Monday, July 16, 2007

தமிழ் தேசிய உணவு - அல்வா...

ராகவன் தம்பி
எட்டாவது உலக இந்தி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூயார்க்கில் உள்ள ஐ,நா. சபையில் தொடங்கி இன்று முடிவடைகிறது.
இந்த உலக இந்தி மாநாட்டில் உலகம் முழுதும் உள்ள இந்தி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இந்தி மொழி ஆசிரியர்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டிருக்கின்றனர். மாநாட்டின் துவக்க விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பல மூத்த அதிகாரிகளும் சுமார் 50க்கு மேற்பட்ட நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஐ.நா.சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த மாநாட்டை வெள்ளியன்று துவக்கி வைத்து இருக்கிறார்.

பான் கீ மூன் சில ஆண்டுகள் தில்லியில் பணி புரிந்தவர். வழக்கமாக வடக்கத்திய அரசியல்வாதிகள் நம்மூருக்கு வரும்போது தவறாமல் ""வனுக்கம்'' என்று சொல்லிவிட்டுத்தான் நமக்கு அல்வா கொடுக்கத் துவங்குவார்கள். அந்தப் பழக்கம் இப்போது அகில உலக வழக்கமாகி விட்டது. பான் கி மூன் இந்த மாநாட்டின் துவக்க உரையில் இந்தியில் ""வனுக்கம்'' சொல்லி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ""என் மகன் இந்தியாவில்தான் பிறந்தான். என்னுடைய மகள் இந்தியர் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். இந்தியாவில் இருக்கும்போது இந்தியை ஓரளவு கற்றுக்கொண்டேன். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோருக்கு இந்தி ஒரு இணைப்பு மொழியாகப் பயன்படுகிறது'' என்று அவருடைய அளவில் அவர் கொஞ்சம் கோதி விட்டிருக்கிறார்.

இது கொஞ்சம் அதிகம் இல்லையா?
பல்வேறு நாடுகளை விடுங்கள். கிருஷ்ணகிரி அருகில் நரிமேட்டில் அல்லது பென்னாகரத்தில் போய் யாரிடமாவது இந்தியில் பேசிக் கன்னம் பழுக்காமல் தில்லிக்கு என்னால் திரும்பி வரமுடியுமா? அல்லது வடகிழக்கு மாநிலங்களில் எந்தப் பெரிய ஊரிலாவது இந்தியில் பேசி எதையாவது இணைக்க முடியுமா? நம்மூரில் மட்டுமல்ல. அகில உலக அளவில் இப்படியான விஷயங்கள் மேடையில் கிண்டி சூடாகப் பரிமாறும் வஸ்துவாக மொழி பலருக்குப் பயன்படுகின்றது போலும்.
வங்கப் படைப்பாளி மஹாஸ்வேதா தேவிக்கு இந்த மாநாட்டில் இந்தி விருதினை அறிவித்தார்கள். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு இ,ணையுறவு அமைச்சர் ஆனந்த் சர்மா "இந்தி மொழியை ஐ.நா.சபையின் அதிகாரப் பூர்வமான மொழியாக அறிவிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த இந்தி மாநாட்டை ஐ.நா.சபையில் ஏன் நடத்த வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பினர். இப்போது அவர்களுக்குப் பதில் கிடைத்திருக்கும்'' என்று கூறியிருக்கிறார்.
ஒரு விஷயம். இவர்கள் கண்டிப்பாக செய்தாலும் செய்வார்கள். நம்மைப்போல ஏமாளிகளா என்ன?
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது என்று சொல்லி சொல்லி நம் வாய் கிழிய அல்வாவைத் திணித்தார்கள். இதைப் பற்றி முழுமையான விபரம் தெரியாவிட்டாலும் மேடையில் ஏறியவன் எல்லாம் செம்மொழியாம் நம் தமிழ் என்று சரடாகத் திரித்தார்கள். இதுவரை செம்மொழிக்கான அந்தஸ்து பெறக்கூடிய எந்த நன்மையும் தமிழுக்குக் கிட்டியதாக எதுவும் தெரியவில்லை. உண்மையைப் பேசிய ஓரிருவரையும் வாயை அடைத்து விட்டார்கள்.
இந்த விஷயத்தில் மைய அரசு எப்படிப் பட்ட அல்வாவைக் கிளறிப் பறிமாறியிருக்கிறது என்றால், தமிழைச் செம்மொழியாக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தந்த அதே நேரத்தில், உடனடியாக ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழு எந்தெந்த மொழிக்கெல்லாம் செம்மொழித் தகுதி வேண்டுமோ அவர்கள் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்றும் ஒரு மொழி செம்மொழியாக்குவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்று சில நிபந்தனைகளையும் வெளியிட்டார்கள். தமிழன் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே அல்வா திங்கப் பழகியவன் என்று நான் சொன்னால் பலருக்குக் கோபம் வருகிறது. செம்மொழி நிலைமை பற்றி சரியான விமர்சனம் செய்பவர்கள் மேல் பாய்வதை விட்டு அந்த வேலைக்கான அடுத்த படிக்குச் செல்லும் முயற்சியை மேற்கொண்டால் சரித்திரத்தில் கொஞ்சம் மானம் மரியாதை எல்லாம் தங்கும்.
எல்லாம் சரி. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது வந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவருக்கு இதைப் படித்துக் காண்பித்தேன். அவர் யார் மீதோ இருந்த கோபத்தை என் மீது காண்பித்தார். அவர் வெடித்துச் சீறிச் சொன்ன வார்த்தைகள் அப்படியே கீழே...
"செம்மொழித் தகுதி வச்சிக்கிட்டு என்ன வழிச்சித் திங்கறதா? எவனுக்காவது ஏதாவது ஒரு காலணா பிரயோசனம் உண்டா சொல்லுங்க. யாரை ஏமாத்தறானுங்கோ? இதை விடப் பெரிய டகால்டி வேலையெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் இருந்தே பார்த்துக்கிட்டுத்தானே வாரோம்? முதல்லே இந்த டிவி சானல்காரங்க கிட்டே இருந்தும் தமிழ் சினிமா காரங்க கிட்டே இருந்தும் இந்த ""தொமிளு கலாச்சாரத்தை'' (நன்றி- சிவாஜி-The Boss) காப்பாத்தச் சொல்லுங்க. அப்புறம் செம்மொழியெல்லாம் பார்த்துக்கலாம்''.

3 comments:

  1. Excellent sarcasm, very realistic writing.

    ReplyDelete
  2. Your lashes may be hard-hitting, but they hardly make an impact. Over the years, our skin has become too thick to feel any pain or shame with regard to the actions of our politicians - M. Hariharan

    ReplyDelete
  3. அன்புள்ள சதீஷ் - ஹரிஹரன்

    உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    சதீஷ் - உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ஹரி - நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நம்மை யாரால் என்ன செய்து விட முடியும்? நம்முடைய தோல்கள் சாதாரண தடிமனாகவா இருக்கின்றன? தமிழ்த் தென்றல்களும் புயல்களும் நம்முடைய வரும் தலைமுறை ஒன்றும் யோசிக்க முடியாதபடி மிகவும் தந்திரமாகத் தான் செயல்பட்டு வருகிறார்கள். இன்றும் சிவாஜி போன்ற திரைப்படங்கள் இளைய தலைமுறையினரிடையே வியாபாரம் மற்றும் விளம்பரத் தந்திரங்கள் மூலம் ஊதிப் பெரிதாக்கி நம்முடைய தமிழ்ச் சமூகத்துக்கு யோக்கியதை இவ்வளவுதான் என்று பேசும் வண்ணம் வைத்திருக்கிறார்களே.

    ஏதோ இப்படி அடிக்கடி புலம்பித் தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான் இல்லையா?

    ராகவன் தம்பி

    ReplyDelete