Tuesday, June 26, 2007

குழந்தைகளுக்கான நாடகம் - 1



ராகவன் தம்பி


வருடம் 1999 மாதத்திய இளவேனில் காலத்தின் ஒரு மதியம். அப்போதைய தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் எஸ்.நடராஜனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ""முடிந்தால் இன்று மாலை ஜனக்புரி தமிழ்ப் பள்ளிக்கு வாருங்கள். ஒரு நண்பரை அறிமுகப் படுத்துகிறேன். பள்ளியில் கிரீன் சர்க்கிள் என்ற ஒரு அமைப்பை அறிமுகப்படுத்துகிறோம். அந்த அமைப்புக்காக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து பள்ளியில் நாடகம் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் உங்கள் பெயரைச் சொன்னேன். நீங்கள் மாலை வந்து அந்த நண்பருடன் பேச வேண்டும்'' என்றார்.



மாலை ஜனக்புரி பள்ளியில் ஆறுமுகம், கணேசன், தினகர் ராஜ், தமிழாசிரியர் ஸ்ரீனிவாசன் என்று ஒரு பட்டாளமே திரண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் வி.செல்வராஜன் அறிமுகமானார். தான் சுற்றுச்சூழல் குறித்து நிறைய வேலைகள் செய்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் இருந்தபோது சுற்றுச்சூழல் பற்றி மாணவர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தியிருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாக பணிமாற்றத்தில் தில்லிக்கு வந்தவர். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பல அமைப்புக்களுடன் இதே வேலையாக அலைந்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் தீவிரம் தெரிந்தது. தான் விரும்பும் ஒரு துறையை எந்த அளவுக்கு ஆழமாக நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய தீவிரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருந்தார். டீ குடிக்கும்போதும், நடக்கும்போதும், ஓய்வாக எங்காவது உட்காரும் போதும், ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பும் சில நொடி அவகாசத்திலும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்குப் போனதும் தொலைபேசியில் அழைத்து அதையே தொடர்ந்து கொண்டிருந்தார்.



செல்வராஜன், பள்ளி மாணவர்களுக்காக என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னார். திறந்த வெளி அரங்குக்கான நாடகமாக இருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கான நாடகப் பயிற்சிப் பட்டறை என்றதும் அளவு கடந்த உற்சாகம் பிறந்தது.



ஏற்கனவே ஒரு முறை þ எண்பதுகளின் இறுதியில் லட்சுமிபாய் நகர் தமிழ்ப் பள்ளியில் நானும் யதார்த்தா சார்பில் வெங்கட் நரசிம்மன், இளஞ்சேரன், குணசேகரன், நரசிம்மன் (நச்சு) இன்னும் பலரும் சில வார இறுதிகளில் சென்று கொஞ்ச நாட்கள் மாணவர்களுக்கு நாடகம் பயிற்றுவித்த இனிய நினைவுகள் இன்னும் பசுமையாக நெஞ்சில். அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் யதார்த்தாவின் தலைவராக இருந்த ஜி.எஸ்.சவுந்தர் ராஜன். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சென்ற செயற்குழுவில் தலைவராக இருந்தவர். அப்போதைய தில்லிக் கல்விக் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் என்னையும் யதார்த்தா நண்பர்களையும் ஏதோ படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்களையும் தளபதிகளையும் பார்ப்பது போன்ற சினேகமான பாவனையுடன் எதிர்கொண்டபோது எங்களை அரவணைத்து பல வகைகளிலும் உதவிகள் செய்து உற்சாகப்படுத்தியவர் சௌந்தர் ராஜன்.



எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மோதிபாக் பள்ளியில் ஒருமுறை ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தபோது எங்களைக் கடந்து சென்றார் ஒரு பள்ளி நிர்வாகி. அவருக்கு நாங்கள் வணக்கம் சொல்லவில்லை என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது போல ரிவர்ஸ் கியரில் திரும்பி வந்து யாருடைய அனுமதியின் பேரில் நாங்கள் இங்கு ஒத்திகை நடத்துகிறோம் என்று தனக்குத் தெரியாது என்றும், நாடக ஒத்திகை பள்ளி வளாகத்தில் திடீரென்று நடப்பதால் தலைநகரில் சட்டம் ஒழுங்கு பரவலாகக் கெட்டுப்போகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அதற்காக காவல் துறையின் துணையைத் தான் நாடவேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தவிர, நடிக்க வந்திருக்கும் ஒவ்வொருவரும் நடிக்கும் பாவனையில் பள்ளிக்குள் குடிக்கும் நோக்குடனே வந்திருப்பதாகவும் உடன் ஒரு பெண்ணும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதால் அங்கு இந்தியப் பண்பாடு பெருமளவில் சீர்கெட்டுப் போக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்தார். இவை போன்ற அச்சங்களின் அடிப்படையில் உடனடியாக ஒத்திகையை நிறுத்துமாறும் அப்படி நிறுத்த வில்லையென்றால் உடனடியாகக் காவல் துறையை அழைத்து ஒவ்வொருவரையும் கைது செய்ய வைக்க முடியும் என்றும் தான் பணிபுரியும் துறையால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் அன்பாக எச்சரிக்கை விடுத்தார்.



போகும்போது தான் அந்தக் காலத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருப்பதாகவும் அவர்கள் செய்ததை விட நாடகத்துறையில் தலைநகரில் வேறு யாரும் வந்து இனி ஒன்றும் செய்து விடமுடியாது என்னும் உபரித் தகவலையும் தந்து விட்டுச் சென்றார். எனக்குக் கொஞ்சம் புரிந்தது போல இருந்தது.



இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், அப்போது நாங்கள் எதிர்கொண்டவை இந்த சம்பவத்துக்கு ஒப்பீட்டு அளவில் சற்றும் குறையாத பல சம்பவங்கள். தலைநகரில் நாடகம் போடுவதால் ரசிகர்களிடையே கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருவாய்த்துறையை ஏமாற்றி, கீழாங்கரை, நீலாங்கரை போன்ற இடங்களõல் மர்ம மாளிகைகளை நான் வாங்கிப் போடுவது போலவும், தமிழ் நாடகம் வழியாக நான் ஈட்டும் கோடிக்கணக்கான வருமான வரி கட்டாத கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியை தமிழ்ப்பள்ளிகள் நடத்துவதற்கு தந்து உதவக் கடமைப்பட்டிருக்கிறோம் என்ற பாவனையிலும் நாங்கள் அப்போது நடத்தப்பட்டோம். இதுபோன்ற கடுமையான சூழலில் ஒத்திகைகளுக்குப் பள்ளி வளாகங்களை தைரியமாக வாதாடி எங்களுக்காக கட்டணம் ஏதுமின்றி ஏற்பாடு செய்தவர் சௌந்தர் ராஜன். அவர் ஒருநாள் திடீரென்று லட்சுமிபாய் நகர் பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப்பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். ஒரேயடியாக அங்கு ஒன்றும் செய்து விட முடியாது என்றும் வேண்டுமானால் வாரம் ஒரு மணி நேரம் ஒதுக்கித் தருவதாகவும் அந்த வாரம் ஒரு மணி நேரத்தில் குழந்தைகளுடன் செலவழித்து எப்போது முடியுமோ அப்போது ஒரு நாடகம் தயார் செய்ய வேண்டும் என்றும் பணித்தார். ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஒரு வகுப்பறையும் ஒதுக்கித் தந்தார்கள். சனிக்கிழமைகளின் மதியங்கள்.



சில வாரங்கள் நாங்கள் சொர்க்கத்தில் இருந்த தேவர்களாக இருந்தோம். ஆசிரியர்கள் யாரும் அந்தப் பக்கம் வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தோம். குழந்தைகளுடன் விளையாடினோம். நாடகப் பயிற்சி விளையாட்டுக்களை சொல்லிக் கொடுத்தோம். நாங்கள் நாடகம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இல்லையென்றும் அவர்களுடைய நண்பர்கள் என்றும் எல்லோரும் சேர்ந்து ஒரு நாடகம் தயாரிக்கப் போகிறோம் என்றும் குழந்தைகளுக்குப் புரியவைக்க ஓரிரு வாரங்கள் ஆனது. எங்கள் யாரையும் சார் என்று கூப்பிட வேண்டாம் என்றும் ஒரு தோழனை அழைப்பது போல பெயர் சொல்லி அழைத்தால் போதும் என்றும் சொல்லிக் கொடுத்தோம். சரோஜினி நகர் மார்க்கெட்டில் ஏதாவது வாங்குவதற்கு அலைந்து கொண்டிருக்கும்போது திடீரென்று கீச்சென்ற குரலில் ""கே...... பி...... என்று குரல் கேட்கும். பிள்ளை பிடிப்பவனிடமிருந்து மீட்பது போன்ற பெருமுயற்சியுடன் பெற்றோர் அந்தக் குழந்தையின் முதுகில் அறைந்து இழுத்துப் போவார்கள். பள்ளிக்கு வேறு ஏதாவது வேலைக்குப் போகும்போதும் ஏதாவது ஒரு வாண்டு அருகில் வந்து ""என்ன கேபி சௌக்யமா?'' என்று குசலம் விசாரித்துப் போகும்.



கொஞ்ச நாட்களுக்கு என் சகல பாவங்களையும் மன்னித்து இந்த மண்ணில் ஆண்டவன் எனக்காக ஏற்படுத்திக் கொடுத்த சொர்க்க நாட்கள் அவை. இப்போதும் சில நேரங்களில் நினைத்துப் பார்க்கும்போது நெகிழ்ச்சியில் விழியோரங்கள் ஈரமாகும். எதுவும் தொடர்ச்சியாக நிலைக்கும் ராசி இல்லை எனக்கு. ஒரு சில வாரங்கள் சௌந்தர் ராஜனுக்காக மரியாதையாக ஒதுங்கி இருந்த ஆசிரியப் பெருமக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மாணவர்களின் வகுப்புக்கள் கெடுகின்றன þ படிப்புக் கெட்டுப் போகின்றன என்றும் இப்படி ஒத்திகைகள் எதுவும் துவங்காமல் நாடகப் படி எதுவும் இல்லாமல் நாடகம் போடுகிறேன் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்கள் .மாணவர்களை அனுப்புவதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த ஆரம்பித்தனர். இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று உணர எங்களுக்கு சில வாரங்கள் பிடித்தன. ஆசிரியர்களும் அவர்கள் இடத்தில் நியாயமாகத்தான் இருந்தார்கள். அவர்களுக்கு இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் பழக்கமில்லை. குழந்தைகளின் படிப்பு என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. எனவே அந்தப் பள்ளியில் குழந்தைகளுக்கான நாடக முயற்சி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சௌந்தர் ராஜன் என்னைக் குறைபட்டுக் கொண்டார். கொடுக்கும் வேலை எதையும் நான் உருப்படியாக முடிப்பதில்லை என்று. அப்போது நாங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவருக்குப் புரியவில்லை. அதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தின் நிழலில் நாடகம் போடுவது சாத்தியமில்லை என்பது எங்களுக்கு மட்டுமே புரிந்தது.



செல்வராஜனை எங்கோ நிற்க வைத்துவிட்டு இங்கே வந்து விட்டேன். இப்படித்தான். சொல்ல வந்ததை விட்டு ஊரெல்லாம் சுற்றிக் கொண்டிருப்பேன். என்னை நன்றாகத் தெரிந்தவர்கள் பல நேரங்களில் என் தலையைக் கண்டதும் பேயைக் கண்டது போல தலைதெறிக்க ஓடுவதற்கு இதுபோன்ற என் நல்ல குணமும் ஒரு காரணம். சரி. இப்போதைக்கு இங்கு இடமில்லை. பள்ளி மாணவர்களுக்கு அளித்த நாடகப் பயிற்சி பற்றியும் அதன் அரங்கேற்றம் குறித்தும் கிடைத்த அனுபவங்கள் குறித்தும் அடுத்த இதழில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment