Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூர் கோரதாண்டவம் - வலுப்படும் ஒற்றுமை
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் நகரத்தில் நிகழ்ந்தது தொடர் குண்டு வெடிப்பு. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில். இப்போது மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக சில சந்தேகக் கைதுகளும் நிகழ்ந்துள்ளன. இதுவரை (அதாவது இந்த வலைப்பூ பதிவேற்றம் செய்யும் வரை நான்கு பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளது ஜெய்ப்பூர் காவல் துறை.

நேற்று (13 மே 2008) ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியாக ஒரு புதிய கோணத்திலும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார்கள் சில செய்தியாளர்கள். அவர்கள் சொல்வதாவது, இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நிகழ்த்திப் பத்தாண்டு நிறைவு பெறுகிறது. இது பாகிஸ்தானை ஏகத்துக்கும் உசுப்பி விட்ட ஒரு நிகழ்வு. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் விரைவில் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இதுபோன்ற நேரத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தைத் தோற்றுவிப்பது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் சீர்படுவதில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்கிற நோக்கில் சில இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இதை செய்திருக்கலாம் என்றும் ஒரு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் கவலையை அதிகரிக்க வைக்கிறது.

ஜெய்ப்பூருக்கு அருகாமை நகரங்களான ஆக்ரா, தில்லி போன்ற நகரங்களில் காவல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் மிகவும் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், கோவில் வளாகத்திலேயே குண்டு வெடித்தும் ஜெய்ப்பூர் மக்கள் எவ்வித வகுப்புக் கலவரங்களையும் ஏற்படுத்தாது அமைதி காத்ததுதான். வேறு சில ஊர்களில் இது நிகழ்ந்திருந்தால் குறிப்பிட்ட சில சமூகத்தினர் தாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது தங்கள் சோகங்களை மனதில் ஏந்தி உடனடியாக மீட்புப்பணிகளிலும் காயமûடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதிலும் எல்லோரும் அதீதமான கவனம் செலுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் நகரில் வதந்திகள் ஏதும் பரவாது தடுக்கும் வகையில் அனைத்து மொபைல் இணைப்புக்களையும் உடனடியாக நிறுத்தி வைத்திருக்கிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்துக்குள் எல்லா மொபைல் இணைப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டதனால் எவ்வித வதந்திகளும் வெளியில் பரவாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தோர் சேர்க்கப்பட்ட சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

வெளிச் சக்திகள் நம்மைச் சூழ்ந்து இடர் விளைக்கும்போது நமக்கு ஒரு பிரத்யேகமான வல்லமையைத் தருகிறாள் அன்னை. இதனை ஒவ்வொரு தாக்குதல்களின் போதும் இந்தியர்களாகிய நாம் நிரூபித்து வருகிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

2 comments:

 1. \\இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள்.//

  இந்தக் குறிப்பு பலரை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. நிறைய நண்பர்கள் தொலைபேசியிலும் என்னுடைய மின்னஞ்சல் வழியாகவும் தங்கள் வருத்தத்தையும் எதிர்ப்ûபுயம் தெரிவித்தார்கள். ஜெய்ப்பூரில் சம்பவம் நடந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் செய்யப்பட்ட பதிவு. இங்கு வடக்கில் சில பத்திரிகைகள் எழுதியதை "சொல்கிறார்கள்' என்று குறிப்பிட்டுத்தான் எழுதியிருக்கிறேன். இருபத்தைந்து வருடங்கள் உள்துறை அமைச்சகத்தில் குப்பை கொட்டியது. இப்படிச் "சொல்கிறார்கள்' என்று சொல்லியே பிழைப்பு கழிந்தது. பழக்க தோஷம். மொத்தத்தில் இங்கு நாளேடுகளில் குறிப்பிட்டதையே நான் என்னுடைய வலைப்பதிவில் அப்படிச் "சொல்கிறார்கள்' என்று குறிப்பிட்டேன்.

  இந்தக் குறிப்பினால் வருத்தமடைந்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 2. வதந்"தீ" பரவிவிடக்கூடாது என்ற நல்லெண்ணெத்தில்
  கைபேசிகள் இயக்கத்தை நிறுத்திச் செயலாற்றிய‌
  செய்ப்பூர் காவல்துறை நடவடிக்கை சரி என்றாலும்,
  ஆத்திர அவசரத் தகவல்களை எப்படி பரிமாறிக்கொள்வது?

  \\இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள்.//

  இதற்காக நீங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை.
  நம் நாடு நல்லா இருந்தாலும் கெட்டுப்போனாலும்
  எதையாவது வள்ளுவதக்குன்னு மெல்லுற நாடு அண்ணாச்சி.
  நீங்க சூடா செய்தி தெரிவிக்கணும்ன்னு நெனைச்சுக் குடுத்தீங்க‌
  பாருங்க. அதுக்கு மொதல்ல நன்றிங்க. தொடருங்க‌
  ஒங்க குசும்பை...மன்னிச்சுக்கங்க...பணியை...!
  நட்புடன்,
  ஆல்பர்ட்,
  அமெரிக்கா.

  ReplyDelete