான கட்டிடத்தில் யாரும் தற்போது பிரவேசிக்கவும் வசிக்கவும் ஆபத்தான கட்டிடமாக அறிவித்து ஒரு அறிவிப்பு வைத்துள்ளது தில்லி மாநகராட்சி.. அந்த இடத்தைக் கடக்கும் போது உண்மையிலேயே மனது கனத்துப் போகிறது. தலைநகரில் தமிழர்களாகிய நாங்கள் பாழாக்கிய பல நல்ல விஷயங்களில் இந்தக் கட்டிடமும் ஒன்று. முன்பு பல கலை நிகழ்ச்சிகள் இந்தக் கட்டிடத்தில் நடந்துள்ளன. பல நல்ல இசை நிகழ்ச்சிகள். பல நாடகங்கள், பல கருத்தரங்கங்கள் இங்கே நடைபெற்றுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்து கி.ராஜநாராயணன் சாகித்ய அகாதமி விருது பெற்றபோது பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அது இந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் நடைபெற்றது. அப்போதே அந்தக் கட்டிடத்தில் ஒரு மாதிரியான நாற்றம் கிளம்ப ஆரம்பித்திருந்தது. மேடையின் விங்ஸ் என்று சொல்லப்படும் துணிப்படுதாக்கள் எல்லாம் கிழிந்து மேடையின் பெரும்பகுதி சிதிலமாகிப்போகத் துவங்கியிருந்தது. கலையரங்கின் மேலே மாடியில் இருப்பது சவுத் இந்தியன் கிளப். அங்கு ஒரு காலத்தில் மைய அரசில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளின் மனைவிமார்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி போன்ற சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். இரவு பகலாக ஒரு கும்பல் கேரம் போர்டு விளையாடும். மாநில அளவில், தேசிய அளவில் கேரம் போட்டிகள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. திருமண வரவேற்பு விழாக்கள் நடைபெறும். தமிழகத்திலிருந்து குழுவாக யாராவது வந்தால் தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள அங்கு இடம் கிடைக்கும்.

இந்தக் கட்டிடத்தில் கலையரங்கம், சீட்டாட்டக் கிளப் மட்டும் அல்லாமல் ஒரு உணவகமும் நடைபெற்று வந்தது. ச்சத்தர் சிங் மெஸ் என்ற அழைப்பார்கள். பெருந்தலைவர் காமராஜரிடம் பணியாளராக ச்சத்தர் சிங் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். பெருந் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிந்து தில்லி வீட்டைக் காலி செய்து போகும் போது தன்னிடம் பணிபுரிந்த ச்சத்தர் சிங்குக்கு ஏதாவது வழிகாட்ட வேண்டும் என்று சத்தியமூர்த்தி கலையரங்கில் அமைந்திருந்த இந்த உணவகத்தின் குத்தகையை நிரந்தரமாக அவருக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார் பெருந்தலைவர். ச்சத்தர் சிங் தான் நேரில் கண்ட ஒரே தெய்வம் காமராஜ்தான் என்று சொல்வார். எண்பத்து ஒன்றாம் ஆண்டு தில்லிக்கு வந்து இறங்கிய முதல் நாளில் நான் உணவு அருந்திய முதல் உணவகம் இதுதான். அன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் மூன்று நேரமும் எனக்குச்சோறு போட்ட இடம் இதுதான். அப்போது மாதம் ரூ.75 செலுத்தி விட்டு மூன்று நேரமும் இங்கே சாப்பிடலாம். தென்னக உணவு பரிமாறுவார்கள். மிகச்சிறிய கண்களுடன் மங்கோலிய முகங்களுடன் கர்வாலி சிறுவர்கள் உணவு பறிமாறுவார்கள்.

இப்படி இந்தக் கட்டிடத்தில் எல்லாவற்றுக்கும் இடம் இருந்தது. எல்லாம் கிடைத்தன. தமிழகத்தில் இருந்து தலைநகருக்கு பணியில் சேர வந்தவர்களுக்கு சொந்த ஊரின் சில எச்சங்களைக் காட்டியபடி அந்தக் கட்டிடம் திகழ்ந்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புதமான இடம் முழுநேர சீட்டாடும் கிளப்பாக மாறத் துவங்கியது. தங்களைத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் அவமானப்படும் தமிழர்கள், தமிழில் பேசிக்கொண்டு வருபவர்களை ஏதோ தொத்து வியாதி பிடித்தவர்களைக் கண்டது போன்று மிரண்ட தமிழர்கள், மனைவிக்கு பயந்து வெளியிடத்தில் போதையேற்றிக் கொள்ளும் தமிழர்கள் சத்தியமூர்த்தி கலையரங்குக்கு வந்து சீட்டாடத் துவங்கினர்கள். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து நேரே வந்து சீடடாட்டம் துவங்கி வீட்டுக்கே போகாமல் திங்கட்கிழமை காலை நேராக அலுவலத்துக்குச் சென்ற தமிழர்களை நான் அங்கே பார்த்து இருக்கிறேன். அப்படி வீட்டை மறந்து சீட்டாட்டத்தில் மூழ்கிய கணவர்களுக்கு அன்புப்பரிசாக துடைப்பக் கட்டையைக் கையிலேந்தி வெளியே ரிக்ஷாக்களில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த வீரப் பெண்டிர்களையும் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் கிளப்புக்கு உள்ளே கணவர்களுக்கு செருப்படி கிடைத்த வீர வரலாறுகளும் உண்டு. அங்கு கோபால் என்று இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்து ஒரு சேவகன் எல்லோருக்கும் மதுக்குப்பிகளை வாங்கிவருவது மற்றும் வேறு பல குற்றேவல்களை செய்வது போன்ற தொண்டில் ஈடுபட்டு வந்தான். அவனுக்குத் தமிழில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் அத்துபடி. உறவுமுறைகளை வைத்துத் திட்டும் அனைத்துக் கெட்ட வார்த்தைகள் மற்றும் மாவட்ட வாரியான கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்றிருந்தான்.

நாளாக நாளாக இந்த அமைப்பின் பதவியில் மற்றும் அதிகாரத்தில் இருந்த தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லச் சற்று அவமானப்பட்டதால் மெல்ல மெல்ல தமிழர்கள் அல்லாத மற்றமொழி சார்ந்த குடிகாரர்களும் சூதாடிகளும் இங்கே அதிமாக வரத் துவங்கினர்கள். கோலோச்சத் துவங்கினர்கள். நீண்ட ஆண்டுகளாக மற்றயாரும் அங்கே உறுப்பினர் ஆக்கப்படவில்லை.

அந்தக் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்களிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஏதோ நான் அந்தக் கட்டடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கிறேன் என்பதைப் போல என்னை விரோதிக்கத் துவங்கினர்கள். ஓரிருவர் என்னுடன் சண்டைக்கும் வந்தார்கள். பிறகு பலமுறை திரும்பத் திரும்ப நான்கைந்து பேர் சேர்ந்து பேசி ஏதாவது முடிவெடுக்கலாம் என்று அழைத்தார்கள். ஆனல் பலமுறை சென்று காத்திருந்தும் யாரும் வரமாட்டார்கள். அது அப்படியே விட்டுப் போயிற்று. பிறகு பலகாலம் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கு கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களை உறுப்பினர் என்று உரிமை கொண்டாடக் கூட அங்கே எந்த ஆவணங்களையும் யாரும் விட்டுவைக்கவில்லை. எல்லாம் அழிந்தது. அல்லது வேண்டு மென்றே அழிக்கப்பட்டு இருக்கலாம். தலைமைப் பொறுப்பில் இருந்த யாரும் அந்தக் கட்டிடத்தின் மீதோ அந்த அமைப்பின் மீதோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இப்படியே நாம் இந்த அற்புதமான விஷயத்தை இழந்தோம்.

தலைநகரில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு கட்டிடமும் கலையரங்கமும் நகரின் மிக மையமான சாலையான மந்திர்மார்க்கில், மிகவும் பரிதாபமாக ஒரு பேய் மாளிகையைப் போன்று பல சோகக் கதைகளைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு என்றாவது ஏதாவது விடிவுகாலம் பிறக்குமா என்று தெரியவில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். இந்த அந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாங்கள் ஒத்திகையைத் துவங்கிய போதே அந்தக் கட்டிடம் க்ஷீணமடையத் துவங்கியிருந்தது. பறவைகளின் எச்சங்களும் வவ்வால் நாற்றமும் குடலைப் புரட்டும். நாங்களே அந்த இடத்தை சுமார் மூன்று நாட்களுக்கு மேல் செலவிட்டு நாற்றங்கள் போகும் வகையில் சுத்தம் செய்தோம். பிறகு ஒத்திகைகளைத் துவங்கினோம். பிணம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யும் காட்சி. இரவு நேரத்தில் செல்வந்தர் வீட்டில் நடைபெறும் ஒரு தடபுடலான விருந்துக் காட்சி. இன்னொருபுறம் சேரியில் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு முறைகள். அதை முடித்ததும் குடிகாரர்கள் ஒரு சர்ச்சையைத் துவங்கி பெரும் கலவரமாக முடியும் காட்சி, இரவு நேரங்களில் சுவரொட்டிகள் தங்கள் உரிமையைக் கோரிப் போரிடும் வண்ணம் நடன அமைப்புக்கள், நகர வாழ்க்கையின் சில காட்சிகள், கிராம வாழ்க்கையின் சில சாட்சிகள் எனத் துண்டு துண்டுகளாக முக்திபோத் கவிதையின் பல படிமங்களையும் காட்சிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தேன்.

இளஞ்சேரன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த டிஸ்கோ நடனத்தை ஆடினன். நன்றாகத் தான் இருந்தது. ஒரு இந்தி நாளேட்டில் "முக்திபோத்தின் கவிதையில் டிஸ்கோ'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் என்னை நார் நாராகக் கிழித்து என்னுடைய நாடக இயக்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து என் மானத்தை வாங்கி இருந்தார்கள்.

கவிதையின் வரிகளை மிகவும் அற்புதமாகப் பின்னணியில் வாசித்தான் நச்சு என்கிற நரசிம்மன். ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர் அருமையாக இசையமைப்பு செய்திருந்தார்கள். சங்கர் வடிவமைத்துக் கொடுத்த நாட்டுப்புற இசைவடிவங்களை நாட்டுப்புற இசைக்கலைஞர்களான சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி ஆகியோர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். உற்சாகத்தில் கொஞ்சம் அதிகமாக போதை ஏற்றிக் கொண்ட நாயனம் வாசிக்கும் சிவாஜி மட்டும் தில்லான மோகனம்பாள் சிவாஜி மாதிரி நாடகத்தில் நடன அமைப்பின் வீரியம் போதாது என்றும் தன்னுடைய நாயனத்தின் முன்பு இவர்களின் கால்கள் பேசவில்லை என்ற ரீதியில் வாசிப்பதை நிறுத்தி நிறுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவர் சமாதானம் அடைந்து ஒரு மாதிரியாக வாசிக்கத் துவங்கும் நேரத்தில் மகேந்திரன் ஏதாவது புதுச் சண்டை துவங்குவான். அல்லது ராமச்சந்திரன் அந்த வாசிப்பில் வீரியம் இல்லை என்று சண்டைக்கு வருவான்.
தில்லான மோகனம்பாளில் வரும் எஸ்.வி.நாகையா போல ரவீந்திரன் நடுவில் வந்து ஏதாவது சமாதானம் சொல்லிப் போவார். இது தினமும் தொடர்ந்தது. ஒத்திகைகளின் நடுவில் ஏற்கனவே சொன்னது போல சாகித்ய கலா பரிஷத் அமைப்பு நாடக விழாவில் கலந்து கொள்ளும் இயக்குநர்கள் தாங்கள் வடிவமைத்த ஏதேனும் ஒரு காட்சியை சில நடுவர்கள் முன்பு நடித்துக் காட்ட வேண்டும். பிறகே அந்த நாடகம் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றநிபந்தனையை விதித்திருந்தார்கள்.

அந்த நிபந்தனையின் படி நடுவர்கள் முன்னிலையில் காட்சியை நடித்துக் காட்டும் நாளும் வந்தது. நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் அந்தத் தேர்வினை வைத்து இருந்தார்கள். திவான் சிங் பஜேலி, மோகன் மகரிஷி, டி.என்.ஷர்மா போன்ற தலைநகரின் இந்தி நாடக ஜாம்பவான்களும் விமர்சகர்களும் நடுவர்களாக அழைக்ககப்பட்டிருந்தனர்.

தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இயக்குநர்களில் பலபேர் தேசிய நாடகப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர்கள். தில்லியில் இந்தி மற்றும் உருது நாடகக் குழுக்களில் பெரும் பங்காற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பல பெரிய மேடைத் தயாரிப்புக்களில் கலந்து கொண்டு பெயரும் புகழும் பெற்றவர்கள். இவை எல்லாவற்றும் எதிரிடையாக இருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. நாடகம் குறித்த படிப்பு கிடையாது. மேடை நாடகம் குறித்த அனுபவம் எதுவும் கிடையாது. நாடகங்களில் நடித்த அனுபவம் கிடையாது. வாய் திறந்து இந்தி பேசினல் இந்தி மொழியை நேசிக்கும் யாருக்குமே கடுங்கோபத்தை வரவழைக்க வாய்ப்பிருக்கும் ஒரு மோசமான இந்தி உச்சரிப்பு. இத்தனை பலவீனங்களையும் வைத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் தேர்வுக்காக மிகவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். என் குழுவைச் சேர்ந்த மற்ற எல்லோரும் அங்கங்கே நின்று கொண்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment