Thursday, July 19, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம்-1


சனிமூலை

ராகவன் தம்பி

நாம் எப்போதாவது "அவுச்சித்தாக' எதையாவது உளறித் தொலைக்கும்போது மேலிருக்கும் நமக்கு ரொம்பவும் வேண்டிய சில தேவதைகள் வர்ஜா வர்ஜியமில்லாது ""ததாஸ்து'' என்று சொல்லித் தொலைக்கும் என்று எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

சி.சு.செல்லப்பாவைப் பற்றிய ஆவணப்படம் எடுக்க முனைந்தபோது இப்படித்தான் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது நடந்தது 1998ல். என்னுடைய நண்பன் ஒருவன் என் மேல் இருக்கும் உண்மையான அக்கறையில் கேட்டான். ""இது போன்ற படங்களை எடுத்து நீ என்ன சாதிக்கப் போறே? தமிழில் எவன் உனக்கு ஆதரவு கொடுக்கப் போகிறான்?'' என்றான்.

என் நாக்கில் சனி இருந்திருக்க வேண்டும். அல்லது என் பிறவிக்குணமான பிடிவாதம் மற்றும் மூர்க்கத்தனம் அப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்க வேண்டும். செருக்கு நிறைந்த குரலில் சொன்னேன். ""எவனும் ஆதரிக்கலைன்னா பரவாயில்லை. பொழுது போகாதப்போ எல்லாம் வீட்டிலே தனியா போட்டுப் பார்த்துக்குவேன். செல்லப்பா ஞாபகம் வர்றப்போ எல்லாம் தனியா போட்டுப் பார்த்துக்குவேன்''.

எந்த தேவதை மேலிருந்து வன்மத்துடன் ""ததாஸ்து'' சொன்னதோ தெரியாது.

இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

1998ல் குழந்தைகளுக்கான விடுமுறையில் குடும்பத்தோடு சென்னை சென்றோம்.. அந்த விடுமுறையில் குடும்பத்தோடு எல்லோரும் ஊட்டிக்கு செல்வது என்று தீர்மானித்து இருந்தோம். அதற்கான பணத்தினை ஏற்பாடு செய்து எடுத்துச் சென்றோம். கோவையில் ஆடிட்டராக இருக்கும் என் மூத்த சகோதரரிடம் சொல்லி அவர் தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் உதவியால் ஊட்டியில் எங்களுக்கு வசதியான தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்தார். சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி போய் அங்கிருந்து ஊட்டிக்குப் போவதாகத் திட்டம். விதி எங்கேனு மூலையில் காத்திருந்தது.

பேராசிரியர் செ.ரவீந்திரன் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். கொட்டிவாக்கத்தில் இருந்த கூத்துப்பட்டறையின் அலுவலகத்தில் தங்கியிருந்தார். கிருஷ்ணகிரி கிளம்புவதற்கு முன் அவரைப் பார்க்க ஒரு மாலை சென்றேன். எங்கெங்கோ போன பேச்சு செல்லப்பா பக்கம் வந்தது. செல்லப்பா ரொம்பவும் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்று கூத்துப்பட்டறை நண்பர்கள் சொன்னார்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

மறுநாள் நானும் ரவீந்திரனும் செல்லப்பாவைப் பார்க்க திருவல்லிக்கேணி சென்றோம்.

திறந்திருந்த கதவு தொட்டுத் தள்ளியதும் மிகவும் பலவீனமாகத் திறந்து கொண்டது. அறைகள் என்று சொல்ல முடியாத மிகச்சிறிய இரு அறைகள் கொண்ட அந்த வீட்டில், அறை போன்ற பாவனை கொண்டிருந்த உள்ளறையில், செல்லப்பா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து, ஒரு பக்கம் நைந்து போன நூலால் கட்டப்பட்ட தடித்த கண்ணாடியின் உதவியுடன் எதையோ படித்துக் கொண்டிருந்தார். புத்தக வரிகளில் தடுமாறிய வண்ணம் அவருடைய விரல் நடுக்கத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த அறை முழுக்க அவர் எழுதிய சுதந்திர தாகம் புதினத்தின் மூன்று பாகங்களும் சிறு சிறு குன்றுகள் போலக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவருடைய கட்டிலின் மூன்று பக்கங்களிலும், சுவரோரத்திலும், கதவில்லாத அலமாரியின் வரிசைகளிலும் எதற்காகவோ குவியல் குவியலாகக் காத்திருந்தன.

பழுதாகப் போகின்ற நிலையில் இருந்த ஒரு மின்விசிறி திருவல்லிக்கேணி முழுக்கக் கேட்கும் வண்ணம் மிகவும் அதிகமாக சத்தம் போட்டு, மிகவும் குறைவான அளவு காற்றை அவர் மீது வீசி எறிய முயற்சித்துத் தோல்வி அடைந்து கொண்டிருந்தது. அநேகமாக ராபர்ட் கிளைவ் இந்தியாவைக் காலிசெய்து விட்டுப் போன போது யாருக்கோ அந்த மின்விசிறியைக் கொடுத்திருக்கலாம். அது எங்கெங்கோ சுற்றி செல்லப்பா வீட்டில் இப்போது தயங்கித் தயங்கி சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நிலையில் அது இருந்தது.
தயங்கித் தயங்கி நானும் ரவீந்திரனும் அவர் கட்டிலின் அருகில் போடப் பட்டிருந்த பழைய இரும்பு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். செல்லப்பா எங்களைக் கவனிக்கவில்லை. அவர் கவனத்தை ஈர்க்க மெல்ல அவர் பாதத்தைத் தொட்டேன். புத்தக வரிகளில் இருந்து மீண்டு பார்வையை எங்கள் பக்கம் திருப்பிய செல்லப்பா புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டுத் தன் பலவீனமான கைகளை வலுவில்லாது தட்டினார்.
ஏஏஏய்ய்ய்ய்.... மீனா... இங்கே பாரேன். முறைமைப்பெண் பென்னேஸ்வரன் வந்திருக்கான். நம்ம ரவீந்திரன் வந்திருக்கார். ஏஏஏஏய்ய்ய்... என்று மீண்டும் மீண்டும் கைகளைத் தட்டி மாமியை அழைத்தார்.
இது அவர்களுக்கான சங்கேதம். அந்த அழைப்பில் இருந்த உற்சாகம் புரிந்தது.

உள்ளேயிருந்து மாமி வந்தார். கேட்கும் திறனும் பார்வையும் வெகுவாக மங்கிப் போயிருந்தன மாமிக்கு. ஒரு விநாடி புரியாதது போலச் சுருங்கிய அந்த முகத்தில் அரை நொடிக்கும் குறைவான கால அவகாசத்தில் பொக்கை வாய் சிரிப்பொன்று மலர்ந்தது. குழந்தையைக் கேட்பது போல செல்லப்பா மீண்டும் மாமியைக் கேட்டார். ""ஆருன்னு சொல்லு பார்ப்போம்''.

மாமியின் நினைவுக்கு வரவில்லை. தடுமாறினார். ""மதுரையிலே நம்ம முறைமைப்பெண் பண்ணானே... பென்னேஸ்வரன்... இது ரவீந்திரன்...என்ன மறந்துட்டியா?''

எங்களைப் பார்த்து மன்னிப்புக்கோரும் பாவனையில் ""அவளுக்குப் பாவம் ரொம்ப வயசாயிடுத்து'' என்றார். ""முறைமைப்பெண் பென்னேஸ்வரன்டீ'' என்றார். குரல் கொஞ்சம் உச்சஸ்தாயிக்குப் போக எத்தனிக்கையில் இரண்டாக உடைந்து கீச்சுக்குரலாகத் தொண்டையில் கீறிப்பிளந்தது.

அவர் முகத்தின் அருகாமையில் இருந்து தன் காதினை விலக்கிய மாமி எங்கள் பக்கம் திரும்பி, ""ஆஆஆஆஆஆஆ.... எப்படி இருக்கேள்? கொழந்தே வரல்லியா?'' என்று கேட்டார். ரவீந்திரனைப் பார்த்து பிரத்யேகமாக ""எப்படி இருக்கீங்க?'' என்று கேட்டார். ""காப்பி சாப்பிடறேளா?... கேட்கறது என்ன? போடறேன். சாப்பிடுங்கோ''... என்று சிரித்துக்கொண்டே உள்ளே போனார் மாமி.

சம்மந்தம் இல்லாதது போல, "சர்ஜ் ஹ க்ஹஹ்ள், ஐ ப்ண்ஸ்ங் ண்ய் ம்ஹ் ல்ஹள்ற்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் செல்லப்பா. மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ""இந்த சுதந்திர தாகம் பாருங்கோ. டால்ஸ்டாய் காவியம் போல முயற்சி பண்ணியிருக்கேன். லைப்ரரி ஆர்டர் கிடைச்சிடும். பெரிய அளவில் பேசப்போறாங்க பாருங்கோ'' என்று சொல்லி எங்கள் முகத்தையே பார்த்தார். மனது ரொம்ப வலித்தது. நானும் ரவீந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்."

""ஸ்டூலைப் போட்டுண்டு மேலே ஏறு. ஒரு மூணு மேனுஸ்கிரிப்ட் இருக்கும் பாரு. அதை எடு'' என்றார். ஏறி எடுத்துக் கொடுத்தேன். நடுங்கிய கரங்களில் வாங்கிக் கொண்டு ரவீந்திரனிடம், ஏதோ அப்போது பிறந்த குழந்தையை ஏந்துவது போல அந்தக் கைப்பிரதிகளை ஏந்திக்கொண்டு,
""ராமையாவின் எழுத்துப்பாணி பத்தி ஒரு பெரிய புத்தகமா எழுதியிருக்கேன். இதப் பாருங்கோ. புதுக்கவிதைக்கு ஒரு க்ளோசரி மாதிரி எழுதியிருக்கேன். புதுக்கவிதையிலே புழங்கற எல்லா வார்த்தைகளுக்கும் வியாக்கியானம் மாதிரி எழுதியிருக்கேன். அகாடமிக்கும் சரி. புதுசா கவிதைக்கு வர்ரவாளுக்கும் சரி. இது ரொம்ப பிரயோஜனமா இருக்கும்'' என்றார்.

""என்ன, - இது வர்றப்போ நான் இருப்பேனான்னு தெரியலே'' என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்து சிரித்தார்.

செல்லப்பாவிடம் ஒரு விஷயம் கவனித்து இருக்கிறேன். ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்வார். சொல்லி முடித்த பின் நம் கண்களைப் பார்த்து சிரிப்பார்.
இந்த முறை அப்படி அவர் சிரித்த போது ரவீந்திரனும் நானும் ரொம்பவும் அசௌகர்யமாக உணர்ந்தோம். என்ன சொல்வது என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை. ஒரு ஆழ்ந்த மௌனம் அந்த அறையில் நிலவியது.
மின்விசிறியை எங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளச் சொன்னார் செல்லப்பா. தொட்டால் தூக்கி எறிந்து விடும் ரௌத்ரத்தில் அந்த மின்விசிறி காற்றில்லாமல் ஆரவாரம் செய்துகொண்டிருந்தது. கிட்டே செல்லத் தைரியம் வரவில்லை.
""இந்த நூற்றாண்டுலே மிகப்பெரிய நாவலா சுதந்திர தாகத்தை சொல்லப் போறாங்க''. சுதந்திர தாகம் நாவலின் ஒரு பாகத்தை எடுத்து சில வரிகளை எனக்கும் ரவீந்திரனுக்கும் மிகவும் ஆர்வத்துடன் படித்துக் காட்டினார்.
மிகவும் பலவீனமடைந்து உடைந்து போன அவர் குரலில் வாசிக்கப்பட்ட வரிகள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. கிட்டத்தட்ட கலங்கிப்போன கண்களுடன் சிரிக்க முயற்சி செய்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார் ரவீந்திரன். நான் சிகரெட் பிடிக்க வெளியே போக முயற்சித்தேன்.
""எங்கே போறே? நீயும் கேட்டுக்கோ'' என்றார் செல்லப்பா. வாசிப்பு தொடர்ந்தது.
""நான் வேணும்னா படிக்கட்டுமா?'' என்றேன்.

காதில் விழாதது போல அவர் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். மாமி காபி கொண்டு வந்து வைத்துவிட்டுக் காத்திருந்தாள். அவரும் கொஞ்சம் சாப்பிடட்டும் என்பது போல அவருடைய தோளைத் தொட்டாள் மாமி. எதையும் கண்டுக்காதது போல வாசிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
பிறகு ஏதோ நினைவு வந்தது போல மாமியைப் பார்த்து,
""சுப்பிரமணியன் கிட்டே சொல்லி ஏதாவது பலகாரம் கொண்டு வரச்சொல்லு'' என்றார். ""அவர் கடையிலே காராசேவ் ரொம்ப நன்னா இருக்கும். நீங்க அவசியம் சாப்பிடணும்'' என்றார்.

""நீங்க எதுக்குப் போறேள் மாமி. ஒண்ணும் வேண்டாம்'' என்று கையைப் பிடித்துத் தடுத்தேன். மாமி கையை உதறி, ""வேண்டாம்பா. மனுஷன் என்னைக் கொன்னுடுவார். பரவாயில்லே. கிட்டக்கத்தானே?'' என்று கிளம்பினார் மாமி.

ராமையா எழுத்துப்பாணி கையெழுத்துப் பிரதியை மீண்டும் கையில் எடுத்த செல்லப்பா, ""எல்லாம் கம்போஸ் ஆகி பாஸிடிவ் தயார் ஆயிண்டிருக்கு. ரொம்பப் பெரிய இலக்கியவாதி ராமையா'' என்று ரவீந்திரனைப் பார்த்துச் சொன்னார்.

""இன்னும் காராசேவ் வரல்லையா?'' என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.
""நான் வேணும்னா பார்த்துட்டு வர்றேன்'' என்று சொல்லி சிகரெட் பிடிக்க வெளியில் நழுவினேன்.
சிகரெட் முடித்துத் திரும்பி வந்தபோது பழைய எழுத்து இதழில் இருந்து எதையோ ரவீந்திரனுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

காராசேவ் வந்து அதை நாங்கள் தின்று தீர்த்ததும்தான் எங்களை அங்கிருந்து கிளம்ப அனுமதித்தார்.
கிளம்புவதற்கு முன் சுதந்திர தாகம் புதினம் மூன்று பகுதிகளிலும் இரண்டை எடுத்துக் கொடுக்கச் சொல்லி எனக்கும் ரவீந்திரனுக்கும் கையெழுத்திட்டுக் கொடுத்தார் செல்லப்பா. ரவீந்திரன் தயங்கிக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அதுதான் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டேனே. இது எதுக்கு? என்று சொல்லி விட்டு எங்களைப் பார்த்து சிரித்தார்.

நான் உள்ளே போய் மாமிக்கு நமஸ்காரம் சொல்லி விட்டு, கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, இது புத்தகத்துக்குக் காசு மாமி, வாங்கிக்குங்கோ'' என்றேன்.

""மாமா என்னை அடிச்சே கொன்னுடுவார். போயிண்டே இருங்கோ'' என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அடுத்த அறைக்கு வந்து செல்லப்பாவைக் கைத்தாங்கலாக கழிப்பறைக்கு அழைத்துச் சென்றார் மாமி.
வெளியில் வந்து சாலையில் நடக்க ஆரம்பித்தோம் நானும் ரவீந்திரனும். ரொம்ப நேரம் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பது இருவருக்குமே பிடித்தது போலத் தொடர்ந்து கொண்டிருந்தது.

மௌத்தை உடைக்கும் வகையில் ரவீந்திரனிடம் சொன்னேன், ""சார் - இவரைக் கண்டிப்பா டாக்குமெண்டரி எடுக்கணும்''.

தொடரும்...


நன்றி-வடக்கு வாசல்
5A/11032, Second Floor, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
e-mail: vadakkuvaasal@gmail.com
Phones: 011-25815476/09968290295

No comments:

Post a Comment