Sunday, July 22, 2007

அசுத்தப் போர்தூ... யாரூ...

உபதலைப்பு - அசத்திட்டீங்க ஷெகாவத் ஜி...
ராகவன் தம்பி
அசுத்தப் போர்தூ... யாரூ...

இது தமிழர்களின் அடையாளம் என்று சொல்லக்கூடிய சன் தொலைக்காட்சியின் தமில்மாலையில் பிரபலமான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஒரு அம்மணியின் அவலக்குரல்.

சரி. அதற்கென்ன இப்போது?

இந்த வாரம் உண்மையில் நம் எல்லோரையும் ஒருவர் உண்மையிலேயே அசத்தி இருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல..

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை மிகவும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தோல்வியை மிகவும் கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்ட பைரோன்சிங் ஷெகாவத் தான் இந்த வாரம் நம் எல்லோரையும் அசத்தியவர்.

இந்திய அரசியலில் "அஜாதசத்ரு' என்ற செல்லப்பெயர் இவருக்கு உண்டு.

எண்பத்து ஐந்து வயதான ஷெகாவத் இளமையில் வறுமையின் கொடுமையை நேரிடையாக அனுபவித்தவர். ஒரு போலீஸ் கான்டபிளாகப் பணியாற்றிய இவர் தன் கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர் ஆனார்.
ராஜஸ்தானில் அந்த்யோதயா, வேலைக்கு உணவு போன்ற திட்டங்களில் தீவிரப் பங்கேற்றவர்.
அப்போதைய உலக வங்கித் தலைவர் இவரை ""இரண்டாம் ராக்ஃபெல்லர்'' என்று அன்புடன் அழைப்பாராம்.

"கழனியின் மண்ணாக இருந்து இப்போது நெற்றியில் இடப்படும் திலகமாக உயர்ந்திருக்கிறீர்கள்'' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் புகழப்பட்டவர்.

1977ல் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக இவர் பணியாற்றியபோது உலக வங்கியின் துணையுடன் பல்வேறு மக்கள் நலப்பணித்திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக அமுல்படுத்தியிருக்கிறார். பாராளுமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றி அந்தப் பதவிக்கு கண்ணியத்தை சேர்த்தவர்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 331,306 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்து இருக்கிறார். கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

இவருடைய சொந்த மாநிலமான ராஜஸ்தானில் 134 வாக்குகள் இவருக்கு ஆதரவாகப் பதிவாகி இருக்கின்றன. திருமதி பாட்டீலுக்கு 63 வாக்குகள்.

தன்னுடைய தோல்வி குறித்து நன்றாகத் தெரிந்திருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்பதில் அவர் காட்டிய உறுதி அசாத்தியமானது.

இவருடைய விஷயத்தில் தவறாகிப்போன ஒன்றே ஒன்று இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு கிடைத்தது ஒன்றே.

நடுவில் அதிமுக போன்ற மூன்றாவது அணியினர் கொஞ்சம் டகால்டி வேலைகள் காண்பித்து இருக்கிறார்கள். அவை இவருடைய வெற்றி தோல்வியுடன் தொடர்பு இல்லாதவை.
ஆனால் அவர்களின் உண்மையான அரசியல் ரூபம் பிரத்யட்சமாகி இருக்கிறது. அது வரைக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.

நாம் தகவல் தொடர்புக்கு இன்னும் புறாக்களைத் தான் அனுப்பி வருகிறோம்.
ஓலைச்சுவடிகளில்தான் அரசிகளின் கட்டளைகள் ஏந்திச் செல்லப்படுகின்றன. அதனால்தான் சரியான வகையில் தலைவியின் செய்தி கட்சிக்காரர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையவில்லை. எனவே, வாக்குப்பதிவில் இருந்து ஒதுங்கி நின்ற கட்சியின் சில விசுவாசிகள் ரொம்பவும் விசுவாசமாக வாக்களித்திருக்கிறார்கள்.

இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தல் விஷயத்தில் இரண்டாம் முறையாக அப்துல் கலாமை வேட்பாளர் ஆக்கும் யோசனையை மிகவும் பதட்டமாக நிராகரித்ததில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் உள்ள சொந்தக் காரணங்கள் மற்றும் சில தனிப்பட்ட வருத்தங்கள் எல்லோருக்கும் நிதர்சனமாகத் தெரியும். அதனால் இதில் வருத்தப் படுவதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் ஏமாற்றம் தந்தது கம்யூனிஸ்டு கட்சிகளின் நிலைப்பாடு மட்டுமே.

அரசியல் நிலைப்பாடு காரணமாக பைரோன் சிங் ஷெகாவத்தை அவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் அப்துல் கலாமுக்கு மாற்றாக அவர்கள் ஆதரிக்க முன்வந்த வேட்பாளர் எந்த வகையில் அவர்களுடைய கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு ஏற்றவர் என்று அவர்கள் எப்போதாவது யோசித்துப் பார்க்கும்போது அவர்களுக்கே மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஆனால் இதையெல்லாம் பார்த்தால் அரசியல் நடத்த முடியுமா? இன்னும் என்னென்னவெல்லாம் அவர்கள் பார்க்கவேண்டுமோ யாருக்குத் தெரியும்?

ஷெகாவத் வெற்றி பெறவில்லை.
ஆனால் ஒரு விஷயம் - இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்திருந்தால் ஒரு நல்ல, திறமையான குடியரசுத் தலைவராக நமக்குக் கிடைத்திருப்பார்.

ஒரு பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு மனிதர் நமக்குக் குடியரசுத் தலைவராக இருந்திருப்பார்.

இதை எல்லாம் பேசியும் ஒரு பயனும் இல்லை. நிஜம் எப்போதுமே வேறாகத்தான் முன் வந்து நிற்கிறது.

சோனியா காந்தி போன்றவர்களின் பிடிவாதம் வென்றிருக்கிறது.

தோல்வியை முன்கூட்டியே எதிர்பார்த்தும் ஒரு ஜனநாயக மரபைக் காக்க வேண்டி தேர்தலில் நிற்க சம்மதித்ததில், மிகவும் கண்ணியமான வகையில் தேர்தலை எதிர்கொண்டதில், அதைவிடக் கண்ணியமான வகையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில் நிஜமாகவே அசத்தி இருக்கிறார் பைரோன் சிங் ஷெகாவத்.

வாழ்த்துக்கள்.

3 comments:

 1. மிக அருமையான பதிவு. என் எண்ண ஓட்டம் அப்படியே உங்கள் பதிவில் இருக்கிறது.

  பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 2. Bairon Singh is ok...but what about BJP..?..They only harmed the Presidential election by telling something like...Prathibha had stolen others pen when she was in LKG...Is not the duty of Shehavt to prvent all thses things..?..

  Sir, Understand that he was not in the election just to safegaurd democracy..but under nappasai that he will win it by crossvote like he did in 2002 Vice presdiental election
  This post is like..Keela vilundhalum meesaile man vottala

  ReplyDelete
 3. i spoke about Shekhawat only.

  As far as i know he never expected cross votes. i don't wherefrom you got this news.

  Thank you for your comments Stanley.

  ReplyDelete