Saturday, May 10, 2008

நாற்பது ஆண்டுக்கால உறக்கம் - ஒரு இலக்கியச் சொற்பொழிவு

நேற்று (9 மே 2008) தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பெ.சீனிவாசன் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றினார். தலைப்பு - தமிழ் அன்றும் இன்றும்.
இப்போது அதிமுகவில் இருக்கும் சீனிவாசன் அந்தக் காலத்தில் திமுக சார்பாக விருதுநகரில், பெருந்தலைவர் காமராசரைத் தோற்கடித்தவர். தமிழக சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக இருந்தவர். மதியழகன் சபாநாயகராக இருந்தபோது அவையில் எற்பட்ட ஒரு பெருத்த விவாதத்தின் போது தானே ஒரு நாற்காலியை சபாநாயகரின் இருக்கையின் அருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு சபையை நடத்தியவர்.

பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளியவராக இருக்கிறார். ""காமராசரைத் தோற்கடிச்சி தமிழ்நாட்டுக்கு நீங்க நல்லது ஒண்ணும் பண்ணலை. அப்புறம் எல்லாம் குட்டிச்சுவராத்தான் போச்சு என்கிற வருத்தம் உங்களுக்கு இல்லையா? என்று கேட்டேன். வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் பல்லெல்லாம் பெயர்ந்திருக்கும். மனிதர் ஒரு அற்புதமான சிரிப்புடன் ""என்னையா பண்றது? அது அரசியல்'' என்று பதிலளித்தார்.

மேடையிலும் அதே சௌஜன்யத்துடன்தான் பேசினார். தான் லண்டன் சென்றிருந்தபோது அங்கு ஒருவர் கேட்டாராம். ""நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று. இவர் சொல்லியிருக்கிறார் ""அரசியலில் இருக்கிறேன்.'' ""அது சரி. சாப்பாட்டுக்கும் பிழைப்புக்கும் என்ன செய்கிறீர்கள்?''அதுதான் சொன்னேனே அரசியலில் இருக்கிறேன். முழு நேர அரசியல்வாதி என்கிற அதிசயம் இங்கு மட்டும்தான் இருக்க முடியும் என்றார். ""நான் எம்.ஏ., பி.எல்., படித்து விட்டு குற்றவாளியாகத்தான் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேனே ஒழிய வழக்கறிஞராக ஒருநாள் கூடப் போனது இல்லை'' என்றார். ""தமிழர்களுக்குள் எந்தக் காலத்திலும் ஒற்றுமை இல்லை. அதனால்தான் அப்போதே மூன்று சாம்ராஜ்யங்களாகப் பிரிந்திருந்தது தமிழகம். இருக்கிற இத்தனூண்டு இடத்தில் சேரன், சோழன் பாண்டியன் என்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்' என்றார். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்குமான கால வேறுபாடு, இலக்கிய வளம் குறித்து நல்ல குறிப்புக்கள் சொன்னார். அதே போல வீரமாமுனிவர், ஜி.யு.போப் ஆகியோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்துப் பேசினார். திருக்குறள் எவ்வளவோ லகுவாக இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு எழுதிய உரைகள் மஹா கஷ்டம் என்றார். அந்த உரைகளுக்கு யாராவது சுலபமாக உரைநடையில் இன்னும் ஒரு உரை எழுதத் தேவையாக இருக்கிறது என்று சொன்னார்.

இது எல்லாம் சரிதான்.

ஆனால் தற்கால இலக்கியம் பற்றிப் பேசியபோது அநியாயத்துக்கு உளறிக் கொட்டினார். தாங்கலடா சாமி என்று செய்து விட்டார். தற்கால இலக்கியம் பற்றி அவர் வந்ததும் ஒரு விஷயம் மிகவும் தெளிவாகப் புரிந்தது. அவர் இலக்கியம் என்று படிக்க உட்கார்ந்து குறைந்தது சுமார் நாற்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என்று தெரிந்தது. கல்கிக்கு அப்புறம் யாரும் நாவல் எழுதவில்லை. ஜெயகாந்தன் விகடனில் எழுதத் துவங்கினார். ஆனால் இப்போது எழுதுவதில்லை. கேட்டதற்கு என் பேனாவில் மை தீர்ந்து விட்டது என்று என்னிடம் சொன்னார். சுந்தரராமசாமி போன்றவர்கள் எல்லாம் ஏதோ எழுத வந்தார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போதெல்லாம் கவிதை என்றால் இருவரிகளில் ஹைகூ என்கிறார்கள். சினிமாவில்தான் சினிமாப் பாட்டுக்களில்தான் தமிழ் வாழ்கிறது. கண்ணதாசன் நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். வைரமுத்து ஏதோ எழுதுகிறார். இப்போதெல்லாம் இலக்கியம் பாக்கெட் நாவல்களில் வந்து விட்டது. அவைதான் இலக்கியம். இப்படித் தத்துவ முத்துக்களாக பொழிந்து தள்ளினார்.

இவர் பேச்சில் இரண்டு விஷயங்கள் தெரிந்தன. ஒன்று, இவரை தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பேச்சுக்காக விமானப் பயணப்படி கொடுத்து தங்கும் செலவுகள் செய்து விளம்பரங்கள் செய்து தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்துக்கு இவர் எந்தவிதமான தயாரிப்பும் இன்றி, ஏதோ ஒரு உள்ளூர் தொகுதி பிரச்சாரக் கூட்டத்துக்கு வருவது போல வந்து மிகவும் தண்டமாகப் பேசிவிட்டுப்போனார்.

இரண்டாவது ஏற்கனவே சொன்னது போல. இவர் தமிழில் அக்கால இலக்கியம் அல்லது தற்கால இலக்கியம் படித்துக் குறைந்தது நாற்பது ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும். மிக மிக நீண்ட கால உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து பேசியது போல இருந்தது இவருடைய பேச்சு.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர் என்று பெயர் எடுத்தவர் சீனிவா"சன். ஒருவேளை திராவிட இலக்கியங்கள் பற்றிப் பேசத் தலைப்புக் கொடுத்திருந்தால் இவரிடமிருந்து மிக அற்புதமான விஷயங்களும் தகவல்களும் கிடைத்து இருக்குமோ என்று தோன்றியது.

ஆனால் நேற்றுக் கிடைத்தது என்னமோ மிகவும் அநியாயமான ஒரு சொற்பொழிவு.

3 comments:

  1. Delhi Tamil Sangam is nowadays disgracing itself by calling politicians to speak on literature. It is not the politicians who asked for it. It is the Sangam which asked for such disgrace.

    You are absolving the Sangam from its faux pas.

    The slid started from the day they invited Vaiko. Then, someone from the DMK complained. DMK sent their man to talk on lit. ADMK turn came; and the result was Srinivasan's speech.

    People like you, who go to hear polticians on literature, knowing well that their level is low, should curse yourselves.

    Why not DTS invite a politician to talk on public morality or ethics?

    And, then, why dont you go to that speech and report in your blog?

    Hilarious scenario, wont it be?

    ReplyDelete
  2. அனானி ஐயா

    சில விஷயங்களை சரியாக எழுதியிருக்கிறீர்கள். சிலவற்றை வேறு ஏதோ கோபத்தில் நீங்கள் எழுதியிருப்பது போல எனக்குப் படுகிறது. அது தவறாகவும் இருக்கலாம்.

    உங்கள் பெயரில் எழுதியிருந்தாலும் நான் கோபித்துக் கொண்டிருக்க மாட்டேன். பரவாயில்லை.

    சில அடிப்படைத் தகவல்களைத் தவறாக எழுதியிருப்பதால் நீங்கள் வைகோ கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வைகோ வை தில்லித் தமிழ்ச் சங்கம் அழைக்க வில்லை. வடக்கு வாசல் அழைத்தது. அந்தக் கூட்டத்தை வடக்கு வாசல் ஏற்பாடு செய்தது. மிழ்ச் சங்கத்தின் இடத்தை வாடகைக்கு எடுத்தோம் அவ்வளவுதான். அரசியல்வாதி இலக்கியம் பேசக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. வைகோ பொன்னியின் செல்வனை நன்கு படித்து விட்டுத்தான் பேசினார். மிகவும் நன்றாகவே பேசினார். அந்தக் கூட்டம் நடந்த நாளில் அரசியல் ரீதியாகப் பேச நிறைய விஷயங்கள் இருந்தும் அவர் அரசியல் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. அந்த மேடையைத் தன்னுடைய அரசியல் விஷயங்களுக்ககாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    சொல்லப்போனால், எல்லாக் கட்சியில் இருந்தும் தலைவர்களை அழைத்து இலக்கியம் பேசச்சொல்லும் ஒரு திட்டம் என்னிடம் இருந்தது. வைகோ கூட்டத்துக்கு அவருடைய கட்சித் தொடர்புடைய ஒருவர் பொருளாதார ரீதியாகச் சில சங்கடங்களை ஏற்படுத்தியதால் அந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டியதாகிப்போனது.

    திமுக காரர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்திடம் புகார் செய்ததெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது. வைகோ வடக்கு வாசல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசியதற்கும், பிறகு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் கம்பம் செல்வேந்திரன் பேசியதற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்றுதான் நான் நினைக்கிறேன். நினைப்பது மட்டுமல்ல. எனக்கு உறுதியாகவும் தெரியும்.

    விருதுநகர் சீனிவாசன் பேசியதும் அப்படித்தான். அவர் தனக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பேசியதால்தான் என் வலைப்பதிவில் எழுதினேன். வைகோ அப்படிச் செய்திருந்தாலும் எழுதியிருப்பேன். கம்பம் செல்வேந்திரன் செய்திருந்தாலும் கண்டிப்பாக எழுதியிருப்பேன்.

    தமிழ்ச் சங்கத்தில் அரசியல்வாதிகளை நியாயம் தர்மம் பற்றிப் பேச அழைப்பது குறித்தும் எழுதியிருக்கிறீர்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு இந்த யோசனையை எழுதுங்கள். அப்படி யாராவது வந்து பேசும்போது அது குறித்துக் கண்டிப்பாக என்னுடய வலைப்பதிவில் பதிவு செய்வேன்.

    தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மீது நிறைய கோபம் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. எனக்கும் உண்டு. அவற்றை அவ்வப்போது என்னுடைய எதிர்ப்புக்களை நேரடியாகத் தெரிவிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை உடனடியாக தலைவரிடமோ அல்லது செயலரிடமோ அல்லது செயற்குழு உறுப்பினர்களிடமோ தெரிவிக்கிறேன்.

    நீங்களும் அப்படிச் செய்யலாம்.

    எல்லாம் சரி. தில்லித் தமிழ்ச் சங்கம் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறதே. அதை ஒரு வரியில் பாராட்டக் கூடவா உங்களுக்கு மனம் வரவில்லை?

    ReplyDelete
  3. 'உங்கள் பெயரில் எழுதியிருந்தாலும் நான் கோபித்துக் கொண்டிருக்க மாட்டேன். பரவாயில்லை'

    You are very generous person, Sir. But, please see, what matters is what one says. It appears, you will see the person first; and then, rate his points based on the size of his nose, the number of letters in his name etc.!

    I am posting everywhere in the blogosphere my points on a variety of subjects, not only in your blog. My sole consideration is that people should take cognisance of such points which I entertain on such subjects. They should not worry about the identity of persons. That is gossip suitable for small and frivolous minds! What they do with such points is their own business.

    So, never bother about names, surnames, nouns and pronouns.

    எல்லாம் சரி. தில்லித் தமிழ்ச் சங்கம் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறதே. அதை ஒரு வரியில் பாராட்டக் கூடவா உங்களுக்கு மனம் வரவில்லை?

    There are no shortage of persons who are ever willing to shower praise on anyone or any organisation, for some consideration. It is easy. No one will come to blows with the praiser. But, to criticise is not easy. In fact, constructive criticism is more helpful than high falutin praises.

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பான் இலானும் கெடும்

    The above are general views. Dont jump to apply them to me. As for my message here, already posted, I am thankful for your elaborate explanation.

    Nevertheless, calling a politician to speak on Ponniyan Selvan, however much he is knowledgable on the book, is to throw insults on real scholars. You wanted publicity for your magazine, and VAIKO was the right choice. An unknown scholar, however erudie he may be on Tamil literature, wont draw crowds, will he? I dont find fault with your act: it is a wise act in the best interests of your magazine. I appreciate that.

    Thanks and good bye to your blog!

    ReplyDelete