Tuesday, September 14, 2010

விருதும் வேடிக்கைகளும்

08 செப்டம்பர் 2010
அன்புள்ள திரு.எஸ்.வி.சேகர் அவர்களுக்கு

வணக்கம்.

நேற்றைய தினகரன் (டெல்லி பதிப்பு) மற்றும் இன்றைய The Hindu (டெல்லி பதிப்பு) ஆகிய நாளிதழ்களில் தமிழகத்துக்கு வெளியே தலைசிறந்த முறையில் பணியாற்றும் அமைப்பாக டெல்லியின் முத்தமிழ் பேரவையை, சென்னையின் மயிலாப்பூர் அகாடமி தேர்ந்தெடுத்து விருது வழங்கியதாக ஒரு புகைப்படத்தையும் செய்திக் குறிப்பையும் காண நேர்ந்தது.

அந்தப் புகைப்படத்தில் தங்களையும் உடன் கண்டதனாலும் மயிலாப்பூர் அகாடமியில் தாங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக இங்குள்ள என்னுடைய நண்பர்கள் சொன்னதாலும் உங்களுக்கு இந்த அஞ்சல்.

விருது கொடுப்பது மற்றும் அதனைப் பெற்றுக் கொள்வது (அல்லது ஏற்பாடு செய்து பெற்றுக் கொள்வது) போன்றவை தனிப்பட்ட நபர்களின் விருப்பம், சாமர்த்தியம் அல்லது தந்திரத்தின் அடிப்படையில் அமைந்த விஷயம். இதை எதிர்த்து யாரும் கேள்விகள் எழுப்ப முடியாது என்பது எனக்கும் தெரியும்.

இந்த விஷயத்தில் கேள்வி கேட்பவர்களின் நோக்கத்தை உடனடியாக சந்தேகப்படும் ஆபத்து இருக்கிறது. இருந்தாலும் உண்மை உடன் இருக்கும் தைரியத்தில் இந்தக் கேள்விகளை சற்றுத் தயங்காமல் முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு விருதினை - அதாவது, தமிழகத்தை விட்டு வெளியில் உள்ள அமைப்புக்களில்
சிறந்த ஒன்றாக ஒரு அமைப்பைத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாளில் படிக்கும்போது இந்தக் கேள்விகளை கேட்காமல் இருக்க முடியவில்லை -
இந்த விருதினை அறிவிப்பதற்கு முன்பு மயிலாப்பூர் அகாடமி தமிழகத்தை விட்டு வெளியில் உள்ள மற்ற அமைப்புக்கள் குறித்த ஆய்வு எதையாவது மேற்கொண்டார்களா?

மற்ற அமைப்புக்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள், அதாவது அவற்றின் செயல்பாடுகள், எத்ததனை ஆண்டுகளாக அவை செயலாற்றி வருகின்றன, அந்த அமைப்புக்களில் உள்ள பொறுப்பாளர்கள் தனிப்பட்ட வகையிலும் அந்த அமைப்பு சார்ந்தும் ஆற்றி வரும் பணிகள் குறித்த களப்பணி சார்ந்த தகவல்கள் எவையேனும் பெறப்பட்டனவா?

உதாரணத்துக்கு மும்பையில் பல தமிழ் அமைப்புக்கள் மிகவும் அற்புதமான பணிகளை ஆற்றி வருகின்றன. பெங்களூரில், மைசூரில், கொல்கத்தாவில் என ஒவ்வொரு நகரில் பல அமைப்புக்கள் (உண்மையான) செயலாற்றலுடன் திகழ்ந்து வருகின்றன.

டெல்லியில் தில்லித் தமிழ்ச் சங்கம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருகிறது. சென்ற மாதம் தில்லித் தமிழ்ச் சங்கம் டெல்லியின் தமிழ்ப் பள்ளிகளுக்காக இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நிதி திரட்டிக் கொடுத்து அற்புதமான பணியை செய்திருக்கிறது.

அதே போல துவாரகாலயா என்னும் அமைப்பு சில ஆண்டுகளாக மிக அற்புதமான மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு எவ்வித விளம்பரமும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த அமைப்புக்கள் எல்லாவற்றையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. இந்த விருதே தனிப்பட்ட ஒரு மனிதரின் விளம்பரத்தை நோக்கிய செயல்பாடாகத் தோன்றும்போது மற்ற கேள்விகளைக் கேட்பதும் பயனில்லை என்றுதான் நினைக்கிறேன்.

சென்ற ஆண்டில் ஒரு சிலரின் அரசியல் வசதிகளை மட்டுமே மனதில் கொண்டு துவங்கப்பட்ட ஒரு லெட்டர் பேட் அமைப்பு சென்னையில் உள்ள மயிலாப்பூர் அகாடமிக்கு மட்டும் சிறந்த அமைப்பாகத் தோன்றி இருப்பது மிகவும் விந்தையாக இருக்கிறது.
விருதுகள் தனிப்பட்ட மனிதர்களுக்கா அல்லது அமைப்புக்கா என்ற கேள்வியும் இங்கே மேலோங்கி இருக்கிறது.

அதையும் துரத்தித் துரத்தி நாளேடுகளில் வெளியிட்டுக் கொள்ளும் முறையும் இவர்கள் எந்த இலக்கை நோக்கித் தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.

விருது பெற்றவர்களின் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்க்க நேரிட்ட போது யோவ் நானும் ரௌடிதான்யா என்று போலீஸ் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏறி உட்காரும் வடிவேலு ஞாபகத்துக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


அன்புடன்

கி.பென்னேஸ்வரன்

----------------------------------------------------------------------------------
08 செப்டம்பர் 2010
திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கு

தங்களின் மெயில் கிடைத்தது.உங்களின் நியாயமான வருத்தங்களை மயிலாப்பூர் அகாடமி நிர்வாகிகளுக்கு FORWARD செய்கிறேன்.சில சமயம் தவறான தகவல்கள் தவறான நபர்கள் மூலம் சென்று விடுவதால் சில தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
எந்தவித லாப நோக்கின்றி சுமார் 60 ஆண்டுகளாக சமூக சேவையாற்றிவரும் ஒரு அமைப்பு மயிலாப்பூர் அகாடமி என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்

எஸ்.வி.சேகர்

No comments:

Post a Comment