Friday, March 6, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள் -

அப்பா
அமரர் பி.எஸ்கிருஷ்ணராவ்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பினர் எங்கள் நாடகத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வந்த போது என் தந்தையார் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாகக் கிடைத்த தந்தியை மனைவி என்னிடம் நீட்டினாள்.

என்னுடைய தந்தையார் தொண்டையில் புற்றுநோய் காரணமாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி இனி தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவமனையில் கைவிரித்ததால் கிருஷ்ணகிரியில் எங்கள் வீட்டில் இருந்தார். நான் ஏற்கனவே அவரைப் போய் பார்த்து விட்டு வந்தேன். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சென்னையில் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி மருத்துவ மனைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். மேற்கிந்திய நாட்டில் கண் மருத்துவராகப் பணிபுரியும் என்னுடைய சகோதரரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்திருந்தார். புற்றுநோய் மருத்துவமனையில் மனதை நெகிழ வைத்த பல சம்பவங்களை பல மனிதர்களை பல காட்சிகளை வேறு எங்காவது இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

மருத்துவர்கள் என் தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதும் என்னை சென்னையில் தங்கவிடவில்லை அவர். உடனடியாக தில்லிக்குப் போகச் சொல்லி எழுதிக்காட்டினர். சுந்தரியும் குழந்தையும் தனியாக இருக்கிறார்கள். உடனடியாக ஊருக்குப் போ என்று முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு எழுதினர். நான் தில்லிக்குக் கிளம்புவதற்கு முன்பும் அவர் மருத்துவமனையில் தான் இருந்தார். சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று மருத்துவமனை போனேன். மீண்டும் ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.

"நாடகம் போடுவது போன்ற விரயமான காரியங்களை நிறுத்து. மனைவியையும் குழந்தையையும் கவனமாகப் பார்த்துக் கொள். இது நன்றி கெட்ட சமூகம். இறுதியில் தெருவில் தான் நிற்கவேண்டும். நீ அவதிப்படும் போது யாரும் உடன் வரமாட்டார்கள். தூரமாக விலகி நின்று சிரிப்பார்கள். சிகரெட் குடிக்காதே. என்னைப் பார். எந்தத் தீய வழக்கமும் இல்லாமல் இருந்த எனக்கு இந்தக் கதி. உன்னை ராகவேந்திரர் காப்பாற்றட்டும்''.

நான் உடைந்து போனேன். அவர் முன்பு அழக்கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி வாசலில் நின்று ஒரு அரைமணி நேரம் கரைந்து கரைந்து அழுதேன். புகைவண்டியில் தில்லி திரும்பும்போது நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து அழுதேன். தில்லி வந்ததும் நாடக வேலைகள் துவங்கின. பகல்கள் நாடக வேலைகளில் கரைந்தன. இரவுகளைக் குடித்துக் கரைத்தேன்.

இந்த விஷயத்தில் யாரை, எங்கே, எப்படி ஏமாற்ற முடியும்? ஒரு வழியாக இப்போது இதோ வந்து விட்டேன் என்று என் தந்தைக்குக் காலன் விடுக்கும் அழைப்பு குறித்த செய்தி இறுமாப்புடன் என் எதிரே வந்து நின்றது.

நாடக மேடையேற்றத்துக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. சாகித்ய கலா பரிஷத் இயக்குநரின் பெயரில்தான் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குழுவின் பெயரில் அல்ல. எனவே என்னுடைய தேவை இங்கே மிக அதிகம். ஊருக்குப் போனல் எல்லாம் கெட்டுப்போகும். நாடகம் அரைகுறையாகத் தான் தயாராகி உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். தந்தி வந்த விஷயம் என்னையும் என் மனைவியுயம் தவிர என்னுடன் இருந்த ஏஞ்செல்சுக்கு மட்டும்தான் தெரியும். குணசேகரனும் எங்களுடனே வீட்டில் தங்கி இருந்தான். அவனுக்குச் சொல்லவில்லை. அன்று வெங்கட், நச்சு, மகேந்திரன் ரவீந்திரன், சுரேஷ் போன்றவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். விஷயத்தை யாருக்கும் சொல்லவில்லை. அன்று இரவு மிகவும் அதிகமாகக் குடித்தேன். எல்லோரிடமும் மிகவும் அதிகமாக சண்டை போட்டேன். அதிகமாக அழுதேன்.

மறுநாளில் இருந்து மீண்டும் நாடக ஒத்திகைகளில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு இறை நம்பிக்கை என்பது சுத்தமாக இருந்ததில்லை. எனவே வேண்டுதல்கள் என்பது அறவே இல்லை. அப்போது நான் நம்பிய ஒரே கடவுள் என்னுடைய மதுக்குப்பிகள்தான். அவைதான் என்னை உடைந்து போகாமல் பார்த்துக் கொண்டன. அந்த நாட்களின் இரவுகளில் என்னுடைய உளறல்களையும் புலம்பல்களையும் சகித்துக் கொண்டு என்னுடன் வாழத் துணிந்ததற்கு என் மனைவிக்கும் என் மகள் பாரதிக்கும் நான் ஏழேழு ஜென்மங்களுக்கும் பணிவிடைகள் செய்து நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாடக வேலைகள் நாளுக்கு நாள் மெருகேறி வந்தன. முக்தி போத் கவிதை வரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் புதுப்புது விளக்கங்களுடன் மேடை வடிவம் பெற்று வந்தன.

புதுதில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் அரங்கில் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ கலா மஹோத்சவ் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்பு தினசரிகளில் வெளிவந்தன. சுமார் ஒரு மாத கொண்டாட்டம் அது. டிசம்பர் 12, 1987 அன்று எங்களின் சாந்த் கா மூ டேடா ஹை. என் புகைப்படம் மற்றும் என்னைப் பற்றிய குறிப்பும் அவர்கள் வெளியிட்ட வண்ணக் கையேட்டில் வந்தது. தினசரிகளில் வெளியிட்ட விளம்பரங்களில் நாடகம் மற்றும் இயக்குநர்களின் பெயர்களுக்கு முன்னல் அவர்களின் சிறிய புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். நான் மிகவும் பெருமையாக அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன்.

நாடக மேடையேற்றத்துக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வந்தன. இன்னொரு பக்கம் காலனும் என் தந்தையை மிகவும் இறுக்கமாக நெருங்கிக் கொண்டிருந்தான். அன்று இப்போது இருப்பதைப் போன்ற தொலைபேசி வசதிகள் கிடையாது. கிருஷ்ணகிரிக்கு நேரடியான தொலைதூரத் தொலைபேசி வசதி கிடையாது. இரவில் எண்ணைப் பதிவு செய்து காத்திருந்து பேசவேண்டும். அலுவலகத்தில் வேலையில் இருந்தவன் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல, திருவனந்தபுரத்தில் இருந்த என் அக்கா மகனுக்கு நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாவின் உடல்நலம் பற்றி அவனிடம் விசாரிக்க முயன்றேன். அவனுடன் பணியில் இருப்பவர் தொலைபேசியை எடுத்தார். "பத்மநாபனுடைய தாத்தா இறந்து விட்டாராம். அவர் கிருஷ்ணகிரி போயிருக்கிறார்'' என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தார். அது 8 டிசம்பர் 1987.

இடையில் கிருஷ்ணகிரியில் இருந்தும் என் சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அப்போது அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி எங்கள் கிருஷ்ணகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். என்னுடைய சகோதரரின் நண்பர் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார். 12 டிசம்பர் நாடகம் இருக்கிறது. எப்படி ஊருக்குப் போவது? சரி. போகவேண்டாம். இங்கேயே இருந்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். விஷயம் கேள்விப்பட்டு யதார்த்தாவில் ஒவ்வொருவராக என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். நான் போகவில்லை என்றதும் வெங்கட் என்னை அடிக்கவே வந்து விட்டான். அனைவரும் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். அப்போது வெங்கட் ஒன்று சொன்னன். யுவ மகோத்சவ் ஒரு மாதம் நடக்கும் விழா. எங்கள் நாடகத்தை ஐந்தாவது நாளில் திட்டமிட்டு இருந்தார்கள். இன்னும் 25 நாட்கள் மீதமிருக்கின்றன. நான் ஊருக்குப் போய் காரியம் எல்லாம் முடித்து 15 நாட்களில் திரும்பிவிடலாம் என்றும் சாகித்ய கலாபரிஷத்தின் செயலரை அணுகி இதுகுறித்து அனுமதி கேட்டு வருகிறோம் என்று வெங்கட்டும் நச்சுவும் போய் அனுமதியும் வாங்கி வந்தார்கள். டிசம்பர் 28ம் தேதிக்கு எங்கள் நாடகத்தை ஒத்தி வைக்க சம்மதித்தார் அந்த அதிகாரி.

அப்பா இறந்த அன்று தில்லியில் எங்கள் யதார்த்தா குடும்பம் எனக்குக் கொடுத்த மனோதைரியத்தையும் அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்- பத்திரிகையாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் எனக்கு நல்கிய உதவிகளையும் உயிர் உள்ளவரை என்னல் மறக்க முடியாது. வானூர்தியில் பயணித்து சென்னையில் இறங்கி அங்கிருந்து ஒரு சிற்றூர்தியைப் பிடித்து கிருஷ்ணகிரி சேர நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து போயிருந்தன. அவருடைய இறுதி தரிசனம் எனக்குக் கிட்டவில்லை.

இது அவர் தீர்மானித்ததாகத்தான் இருக்கவேண்டும். தான் வாழ்ந்த இறுதி மூச்சு வரை தன்னுடைய பேச்சை எந்த வகையிலும் கேட்காத தன் மகனை ஒரு தந்தை இதைவிட வேறு எந்த வகையில் தண்டிக்க முடியும்?

தொடர முடியவில்லை. அடுத்து முடித்து விடுகிறேன்.



No comments:

Post a Comment