Friday, July 13, 2007

கதிகலங்க வைக்கும் எமவாகனங்கள்


கதிகலங்க வைக்கும் எமவாகனங்கள்

ராகவன் தம்பி

தலைநகரம் வரப்போகும் காமன்வெல்த் விளையாட்டு விழாவுக்காகத் தன்னை சிங்காரித்துக் கொள்ளத் துவங்கி பல மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால் எல்லாம் செய்து ஏதோ கழனிப் பானைக்குள் கையை விட்டது போல அடிக்கடி இந்த ப்ளூலைன் பேருந்துகள் யாரையாவது எங்காவது உருட்டித் தள்ளி நசுக்கிக் கொன்று குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது பலத்த சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சாலை எமன்கள். ஒரு நாட்டின் தலைநகரில் இந்த அளவுக்கு ஒழுக்கம் குறைந்த ஒரு பொதுமக்கள் போக்குவரத்து சேவை வேறு எந்த மாநிலத் தலைநகரிலோ அல்லது வேறு எந்த நாட்டின் தலைநகரிலாவது இருக்குமா என்று தெரியவில்லை.

இந்த ப்ளூலைன் பேருந்துகளின் நடத்துனர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு சனிமூலையில் எழுதியிருக்கிறேன்.

இந்த வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் அநேகம் பேர் சரியான முறையான உரிமம் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். அதே போல நடத்துனர்களும் அதிகம் படித்தவர்களாகவோ அல்லது ஒரு அடிப்படை நாகரிகத்துடன் நடந்து கொள்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.

என்னைப்போல பயந்தாளிகளுக்கு அவர்களுடன் பேசாமல் மரியாதைக்கு எவ்வித பங்கமும் இல்லாமல் சேருமிடத்துக்கு சௌக்கியமாய் சேர்ந்தால் போதும் என்ற அளவில்தான் பிரார்த்தனைகளுடன் பயணங்கள் தொடரும்.

தில்லியின் இந்த ப்ளூலைன் பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வீரபராக்கிரமங்களை பதிவு செய்யப் பல பக்கங்கள் வேண்டும்.

ஒன்றிரண்டைச் சொன்னால் கூட வெளியூர்க் காரர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் உங்கள் ஊரில் இதுபோன்ற பஸ் ஊழியர்களை நீங்கள் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

முதல் தாக்குதல் நீங்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போதே தொடங்கும். எனக்குத் தெரிந்து ஆதிகாலம் முதலே தில்லியில் பேருந்துகள், அது அரசுப் பேருந்தாகட்டும் அல்லது தனியார் பேருந்தாகட்டும், சுற்றுலாப் பேருந்தாகட்டும் எதுவாக இருந்தாலும் பயணிகள் நிற்கும் இடத்தில் கண்டிப்பாக நிற்காது. அரை பர்லாங் தள்ளித்தான் நிற்கும். காத்திருக்கும் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட வேண்டும். கண்டிப்பாக ரத்தக் கொதிப்பைக் கொஞ்சமாவது ஏற்றிக் கொண்டுதான் பேருந்தில் தொங்க முடியும். இந்த விதியை ப்ளூலைன் பேருந்துகள் கொஞ்சம் அதிகமாகவே கடைப்பிடிக்கும்.

ஆனால் பேருந்தில் கூட்டம் இல்லை என்றால் நீங்கள் எங்காவது போகும் வழியில் எதையாவது நினைத்துக்கொண்டு கையை நீட்டினாலும் அந்த இடத்தில், அது நடுசாலையாக இருந்தாலும் அப்படியே நிற்கும். பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பிரேக் மீது ஏறி நின்று கொண்டுதான் தங்கள் வண்டியை நிறுத்த வேண்டியிருக்கும். கட்டுப்பாட்டை மீறி அந்த ப்ளூலைன் பேருந்தின் பின்புறத்தில் மிகச் சுமாராக இடித்து நிறுத்தினாலும் உடனே உள்ளிருந்து உருட்டுக்கட்டைகளோடு ஆட்கள் இறங்கி உங்களுடன் மோதலுக்குத் தயார் ஆவார்கள். அவர்கள் கேட்கும் பணத்தை நீங்கள் அவர்களிடமிருந்து கொடுத்து விட்டுத்தான் காயமின்றித் தப்ப முடியும். அன்று உங்கள் மனைவி ஏதாவது விசேஷமாக சத்தியநாராயண பூஜை போன்ற பிரத்யேகமான பூஜைகள் செய்திருந்தால் உங்களுக்கு ஒன்றும் நடக்காது.

சரி. எப்படியோ பேருந்தைப் பிடித்து ஏறிவிடுகிறீர்கள். அடுத்து பயணச்சீட்டு வாங்கும் படலம். உங்களுக்கு அடுத்த நிறுத்தத்திலேயே இறங்க வேண்டுமென்றாலும் நடத்துனன் இருக்கையில் அமர்ந்திருக்கும் முரட்டுத்தனமான ஆள் உங்களுக்கு அதிகப்படியான பயணச்சீட்டைத்தான் கையளிப்பான். நீங்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் உங்கள் தொனி, உங்கள் இந்தி மற்றும் உங்கள் சரியான உச்சரிப்பின் அடிப்படையில் சரியான பயணச்சீட்டை உங்களுக்குக் கொடுப்பான். பேருந்தில் கூட்டம் நெரித்துத் தள்ளும். ""முன்னால் போ. சில்லறையை அப்புறம் வாங்கிக்கோ''என்று மரியாதையில்லாமல் நெட்டித் தள்ளுவான். இறங்கும் வரை அந்த மீதிச் சில்லறை உங்களுக்குக் கிடைக்காது. நடுவில் நீங்கள் ஞாபகப்படுத்தினால் உங்களைப் பற்றி மிக மட்டமான நகைச்சுவை ஒன்றை அந்த நடத்துனன் உதிர்ப்பான். பேருந்தில் உடன் பயணிக்கும் பயணிகளிடமிருந்து உங்களுக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்காது. அவர்களும் ஏதோ மிகப்பெரிய நகைச்சுவை ஒன்றைக் கேட்டது போல உரக்கச் சிரிப்பார்கள்.

அடுத்து இந்த நடத்துனர்களிடமும் அவர்களின் நண்பர்களிடமும் பெண்களும் சில சமயங்களில் ஆண்களும் படும் பாலியல் சார்ந்த துன்பங்களைப் பற்றித் தனியாக ஒரு அத்தியாயம் எழுதலாம். அதற்காகவே சில எழுத்தாளர்கள் பிறவி எடுத்து இலக்கியத் தொண்டு ஆற்றி வருகிறார்கள். இந்த வேலைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே நாம் அடுத்த விஷயத்துக்குப் போகலாம்.

இப்போது ஓட்டுநர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். நிறைய நேரங்களில் பேருந்து நிலையங்களில் ஏறுவதற்குப் பயணிகள் காத்திருக்காமல் இருந்தால் பல நிறுத்தங்களில் பேருந்தை நிறுத்த மாட்டார்கள். பயணிகள் பெண்களாகவும் வயதாளிகளாவும் இருந்தாலும், அவர்கள் கைகூப்பிக் கெஞ்சினாலும் நிறுத்த மாட்டார்கள். அந்த ஓட்டுனன் மனம் கனிந்து எங்காவது நிறையத் தள்ளி நிறுத்தினால்தான் உண்டு.

அதே நேரத்தில் அந்த ஓட்டுனனுக்குத் தெரிந்த ஆட்களோ அல்லது பேருந்தில் வழக்கமாகப் பயணிக்கும் இளம் பெண்களோ அல்லது பேரிளம் பெண்களையோ எந்த இடத்தில் பார்வைக்குப் பட்டாலும் அவர்கள் நிறுத்தாமலே பேருந்து நிற்கும். நிறுத்தி அவர்களிடம் குசலம் விசாரித்து வண்டியை ஓட்டிக்கொண்டே அந்தப் பெண்களின் உடலில் பல இடங்களிலும் பார்வையை விரசமாகப் படரவிட்டு அவர்களைப் பார்க்காமலே வண்டியை ஓட்டுவார்கள். முன் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் சில பயணிகளுக்கு அளவுக்கு மீறி ரத்தக் கொதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும்.

அடுத்து இந்த ஓட்டுனர்கள் தங்களுக்கான ஒரு ஜால்ராப் பட்டாளத்தைத் தயார் செய்து கொண்டு கியர்பாக்ஸ் அருகில் உள்ள பானட்டில் அவர்களை உட்காரவைத்துக்கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவார்கள். அந்த நேரத்தில் அந்தப் பேருந்தை எந்தவிதமான வாகனங்களும் முந்தக் கூடாது. அப்படி முந்திவிட்டால் அந்த ஓட்டுனர்களுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். கூட இருக்கும் ஜால்ராக்கள் வாலை முறுக்கி விடுவார்கள். உசுப்பேற்றுவார்கள். அவ்வளவுதான். வண்டி கட்டுக்கடங்காது பறக்கும். பேருந்தின் மேல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பயணிக்கும் வயதான பயணிகள் ஆடிக்காற்றில் அலைக்கழியும் இலைகளைப் போலப் பரிதவிப்பார்கள். அதைப்பற்றியெல்லாம் ஓட்டுநர்களுக்குக் கவலை கிடையாது. மனைவியுடன் பயணிக்கும் ஸ்கூட்டர்காரருக்கு வெகு அருகில் உரசிச் சென்று அவரைப் பதற வைப்பார்கள். உடன் வரும் ஜால்ராக் கூட்டத்துக்கு சிரிப்பாணி அள்ளிப்போகும்.

அடுத்து தில்லி அரசு மிகவும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது - பேருந்துக்களில் யாரும் புகை பிடிக்கக் கூடாது என்று. இது பயணிகளுக்கு மட்டும் தான். ஓட்டுனர்களுக்கும் அவர்களுடன் பயணிக்கும் ஜால்ராக்களுக்கு அல்ல. ஜால்ராக்களில் ஒருவன் தேர்ந்த புகைபிடிக்கும் வல்லுநனாக இருப்பான். அவன் ஒரே நேரத்தில் விரல் இடுக்குகளில் சுமார் ஆறு பீடிகளைச் செருகிக்கொண்டு அவற்றுக்கு நெருப்புப் பற்ற வைத்து ஒவ்வொருவருக்காக நீட்டுவான். புகை மண்டலம் கிளம்பும். ஆரோக்கியமற்ற காற்றைச் சுமந்து பேருந்து சீறிப்பாயும்.

இந்த ஓட்டுனன், நடத்துனன் அல்லாது அவர்களுக்கு ஒரு உதவியாளன் பேருந்தின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டு முன்னால் ஏறுபவர்களுக்கு பயணச்சீட்டுக்களைக் கிழித்துக் கொடுப்பான். இவனுடைய பிரதான வேலை அழகான பெண்கள் ஏறும் போது அவர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்வது. ஓட்டுனனுக்குத் தாகம் எடுக்கும் போது நல்ல வெய்யிலில் பேருந்தை நிற்கவைத்து நிதானமாக தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து தருவது. மாலை வேளைகளில் அசௌகர்யமான இடங்களில் பேருந்தை நிற்க வைத்துவிட்டு ஓடிப்போய் மதுக்குப்பிகளை வாங்கி வருவார்கள். அடுத்த பேருந்துக்காரர்களுடன் சண்டை நடக்கும்போது பெரிய இரும்புக் குழாய், சைக்கிள் சங்கிலி போன்ற வலுவான ஆயுதங்களை ஓட்டுனனுக்கும் நடத்துனனுக்கும் கையளிப்பார்கள்.

இன்னொரு விஷயம். இது எல்லோரும் பேசிக்கொள்வதுதான். இதற்கு யாரேனும் ஆதாரம் வைத்திருக்கிறார்களா என்று தெரியாது. தலைநகர்ப் பேருந்துப்பயணிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். ஜேப்படித் திருடர்களுக்கும் சில தனியார் வண்டிகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சத்தமில்லாமல் ஒரு ஒப்பந்தம் அல்லது ஒரு உடன்படிக்கை உண்டு என்று. சில குறிப்பிட்ட நிறுத்தங்களில் ஜேப்படித் திருடர்கள் ஏறிக்கொள்வார்களாம். வேகத்தடைகள் வரும் போது தேவைக்கு அதிகமாக பிரேக் அடிப்பார்கள். வண்டி குலுங்கி மலுங்கும் வேகத்தில் ஜேப்படித் திருடர்கள் தங்கள் வேலைகளை முடித்து விடுவார்களாம்.

அடுத்து, பேருந்துகளுக்கு இடையே நிகழும் ஓட்டப்பந்தயங்கள், போட்டா போட்டிகள், குஸ்திச் சண்டைகள், துவந்த யுத்தங்கள்.

ஒரே பாதையில் செல்லும் இரு பேருந்துகள் ஒரே நேரத்தில் நேர்க்கோட்டில் எங்கேனும் சந்திக்க நேர்ந்தால் உள்ளே இருப்பவர்கள் பாடு தீர்ந்தது. ஒருவரை ஒருவர் முந்த ஓடும் ஓட்டத்தில் இதுவரை தலைநகர் சாலைகளில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. பல சந்தர்ப்பங்களில் ஓட்டுனர்கள் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்து அடுத்த நாளே வேறு வண்டியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.

சரி. இத்தனை பிரச்சினைகளுடன் இந்த வண்டிகள் ஓடிக்கொண்டுதான் இருக்குமா? தில்லி அரசு நிர்வாகம் இதற்கான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கமாட்டார்களா?

சாலையில் ப்ளூலைன் வண்டிகள் தொடர்பான விபத்துக்கள் அதிகரிக்கும்போது இந்தக் கேள்விகளும் சர்ச்சைகளும் எழும். ஊடகங்களில் கழுத்து நரம்புகள் புடைக்க எல்லோரும் கத்துவார்கள். எதிர்க்கட்சிகள் லபோ லபோ என்று அடித்துக்கொள்ளும். நாளிதழ்கள் புகைப்படங்களாக அச்சிட்டுத் தள்ளும். பேட்டிகளாக அடுக்கித் தள்ளும். செய்திகளாக அடுக்கித் தள்ளும்.

கணவனை, மனைவியை, பிள்ளையை இழந்தவர்கள் வடிக்கும் கண்ணீர் நம் மனங்களைப் பிசையும்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் உத்தரவாதங்கள் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இவற்றின் இடையில் எம வாகனங்கள் தில்லி சாலைகளில் புழுதியைக் கிளப்பிப் பறந்துகொண்டுதான் இருக்கும்.

3 comments:

  1. சூப்பர்...
    ப்ளூலைன் பஸ்கள் மேலே இருக்கிற வயித்தெரிச்சல் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துட்டீங்க.
    நாங்க ஆபீஸ்லே உக்காந்து டீ நேரத்துலே பேசற விசயங்களை எழுத்துலே கொண்டு வந்துட்டீங்க.
    அடிக்கடி இப்படி எதையாவது அவுத்து வுடுங்க தலைவரே...
    நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. Sorry my dear friend, this article doesn't fall the classic categorty of KP's writings. It is just one another normal article that should have been sent to commercial magazines like Ananda Vigadan, Kumudham, etc. IN general doesn't fall in Vadakku Vasal Class.

    I am honest. Please take it in its spirit.

    Sathish

    ReplyDelete
  3. thank you, sathish.

    but, this too is my honest recordings. you will agree to me once you travel in these buses.

    anyhow, sorry to keep you disappointed.

    ReplyDelete