Wednesday, July 18, 2007

கொலையில் முடியும் சாலை வாதங்கள்..


ராகவன் தம்பி

நேற்று இரவு 10.30 மணி அளவில் நடுசாலையில் ஒரு மனிதரை ஐந்து இளைஞர்கள் கட்டையால் தாக்கியும் பாறாங்கல்லை முகத்தில் எறிந்து நசுக்கிக் கொன்று இருக்கிறார்கள்.

தெற்கு தில்லியின் லாடோ சராய் சாலையின் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் ஜிதேந்தர் பவார் என்பவர் ஓட்டி வந்த கார் மீது குறுக்குச்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியிருக்கிறது. அந்த மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் ஓட்டி வந்திருக்கிறார்கள். அவர்களிடம் சண்டைக்குப் போயிருக்கிறார் ஜிதேந்தர்.

சண்டையெல்லாம் முடிந்தது. அந்த மனிதரும் காரை ஓட்டித் தன் வழி நோக்கிச் சென்றிருக்கிறார்.

அடுத்த நிறுத்தத்தில் மரணம் அவருக்காகக் காத்திருந்திருக்கிறது.

சண்டை போட்டுப் போன இளைஞர்கள் இன்னும் மூவரை சேர்த்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் அவருக்காகக் காத்திருந்தனர். சிகப்பு விளக்குக்காக இவருடைய காரை நிறுத்தியபோது ஐந்து இளைஞர்களும் இவரைச் சூழ்ந்து கொண்டு பேஸ்பால் மட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள்.

இவர் கொஞ்சம் சமாளித்து இருக்கிறார். உடனே அந்த இளைஞர் கும்பல் ஒரு பெரிய கல்லை எடுத்து அவரைத் தாக்கியிருக்கி விட்டு ஓடிப்போயிருக்கிறார்கள்.

நடுச்சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார் ஜிதேந்தர்.

அந்தப் பக்கம் பணியில் இருந்த ஒரு காவலர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

பாவம்.

வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களையும் தில்லி போலீஸ் கைது செய்திருக்கிறது. ஐந்தாவது இளைஞன் எங்கோ தலைமறைவாக இருக்கிறான்.

கொல்லப்பட்ட ஜிதேந்தருக்கு மனைவியும் 13 வயதில் ஒரு மகனும் 13 வயதில் மகளும் இருக்கிறார்கள்.

அவர் மறுநாள் காலை தன்னுடைய பாட்டியை உபியில் இருக்கும் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக சற்று சீக்கிரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று கிளம்பினாராம்.

என்ன ஆனது தில்லிக்கு?

இது ஏதோ புதிய சம்பவம் கிடையாது. தில்லி சாலைகளில் எங்காவது ஓரிடத்தில் இது போல வாகன ஓட்டிகள் அடுத்தவர்களைத் தாக்குகிறார்கள்.சிறிய வாக்குவாதம் கூட மிகப்பெரிய குற்றத்தில் போய் முடிகிறது. தில்லியில் யாரிடமும் சாலையில் வாக்குவாதம் செய்யவே பயமாக இருக்கிறது.

என்னுடைய போலீஸ் நண்பர் ஒருவர் சொன்னார் - தில்லியில் அநேகமாக எல்லாக் கார்களிலும் இளைஞர்கள் கிரிக்கெட் மட்டை, பேஸ்பால் மட்டை, சைக்கிள் சங்கிலி போன்றவற்றுடன்தான் பயணிக்கிறார்களாம்.

முதல் கட்டத்தில் வாதத்துக்கு வரும் எதிராளிகள் சற்று பயப்படுவார்கள்.

அப்படி அந்த எதிராளியிடமும் ஏதாவது இப்படிப்பட்ட வஸ்து இருக்கும் பட்சத்தில் மோதல் வலுக்கும். வன்முறைக் காட்சிகள் அரங்கேறும். அப்பாவிகள் நடுசாலையில் இப்படிக் கொல்லப்படுவார்கள்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு தில்லியில் ஒரு இளைஞர் காரில் செல்பேசியில் பேசிக்கொண்டே வந்திருக்கிறார். ஒரு காவலர் வண்டியை நிறுத்த முயன்றிருக்கிறார். அந்த இளைஞர் நிறுத்தாததால் அந்தக் காவலர் வண்டியைக் குறுக்கில் நின்று நிறுத்த முயற்சித்திருக்கிறார். வண்டியை அந்தக் காவலரின் மீது ஏற்றித் தூக்கி எறிந்து விட்டு விரைந்திருக்கிறார் அந்த இளைஞர்.

சாலையில் வன்முறைச் சம்பவங்கள் இரண்டு காரணங்களால் அதிகமாகின்றன.

ஒன்று பலர் மது அருந்திவிட்டு வண்டியோட்டுவது.

இன்னொன்று நாளுக்கு நாள் குறைந்து வரும் சகிப்புத் தன்மை.

மது அருந்திவிட்டு சாலையில் வன்முறையில் ஈடுபடும் குற்றங்கள் ஒரு மாதத்துக்கு தில்லியில் ஆயிரக்கணக்கில் பதிவாகின்றன.

ஒரு கார் மீது இன்னொரு வண்டி லேசாக உரசிவிட்டாலும் பல ஆயிரங்களை நஷ்ட ஈடாகக் கேட்டு சண்டைக்கு வருவார்கள். பேச்சு வலுக்கும்போது இப்படிப் பட்ட வன்முறைக்காட்சிகள் அரங்கேறும்.

வாக்குவாதங்கள் காவலர் முன்னிலையில் நடந்தால் காவலர்களுக்குக் கொண்டாட்டம்தான். இருபக்கமும் அன்று அவர்களுக்கு வரும்படி கிடைக்கும்.

மாலன் என்னுடைய ஒரு வலைப்பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பதுபோல பொதுவாகவே தில்லி அதிகாரம் படைத்தவர்களுக்கு, அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்குமாக உருவாக்கப்பட்ட நகரம். மற்றவர்கள் எல்லாம் இங்கே வெறும் துரும்பு.

இது முற்றிலும் சத்தியமான நிஜம். உங்களுக்கு யாராவது ஒரு பெரிய புள்ளியைத் தெரியும் என்றால் இங்கு நீங்கள் குறைந்தது ஒரு ஆறு பேரை உங்கள் காரில் நசுக்கிக் கொன்றுவிட்டு வெளிநாட்டில் எங்காவது சொகுசாகத் தங்கிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

அல்லது நடு இரவில் இன்னும் கொஞ்சம் மது ஊற்றித் தரவில்லை என்பதற்காக அங்கு பணிபுரியும் பெண்ணை சுட்டுக்கொல்லலாம்.

ல்லது உங்களுடன் தகராறு செய்த காதலியை தந்தூரி அடுப்பில் சுட்டு எரிக்கலாம்.

எனவே, சாலைத் தகறாறுகளில் ஈடுபடும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியம் கிடைக்கிறது.
அவர்களுடைய அகங்காரமும் பணத்திமிரும் இவைபோன்ற காரியங்களில் ஈடுபட வைக்கின்றன.

இன்னும் ஓரிரு சம்பவங்களை சொன்னால் தில்லியின் இளைஞர்களின் மனவெளியில் ததும்பி வழியும் வன்முறையின் கோரமுகங்கள் உங்களுக்குப் பிடிபடலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, திலக் மார்க் (அல்லது மின்டோ பிரிட்ஜ்) உள்ளூர் ரயில் நிலையத்தில் - இந்த ரயில்கள் ஃபரீதாபாத் அல்லது காஜியாபாத் போன்ற இடங்களுக்குச் சென்று வரும் ஏதோ ஒரு வண்டி அந்த நிறுத்தத்தில் நின்றிருக்கிறது. குறைந்தது மூன்று நிமிடங்களுக்கு அங்கு வண்டி நிற்கும்.

வண்டியில் இருந்து இறங்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவன் பிளாட்பாரத்தில் இருந்த ஒரு கடையின் வாசலில் பான் சாற்றினைத் துப்பியிருக்கிறான். கடைக்காரர் ஆட்சேபித்து இருக்கிறார். வாதம் வலுத்த அடுத்த நொடியில் ஒரு இளைஞன் சரேலென்று கத்தியை எங்கிருந்தோ எடுத்து அந்தக் கடைக்காரரின் வயிற்றில் பலமுறை மாறிமாறிக் குத்தி விட்டு ஓடும் ரயிலில் ஏறி ஓடிவிட்டான். அவனைப் பிடித்தார்களா என்பது தெரியவில்லை.

அதே போல என்னுடைய இன்னொரு சனிமூலை கட்டுரையில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படிக்காதவர்களுக்காக மீண்டும் இங்கே...

ஒரு முறை தில்லியின் ஒரு நாற்சந்தியில் சிகப்பு விளக்கு எரிந்ததும் எல்லா வண்டிகளும் நின்றன. ஒரு காரில் சுமார் ஏழு பையன்கள் அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அந்த நிறுத்தத்தில் ஸ்கூட்டர் ஓட்டி ஒருவர் இடதுபுற ஓரமாக மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பையன்கள் உட்கார்ந்திருந்த காரின் இடது பக்கக் கதவைக் காரணமே இல்லாமல் ஒரு பையன் திறந்து மூடினான். ஸ்கூட்டர்காரர் நிலைதடுமாறிப் போனார். பதறிக்கொண்டே வண்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினார். நிறுத்திய வேகத்தில் அந்தப் பையன்களைப் பார்த்துக் கத்தினார், ""உங்களுக்கு அறிவு ஏதாவது இருக்கா?'' உள்ளேயிருந்து ஒரு பையன் ""இவ்வளவு இருந்தா போதுமா பாரு'' என்று சொல்லிக்கொண்டே நீளமாக ஒரு பிச்சுவாக் கத்தியை அவர் முகத்தின் எதிரில் நீட்டினான். ஸ்கூட்டர் ஓட்டி மட்டுமல்ல. நிறுத்தத்துக்காக அங்கங்கு நின்று கொண்டிருந்த நாங்கள் எல்லோருமே பயத்தில் உறைந்து போனோம். அந்த ஸ்கூட்டர் ஓட்டி பதறிக்கொண்டே போய் நாற்சந்தியில் நின்றிருந்த ஒரு காவலரை அழைத்து விஷயத்தை சொன்னார். அவர் சொல்லச்சொல்ல விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியது. பையன்கள் இருந்த கார் காற்றைக் கிழித்து விரைந்தது. போகும் வேகத்தில் அந்தப் பையன்கள் ஸ்கூட்டர் ஓட்டியின் சகோதரியை மிகவும் பெரிய கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப்போனார்கள். அந்தக் காவலர் சிரித்துக்கொண்டே சொன்னார், ""ஏதோ இதுவரைக்கும் தப்பிச்சது நீங்க பண்ண புண்ணியம்னு எடுத்துக்கங்க. இந்நேரம் உங்களைப் போட்டுத் தள்ளியிருந்தா நீங்க எங்கே இருந்திருப்பீங்க? இந்த மாதிரிப் பசங்க கிட்டே எல்லாம் அதிகம் வச்சிக்காதீங்க என்று அன்புடன் தைரியமும் ஆறுதலும் சொல்லி அனுப்பினார்.

சில மாதங்களுக்கு முன்னால் நேற்று நடந்தது போல நடுசாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவரை சில இளைஞர்கள் அடித்துக் கொன்றபோது தில்லி போலீசார் தினசரிகளில் நிறைய புத்திமதிகளை வழங்கினார்கள். அவற்றில் மிகவும் முக்கியமானவை -

உங்கள் வாகனத்தின் மீது யாராவது இடித்துவிட்டால் சண்டைக்குப் போகாதீர்கள்.

முடிந்த வரை நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள்.

எனக்குத் தோன்றுகிறது. இந்த அறிவுரையில் எவ்விதத் தவறும் கிடையாது. விட்டுக்கொடுத்து வந்து விடுவதனால் நமக்குப் பெரிய அளவில் ஒன்றும் நஷ்டம் வந்து விடப்போவதில்லை. இன்னொன்று நாம் எந்தக் கோட்டையிலும் ஏறிக் கொடியேற்றப் போவதில்லை.

தில்லியில் உண்மையாகவே இளைஞர்களுடன் வாதத்தில் ஈடுபட மிகவும் அச்சமாக இருக்கிறது. அவர்கள் மனங்களின் ஓரங்களில் எங்கோ ஒரு மூலையில் வன்முறை அரக்கன் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறான். தன்னுடைய கோரைப்பற்களுடன் அவன் எந்தக் கணத்தில் வெளிப்படுவான் என்று யாராலுமே அனுமானிக்க முடிவதில்லை.

இன்னொன்றும் இருக்கிறது.

இது ரொம்ப முக்கியமான விஷயம்.

வேண்டாம். சொல்ல வேண்டாம்.

இப்படித்தான் ஷீலா தீக்ஷித் போன்ற முதல்வரே வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் எதையோ சொல்லி எக்கச்சக்கமாகத் திண்டாடினார் சில மாதங்களுக்கு முன்பு.

நான் மிகச் சாதாரணன். ஏதாவது யதார்த்தத்தைச் சொல்ல வாயெடுத்தால் என்னைக் கிழித்துத் தோரணம் கட்டி விடுவார்கள். எனக்கு எதற்கு வம்பு?

என் வண்டியை நான் ஜாக்கிரதையாக ஓட்டிக் கொள்கிறேன்.

என்மீது யாராவது வம்படியாக இடித்தாலும் அப்படி இடித்தவர்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து விலகிவிடுகிறேன்.

ஏதாவது தண்டம் அழவேண்டும் என்றாலும் நான் தயார்.

சாலையில் அடிபட்டு வீணாக ரத்தம் சிந்தவேண்டாமே.

2 comments:

  1. உண்மைதான் வந்த புதிதில் ரிக்ஷாவில் போன ஒரு பெண் சரியாக ஓட்டவில்லை என்று ரிக்ஷாக்காரனை அறைந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனேன்.. இங்கேல்லாம் இரு வண்டி இடித்தால் முதலில் தப்பு செய்தவன் தான் குரல் உயர்த்துகிறான். பதிலுக்கு குரல் வந்தால் அடியில் முடியும் ...அடி அதிகமானால் கொலையும் விழும்..கார் கதவை திறக்காமல் போனால் நம் உயிருக்கு உத்தரவாதம் என்னும் நிலைமைஆகிவிட்டது.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

    தாமதமான நன்றியறிவித்தலுக்கு என்னை மன்னிக்க வேண்டும்.

    ராகவன் தம்பி

    ReplyDelete