Tuesday, July 17, 2007

பக்கத்து ஊர் அரசியலும் ஒரு கைதும்...


ராகவன் தம்பி

என்னுடைய சிறிய வயதில் ஒரு ஆங்கிலப் புதுவருஷத்தை ஒட்டி வந்த புத்தாண்டு நாள்காட்டிகள் மற்றும் வாழ்த்து அட்டைகளில் இந்திரா காந்தியும் முஜிபுர் ரஹ்மானும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை நிறைய பார்த்து இருக்கிறேன்.

தற்போது முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹஸீனாவை ஊழல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது பங்களாதேஷ் அரசு.

எல்லா ஊரிலும் ஒரே கதைதான் போலிருக்கிறது.

ஒரு ஆட்சி போய் வேறொன்று வந்தால் முந்தி இருந்தவர்களின் செருப்புக்களை எண்ணுவார்கள். காலி சூட்கேஸ்களை தொலைக்காட்சி செய்திகளில் காட்டுவார்கள்.இவர்கள் போய் அவர்கள் வந்தால் முந்தி இருந்தவர்களை நடு இரவில் கதறக்கதற இழுத்துச் செல்ல வைப்பார்கள்.

ஏறத்தாழ அதே போன்ற கதைதான் இப்போது அங்கும்.

பங்களாதேஷ் நாட்டின் சற்று முன்னதான சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

1970ம் ஆண்டில் மிகக்கொடூரமான புயல் பாகிஸ்தானின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை சின்னாபின்னமாக்கியது. அப்போது இருந்த பாகிஸ்தான் அரசு கிழக்குப் பகுதியை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. பெங்காலி மொழி பேசும் மக்கள் நிறைந்த அப்பகுதியினர் அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டனர்.

கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1970 தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்று பாராளுமன்றத்தில் பதவியேற்கப் போனபோது அரசினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இது கிழக்குப் பகுதியில் இருந்து வங்காளி மொழி பேசும் கிழக்குப் பாகிஸ்தானியர்களின் கோபத்தை உச்சிக்கு ஏற்றியது. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் முஜிபுர் ரஹ்மானுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டார். சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட கையோடு முஜிபுரை மார்ச் 25, 1971ல் நள்ளிரவில் கைது செய்தார். அதைத்தொடர்ந்து ஆப்பரேஷன் ஸர்ச்லைட் என்னும் பெயரில் ஒரு கொடூரமான தாக்குதலை கிழக்குப் பாகிஸ்தானில் தொடுத்தது பாகிஸ்தான் ராணுவம். அந்தத் தாக்குதல் கிழக்குப் பாகிஸ்தானின் அறிவுஜீவிகள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத மக்களின் மீது மிகவும் வன்மையாகப் பாய்ந்தது. யாஹ்யாகானின் செயல்முறைகள் மிகவும் கொடூரமாக அமைந்தன. கிழக்குப் பாகிஸ்தானில் மிகக் கோரமான வன்முறைகள் அரங்கேறின. எதற்கும் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தெருக்களில் படுகொலை செய்யப்பட்டார்கள். லட்சக்கணக்கில் அகதிகள் இந்தியாவில் குவிந்தனர்.

இங்கு கதையை சற்று நிறுத்துகிறேன்.

நிகழ்காலத்துக்கு வருகிறேன்.

அப்போது அகதிகளாக வந்தவர்கள் இப்போதும் லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியிருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலர் இந்தியாவில் வீடு, மனை, மனைவி, காதலிகள், மக்கள் என்று சகல சௌகர்யத்துடன் வாழ்கிறார்கள் என்று பல கணக்கெடுப்புக்கள் சொல்கின்றன..

தலைநரில் இந்த பங்களாதேஷிகள் இன்னும் பல மையப்பகுதிகளில் குடிசைகள் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். சிலர் மிகப்பெரிய மாளிகைகளை எழுப்பியும் வாழ்கிறார்கள்..

இங்கு ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த அகதிகளாக வந்து இங்கேயே ஒட்டிப்போனவர்கள் ஒட்டு மொத்த ஓட்டு வங்கிகளாக அரசியல் விளையாட்டுக்களுக்கு உதவுகிறார்கள்..
தில்லியின் பல பகுதிகளில் இந்த பங்களாதேஷிகள் ரிக்ஷா ஓட்டுகிறார்கள்..

அவர்களின் மனைவிமார்கள் வீடுகளில் வேலை செய்கிறார்கள்..

பல இடங்களில் பங்களாதேஷிகள் பாக்கெட் சாராயம் விற்கிறார்கள்..

கஞ்சா மற்றும் போதைப் பொருட்களும் இவர்கள் வழியாகக் கடத்தப் படுகிறது என்ற குற்றச்சாட்டு பல தினசரிகளில் அவ்வப்போது காணக்கிடைப்பவை. விபச்சாரக் குற்றச்சாட்டுக்களிலும் இந்த பங்களாதேஷிகள் அடிக்கடி சிக்குவதுண்டு..

ஒவ்வொரு பாராளுமன்றத் தொடரிலும் உள்துறை அமைச்சகம் இவர்களைப் பற்றிய கேள்விகளுக்குத் தவறாமல் தவறான பதில்களை அளிக்கிறது என்று பொருமுகிறார்கள் உள்ளூர் இந்தி பத்திரிகையாளர்கள்..

சரி. மீண்டும் கதைக்குள் போவோம்..

அந்த நேரத்தில் கிழக்குப் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அப்பாவிகள் 300 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் என்று சொல்கிறார்கள்.முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்கள் கொல்கத்தா வந்து அங்கிருந்து அரசாங்கம் நடத்தினார்கள். பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பங்களாதேஷ் விடுதலைப்போர் ஒன்பது மாதங்களுக்குத் தொடர்ந்து நடைபெற்றது.கொரில்லா இயக்கமான முக்தி பாஹ்னி மற்றும் கலகப்படையைச் சேர்ந்த வங்காளிகள் இந்தியப் படைகளுக்கு இந்தியப் படையின் ஆதரவு கிடைத்தது.லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ்.அரோராவின் தலைமையில் நடைபெற்ற போரில் டிசம்பர் 16 1971 அன்று பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக இந்தியப்படைகள் மாபெரும் வெற்றியைக் கண்டது. சுமார் 90,000 பாகிஸ்தானியப் போர்வீரர்கள் போர்க் கைதிகளாக்கப் பட்டனர்..

சுதந்திர பங்களாதேஷில் முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ஆனார். 1973ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றியைக் கண்டது.1973 மற்றும் 74ல் பங்களாதேஷில் மிகக்கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. 1975ம் ஆண்டின் துவக்கத்தில் முஜிபுர் ரஹ்மான் பக்ஸல் என்னும் பெயரில் ஒற்றைக் கட்சி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். அவரும் தம்மிடம் கொள்கை வேறுபாடு கொண்டவர்களை யாஹ்யாகான் போல விசேஷமாகக் கவனித்துக் கொண்டார். நிறைய பேர்கள் இரவோடு இரவாகப் போட்டுத் தள்ளப்பட்டார்கள்.ஆகஸ்டு 15, 1975 அன்று நள்ளிரவில் சில ராணுவ அதிகாரிகள் நள்ளிரவில் முஜிபுரையும் அவருடைய குடும்பத்தையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள். இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் அவருடைய மகள் ஷேக் ஹஸினா அந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பி உயிர் பிழைத்தவர்..

அதையடுத்து மூன்று மாதங்கள் வன்முறைகள் தலைவிரித்து ஆடின. ஆட்சியைக் கைப்பற்ற பல உட்டாலங்கடி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.ஒருவழியாக பங்களாதேஷ் தேசியக் கட்சியைத் துவக்கிய ஜெனரல் ஜியா வுர் ரஹ்மான் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் மீண்டும் பல கட்சி முறையை அங்கு அமல்படுத்தினார். 1981ல் ஜியா வுர் ரஹ்மான் சில ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்..

அவருக்குப் பிறகு சொல்லக்கூடிய அளவில் ஜெனரல் உசைன் மொஹமது எர்ஷாத் ஆட்சியைக் கைப்பற்றினார். இவரும் பின்னாளில் பங்களாதேஷøக்கு உதவிகள் செய்து வந்த மேற்கத்திய நாடுகளால் வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டார்..

ஜியாவின் மனைவி கலிதா ஜியா 1991ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியைப் பெற்று அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆனார்..

1996ன் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார் கலிதா. ஆனால் 2001ல் நடைபெற்ற தேர்தலில் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹஸினா பங்களாதேஷ் தேசியக் கட்சியின் சார்பில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் பங்களாதேஷில் மாபெரும் வன்முறை வெடித்தது. அடுத்த தேர்தலை நடத்த ஒரு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. 1996 முதல் 2007 வரையிலான ஷேக் ஹஸீனாவின் ஆட்சியில் அவர்மேல் எக்கச்சக்கமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளன..

அரசியல் எதிரிகள் நான்கு பேரைப் படுகொலை செய்ததாகவும் அவர்மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..

இக்குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார் ஹஸீனா..

ஹஸினா மீது பங்களாதேஷ் தொழிலதிபர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார். தன்னைக் கொலை செய்வதாக ஹஸீனா மிரட்டியதாகவும் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டினார் அவர்.இதைத் தொடர்ந்து நேற்று காலை (16 ஜ÷லை 2007) காலை டாக்காவில் உள்ள ஷேக் ஹஸீனாவின் வீட்டில் புகுந்து சோதனை நடத்தயிருக்கின்றனர். பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார். சுமார் 50 வழக்கறிஞர்கள் வாதாடி இரண்டு மணிநேர விசாரணைக்குப் பின் ஹஸீனாவை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது..

ஹஸீனாவின் மகன் சாஜிப் வாஜத் ஜாய் எங்கோ அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு தனது தாய் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்டங்கள் வெடிக்கும் என்று உதார் விட்டிருக்கிறார்..

ஹஸினா கைதுக்குப் பிறகு அங்கங்கு வன்முறைகள் வெடித்திருக்கின்றன..

ஹஸினாவின் அரசியல் எதிரி காலிதா ஜியாவுக்கும் இடைக்கால அரசு சம்மன் அனுப்பியுள்ளது..

காலிதா எக்கச்சக்கமாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ராணுவத்தின் துணையுடன் அமைக்கப்பட்ட இந்த இடைக்கால அரசு ஏற்கனவே இந்த இரு பெண்மணிகளையும் நாடு கடத்தும் திட்டத்தில் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் இருந்து ஹஸினாவை பங்களாதேஷ் நுழையத் தடை விதித்திருந்தது இடைக்கால அரசு..

இப்போது இப்படிக் கைதுப் படலங்களைத் துவக்கியுள்ளது.இப்போது பங்களாதேஷில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று துரத்தித் துரத்தி ஜல்லியடித்துக் கொண்டு வருகிறார்கள்..

ஆகஸ்டு மாதம் கலிதாவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் வரவிருக்கிறது. அவரையும் உள்ளே அடைக்க நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன..

ஒரு அண்டை நாடாக இந்தியாவும் இதில் அக்கறை செலுத்தி வருவதாகவும் அங்கு ஜனநாயக ரீதியில் சட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடரவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருக்கிறது இந்தியா..

இந்தியாவுடன் ஒன்றும் அத்தனை நல்ல உறவு அல்லது நன்றியின் அடிப்படையிலான நட்பினை பங்களாதேஷ் என்றும் கடைப்பிடித்தது இல்லை. எங்காவது ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆப்பு ஒன்றை வைப்பதற்குத்தான் பங்களாதேஷின் எந்த அரசும் நேரம் பார்த்து வருகிறது என்று பலரும் சொல்கிறார்கள்..

அந்த நாட்டில் நடந்த ஒவ்வொரு ஆட்சிக்கவிழ்ப்பும் துரோகத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. துரோகம் அந்த நாட்டின் சரித்திரத்துடன் பிறந்து வளர்ந்தது..

எனவே இதுவும் வரப்போகும் தேர்தலையொட்டி பங்களாதேஷின் இடைக்கால அரசு எடுத்திருக்கும் உட்டாலங்கடி வேலைகள்தான் என்கிறார்கள்..

அது சரி..

நம் ஊரில் நாம் பார்க்காத ஊழல் குற்றச்சாட்டுக்களா? இல்லை, அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான எல்லோருமே மீண்டும் படாடோபமாக ஆட்சிப்பொறுப்பை ஏற்பதில்லையா?.

மாயா ஜாலங்கள் புரிவதில்லையா?

ஜெயஜெய கோஷங்கள் கிளம்புதில்லையா?.

இவர்கள் அனைவரின் மீதும் கருணைப் பார்வையை வாக்காளர்கள் மீண்டும் பொழிவதில்லையா?.

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா... என்கிறார் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர்.

3 comments:

  1. Nice photograph of India Gate. Why don't you
    enter this in the tamizmanam contest!

    ReplyDelete
  2. The number of people killed in the then East Pakistan, prior to 1971 War, was not 300 Lakhs. There must be some typing mistake. Please check & correct - M. Hariharan

    ReplyDelete
  3. கிழக்கு பாகிஸ்தானில் 1971 போருக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று லட்சம்.

    சொதப்பல் என்னுடையது.
    சுட்டிக்காட்டிய ஹரிஹரனுக்கு நன்றி.

    ராகவன் தம்பி

    ReplyDelete