Tuesday, June 26, 2007

குழந்தைகளுக்கான வீதிநாடகம் -2ராகவன் தம்பி

சென்ற இதழில் பள்ளி மாணவர்களுக்கான நாடகம் ஒன்றினைத் தயாரித்து மேடையேற்றுவதில் கிடைத்த அனுபவம் குறித்து எழுத ஆரம்பித்து எங்கெங்கோ பயணித்தாயிற்று. செல்வராஜனை ஜனக்புரி பள்ளி வளாகத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டேன். இப்போது மீண்டும் அவரிடம் செல்கிறேன்.


பள்ளி மாணவர்களுக்கான நாடகம். அதுவும் சுற்றுச்சூழல் குறித்த நாடகம். மேடையேற்றப்போவது திறந்த வெளிகளில். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. துணைக்கு யதார்த்தாவில் என்னுடன் நாடகங்களில் நடித்த பெரியசாமி. பள்ளி நிர்வாகத்திடமும், ஆசிரியர்களிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். பள்ளிகளில் நாடகம் அல்லது கலைநிகழ்ச்சிகள் என்றால் ஆசிரியர்கள் (கல்யாணமாலை மோகன் குரலில் இதைப் படிக்கலாம்) நன்றாகப் படிக்கும், துறுதுறுப்பான, அதிக மதிப்பெண்களை எடுக்கும், பதவிசான, பண்பான, ஆசாரமான மாணவர்களைத் தான் பொதுவாகத் தேர்வு செய்வார்கள். பாடுவதற்கு, நடிப்பதற்கு, பள்ளிகளில் மேற்பார்வைகள் நடந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு, பிற மாணவர்கள் மேல் கோள் மூட்டிவிடுவதற்கு, அடுத்த ஆசிரிய þ ஆசிரியைகளைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவதற்கு எப்போதும் சுறுசுறுப்பான நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்களைக் கொண்டு வரும் மாணவ மாணவியரைத்தான் ஆசிரியப் பெருமக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இது உலகமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள வழக்கு. இதற்கு மாறாக எனக்கு சுமாரான மாணவ மாணவியரைக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீனிவாசனைக் கேட்டுக்கொண்டேன். அதிகம் மதிப்பெண்கள் எடுக்காத மாணவர்களாய், இதுவரை பள்ளி நிகழ்ச்சிகள் எவற்றிலும் கலந்து கொள்ளாத புதுமுகங்களாக எனக்கு வேண்டும் என்று கேட்டேன்.


எனக்குக் கிடைத்த மாணவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். மிகவும் நல்ல மனதும் பணிவும் புதியவைகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமும் கொண்ட மாணவர்கள். எதற்கும் எவ்விதப் பதட்டமும் அடையாது சிரித்த முகத்துடன் ஒருவரை ஒருவர் கேலியும் கிண்டலும் செய்து கொண்டு விளையாட்டுத்தனமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மாணவர்கள். இவர்களுடன் எங்கள் நாடகப் பயிற்சிப் பட்டறை துவங்கியது.முதல் மூன்று நாட்கள் அறிமுகங்கள். வீதி நாடகம் பற்றிய அறிமுக சொற்பொழிவு. செல்வராஜனின் அறிமுகவுரை என்று கழிந்தன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார் செல்வராஜன். வழக்கமாக நான் அடுத்த நாடக ஆசிரியர்களின் நாடகங்களை இயக்கித்தான் பழக்கம். நாடகங்கள் சொந்தமாக எழுதவில்லை. எழுதிய ஓரிரண்டு சிறிய நாடகங்களும் நல்ல நாடகங்கள் என்று நாடகம் தெரிந்த யாரும் ஒப்புக்கொள்ளாத சிறுமுயற்சிகள். இன்னொன்று பொதுவாக நாடக இயக்கம் ஒன்றே போதும் என்று நினைத்தவன் நான். சொந்தமாக நாடகமும் எழுதி மற்றவர்களை வதைக்கும் திட்டம் ஏதும் அப்போதைக்கு இருந்தது இல்லை. எனவே நாடகம் எழுது என்று செல்வராஜன் என்னைக் கேட்டுக் கொண்டபோது மிகவும் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. இன்னொன்று அந்த அவசரத்துக்கு எழுதினால் மிகவும் மட்டமான ஏதாவது ஒன்றுதான் என்னிடம் இருந்து வரும் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்த விஷயம். எனவே, அந்தப் பள்ளிக்காக நாடகம் எழுதுவதை தள்ளிப்போட்டேன்.

அதுவும் ஒருவகைக்கு நல்லதாகத்தான் போனது என்று பிறகு நிரூபணம் ஆனது. எப்படியென்றால் அந்தப் பயிற்சிப் பட்டறையின் போது மாணவர்களையே கூட்டாகக் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல கதையை யோசிக்கச் சொன்னேன். இரண்டு நிபந்தனைகள். ஒன்று அந்தக் கதை முழுக்க சுற்றுச் சூழல் பற்றி இருக்க வேண்டும். இரண்டு - யாரையும் புண்படுத்தாது நகைச்சுவையும் கிண்டலும் கலந்து சொல்லவேண்டும். பட்டறையில் கலந்து கொண்ட இருபது மாணவ மாணவியரும் சுமார் நாற்பது கதைக் கருக்களை சொல்லியிருப்பார்கள். நாற்பதும் ஒன்றையொன்று மிஞ்சுவது போல இருந்தது.

இறுதியில் இரு கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மிக அழுத்தமாக சொல்ல வேண்டியதை மிக அழகாகவும் நகைச் சுவையுணர்வுடனும் நாடக வடிவத்தில் சொல்ல வாய்ப்பு அதிகம் அளித்த கதைகள் அவை. ஒரு உதாரணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மூர்க்க ராஜா ஒருவன். அடிக்கடி வேட்டைக்குப் போகிறவன். விலங்குகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறான். அந்த வேட்டை அமர்க்களத்தில் ஒரு நரி. அது அரசாங்கத்தில் வேலை பார்க்கும் நரியாம். ராஜா கையில் வேட்டைக்கு சிக்குவதில்லை. ராஜாவுக்கு அவமானமாகிப் போகிறது. தன்னால் வேட்டையாட முடியாத ஒரு விலங்கா? அவன் வருத்தத்தைப் போக்க ஒரு மந்திரி முன் வருகிறான். அவன் சொல்கிறான். ராஜா அது உங்கள் அரசில் வேலை பார்க்கும் நரி. எதற்கும் அதனிடம் நான் பேசிப்பார்க்கிறேன். நரியிடம் சென்று காதில் குசுகுசுக்கிறான். பிறகு ராஜாவிடம் பேசி ஒரு நூறு ரூபாய் வாங்கி அந்த நரியிடம் கொடுக்கிறான். நரி ஒப்புக்கொள்கிறது. ஓடுவதை நிறுத்துகிறது. அமைதியாக ராஜாவுக்குப் பின்புறத்தைக் காண்பித்து அம்பினை வாங்கி செத்துப்போகிறது. ராஜாவும் நரியை வேட்டையாடிய சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறான். இப்படியாகப் போகிறது வேட்டை அமர்க்களங்கள்.

இந்த வேட்டை மும்முரத்தில் அரண்மனையில் சும்மாவே எதற்கெடுத்தாலும் தடுக்கித் தடுக்கி விழும் அந்த ராஜா காட்டில் மரங்களின் வேர்களில் தடுக்கி அடிக்கடி விழுகிறான். ஒரு மரம் தடுக்கியதும் அவனுக்கு விபரீதக் கோபம் வருகிறது. வெறியில் அந்தக் காட்டிலும் நகரத்திலும் ஒரு மரம் கூட இருக்கக்கூடாது என்று எல்லா மரங்களையும் வெட்ட உத்தரவிடுகிறான். எல்லா மரங்களும் வெட்டப்படுகின்றன. காடும் நகரமும் சூன்யமாகிறது. பின்னர் அந்த நாட்டையும் நகரத்தையும் நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொருவராக வந்து ஒவ்வொரு வியாதியை சொல்லி அழுகின்றனர். எல்லா நோய்களுக்கும் காரணம் அந்த நாட்டில் ஒரு மரத்தைக் கூட விட்டு வைக்காது, ராஜாவின் உத்தரவால் எல்லாவற்றையும் மொட்டையாக்கி வைத்ததுதான் காரணம் என்று உணர்கிறார்கள். ராஜாவுக்கும் அது உறைக்கிறது. நாடெங்கும் மீண்டும் மரங்கள் நடுவதற்கு உத்தரவிடுகிறான்.

சத்தியமாக நம்புங்கள். இது எல்லாம் அந்த மாணவர்கள் சொந்தமாக ஆலோசித்துத் தீர்மானித்த கதை. இதில் வசனம் எல்லாம் இந்தியில்தான். இதை ஒரு நாடகப்படியாக எழுதி வைத்துக்கொள்ளாமல் ஒத்திகைகளில் அவ்வப்போது மனதுக்குத் தோன்றிய வசனங்களை பேசினார்கள். ஒவ்வொரு முறையும் வசனங்கள் மெருகேறின. நகைச்சுவை மிளிர்ந்தன. ஒவ்வொருவரும் அனுபவித்தோம்.

தில்லித் தமிழ்க் கல்விக் கழக நிர்வாகமோ அல்லது ஆசிரியர்களோ எந்த வகையிலும் குறுக்கிடவில்லை. தங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க வில்லை. மிகவும் அற்புதமாக ஒத்துழைத்தார்கள். எனவே மிகவும் அற்புதமாக அமைந்தது இந்த நாடகம்.

நாடகம் தயாரானதும் சுமார் முப்பது சைக்கிள்களில் மாணவர்களுடன் கிளம்பினோம். ஜனக்புரியில் பல தெருமுனைகளில் þ ராஜ் காலனி போன்ற இடங்களில் þ வட தில்லி எல்லைப் பகுதியில் சில கிராமங்களில் என சைக்கிள் பயணம் நாடகத்துடன் தொடர்ந்தது. செல்வராஜனும் நண்பர்களும் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். செல்வராஜன் யாரோ ஒரு நண்பரைப் பிடித்து எல்லா மாணவர்களுக்கும் "கிரீன் சர்க்கிள்' பெயர் பொறித்த பச்சை நிற சட்டைகளை ஏற்பாடு செய்தார். பள்ளி நிர்வாகிகள் ஆறுமுகமும் நடராஜனும் யாரையோ பிடித்து எல்லோருக்கும் சாப்பாடும், அழகிய முறையில் அச்சிட்ட நற்சான்றிதழ்களையும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மாணவர்களுடன் செல்வதற்கு மற்றவர்களுக்கு வாகனங்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏதோ ஒரு நகைச்சுவை சித்திரத்தைப் பார்ப்பது போல அந்தக் கிராமத்து மக்கள் நாடகத்தை ரசித்தார்கள்.

எல்லா இடங்களிலும் முடித்தாயிற்று. ஆறுமுகம் திடீரென்று ""நாம் இந்த நாடகத்தை திஹார் சிறைச்சாலைக்குக் கொண்டு போகலாமா என்ற கேட்டு உடனே யாரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டார். உடனே அனுமதி கிடைத்தது. பட்டாளம் எல்லாம் திஹார் நோக்கித் திரும்பியது. அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு தனிப்பிரிவு போலீசார் இன்முகத்துடன் எங்களை வரவேற்று சிறைச்சாலைக்குள் அழைத்துப் போனார்கள். அங்கு திறந்த வெளியில் மாணவர்கள் நாடகத்தை நிகழ்த்தினார்கள். சில கைதிகளும் காவலர்களும் எங்கள் பார்வையாளர்கள். புதிதாக ஒரு பார்வையாளன் நாடகம் ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் வந்து சேர்ந்தான். அவன் தொழிலில் மும்முரமாக இருந்தபோது பிடிபட்ட பிக்பாக்கெட் ஆசாமி. காவலர் ஒருவர் நாடகம் நடக்கும் இடத்தில் தரையில் அவனை குந்தவைத்து இந்தியில், ""பார். சின்னப்பிள்ளைகள் எல்லாம் எவ்வளவு புத்தியாய் இருக்காங்க'' என்று சொல்லி பளாரென்று அவன் காது மேல் ஓங்கி அறைந்தார். அவன் அழுகை, சிரிப்பு ஏதுமின்றி ஆர்வத்துடன் நாடகம் பார்ப்பதைத் தொடர்ந்தான். பிறகு இன்னொரு போலீஸ் þ இன்னொரு காதில் அறை என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. நாடகமும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த நாடகத்தில் நடித்த மாணவர்கள் இப்போது தொடர்பில் இல்லை. ஆனால் இந்நேரம் படிப்பை முடித்து எல்லோரும் எங்காவது யாரையாவது எதற்காகவாவது கண்டிப்பாகப் புன்னகைக்க வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

1 comment:

  1. It was very interesting to read , about how the chidren were trained .Good work done ,keep it up.

    ReplyDelete