Saturday, February 18, 2012

தேவராஜ் விட்டலனுக்கு நன்றி


இந்த வலைப்பூ ஏறத்தாழ ஒரு ஆண்டுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் சீர்கெட்டுக் கிடந்தது.  அதிகம் எழுதாமலும் கவனிக்காமலும் இருந்தேன்.  சமைக்கத் தெரியாதவன் சமைத்தது போல, கட்டத் தெரியாதவன் வீட்டைக் கட்டியது போல, பாழ்பட்டுக் கிடந்த அறை போல, இசைஞானம் இல்லாதவன் ராகம் தானம் பல்லவியை முயற்சித்தது போல, சரைக்கத் தெரியாதவன் சரைத்தது போல, பல ஆண்டுகள் திறக்கப்படாமலே கிடந்த உக்கிராண அறை போல அது அது அங்கங்கு போட்டது போட்ட படி, பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல சீர் கெட்டுக் கிடந்தது.

கடந்த பத்து நாட்களாக என்னுடய வலைத்தளம்  ஹேக் செய்யப்பட்டுக் கிடந்தது.   

ஏற்கனவே துர்க்குணி, அதிலும் கர்ப்பிணி என்பது போல ஏற்கனவே கடுமையான சோம்பல் வியாதி மற்றும் பல்வேறு மன உளைச்சல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த  எனக்கு மேலும் எழுதாமல் இருக்க இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே  என்று சந்தோஷமாக எதையும் எழுதாமல் இருந்தேன்.  இதனால் மற்றவர்களையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது என்னுடைய இணையதளம் சரியாகி விட்டது.  ஆனாலும் சில பழுதுபார்த்தல்கள் மிஞ்சி இருக்கின்றன என்று என்னுடைய தளத்தின் வடிவமைப்பாளர் செல்வமுரளி சொல்கிறார்.  அதனால் அதற்குள் நுழைய தைரியம் இல்லை.  கொஞ்ச நாள் கழித்து அடியெடுத்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

எழுத்தாளர் ராஜாமணிக்கு ஒரு அஞ்சலி எழுதவும் அவருடைய வடக்கு வாசல் நேர்காணலை வெளியிடவும் இந்த வலைப்பூவை இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் தூசி தட்டித் திறந்தேன்.  

நேற்று யதேச்சையாக எங்கள் அலுவலகத்துக்கு வந்த தேவராஜ் விட்டலன் மிக்க சிரத்தை எடுத்து இந்த வலைப்பூவின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி விட்டார்.  இது திட்டமிட்டு நடந்தது அல்ல.  நான் யதேச்சையாக கேட்டுக்கொள்ள அதிதீவிரத்துடன் உடனே இந்த வேலைக்காக உட்கார்ந்து விட்டார் மனிதர்.

வடக்கு வாசல் நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் கலாமிடம் நூல் பெறும் தேவராஜ் விட்டலன்
 இப்போது நீங்கள் காணும் இந்த வடிவத்துக்கு முற்றிலும் பொறுப்பானவர் தேவராஜ் விட்டலன்.  நேற்று பகல் முழுதும் அங்கும் இங்கும் நகராது தன் மடிக்கணிணியில் வெகுநேரம் போராடி சீர்குலைந்து போயிருந்த என்னுடைய இந்த வலைப்பூவை ஒரு வழியாக பார்க்கும் படி செய்து விட்டார்.  

திறமையாளர்கள் கையில் கிடைத்தால் மட்டமாக இருக்கும் விஷயங்கள் கூட சிறப்பு பெறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

தேவராஜ் விட்டலனுக்கு என் மனமார்ந்த நன்றி.  

நிறைய நூல்கள் எனக்கு வருகின்றன.   அத்தனையும் வடக்கு வாசல் இதழில் மதிப்புரை போட இடமும் நேரமும் மதிப்புரையாளர்களும் கிடைப்பது இல்லை.  எனவே இந்தத் தளத்தை நூல் மதிப்புரைகளுக்கும் எப்போதாவது உள்ளூர் வம்புகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

அதாவது இனி இங்கும் நிறைய எழுத முயற்சி செய்வேன்.  

இதற்காக  யாருக்காவது யாரையாவது  திட்ட வேண்டும் அல்லது சபிக்க வேண்டும் என்று தோன்றினால் இப்போது ஒரு ஆள் கிடைத்து விட்டார்.

1 comment:

  1. நான் செய்த சிறு பணிக்கு இவ்வளவு பெரிய நன்றியை கொடுத்துள்ளீர்கள். தாங்கள்,எனக்கு செய்த உதவியை என்னால் பட்டியல் இட இயலாது, அது தவிற ஒரு நல்ல மனிதர் தாங்கள், டெல்லியில் இருக்கும் மிக குறுகிய காலத்தில், வடக்கு வாசலுடனும், தங்களுடனும் பழக, கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

    இவன்
    தங்கள் உண்மையுள்ள வாசகன்
    தேவராஜ் விட்டலன்

    ReplyDelete