Wednesday, March 4, 2009

முதல் நாடக மேடை அனுபவங்கள் -7


கஜானன் மாதவ் முக்தி போத் என்னும் இந்தி கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்கள் தொடர்பான பதிவுகளை இங்கே எழுதி வருகிறேன். ஒரு நேர்க்கோட்டில் செல்லாது கிராமத்துச் சாலையில் காளை மாடு பெய்து செல்லும் மூத்திரக்கோடுகள் போல வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கின்றிப் பதிந்து வருகின்றன. ஆனலும் அந்த நினைவுகளை மல்லுக்கட்டி இழுத்துப் பதிந்து வைக்கும் அந்தக் கணங்கள் மனதுக்கு நெகிழ்வு தரும் அனுபவங்களாக அமைகின்றன. அந்த அற்புதக் கணங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கின்றது போன்ற லாகிரியை மனப்பரப்பில் கிளர்த்திச் செல்கின்றன. ரயில் பயணத்தின் போது சீறி ஓடும் ரயிலின் வேகத்தில் ஒரு நொடியின் பின்னத்தில் பார்வைக்குத் தவறவிட்ட ஏதாவது ஒரு அற்புதக் காட்சியை ஒரு நொடி ஒருமுறை மீண்டும் காணும் தவிப்பு விளைவதைப் போன்ற ஒரு தவிப்பில் விளைந்த பதிவுகள் இவை.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ மகோத்சவத்துக்கான நாடகத் தேர்வுக்கு எங்களின் நாடகத்தில் ஒரு காட்சியின் வடிவமைப்பை நடுவர்கள் எதிரில் நிகழ்த்திக் காட்டுவதற்காக நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் பதட்டத்துடன் நின்ற கோலத்துடன் சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

ஏற்கனவே சொன்னது போல, எங்கள் குழுவில் என்னைத் தவிர எல்லோரும் ஏதோ ஒருவகையான மகிழ்ச்சியை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே எங்கோ ஆப்பு வைக்கப்பட்ட குரங்கைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக சிகரெட் புகைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

என்னுடைய பதட்டத்துக்கு இன்னும் சற்று தீ வைப்பதைப் போல பறைவாசிக்கும் கந்தசாமியும் உறுமி வாசிக்கும் முத்துசாமியும் வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்ள நெருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்த அழகான கட்டிடத்தின் வெளியிலோ அல்லது விரிந்து பரந்த புல்வெளியிலோ எதையாவது கொளுத்தினல் அவர்கள் நம்மைக் கொளுத்தி அங்கேயே புதைத்து விடுவார்கள். இன்னொன்று நேரம் எங்கே இருக்கிறது? நடுவர்கள் குரல் கொடுத்தால் ஓடிப்போய் குரங்காட்டம் ஆடிக்காண்பிக்க வேண்டும். பதட்டம் இன்னும் அநியாயத்துக்குக் கூடியது.

தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் எங்கள் கோஷ்டியினர் எல்லோரையும் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு இந்திப் பெண்மணியிடம் தங்கள் அன்பையும் நட்பையும் தமிழிசையையும் வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த சங்கரும் ஏஞ்செல்சும் சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள். ஏஞ்செல்ஸ் என்னிடம், "மாமா, அதுக்கு எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க? இங்கேயே எந்த அறையிலாவது ராட் ஹீட்டர் இருந்தால் அதில் காய்ச்சிக் கொள்ளலாமே'' என்று ஒரு வழியைக் கொடுத்தான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனல், கந்தசாமியும் முத்துசாமியும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாத்தியங்களை விறகு நெருப்பில் காய்ச்சினல்தான் சுருதி சரியாக சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். குறைந்தது குப்பைக் காகிதங்களிலாவது நெருப்பைக் கொளுத்திக் காய்ச்சினல்தான் தங்கள் வாத்தியங்களில் சரியாக சுருதி சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

சங்கர், ஏஞ்செல்ஸ், வெங்கட், குணசேகரன், நச்சு, வீரமணிகண்டன், வீரராகவன், மோகன், ராமசாமி என்று ஒரு பெரிய படையே அந்த வளாகத்தில் குப்பை காகிதங்களை சேகரிக்க அலைந்தார்கள். வேண்டிய அளவு குப்பைக் காகிதங்களை சேர்த்தாகிவிட்டது. அந்த வளாகத்தினுள் எங்கே தீ மூட்டி வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்வது? கட்டிடத்தின் காவலரைக் கேட்டபோது அவர் தன்னுடைய சுட்டுவிரலும் ஆகாயமும் கிட்டத்தட்ட சேரும் ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே காய்ச்சிக் கொண்டால் ஒரு பிரச்னையும் இருக்காது என்றார். அந்த தூரத்தில் காய்ச்சிக் கொண்டு உள்ளே வரும் வேளைக்கு அந்தக் குளிரில் மீண்டும் சுருதி இறங்கி விடும் என்று முத்துசாமி ஆட்சேபித்தார். அது நவம்பர் மாதம். அப்போதெல்லாம் தில்லியில் நவம்பர் மாதங்கள் குளிர் நிறைந்த மாதங்களாக இருந்தன. அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. இன்னொன்று சுருதி கலைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு ஏதாவது செய்தால் அசிங்கமாகிவிடும். உள்ளே நடுவர்களாக இருந்த ஓரிரண்டு முசுடுக் கிழங்கள் நல்ல சங்கீதம் ஞானம் உள்ளவை. சுருதி கெட்ட வாத்தியத்தை வாசித்தால் மானம் போய்விடும். எனவே, யார் யாரையோ கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ வகையில் தாஜா செய்து அந்தக் கட்டிடத்தின் பின்புறம் வாத்தியங்களைக் காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்தார்கள் நச்சுவும் வெங்கட்டும்.

இதற்கிடையில் வேறு குழுக்களின் தேர்வுக்கான காட்சிகள் தீவிரமாக நடுவர்கள் முன்னிலையில் அரங்கேறிக் கொண்டிருந்தன. எங்களை நடுவர்கள் கூப்பிடும்போது உள்ளே போகலாம் என்று தயக்கத்துடன் நின்றிருந்தேன். ஒரு பக்கம் தயக்கம் என்றால் இன்னொரு பக்கம் அச்சம். மற்ற குழுக்கள் ஒருவேளை சரியாக செய்யவில்லை என்றால் நடுவர்கள் அங்கேயே எதையாவது சொல்லி மானத்தை வாங்கினர்கள் என்றால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே சற்று குலை நடுங்கியது. ஏதாவது குழு ரொம்பவுமே நன்றாக செய்து விட்டால் நம்முடைய வாய்ப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுமே என்றும் அச்சம்.

எனவே மரியாதையாக வெளியிலேயே நின்று கொண்டு கூப்பிடும்போது சென்று நம்முடைய காட்சியை அரங்கேற்றி விட்டு ஒடிவந்து விடலாம் என்று நின்றிருந்தேன். பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தைரியம் சொல்வது போல ரவீந்திரன் அருகில் வந்து கை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்குக் கிட்டிய அவருடைய பாசம் மிக்க அந்தக் கரங்களின் அழுத்தம் தந்த ஆறுதல் மற்றும் தைரியத்தின் வீரியத்தை இப்போதைக்கு என்னல் எந்த வார்த்தையிலும் மிகச்சரியாக விவரிக்க முடியாது. ஆனல் ஒன்றை நன்றியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரவீந்திரன் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் அன்று என் கரங்களில் பதித்த அழுத்தம் எனக்குப் பின்னளில் ஏறத்தாழ முப்பது நாடகங்களை இயக்கும் மனவலிமையைக் கொடுத்தது.

ஒருவழியாக எங்கள் முறை வந்தது. மேடை எல்லாம் கிடையாது. ஒரு பெரிய கூடம். மற்ற நாடகக் குழுக்களின் கலைஞர்கள் சுற்றி அமர வைக்கப்பட்டிருந்தார்கள். நடுவர்கள் தனியாக ஒரு மூலையில் நாற்காலிகளில் அமரவைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் நடித்துக் காட்டிய காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லை. கிராமத்து இரவில் நடக்கும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு ஊர்வலம். தலையில் கரகம் போல அலங்கரித்த ஒரு பீடத்தில் சிறுதெய்வத்தை (நாங்கள் பெயர் எல்லாம் வைக்கவில்லை) அமர்த்தி தலையில் வைத்து ராமச்சந்திரன் ஆடி வருவான். நச்சு பூசாரி. குணசேகரனுக்கும் இளஞ்சேரனுக்கும் சாமி வந்து விடும். மிகவும் வலிமையான அடவுகளுடன் ஆட்டம் அமைந்திருந்தது. சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி குழுவினர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். ஆட்டம் உச்சகட்டத்துக்குப் போகும். திடீரென்று ஓரிடத்தில் தகராறு முளைக்கும். அனைவரும் திக்குக்கு ஒருவராக சிதறி ஓடிப்போய் ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொள்வார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள். (சொல்லப் போனால் இந்தக் காட்சியில் பேசப்பட்ட உச்சபட்ச வசனங்களே அந்த இந்தி கெட்ட வார்த்தை வசவுகள் தான் இந்தச் சேரி சண்டை ஓயும்போது இன்னொரு பக்கத்தில் அதே மேடையில், ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டு விருந்து ஒன்று மிகவும் பொய்மையுடனும் அனைத்து படாடோபங்களுடனும் நடக்கும். இது தான் நாங்கள் நடித்துக் காட்டிய காட்சி. பிறகு சுவரொட்டிகள் கிளர்ந்து எழுந்து தங்கள் உரிமையை பிரகடனம் செய்யும் இன்னொரு காட்சி. இரண்டையும் முடித்து விட்டு பதட்டத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர்கள் நடிகர்கள். இப்போது என்னிடமிருந்த பதட்டம் அவர்களிடம் இடம் மாறியது.

நாங்கள்தான் இறுதியாக வந்த குழு. அதற்குப் பிறகு நடுவர்களின் தீர்ப்புதான்.

நீண்ட நேர அமைதிக்குப் பிறகு எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக சாகித்ய கலா பரிஷத் செயலர் சுரேந்திர மாதூர் தெரிவித்தார். ஆனல் அந்த ஆட்டத்தின் இறுதியில் வரும் சண்டையின் போது பரிமாறிக்கொள்ளப்படும் கெட்ட வார்த்தைகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றார். அது திட்டமிட்டு வந்தது அல்ல என்றும் எங்கள் நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே தத்ரூபமாக இருக்க முயற்சித்தார்கள் என்றும் சொல்லி பலமுறை விழுந்து வணங்கி நன்றிசொல்லி வெளியே வந்தோம். ரவீந்திரன் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மிக அழுத்தமாகக் கை கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பும் போதே இரவு பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுப்போனேன்.

அப்போது வீட்டில் தொலைபேசி கிடையாது. மனைவி கதவைத் திறந்ததும் மிகவும் சந்தோஷத்துடன் கத்திச்சொன்னேன்...

"நாங்க ஜெயிச்சிட்டோம்''.

வழக்கத்துக்கு விரோதமாக ஒன்றும் சொல்லாமல் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தாள் மனைவி.

அது ஊரிலிருந்து என்னுடைய மூத்த சகோதரர் அனுப்பியிருந்த தந்தி.

"அப்பாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடமாக இருக்கிறது. உடனே கிளம்பி வா''.



2 comments:

  1. எம்.ஏ.சுசீலா.
    அன்புடையீர், இந்தப்பதிவின் முதல் பத்தியில் மிகச்சரளமான கவித்துவ அற்புதத்தோடு உவமைகள் வந்து விழுந்திருக்கின்றன.தொடர்ந்து படித்து வருகிறேன். விரைவில் தில்லியில் உஙள் நாடக நிகழ்வு ஒன்றைக்காண்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  2. திருமதி சுசீலா அவர்களே

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றி.

    ஒரு நாடகத்தை மேடையேற்ற எனக்கும் ஆசையாக உள்ளது. மிக விரைவில் செய்வேன்.

    பென்னேஸ்வரன்

    ReplyDelete