Monday, February 20, 2012

தூரிகையும் நிறங்களின் கடவுளும்...

வாசகனை அச்சம் கொள்ள வைக்கும் டாம்பீகமான வார்த்தைகளுடன், எவ்வகையான ஒழுங்கமைவும் இன்றி, தன்னை மட்டுமே முதன்மைப் படுத்திக் கொள்ளும் தமிழின் நவீன கவிதைச் சுழல்,  (இது எழுத்துப் பிழையல்ல) கவிதைப் பக்கம் ஒதுங்க நினைக்கும் வாசகனை சில காலங்களாகப் படுத்தி எடுத்து வருகிறது.  

வாசக மனத்தை  எந்த வகையிலும் பொருட்டுக்கு எடுத்துக் கொள்ளாது, தானிழுக்கும் போக்குக்கு எல்லாவற்றையும் இழுத்து வைத்து அல்லல்படுத்தி வருகின்றது.   இந்தச் சூழலில், சமீப காலங்களாக    எவ்வகையான பாசாங்குகளும் அற்று தனக்குள் ஒடுங்கிய கவிதைகளும்,  நல்ல தரமான ஓசை நயம் கொண்டு, இந்த மண்ணின் மணம் சுமந்த படிமங்களை சுமந்த கவிதைகளும் நேரடித்தன்மை கொண்ட கவிதைகளும்  இப்போது அங்கங்கு   வெளிவரத் துவங்கியுள்ள போக்கு சற்று ஆறுதலும் தைரியமும் அளிக்கிறது.   லேசாக நம்பிக்கையும் தருகிறது. 

அந்த வகையில் பூ.அ.ரவீந்திரன் சற்று தாராளமாகவே இந்த  நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார். கோவை கீதா பதிப்பகத்தின் வெளியீட்டில் வந்துள்ள அவருடைய  தூரிகையும் நிறங்களின் கடவுளும் என்னும் தொகுப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகம் இல்லாத ஒரு கவிதை அனுபவத்தை நமக்கு வழங்குகிறது.
தூரிகையும் நிறங்களின் கடவுளும் என்னும் தலைப்பே ஒருவகையான  பொருள் அமைதியைத் தருகிறது.  கவித்துவ வாயிலைத் திறக்கிறது.  முகப்புக் கவிதையான ‘நடுச்சாமம்’ கவிதையில்,

........   .....
.......    .....

வறுமை முற்றிய சொற்கள்
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன.

........   .....
.......    .....

தனித்த எனது படுக்கையில்
விழித்துக் கிடக்கும்
நடுச்சாமம்.

போன்ற வரிகள் ஓசை நயத்துடன், உருவ ஒழுங்குடன் சுமக்கும் படிமங்கள் ஒரு நல்ல தொகுப்புக்கு ஊடாகத்தான்ப் வாசகப் பயணத்தைத் துவக்குகிறோம் என்னும் நம்பிக்கையை அளிக்கிறது. 

அங்கங்கு நெருடல்கள் இல்லாமல் விரவிக் கிடக்கும் ஓசை நயங்கள் ரவீந்திரன் மரபுக் கவிதைகளில் பெற்றுள்ள ஆழ்ந்த வாசிப்பையும், பயிற்சியையும் நமக்குத் தெரிவிக்கிறது.  இதற்கான சான்றுகளை இந்தத் தொகுப்பின் பல இடங்களில் தேடித் தேடி எடுத்துக் காட்டலாம்.

புற்று

தலையா வாலா
இன்னதென்று அறியப்படாத நிலையில்
நுழைந்து கொள்கிறேன்
புற்றுக்குள்!

பாம்புடன் வாழ்தல்
அப்படி ஒன்றும் கடினமாகப்படவில்லை!

நான் சுருண்டு படுக்கிறபோது
அது என்னைச் சுருண்டு கொள்ளும்
அது பெருமூச்சு விடுகிறபோது
நான் சிறுமூச்சு விடுவேன்.

அதன்மீது படுத்துக் கொள்ள முடியாது!
என்மீது படுத்து கொள்ளும்!

பாம்பு இரைதேடிப் போனபின்
நான் போகவேண்டும்
அதுவருமுன் நுழைந்துவிட வேண்டும்!

மற்றபடி முட்டைநீர் நாக்கில் நஞ்சு
பொது!

சாரையுடன் பிணைந்த புணர்ச்சியைக்
கண்டவுடன் எனது
புணர்ச்சி வேட்கை தீர்ந்துவிடுகிறது!

சில சமயங்களில் தீண்டிவிடுகிறது!
செரிமானம் சய்து
பழகிக் கொண்டது குடல்!

பரமபதப் பாம்புகளைப் பார்க்கிறபோது
புற்று நிம்மதியாகவே உள்ளது!

வெளியே வாசித்துக் கொண்டிருந்தேன்!
தற்போது மகுடியை
உள்ளே வாசிக்கிறேன்!

இன்னும் கொஞ்ச நாளில்
நான் பாம்பாகி விடுவேன்!
பாம்பு நான் ஆகிடும்

அச்சத்துடன் வாழ்வது என்றான பின்
வீடென்ன புற்றென்ன!
எல்லாம் ஒன்றுதான்!

இந்தக் கவிதையில் ஆழப்பதிந்துள்ள தத்துவத் தெறிப்புக்கள் நம்முடைய மரபு சார்ந்தது.  ஸ்பானிய, பிரெஞ்சு, ஜெர்மானிய ஒப்பனைகள் அணிந்தவை அல்ல.  பரமபதப் பாம்புகளைப் பார்க்கிறபோது புற்று நிம்மதியாக இருப்பதும், வெளியே வாசித்துக் கொண்டிருந்த மகுடியை தற்போது உள்ளே வாசிப்பதும் கொஞ்ச நாட்களில் இவர் பாம்பாகி, பாம்பு இவராகி விடுகின்ற மாயாவாதப் படிமங்கள் இந்த மண்ணின் சிந்தையில் கிளர்ந்து எழுந்தவை.  மிகவும் எளிமையான வரிகள்.  அதே நேரத்தில் வாசக மனத்தை சற்று நேரம் உறைய வைத்துப் பின் தொடர்கின்ற விந்தையைப் புரிகின்ற வரிகள்.

அமைதி நீட்டிப் படுத்திருக்கும்
குகைகளுக்குள்
அடையாள மற்று
முடங்கிக் கிடக்கிறது பசி!

குவளை நிரப்பிச் சின்னக்குழல்
போட்டுக் குடிக்கக்
கருமை பரவ நெஞ்சுக்குள் இறங்கியது
சிறைபிடிக்கப்பட்ட சோகம்!

(நேர்காணல்  - பக்.32-33)

ஓசை நயம் குலையாமல் அதே நேரம் சொல்ல வந்த விஷயத்தைப் பளாரென்று கன்னத்தில் அறைவதுபோல அனுபவத்தை உணர்த்தி நிற்கும் வரிகள் இவை.

அதே கவிதையில்,

நெறியும் குறியும் அற்றபோது
ஒற்றைத் தடமோ
அகலப் பாதையோ
சாத்தியமற்றுக் கிடக்கிறது பயணம்!

மூர்ச்சையாகி இருக்கும் உறுப்புக்களில்
மூலிகை தடவ
இற்றைநாள் வரை இராமதூதன்
பெயர்த்துக் கொண்டிருக்கிறான்
சஞ்சீவி மலையை!

என்று தொடரும்போது கவிதானுபவம் மேலும் பல தளங்களில் விரிந்து படர்ந்து ஒருவகையான அமைதியில் மனத்தை நிலைக்க வைக்கிறது.  கவிதை வாசிப்பின் அனுபவம் ஒரு வாசகனுக்கு இதைவிட வேறு எதனைத் தந்துவிட முடியும்?

இந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையாக கீழ்க்காணும் கவிதையை பரிந்துரைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அவன்

நகர மறுத்து
நங்கூரமிட்டு நிற்கும் அந்த இரவை
எவ்வாறு கடக்கப் போகிறேன்!

நீளும் விரகத்தின் புழுக்கத்தில்
கடிகாரத்தின் நடுத்தண்டாக
அலைந்து ஊசலாடும் உயிர்!

வரையறுக்கப்பட்ட உள் அறைகளில்
திட்டுத் திட்டாகப் பதிந்துள்ள
நேற்றும் இன்றும்!

ஆற்றாமையை அழைத்துவந்த இருள்
நிலையாக மண்டிக் கிடக்கிறது!

வெடித்துச் சிதறும் கனவுகள்!
திரட்டி எடுக்க நீளும் கைகள்!

நெருக்கத்தில்
விரல்களால் தீண்டிப் பற்றவை!
எரியும் எனது
திரவ நதித் தேகம்!

தீய்ந்து கருகிக் கொண்டிருக்கிறது
எனது நிலம்!

மேல் எழுந்து பரவும் புகையிலும்
அடித் தணலிலும்
மூச்சு முட்டி
வெந்து கொண்டிருக்கும் இரவு!

பௌர்ணமியின் அலைகளைப் போன்று
கரை கடக்கிறது உடல்!

காற்றைக் குடித்துக்
கன்னங்களில் அறையும்
வாடைக் குளிரில்
என்னைத் தின்று கொண்டிருந்தான்
அவன்.

(பக்கம் 37)

இந்தக் கவிதையின் ஒவ்வொரு பத்தியிலும் படிமங்கள் ஒருவகையான மௌனத்தில் உருக்கொள்ளத் துவங்கி மெல்லப் படர்ந்து  புகைமூட்டமான நிலையில் சிந்தையில் தங்கி நிற்பதை சற்று நிதானமான வாசிப்பில் ஒரு வாசகன் உணரலாம்.  உணர்வு நிலையில் ஒருவகையான சௌஜன்யத்தில் வைத்து வாசக மனத்தை அனுபவ நிலையில் பின்தொடர வைக்கும் சொற்களால் நிரப்பப்பட்ட கவிதை இது.

தூரிகையும் நிறங்களின் கடவுளும் எங்கன்னும் தலைப்புக்கவிதை, ஒரு அற்புதமான அனுபவம்.  வார்த்தைகள் எப்படி மனப்பரப்பில் வர்ணங்களைத் தூவிச் செல்ல இயலும் என்பதனை பட்டவர்த்தனமாக நிறுவும் கவிதா அனுபவத்தைத் தரும் கவிதை இது. 

சிவப்பு நதியில்
குளித்துக் கதை ஏறிய தேவதை
தனது
ஊதாநிறத் துணிகளை
மரக்கிளைகளில்
தேடிக் கொண்டிருந்தாள்.

வெளிறிப்போன வண்ணங்களில்
முடிந்து வைக்கப்பட்ட
வாழ்க்கையைச்
சந்தை நெரிசலில் தொலைத்தவன்
புத்தி மயங்கி
வெறித்த பார்வையுடன்
வெள்ளை நுரைதள்ளக் கிடந்தான்!

...   ....

(பக்கம் 78-79)

வெளிச்சத்திற்கும் இருக்கும் வண்ணம் கண்டுபிடித்தமைக்காக தூரிகைக்கு ஆயுள் தண்டனையும், நிறங்களின் கடவுளுக்குத் தூக்குத் தண்டனையும் நீதிப்பலகை கூடி ஆய்வு செய்து தண்டனையாக விதிக்கிறது.  இதில் திளைக்கும் படிமங்கள்  மிகவும் அமைதியாக பல்வேறு அரசியல் சேதிகளை இடையூடாகச் சொல்லிச் செல்கின்ற மாயத்தைப் புரிகின்றதை வாசக மனம் எளிதாகத் துய்க்க முடியும்.

இந்தத் தொகுப்புக்கு திருஷ்டிப் பரிகாரமாக அமைந்த கவிதைளும் ஓரிரண்டு உள்ளன.  உதாரணத்துக்கு உழுவார் உலகத்தார்க்கு என்னும் கவிதை.  மிகவும் முக்கியமான விஷயத்தை இக்கவிதை  சொன்னாலும் சொல்லும் வகையில் மிக மிகச்சாதாரணமாக, ஏற்கனவே பலரும் புழங்கிப் புழங்கித் தேய்த்த வடிவத்தையும் படிமங்களையும் வைத்துத் தேய்த்து இருப்பதால் கவிஞரின் வேறு சில கவிதைகள் தரும் அனுபவங்களை இவை மலினப்படுத்தி விடுகின்றன.  அதாவது பாடுபொருளின் முக்கியத்துவம் பாடுமுறையில் மலினப்படுத்தப்பட்டிருக்கிறது.  “இவன் அறுத்துக் காட்டிய/புல்லுக் கட்டினால்தான்/நாம் அதிகாலைக் காப்பி குடிக்கிறோம்” போன்ற எம்ஜிஆரின் விவசாயீஈஈஈஈ ரகப் படிமங்களும் வார்த்தைகளும் உழவனின் மேன்மையை கவித்துவமாகச் சொல்ல எந்த வகையிலும் உதவி செய்யவில்லை.  ஒரு துண்டு நோட்டீஸ் அல்லது ஒரு இரண்டாந்தரமான மேடைப்பேச்சாளர் இதனைவிட வீர்யமான முறையில் இவர் சொல்ல நினைக்கும்  விவசாயியின் வலிகளை இன்னும் நன்றாக சொல்லக்கூடும்.

இதே ரகத்தில் வரும் ‘ஒன்பதாம் வேற்றுமை’ என்னும் கவிதையல்லாத ஒன்றையும் சொல்லலாம்.  இவை போன்ற விபத்துக்கள் பல நல்ல கவிதைத் தொகுப்புக்களில் ஏற்படுவது உண்டு.  ரவீந்திரனின் இந்தத் தொகுப்பும் அதற்கு விலக்கல்ல என்றுதான் தோன்றுகிறது.  ஒரு கவிஞனின் படைப்புக்கள் தொகுப்பாக மலரும்போது சற்று முனைந்து தைரியத்துடன் சில கவிதைகளை விலக்கி வைத்தால் இவைபோன்ற விஷயங்களைத் தவிர்த்து விடலாம். 

வானம்பாடிக் கவிஞர்களின் வார்த்தைகளை அதிகமாக நம்பும் மரபை ஒட்டி சில கவிதைகள் சற்று உரக்கவே அமைந்திருக்கின்றன.  ஏற்கனவே சொன்னது போல, மரபில்  அவருக்கு உள்ள நேரடிப் பரிச்சயமும் ஆழ்ந்த வாசிப்பும் அவருடைய பெரும் பலமாக அமைந்திருக்கிறது.  இந்த பலத்தை மீறி சில நேரங்களில் அவர் தன் குரலை அளவுக்கு மீறி எழுப்ப எத்தனிக்கையில் கவித்துவம் நழுவி துண்டுப்பிரசுர சங்கதியின் அளவுக்கு விஷயத்தை இழுத்து விட்டு விடுகிறது.  அவருக்கு இயற்கையான அமைந்து உள்ள பெரும் பலத்தில் இது தவிர்க்கக் கூடிய விஷயமாகத் தான் தோன்றுகிறது.  இவற்றைத் தவிர்க்கும் வல்லமையும் அவருடைய கவித்துவ மனத்துக்கு இருப்பதை அவருடைய தேர்ந்த சில கவிதைகள் நிரூபிக்கின்றன. 

பின்னுரையில் கோவை ஞானி சொல்லியிருப்பது போல அகன்றதும் மிகப்பெரிதுமான திரைச்சீலையில் இவரது காட்சிப் படிமங்கள் விரிகின்றன.  மணலும் சுண்ணாம்பும் சேர்ந்து மிக உயர்ந்த கொதிநிலையில் உருவாகிற கண்ணாடி வார்ப்புப் போன்ற படிமக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன.  சென்னிமலை தண்டபாணி, பாக்கியம் சங்கர், அ.சவுந்தரராசன் ஆகியோர் இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். கயிலைமாமுனிவர் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் பேரூர் ஆதீனம் வாழ்த்துப்பா ஒன்றும் வழங்கி இருக்கிறார்.

கவிஞர் பூ.அ.ரவீந்திரன் தன்னுடைய  உரையில் சொல்கிறார் -

“சங்க இலக்கியத்தின் திரைச்சீலைக் கவிதை ஓவியங்களே இன்னும் என்னை முன்னெடுத்துச் செல்கின்றன.  இன்றைய நவீன கவிதைக்கான இழைகள் சங்க இலக்கியங்களில் ஊடும் பாவுமாக உள்ளன.  பன்முகப்பட்ட மாந்தர்களின் உணர்வுக்கூறுகள் இன்றைக்கும் நமக்குப் பொருத்தமாகின்றன”

கவிஞரின் இந்த வார்த்தைகள் இந்தத் தொகுப்பின் பல சொல்லடுக்குகளில் சாத்தியமாகி உள்ளன. உதாரணத்துக்கு அவருடைய தலைப்புக்கவிதை.

முகப்பு அட்டை வடிவமைப்பில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.   சில இடங்களில் (தவிர்க்க இயலாத) எழுத்துப் பிழைகளையும் தவிர்த்து இருக்கலாம்.

இந்தத் தொகுப்பின் ஊடாக முழுதாகப்  பயணிக்கும்போது தவிர்க்க இயலாது இடறும் ஓரிரண்டு குறைகளைக் கடந்து  சென்றால் ஒரு நல்ல தரமான கவிதை அனுபவத்தை ஒரு வாசகன் துய்த்திட பெரும் வாய்ப்பு உள்ளது.


தூரிகையும்  நிறங்களின் கடவுளும்
பூ.அ.ரவீந்திரன்
கீதா பதிப்பகம்
58 கீதா இல்லம்
அன்பு நகர், 3வது வீதி
இடையபாளையம் அஞ்சல்
கோவை-641 025

No comments:

Post a Comment