Friday, May 9, 2008

சனிமூலை

வைணவ சம்பிரதாயத்தில் இரண்டு வகையான மார்க்கங்களைக் குறிப்பிடுவார்கள். ஒன்று மர்ஜய நியாயம். இன்னொன்று மர்க்கட நியாயம்.


அதாவது தாய்க்குரங்கையும் குட்டிக் குரங்கையும் பார்த்து இருப்பீர்கள். தாய்க்குரங்கு அங்கும் இங்கும் ஏறித் தாவிக் குதித்து சென்று கொண்டே இருக்கும். அதன் வயிற்றில் தொங்கும் குட்டி தாயின் வயிற்றை இறுகப் பற்றி இருக்கும். தாய்க்குரங்கு குட்டியைப் பற்றிக் கவலைப்படாது எங்கு வேண்டுமானாலும் ஏறித்தாவிப் பயணித்துக் கொண்டிருக்கும். குட்டிக் குரங்கு கீழே விழாதபடிக்குத் தாய்க்குரங்கின் வயிற்றை இறுகப் பிடித்திருக்கும். குரங்குக் குட்டி எப்படித் தன் தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொள்ளுமோ அதுபோல மனிதன் தன் முயற்சிûயுயம் சேர்த்து இறைவனை சரணாகதி புகுவது மர்ஜய நியாயம்.


தாய்ப் பூனையானது தன் குட்டியை அதன் கழுத்தில் கவ்விப் பிடித்து அங்கங்கு பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்கும். குட்டிப்பூனை யாதொரு பிரயாசையும் இல்லாது தன் பாட்டுக்கு இருக்கும். தாய்ப்பூனை அதனைக் காபந்து பண்ணிக் கொண்டிருக்கும். தாய்ப்பூனை தன் குட்டியைக் கவ்வுவது போல இறைவனே மனிதனை ரட்சிக்கிறார். நானொன்றுமறியேன். நீயே என்னைக் காத்தருள வேண்டும் என இறைவனின் பாதத்தில் சரணாகதியாக இருப்பது மர்க்கட நியாயம்.


வைணவத்தின் வடகலை மரபினர் மர்க்கட நியாயத்தையும் தென்கலை மரபினர் மர்ஜய நியாயத்தையும் கைக்கொள்கின்றனர் என்பார்கள்.


தமிழ் கூறும் நல்லுலகில் இப்போது கவியரங்கம் என்பது அங்கங்கு அடிக்கடி நடக்கும் ஒரு விசேடச் சடங்காக மாறி வருகிறது. அதுவும் ஊடகங்களின் படையெடுப்பு செழுமையடைந்த பின்னர் கவியரங்கங்களின் எண்ணிக்கையும் ஒருவகையில் கூடித்தான் வருகிறது. சுதந்திர நாள், குடியரசு நாள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஈத் பெருவிழா மற்றும் இப்போது மேலைய நாடுகளின் தாக்கத்தில் கொண்டாடப்படும் தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், மாமனார் தினம், மாமியார் தினம், மச்சினிகள் தினம், மச்சினர்கள் தினம், அத்திம்பேர்கள் தினம், அத்தங்காக்கள் தினம், காதலர் தினம், கைவிட்டவர்கள் தினம், விவாகரத்து பெற்றவர்கள் தினம் போன்ற விசேட நாட்களிலும் பல நட்சத்திரக் கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கங்கள் வீடுதேடி இம்சித்து விட்டுச் செல்லும்.


இது தவிர, தமிழில் நடத்தப்படும் கவியரங்கங்களுக்குத் தொடர்ச்சியாக நட்பு கருதியும், ஊழ்வினைப் பயனாலும் மேலாளர்களுக்கு வெண்ணெய் அடிக்கும் உயர்ந்த நோக்கத்துடனும் கவியரங்கத்துக்குச் செல்லும் என்னைப் போன்றவர்களைக் காத்து ரட்சிப்பது - எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.


எனவே வைணவத்தில் மர்க்கட நியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் பூனைக்குட்டியின் நிலைக்கு எந்த வகையிலும் குறையாதவர்கள் தமிழில் கவியரங்கங்களுக்குச் செல்லும் என்னைப் போன்றவர்கள் என்று சொல்லலாம்.


எல்லா மொழிகளிலும் கவிதையை மதிக்கிறவர்களை, கவிதையை நேசிக்கிறவர்களை, கவிதை என்னும் இலக்கிய வடிவத்தினைக் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறவர்களைக் கேட்டால், கவிதை என்பது ஒரு மலர் போல, ஒரு தென்றல்போல தானாக மலர்ந்தும் தவழ்ந்தும் வரவேண்டிய ஒரு விஷயம் என்று அடிப்படையாக ஒன்றைச் சொல்வார்கள். மலராக மலர்ந்து, தென்றலாகத் தவழ்ந்து வரும் கவித்துவம் சற்று மொழி நுட்பங்களையும் அழகியலையும் சேர்த்துக் கொண்டு ஒரு அழகியல் அனுபவமாக, அனுபவத்தை முகிழ்க்க வைக்கும் ஒரு செயல்பாடாக இருக்கலாமோ? இது ஒரு முடிவான விஷயமாகவும் இருக்காது என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு ஒவ்வொரு கோஷ்டிக்கு வேண்டிய கவிதைக் கோட்பாடுகள் என்று பின்னர் எதையோ தொட்டுத் தொடர்ந்து வரலாம்.


முன்னொரு காலத்தில் கவிதை எழுதுகிறவர்களுக்குக் கவிதையியலின் அடிப்படை இலக்கண ஒழுங்குகள் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்தது. தமிழ் படித்த பண்டிதர்களும் புலவர்கள் மட்டுமே, யாப்பிலக்கணம் தெரிந்தவர்கள் மட்டுமே கவிதை எழுதமுடியும் என்று இருந்தது. இதுபோன்ற தளைகளில் இருந்து விடுபட்டுப் புதுக்கவிதை யுகம் பிறந்தது. கவிதை புனைவதற்கான அடிப்படை இலக்கண விதிகளைப் புறக்கணித்து பாடுபொருளைப் பிரதானமாக வைத்து இயக்கங்கள் தோன்றின. இது மிகவும் அற்புதமான விஷயம். ஒரு மொழியின் இலக்கியப் பரப்பில் நேர்ந்த ஒரு யுகப்புரட்சி. ஒரு இலக்கண வடிவின் அடுத்த சக்தி மிளிர்ந்த பரிணாமம் இந்த மாற்றம்.


ஆனால் ஒரு முக்கியமான ஆபத்தும் உடன் தொடர்ந்து நிகழ்ந்தது. அந்த ஆபத்து என்னவென்றால் இந்த மாற்றம் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தது ஒரு பத்துக் கவிஞர்களை உருவாக்கியது. சுந்தரராமசாமி எங்கோ எழுதியது போல நான் சந்திக்கும் யாரும் இதோ நான் எழுதிய கவிதை என்று காட்டாத ஒரு நல்ல தமிழரை சந்திக்க வேண்டும் என்கிற ஆசையை இந்த மாற்றம் அதிகப்படுத்தியது. எதை வேண்டுமானால், என்னத்தை வேண்டுமானால் மடக்கி மடக்கி எழுதிக் கவிப்புனலாகவும், கவிதை அருவியாகவும், கவிச்சிங்கங்களாகவும், புலிகளாகவும் மாறிப்போகலாம் என்கின்ற ஒரு ஆபத்தும் உடன் தொடர்ந்து வந்தது.


இந்த ஆபத்தின் நீட்சி கவியரங்க மேடைகளிலும் விஸ்வரூபம் எடுத்துத் தொடர்ந்தது.


பட்டிமன்றத்தைப் போலவே கவியரங்கத் தலைப்புக்களுக்கும் அவர்கள் பாடும் பொருளுக்கும் தொடர்பு எங்கு தேடினாலும் கிடைக்காது. தொண்டை கிழியக் கத்தும் இரைச்சல்கள் தான் அதிகமாக மிஞ்சும். ஏற்கனவே சொன்னது போல, கவிதை என்பது ஒரு மலராக, தென்றலாக உள்ளார்ந்த ஒரு உணர்ச்சியாக மிகச்சரியான வார்த்தைகளைத் தானே தேர்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம். பல நேரங்களில் வார்த்தைகளுக்கு இடையில் உறைந்திருக்கும் மௌனமே கவிதையாக உருமாறும் விந்தை பல நல்ல கவிதைகளில் காணக்கிடைக்கும். உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால், கங்கை பிரவாகப் பாயும் ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இதை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். ஆற்று நீர்ப்பிரவாகம் ஆரவாரத்துடன் செல்லும் ஓசையின் இடையில் ஒரு நிமிடத்துளியின் இடையில் ஒரு சிறுகீற்றில் சட்டென்று மலர்கின்ற ஒரு அமைதி உங்களை ஒரு மாதிரியான தியான நிலைக்கு இழுத்துச் செல்லும். அந்த அமைதியை, அதாவது வார்த்தைகளுக்கு இடையில் உறைந்திருக்கும் மவுனமே பல அதிர்வெடிக் கருத்துக்களை சுமந்திருக்கலாம். சும்மா கூச்சல் போட்டுத்தான் எதையும் சொல்லியாக வேண்டும் என்பதில்லை இல்லையா?


ஆனால் நம்மூர்க் கவியரங்கக் கோமான்கள் செய்கின்ற காரியம் என்னவென்றால், தெருவில் விளையாடும் சிறுவர்கள் நாய்க்குட்டியின் கழுத்தில் கழுத்தை இறுக்கக் கட்டி அதைத் தரதரவென்று இழுத்துச் செல்வதைப் போலக் கவிதையின் கழுத்தில் வார்த்தைகளைக் கட்டி இழுத்துச் செல்வார்கள். அந்தக் குட்டி நாய் நான்கு கால்களையும் பரக்க விரித்துக் கொண்டு அங்குலம் கூட நகராமல் முரண்டு பிடித்து நிற்குமே அது போல கவிதை அனுபவமும் மேடையின் எங்காவது ஒரு மூலையில் எங்கும் நகராது முரண்டு பிடித்து நிற்கும். அப்போது அந்தக் கவியரங்கம் நடக்கும் அரங்கில் பூனைக் குட்டியைப் போல இறைவனிடம் முழுச்சரணாகதி அடைந்து கிடப்பவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். அங்கு எவ்விதமான கவிதா அனுபவமும் நிற்காது. வெற்றுக் கூச்சல்கள்தான் மிஞ்சும்.


கவியரங்க மேடைகளில் பாடுபொருள் என்பது அநேகமாக எந்தக் கவிஞனின் கவிதையிலும் தேடினாலும் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கும். ஒரு கவிதையின் அதிக நேரம் கவியரங்கத் தலைவருக்கு வெண்ணெய் அடிப்பதிலேயே கழியும். அதுவும் அந்தத் தலைவர் விதிவசமாக ஏதாவது அமைச்சராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ இருந்துவிட்டால் அந்தக் கவிஞனுக்கும் அவன் பாடும் கவிதைக்கும் எதுவும் தேவையில்லை. மேடையில் இருக்கும் அந்தத் தலைமைக் கவிஞருக்கு லாலி பாடுவதிலேயே பெரும்பொழுது கழியும். ஏறத்தாழ 99.90 சதவிகித ஜால்ரா இரைச்சலுக்குப் பின் போனால் போகிறதென்று ஒரு சிறு அளவில் பாடும் பொருள் அந்தக் கவிதையில் இடம்பெறும். கவியரங்கக் கவிச்சிங்கம் தலைவரின் கட்சியை சார்ந்தவராக அமைந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. தமிழ், தன்மானம் எல்லாம் தொலைத்து அந்தத் தலைவரின் காலில் விழுந்து விழுந்து தெண்டனிட்டு மானத்தை வாங்கித் தொலைக்கும். தலைவருக்கே போதும் போதும் என்று போகும் அளவில் ஜால்ரா சத்தம் காதைப் பிளந்து தள்ளிவிடும்.


அப்படி அரசியல் தலைவர் இல்லாத பட்சத்தில் உள்ளூர் லோக்கல் கவிச்சிங்கம் ஏதாவது அந்தக் கவியரங்கத்துக்குத் தலைமை வகித்தால் ஆண் பெண் என்கின்ற வர்ஜா வர்ஜியமில்லாது அந்தத் தலைமைக் கவிஞரின் அங்கலாவண்யங்கள் - அதாவது தலைவரின் உயரம், தலைமுடி, மீசை, நிறம், தொப்பை இத்தியாதி விஷயங்கள் பாடுபொருளாகும். எஞ்சிப்போன கொஞ்ச நேரத்தில் மற்ற கவிஞர்களைக் கால் வாரி விடுவதில் பொழுது கழியும்.


இதில் உச்சகட்டக் கொடுமை என்பது பட்டிமன்றப் பாணியில் ஏட்டிக்குப் போட்டி வாதாடுமன்றமாக அமையும் கவியரங்கங்கள்தான். இதில் எதிர் அணியினருக்கு சவால், அவர்களுடைய அந்தரங்கங்கள், ""அக்காவைக் கேட்டேன் - மாமா அசமஞ்சம் என்று அங்கலாய்த்தார்'' போன்ற கவித்துவ வரிகள் துள்ளிக்குதிக்கும். எதிர் அணியில் இருப்பவர் எந்த சொந்த மூட்டையை எப்போது அவிழ்த்து விடுவாரோ என்று அதற்கு எதிர் அணியில் இருக்கும் கவிக்கோமகன் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் திகில் மூட்டும் சம்பவங்களும் நடைபெறும். மேலே சொன்ன பல அம்சங்கள் தமிழ் தொலைக்காட்சிக் கவியரங்கங்களிலும் நடக்கும். எப்போதாவது நேரம் கிடைத்தால், அரசுத் தொலைக்காட்சியில் உருதுக் கவிஞர்களின் ""முஷையரா'' (கவியரங்கம்) கேட்டுப் பாருங்கள். அங்கு என்ன மாதிரி ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்று பாருங்கள். பிறகு நம்முடைய தொலைக்காட்சி கவியரங்கங்களையும் பாருங்கள். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்.



அடுத்து நமக்கே உரிய வழிபாட்டுக் கலாச்சாரம். இந்த வழிபாட்டுக் கலாச்சாரம் கேள்வி முறை எதுவும் இல்லாது எதுவரை வேண்டுமானாலும் செல்லும்.


பெரியவர் அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருடைய பெயர் அமர்க்களப்படாத கவியரங்க மேடைகளே இல்லையென்று சொல்லிவிடலாம். ""கலாமுக்கு சலாம்'' என்று சொல்லாத லோக்கல் சில்லறைக் கவிஞனே எவனும் இல்லையென்கின்ற அளவில் இமயமலை உச்சியிலிருந்து காரிமங்கலம் நரிமேடு வரை கவிதை எழுதுகிற எல்லோரும் ஒரு எதுகை மோனை சமாச்சாரத்துக்காக கலாமுக்கு சலாம் என்று சொல்லிப் படுத்தினார்கள். அவருக்கே போதும் போதும் என்று போகிற அளவில் படுத்தி எடுத்தார்கள். அதே போல, எந்த வகையிலும் கவிதை என்று சொல்ல முடியாதவற்றை பெரியவர் கலாம் எழுத முயற்சித்த போது அவர் பதவியில் இருந்த ஒரே காரணத்துக்காக அவற்றைக் கவிதைகள் என்று கொண்டாடினார்கள். நீங்கள் அவரையே கேட்டீர்கள் என்றால் தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று ஒப்புக்கொள்வாரா என்று தெரியாது.


அதை விடக் கொடுமை என்னவென்றால், கவிதைகள் என்று நினைத்துப் பெரியவர் கலாம் எழுதிய ஏதோ ஒன்றுக்கு இசையமைத்துப் பாடத்துவங்கினார்கள் சில இசைமேதைகள். சில நடனமணிகள் ஒருபடி மேலே போய் அந்த ஏதோ ஒன்றுக்கு இசையமைத்து நாட்டிய வடிவமும் கொடுத்து ஸ்பான்சர்களிடம் எக்கச்சக்கமான சில்லறையை ஏற்பாடுசெய்து கொண்டார்கள். சில அமைப்புக்கள் பெரியவரையே சில கவியரங்க மேடைகளுக்குத் தலைமை தாங்க அழைத்தார்கள். அந்தக் கவியரங்க மேடைகளிலும் பெரியவரே பாடுபொருளானார். அது அவருக்கு நிச்சயமாகப் பிடித்து இருந்திருக்காது. அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவரே கூச்சப்படும் அளவுக்கு மாறிமாறி சலாம் அடித்து அவரையும் பார்வையாளர்களையும் மாறி மாறி வதைத்துக் கொண்டிருந்தார்கள்.


இப்படிக் கவியரங்க மேடைகளை வழிபாட்டுத் தலங்களாக மாற்றியமைக்கும் பெருமை நம்முடைய தமிழ்க் கவிஞர் பெருமக்களுக்கு மட்டுமே உண்டு. நல்ல பொருள் பொதிந்த கவிதைகளை, தலைப்பைத் தழுவிய கவிதைகளை, செறிவும், தெளிவும், அழகும் பொதிந்த கவிதைகளை எப்போதாவது நமது கவியரங்க மேடைகளில் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானே?


ஜளவரி 2008 வடக்கு வாசல் இதழில் வெளியானது.

1 comment:

  1. சனி மூலையானாலும் சொல்லும் விதயம் நேராகவும் ஜோராகவும் இருக்கிறது.
    இணைய வலைப்பக்கங்களிலும் பல 'கவுஞர்கள்' வெறியோடு 'உணர்ச்சி வடிகாலாய்' 'கவுஜ' எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஏதாவது சொன்னால் வேப்பிலையைக் கட்டிக்கொண்டு ஆட ஆரம்பிப்பார்கள்.

    ஆத்தா...ஏ..ஆத்தாஆஆஆஆஆஆஆ

    தாங்கவில்லை !!!!!!!

    ReplyDelete