Tuesday, May 13, 2008

நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகள்... சுப்புடு

இந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களின் அனைத்து வார இறுதிகளிலும் தலைநகரெங்கும் கச்சேரிகளும் நடன நிகழ்வுகளும் அமர்க்களப்பட்டு வருகின்றன. தலைநகரெங்கும் கலைசார் செயல்பாடுகள் உச்சகட்டத்தில் செயல்படும் மாதங்கள் இவை. இந்த அற்புதமான நேரத்தில் பெரியவர் சுப்புடு குறித்த நினைவலைகள் அடிக்கடி நெஞ்சில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பல நேரங்களில் அவருடைய நினைவு மனதில் கிளர்ந்து நெகிழவைத்துத் துரத்தி அடிக்கிறது. வெகுசமீபத்தில் ஹரிதாஸ்கிரி சுவாமிகளுடைய நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியின் குறுவட்டு பார்க்க நேர்ந்தது. ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் ரசானுபவம் தோய்ந்த குரலும் பாவமும் மனப்பரப்பில் சுழன்று சுழன்று அடித்த அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் மனம் தோய்ந்து ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும் சுப்புடுவின் கார்வைகள் மிதக்கும் வாசிப்பும் லயிப்பும் மனதில் சுகாம்ருத லாகிரியை உண்டுபண்ணியது. மனது மயங்கி நெகிழ்ந்து சுருண்ட நேரத்தில் கர்நாடக சங்கீதசபா மகாதேவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இன்னிக்கு சுப்புடு மாமாவோட நினைவுநாள் தெரியுமோ?''






"இதோ உனக்கு நான் அளித்த வரம் என்று இறைவன், பெரியவரின் நெருங்கிய நட்பை வரமாகக் கொடையளித்த குறைந்த ஆண்டுகளிலேயே நினைவுகளை மட்டும் நெஞ்சினில் தேங்கவைத்து இதுபோதும் உனக்கு என்று ஓரிடத்தில் உளியால் அடிப்பது போல, மரண அடியாக அடித்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.


எந்தக் கடுங்குளிரிலும் தன்னுடைய மஃப்ளரை ஒருமாதிரி, காதைச் சுற்றி விசித்திரமாகச் சுற்றிக்கட்டி எங்காவது ஏதாவது ஒரு கச்சேரியில் ஆஜராகி விடுவார். சுப்புடு, கச்சேரிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு போவதைக் காணக் கண்கோடி வேண்டும். உடல்நிலை மிகவும் தளர்ந்த பின் அவரைக் கச்சேரிகளுக்கு அனுப்பி வைப்பதில் அவ்வளவாக மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ள மாட்டார் மாமி. முடிந்த வரை அவரைத் தடுக்கப் பார்ப்பார். நேரில் செ-ன்று யார் அழைத்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போயே ஆகவேண்டும் என்று குழந்தையைப் போல மாமியிடம் அடம் பிடிப்பார்.


மாமியை சரி செய்து கச்சேரிகளுக்குக் கிளம்புவதில் அசாத்தியமான ஒரு வகைத் தந்திரத்தைக் கையாளுவார் சுப்புடு. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பூங்காவுக்கு சரியாக மாலை 4.30 மணிக்குத் தவறாது நடக்கப் போய்விடுவார். அநேகமாக நடைமுடித்து வீடு திரும்பும் அந்த இடைப்பட்ட நேரத்தை எனக்கான வருகை நேரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நான் அவருக்கு வாங்கிச் செல்லும் வாசனைப் பாக்கு மாமிக்குத் தெரியாமல் கைமாறும். அவருடைய உடல்நிலை முழுக்கத் தளர்வடையத் துவங்கிய இறுதிக் கட்டங்களின் முன்பகுதியில், அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே வாங்கிச் செல்லாமல் மறந்து விட்டதைப் போல நடித்துத் தப்பிக்க முயன்றாலும், சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டு, ""நான் இங்கே நிக்கறேன். நிமிஷத்துலே ஓடிப்போய் வாங்கி வந்துடு'' என்று பிடிவாதமாக நிற்பார். நானும் ஓட்டமாக ஓடுவதைப்போல அவர் முன்னால் வாங்கப் போவது போல நடித்துக் கொஞ்ச நேரத்துக்குப் பின், ""அந்தக் கடையிலே தீர்ந்துடுச்சாம். போறப்போ வேறே எங்காவது வாங்கிக்கலாம்'' என்று சொன்னால், ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வீட்டுக்கு நடக்கத் துவங்குவார். ஒன்றும் பேசமாட்டார். கண்டிப்பாக உள்ளுக்குள் ஏதாவது ஒரு வசவு என்மீது எறியப்பட்டிருக்கும். ஒரு எதிரியின் மீது அதிரடித் தாக்குதலைத் துவங்க ஒத்திகை செய்து கொள்வதைப் போன்ற பாவனையில் சற்று ஒதுங்கியே நடப்பார். நாம் ஏதாவது பேச்சுக்கொடுத்தாலும் ரொம்பவும் யோசிப்பதைப் போல ஒற்றை விரலால் வலப்பொட்டில் லேசாகத் தட்டிக் கொண்டே நடப்பார். அவர் வேண்டுமென்றே ஒதுக்குகிறார் என்பது தெளிவாகத் தெரியும். மிட்டாய் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது குழந்தை காட்டும் பாவனைகள் அவருடைய நடவடிக்கைகளில் இருக்கும். கோபங்களும் தாபங்களும் இருக்கும்.


அப்போதெல்லாம் எனக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொள்ள வேண்டும். ""சரி. நீங்க போயிண்டிருங்கோ. இன்னொரு கடையிலே மசாலா சுபாரி கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்'' என்று சொல்லி எதிர்த் திசையில் நடக்கத் துவங்குவேன்.


நெற்றிப் பொட்டில் விரலால் தட்டுவதை நிறுத்தி, ""ஒனக்குப் பொகை ஊதணும். போய்த் தொலை. சீக்கிரமா வந்து சேரு'' என்று வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார்.


ஓமகுண்டத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பிப் போனால் அங்கு பெரிய களேபரம் நடந்து கொண்டிருக்கும். ஏதோ ஒரு போருக்குக் கிளம்பிச் செல்லுவது போல வேண்டுமென்றே நேரமாகிவிட்டது என்று பரபரப்புக் காட்டுவார். இவர் காட்டும் பரபரப்பில் மாமிக்கு ஒன்றும் ஓடாது. அந்த ஒன்றும் ஓடாத மனநிலையில் இவர் கச்சேரிக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்று மாமி போட்டு வைத்திருந்த திட்டங்கள் செயலிழக்கத் துவங்கும். மாமா வெளிக்கிளம்பத் தயார் செய்யும் வேலைகளில் தன்னிச்சையாக இயங்கத் துவங்குவார் மாமி.


ஒரு சிறுகுழந்தையை நர்சரிப் பள்ளிக்கு அனுப்பி வைப்பது போல சகல ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார் மாமி. அதற்குள் ஏதாவது தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்திருக்கும். இல்லையென்றால் எதையோ நினைத்தது போல, தொலைபேசியில் யாரையாவது அழைத்து எதையாவது பேசத் துவங்குவார். யாருடைய எண்ணையும் எழுதி வைத்துத் தேடிப் பார்த்துத் தொலைபேசியில் அழைத்ததை நான் பார்த்தது கிடையாது. நல்லி செட்டியாரா, நடராஜனா அல்லது ஏதாவது உள்ளூர் நண்பர்களா அல்லது எதிரிகளா... எல்லோருடைய எண்களும் அவருடைய மூளைப் பரப்பில் இருந்து நழுவி விரல் நுனி வழியாக வழிந்து இறங்குவதைப் போன்ற லாவகத்துடன் எண்களைச் சுழற்றிப் பேசத் துவங்குவார். பெயருக்கு ஏதாவது ஒரு சட்டையை மாற்றிக்கொண்டு மாமி எதிரில் நிற்பார். அவரைக் கடிந்து கொண்டு வேறு சலவை செய்த சட்டையை எடுத்து வருவார் மாமி. சட்டையில் எங்காவது காணப்படும் சின்ன சுருக்கங்களைக் கூடக் கையால் நீவி நீவி சரி செய்யத் துவங்குவார் மாமி. மடிந்து கிடக்கும் காலரைச் சரி செய்து விடுவார் நேரம் கடப்பதை அவருக்கு நினைவூட்டிக் கிளப்பி விடுவார் மாமி. வாயைத் துடைத்து, சட்டையில் கைக்குட்டையைக் குத்திவிடுவது ஒன்றுதான் பாக்கி. மாமியிடம் மணிக்கட்டுப் பித்தான்களைப் போடச்சொல்லிக் கைகளை முன்னே நீட்டுவார் பெரியவர். நம்மைப் பார்த்து, பொக்கை வாயை விரியத் திறந்து சிரித்துக் கண்ணடிப்பார்.


"கச்சேரி முடிஞ்சி ஆத்துலே கொண்டுவந்து விட்டுத்தானே போவே?'' என்று கேட்பார் மாமி. ""கண்டிப்பா மாமி'' என்று நான் சொல்லும் இடைப்பட்ட மிகச் சிறிய இடைவெளியில் எங்கோ ஒரு பிரத்யேகமான இடத்தில் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கும் ஒரு வாசனைப் பாக்கு பொட்டணத்தை சடாரென்று ஒரு நொடியில் இடுப்பில் வேஷ்டி மடிப்பில் செருகிக்கொண்டு விடுவார் பெரியவர். சில சமயங்களில் மாமியின் கண்ணெதிரிலேயே இது நடக்கும். ஆனால் கண் இமைக்கும் வேகத்தில் கைமாற்றும் அவருடைய லாவகத்தினால் பொதுவாக மாமியின் பார்வையில் படாமலேயே காரியம் நிகழ்ந்து விடும். குழந்தைத் தனமான புன்னகையோடு வீட்டை விட்டு இறங்குவார். வீட்டின் கடைசிப் படியில் கால் வைத்ததும் சடாரென்று ஒரு ஓரிரு பாக்குத் துணுக்குகள் அந்த பொக்கை வாய்க்குள் சென்றடையும். எல்லாமே இமைக்கும் நேரம்தான். மாமிக்கு வயதாக வயதாக வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிப்போனார். அதற்கு முன்னர் முக்கியமான கச்சேரிகளுக்கு எல்லாம் பெரியவருடன் கிளம்பி விடுவார். ஏதாவது ஒரு உரிமையில் பெரியவர் யாரிடமாவது அசாத்தியமான ஜோக் எதையாவது அடிக்கும்போது யாராவது சுப்புடுவின் மடியிலேயே உட்கார்ந்து இருந்தால் கூட யாருக்கும் கேட்காத வண்ணம் பெரியவரின் காதினுள் ஒரு சிறு கண்டனத்தை அனுப்புவார் மாமி. மாமா பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவார். அல்லது நம்மை எதிலாவது இழுத்து விட்டு ஓடப்பார்ப்பார். சடாரென்று ஏதாவது பேச்சை மாற்றுவார்.


அதே போல, நிகழ்ச்சியின் இடைவெளியில் ஏதாவது பெரிய மனிதர்கள் இருந்தால், அவர்களிடம் ஏதாவது ஒரு ஜோக்கைத் தூக்கிப் போடுவார் சுப்புடு. அந்தப் பெரிய மனிதர் இவருடைய ஜோக்குக்கு சிரிக்காமல் வேறு எதையாவது பேச ஆரம்பித்தால் ஒரு மாதிரி பதட்டப் படத் துவங்கி விடுவார். பெரிய மனிதர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், ""ஒரு நல்ல ஜோக்கை இன்னிக்குக் கல்லைக் கட்டிக் கிணத்துலே போட்டுட்டேன் இல்லையா?'' என்று நம்மிடம் சிரித்துக்கொண்டே கேட்பார்.


ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஒருவிதமான தியானநிலையில் கண்களை மூடி, பொக்கை வாயை மென்று கொண்டே, தலையில் ஒற்றை விரலால் தாளம் போட்டுக்கொண்டு...அந்த ஆத்மா தலைநகரின் ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு பாட்டைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.தலைநகரில், எங்கேனும் பாட்டுக் கேட்கப் போகும்போது அல்லது நடனம் பார்க்கப் போதெல்லாம் சுப்புடு பற்றி நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை.
வடக்கு வாசல் ஏப்ரல் 2008 இதழில் வெளிவந்த கட்டுரை

3 comments:

  1. அருமையான பதிவு. சுப்புடுவின் இயல்பான இன்னொரு முகத்தை அழகாகக் காட்டியுள்ளீர்கள். ஜோக்கைக் கல்லைக் கட்டிக் கிணற்றில் போடுவதே ரஒரு நல்ல ஜோக்காக இருந்தது. நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த நீங்கள் அதிருஷ்டசாலி.

    ReplyDelete
  2. We can't read your articles clearly without download fonts. why cant' you put the Font Help on the top of your blogs

    ReplyDelete
  3. You can read these articles with Arial unicode fonts. Go to tools and adjust your font settings and you can read this. i will ask somebody how to put font help on top of the blog.

    thanx for your interest.

    anyhow, you can try this too:

    go to Tools>Internet Options>Accessibility and tick "ignore font styles mentioned on the web site"

    I think you can read unicode fonts then.

    ReplyDelete