Wednesday, June 13, 2007

செய்தி ஊடகத்தில் ஒரு புரட்சித்தடம் - சி.பா.ஆதித்தனார்

ராகவன் தம்பி

சிறு வயதில் அடிக்கடி காண நேர்ந்ததால் ஆழமாக என் மனத்திரையில் பதிந்த ஒரு காட்சி.

மிகவும் அழகான என்னுடைய ஊரான கிருஷ்ணகிரியின் நிலப்பரப்பு சரித்திர காலத்திலிருந்து இரண்டாகப் பகுக்கப்பட்டது. பழைய பேட்டை மற்றும் தொளலதாபாத் என்று அழைக்கப்பட்ட புதுப்பேட்டை என்னும் இரு பகுதிகளுக்கிடையில் அந்நாட்களில் பிரதான போக்குவரத்து சாதனம் குதிரை வண்டிகள். அக்குதிரை வண்டிகளின் சாரதிகள் உருது பேசும் இசுலாமியர்கள். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இருந்தாலும் இக்குதிரை வண்டிச் சாரதிகளின் பேச்சுத்தமிழ் மிகவும் விநோதமாக இருக்கும். ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் பேசுவது போலத் தோன்றும். அவர்கள் பேசும் தமிழின் ஓசை உருது, தெலுங்கு மற்றும் கன்னடம் கலந்த கலப்பின ஓசையாக இருக்கும். இவர்களில் பலபேருடைய கல்வி மிகவும் ஆரம்ப நிலையிலேயே தடைப்பட்ட ஒன்று. மதரஸா எனப்படும் உருதுப் பள்ளிகளில் ஓரிரு வருடங்களே அவர்களுக்குக் கிடைக்கும் உருது மொழிக்கல்வி. பின்னர் காலமும் பொருளாதார நிர்ப்பந்தங்களும் அவர்களின் கைகளில் குதிரை வண்டிச் சாட்டைகளை திணித்து விடும். இவர்கள் தீவிர உழைப்பாளிகள். தங்கள் வண்டிகளில் பூட்டப்படும் குதிரைகளுடன் போட்டியிட்டு உழைப்பார்கள். குதிரை வண்டி நிலையங்களில் வண்டியிலிருந்து கழட்டப்பட்ட குதிரை கொள்ளும் புல்லும் மேயும்போது இவர்கள் செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் பலரின் கைககளில் தவறாமல் தவழந்து கொண்டிருக்கும் தினத்தந்தி. அதே போல இவர்களின் குதிரை வண்டிகளில் ஏறிப்பயணம் செய்யும் பயணிகள் எதிர்கொள்வது வண்டியின் உட்புறத்தின் மூங்கில் சட்டங்களில் செருகப்பட்டிருக்கும் தினத்தந்தி.

கிருஷ்ணகிரி கோட்டைப்பகுதியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் நாவிதர்கள் தெலுங்கு மட்டுமே பேசுவார்கள். இவர்களின் பேச்சுத்தமிழில் தெலுங்கு மணக்கும். தெலுங்குக் கதாநாயகர்கள் தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு பேசும் தமிழ் வசனங்கள் போல இருக்கும் இவர்களின் பேச்சுத்தமிழ். இவர்கள் தங்களிடம் முடி திருத்திக் கொள்பவர்களிடமும் சவரம் செய்து கொள்பவர்களிடமும் மிகவும் சௌஜன்யமாக உள்ளூர் கிசுகிசுக்களை முடித்ததும் உலக அரசியல் நிலவரங்களைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். ஸ்டாலினும் கென்னடியும் கடும் விமர்சனத்துக்கு ஆளாவார்கள். நிலவில் கால் பதிக்க நீல் ஆம்ஸ்டிராங்குக்குத் தரப்படும் பயிற்சிகளைப்பற்றி; முடி திருத்திக்கொள்பவர்கள் வாயில் வெட்டிய முடித்துகள்கள் அடைத்துப் போகும் அளவுக்கு அவர்களின் வாய்களைப் பிளக்க வைப்பார்கள். நேருவுக்கும் பட்டேலுக்கும் இடையில் நிலவிய உள்கட்சி அரசியல் விவாதிக்கப்படும். இவர்களின் அரசியல் ஞானத்துக்கு அடித்தளம் போட்டுக்கொடுப்பது இந்தத் தெலுங்கு மட்டுமே பேசும் நாவிதத் தோழர்கள் மிகவும் சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப்படித்த தினத்தந்தி நாளேடு. அடுத்து சவரத்துக்குக் காத்திருப்பவர் தினத்தந்தி மூலம் உள்ளூர் மாநில, தேசிய மற்றும் உலகச் செய்திகளை அலசிக்கொண்டிருப்பார்.

இந்த மாயம், இந்த விந்தை, இந்தப் புரட்சி தனி ஒரு மனிதரால் நிகழ்த்தப்பட்டது. தமிழ் ஊடக சரித்திரத்தில் ஆதித்தனாரின் பங்களிப்பு ஒரு உன்னத நிகழ்வு. ஒரு கலாச்சாரப்புரட்சி.

வெறும் பேச்சுக்காகவோ அலங்காரத்துக்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ தமிழினம் பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் தகுதிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பட்டங்களைக் கொடுத்து மகிழ்ந்து வருகிறது. பல நல்ல அர்த்தம் செறிந்த வார்த்தைகளின் நிஜமான அர்த்தங்களை சுரணை இல்லாமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கும் விநோதமான அரசியல் ஞானத்தைப்படைத்தது நம் தமிழ் சமூகம். ஆனால் தமிழன் பெருந்தலைவர் என்று அழைக்க அனைத்துத் தகுதிகளும் படைத்த பெருந்தலைவர் காமராஜர் பாமரத் தமிழனுக்கு வழங்கிய கொடை அடிப்படைக் கல்வி. பாமரனுக்குக் கிடைத்த இந்த அடிப்படைக் கல்வி ஒரு புரட்சிகரமான நிகழ்வு என்றால் எட்டாம் வகுப்புக்குப் பின் உயர்கல்வி எட்டாக்கனி ஆகிவிட்ட பாமரத் தமிழனுக்கு அரசியல் கல்வியைக் கற்றுத்தந்தது தினத்தந்தி என்று சொன்னால் மிகையாகாது.

அந்த அரசியல் அறிவை தமிழன் எப்படிப் பயன்படுத்திக் கொண்டான் - எப்படியெல்லாம் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் சமூக, பொருளாதார கலாச்சார பின்னடைவுகளுக்குத் தன்னைப் பலி கொடுத்து வந்தான், வருகிறான் என்பது வேறு ஒரு தனியான சோகமான விஷயம்.
இப்போதைக்கு ஆதித்தனாருக்குத் திரும்பப்போகலாம்.

தன்னுடைய தினத்தந்தி மூலம் தமிழனுக்குத் தமிழ் கற்றுத் தந்தவர் ஆதித்தனார்.

தமிழ் மட்டும் தெரிந்த தமிழனுக்கு தரணியைக் கற்றுத்தர முயற்சித்தவர் ஆதித்தனார்.

மிகவும் வசதியான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் ஆதித்தனார். தந்தை சிவந்தி ஆதித்தர் வழக்கறிஞர். இவருடைய தாயார் கனகம் அம்மையார் அவருடைய ஊரான காயமொழியில் ரயில் பயணம் செய்த முதல் பெண்மணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞரான ஆதித்தனாரின் தகப்பனார் தன்னுடைய மகனும் தன்னைப்போல ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று இவரை லண்டனுக்கு சட்டம் பயில அனுப்பியிருக்கிறார்.

தமிழகத்திலிருந்து பார் அட் லா படிக்கச் சென்ற முதல் தமிழர் ஆதித்தனார்.

லண்டனில் ஆதித்தனார் படித்துக் கொண்டிருந்தபோது ஜே.ஆர் பெர்த் என்கிற ஒரு பேராசிரியர் தமிழ் உச்சரிப்புக்கள் என்கிற தன்னுடைய நூலுக்காக ஆதித்தனாரைக் கொண்டு தமிழ்ச்சொற்களை உச்சரிக்கச் சொல்லி அதை ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொண்டார். அந்த நூல் வெளிவர முழு முனைப்புடன் உதவியிருக்கிறார் ஆதித்தனார்.

லண்டனில் படிக்கும்போது செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி அதன் மூலம் கிடைத்த ஊதியத்தில் பிழைப்பையும் ஐந்தாண்டுக்காலம் இங்கிலாந்தில் நடத்தினேன் என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் ஆதித்தனார் குறிப்பிடுகிறார். 1931ல் லண்டனில் வட்டமேஜை மகாநாடு நடந்தபோது அந்த மாநாட்டின் தினசரி நிகழ்வுகளை சுதேசமித்திரனுக்கு செய்திக் கட்டுரைகளாக எழுதி அனுப்பியிருக்கிறார். அந்த வட்டமேஜை மாநாட்டின் போது காந்தியடிகளுடன் ஆதித்தனாருக்கு நல்ல பழக்கம் உண்டாகியிருக்கிறது.

அதைப்பற்றிய ஒரு சுவாரசியமான கதை ஒன்று உண்டு.
மாநாடு நடக்கும்போது காந்தியடிகள் அடிக்கடி எழுந்து வெளியே சென்று கொண்டிருந்தாராம். ஆதித்தனார் காந்தியடிகளிடம் அதற்கான காரணம் கேட்டபோது தன்னுடைய பல் ஒன்று மிகவும் ஆடிக்கொண்டிருந்ததாவும் ஒருவழியாக விழுந்து விட்டது என்றும் காந்தியடிகள் ஆதித்தனாரிடம் சொல்லியிருக்கிறார். அன்று ஆதித்தனார் சுதேசமித்திரனுக்கு அனுப்பிய கட்டுரையின் தலைப்பு - காந்தியின் பல் விழுந்தது.

சுதேசமித்திரன் மட்டுமல்லாது தென்னாப்பிரிக்காவின் சில செய்தித் தாள்களுக்கும் வட இந்தியாவில் சில செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளராகப் பணிபுரி;ந்தார்.

லண்டனில் பார் அட் லா முடித்து சென்னை வந்த ஆதித்தனார் 1933 செப்டம்பர் 1ம் நாள் சிங்கப்பூர் ஓ.ராமசாமி நாடார் மகள் கோவிந்தம்மாளை சிங்கப்பூரில் மணம் முடித்து பின்னர் சென்னை திரும்பினார்.

இது ஆதித்தனார் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த பயணம் ஆகும். சென்னையில் பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்த ஆதித்தனார் சுயமரியாதைக் கொள்கைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புகிறார். பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய குடியரசு பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.

இந்த இடத்தில் ஆதித்தனாருக்குத் தான் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற அவா எழுகிறது. ஒரு நாளிதழ் நடத்த வேண்டும் என்று பேரவா எழுந்திருக்கிறது. அதற்குப் பணம் வேண்டும். அந்தப் பணம் திரட்டுவதற்காக பாரிஸ்டர் தொழில் மேற்கொள்ள சென்னையிலிருந்து மீண்டும் சிங்கப்பூர் சென்றார். சுமார் எட்டு வருடங்கள் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை மிகவும் வெற்றிகரமாக நடத்தினார். பல வழக்குகளை மிகவும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து நல்ல வருவாயையும் பெயரையும் ஈட்டியிருக்கிறார். சிங்கப்பூரில் இருந்தபோது அங்கு வெளிவந்த தமிழ்முரசு நாளேட்டில் பல கட்டுரைகள் எழுதியும் அந்த நாளேடு தொடர்ந்து நடக்க பல உதவிகளையும் செய்துள்ளார். எட்டு வருடங்கள் மிகவும் வெற்றிகரமாகத் தொழில் நடத்தி நல்ல வருவாயினை ஈட்டி பின்னர் தன் இதழியல் பணிக்காக தமிழகம் திரும்பினார்.

1942ல் தமிழகம் திரும்பிய ஆதித்தனார் பல காரியங்களை உடனடியாக நிறைவேற்றத் துவங்கியிருக்கிறார். தமிழகம் திரும்பிய சூட்டில் அவருடைய தமிழரசுக்கட்சி துவக்கப்பட்டது. மதுரையிலிருந்து வாரம் இருமுறை வெளிவந்த மதுரை முரசு செய்தித்தாளின் துவக்கம். பின்னர் தமிழன் வார ஏட்டினைத் தொடங்கி நடத்தினார். சில மாதங்கள் கழித்து அதாவது 1942ம் வருடம் நவம்பர் 1ம்தேதி பின்னாளில் தினத்தந்தி யாக பெயர் மாற்றம் பெற்ற தந்தி நாளேட்டினைத் துவக்கினார். ஆதித்தனாரின் இதழியல் பயணம் பின்னர் மதுரை முரசு, தமிழன், தந்தி, மாலைமுரசு என்று வெற்றிகரமாகத் தொடர்ந்தது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். தன் இதழியல் பணிகளை அவர் பிழைப்புக்காகவோ அதிகப் பணம் ஈட்டவோ செய்ய வில்லை. சிங்கப்பூரில் மிகவும் சிறப்பாக நடத்தி வந்த வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார். இது ஆதித்தனாருக்கு உள்ளுக்குள் பொதிந்திருந்த சமூக அக்கறையையும், அவர் செயல்பாட்டில் அவருக்கிருந்த தன்முனைப்பையும் நம்பிக்கையினையும் காட்டுகிறது. மிகச் சில பேருக்கு மட்டுமே அமைந்த ஒரு வரம் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். இது குறித்து அண்ணா அவர்கள் ஓரிடத்தில் சொல்கிறார் :

ஆதித்தனார் பார் அட்லா படித்தவர். சிங்கப்பூரில் பாரிஸ்டராகப் பணியாற்றியவர். நல்ல வளமான வருவாய் கூட அங்கு கிடைத்துக் கொண்டு வந்ததாக நான் சிங்கப்பூரில் பலரைக் கேட்டு அறிந்து கொண்டேன். அப்படிப்பட்டவர் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்டது அவருக்குப் பத்திரிகைத் தொழிலில் உள்ள ஆர்வத்தையும் பத்திரிகை மூலமாகத் தமிழ் மொழிக்கும் தன்னால் இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் காட்டுகின்றது.


இது குறித்து ஆதித்தனாரே ஓரிடத்தில் சொல்லும்போது -
நான் பணத்துக்காகப் பத்திரிகை தொடங்க வில்லை. அந்த நினைப்பு இருந்திருந்தால் சிங்கப்பூரில் வக்கீல் தொழிலைக் கவனித்துக் கொண்டு இருந்திருப்பேன். அல்லது பிறந்த மண்ணுக்கு வந்ததும் வியாபாரியாக மாறியிருக்கலாம். அதுவல்ல என் நோக்கம். என் குறிக்கோள் எல்லாம் தமிழர்கள் வாடிய பயிரைப்போல அல்லாமல் எல்லாத்துறையிலும் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே. பத்திரிகை மூலம் அதைச் செய்யவேண்டும் என்பதும் என் ஆசை.

சரி. பத்திரிகை நடத்தவேண்டும் என்று ஆசைப்படுவது சரி. ஆனால் அந்த முயற்சியைத் தொடர்ந்த இடர்ப்பாடுகளையும்; துணிவுடன் எதிர்கொள்ளவேண்டுமே? அசாத்தியத் துணிச்சலுடன் எதிர்கொண்டார் அவர். இதைப் பற்றி பின்னாளில் தினத்தந்தி வெள்ளிவிழா மலருக்காக அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் -

நினைவு என்று சொல்வதை விட அதை பயங்கர கனவு என்றே சொல்லலாம். ஒரு நாளிதழ் தொடங்கி நடத்துவதும் சரி நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பதும் சரி என்பதை அப்போது உணர்ந்தேன்
என்கிறார்.

ஆதித்தனார் பத்திரிகை துவங்கிய காலம் இந்தியா சுதந்திரம் அடையாத நேரம். அந்நிய ஆட்சியின் அத்தனை கொடுமைகளையும் அனைவரும் அனுபவித்த காலம். ஒரு பத்திரிகை நடத்த முதலில் தேவையானது காகிதம். தந்தி பத்திரிகையை தொடங்கிய போது அவருக்குக் காகிதம் கொடுக்க அரசு மறுத்துவிட்டது. உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம். அதனால் என்ன விலை கொடுத்தும் கடைகளிலும் காகிதம் வாங்க முடியவில்லை. எனவே தனது நாளிதழ் அச்சிடுவதற்காக வைக்கோலில் இருந்து காகிதம் செய்வது என்று முடிவெடுத்தார். வைக்கோலை ஊறவைத்து, அரைத்து, சுத்தப்படுத்தி, தண்ணீரில் கலக்கி, சலித்து எடுத்து, உலர வைத்து, உலர்ந்த பின் ஓரங்களை வெட்டி காகிதம் ஆக்கி தந்தி யை அச்சிட்டு வெளியிட்டார். இது குறித்து தன் கவிதை ஒன்றில் வைரமுத்து அழகாகக் குறிப்பிடுவார் -

இன்று கோடானுகோடித்
தமிழ் மக்களின்
கைக்கோலாய் விளங்கும் தந்தியே.
உந்தன் தந்தைஆதித்தனார்
உன்னை வைக்கோலால்
அல்லவாஆரம்பித்தார்?
புரிகிறது
வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம்

ஆதித்தனார் தந்தியைத் தொடங்கிய போது அதிகம் படித்தவர்களும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே நாளிதழ்கள் படித்துக்கொண்டு இருந்த காலம். சொல்லப்போனால் நாளிதழ்கள் பாமரர்களுக்கு எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தன. அந்த எளிய மக்களும் நாளிதழ்கள் படிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்தான் தன்னுடைய தந்தியைத் துவக்கினார் ஆதித்தனார்.

அதற்காக தன்னுடைய நோக்கத்தையும் செயல்பாட்டினையும் மிகவும் தெளிவாக வைத்திருந்தார் அவர். அவருடைய நோக்கத்தைப் பற்றி ஓரிடத்தில் சொல்கிறார்

கிராமங்களில் இன்று கூட பார்க்கமுடியும். பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம். படிக்க வைத்த பிள்ளைகளைக் கொண்டு பாரதம், ராமாயணம், போன்ற கதைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இதே போல பத்திரிகைகளையும் படிக்கச் சொல்லிக் கேட்கும் பழக்கம் நாளடைவில் வந்துவிடும் என்கிற தீவிர நம்பிக்கையுடன் இயங்கினார் அவர். மிகவும் தெளிவுடன் இயங்கினார். தீவிரத்துடன் செயல்பட்டார். எங்கும் பகட்டோ வெளிவேஷங்களோ இலக்கிய உத்தாரணம் பண்ணுவதாகச் சொல்லிக்கொள்ளும் பம்மாத்துக்களோ இல்லை. அவருடைய இலக்கு பாமரன்தான். அவர் நாளேடு துவங்கிய நேரத்தில் சென்னையிலிருந்தே செய்தித்தாள்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் மதுரையில் செய்தித்தாளை அச்சிட்டால் நள்ளிரவு வரை வரும் செய்திகளையும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாலையில் கிடைக்கும்படி செய்யமுடியும் எனக்கருதி மதுரையில் தன்னுடைய தந்தியைத் துவக்கினார். உலகச் செய்திகளோடு
உள்@ர் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைக் கொடுத்தல் மக்களிடம் அது நிச்சயம் எடுபடும் என்னும் அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. அவருடைய தெளிவு பின்னாளில் வந்த பல நாளிதழ் நிறுவனர்களிடம் காணக்கிடைக்காத ஒன்று.
நாளிதழ் என்பது இலக்கிய ஏடு அல்ல. திருக்குறள் அல்ல. அந்த அளவுக்கு நாங்கள் திருக்குறள் தொடங்கவில்லை. நாளிதழ் என்பது எதுமாதிரி என்றால் காலையில் பூத்து மாலையில் வாடிப்போகும் மலரைப்போன்றது. நாளிதழை அவசர அவசரமாகப் படிக்கவேண்டி இருக்கிறது. காலையில் எழுந்து ஒரு காப்பியோ டீயோ குடிக்கும் நேரத்தில் படித்துமுடித்துவிடும் அளவுக்கு தினத்தந்தி இருக்கிறது. அதிலே இலக்கியத்தைப் புகுத்தத் துணிந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். மதுரைக்குப்போகிறேன் என்று எழுத முடியுமே தவிர நான்மாடக்கூடலை நண்ணினேன் என்று எழுதினால் என்ன ஆகும் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஆதித்தனார். தன்னுடைய அலுவலத்தில் ஒரு தொழிலாளியின் பொம்மையை வாங்கி வைத்திருந்தார் என்று ஒரு கதை உண்டு. தன்னுடைய உதவி ஆசிரியர்களிடம் நீங்கள் எழுதியிருப்பதை இந்த பொம்மையிடம் படித்துக் காட்டுங்கள். அது புரிகிறது என்று தலையை ஆட்டினால் அந்தச் செய்தியை அச்சுக்கோர்க்க அனுப்புங்கள். தலையை ஆட்டாவிட்டால் மீண்டும் செய்தியை எளிய முறையில் திருத்தி எழுதுங்கள் என்று சொல்வாராம்.
ஆதித்தனார் தன் அலுவலகத்தில் ஆத்தி என்ற ஒரு காவலர் ஒருவரை தனக்கான அளவுகோலாக வைத்திருந்தார் என்று சொல்வார்கள். ஒரு முறை இலட்டு என்று இலக்கண முறைப்படி எழுதப்பட்ட வார்த்தையை ஆத்தியை அழைத்து படிக்கச் சொன்னாராம் ஆதித்தனார். அதனை ஈலட்டு, ஈலட்டு என்று எழுத்துக் கூட்டிப்படித்திருக்கிறார் ஆத்தி.

அது என்னப்பா ஈலட்டு என்று ஆதித்தனார் கேட்டார்.

ஈ மொய்த்த லட்டு போல இருக்கிறது அய்யா என்றாராம் ஆத்தி.
பார்த்தீர்களா, இதற்குத்தான் லட்டு என்று எழுதச் சொல்கிறேன் என்று உதவி ஆசிரியரிடம் கூறினாராம் ஆதித்தனார். செய்தியாளர்கள் எளிய மொழியைக் கையாள வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார் அவர். இங்கு கல்கியின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது.

ஒரு நாள் உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் அவருடைய வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு அடே குப்பா நீ உடனே ஸ்ரீபெரும்புதூர் திரு வேங்டாச்சாரி சுவாமி வீட்டுக்கு ஓடிப்போய் திருக்குடந்தை திரு நாராயண அய்யங்கார் ஸ்வாமி திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துளாய் எடுத்து விட்டுத் திருக்குளத்துக்குப் போனபோது திருப்பாசி வழுக்கவே திருவடி தவறி விழுந்தார் என்று சொல்லு என்று சொல்லிவிட்டு சமாச்சாரம் புரிந்ததா என்று கேட்டார். அதற்கு வேலைக்காரக் குப்பன் இது தெரியாதா சாமி? கும்பகோணத்துப் பார்ப்பான் குட்டையிலே விழுந்தார் என்று சொல்கிறேன் என்று சொன்னானாம்.

கல்கி வலியுறுத்திய மொழி எளிமையை தன் செய்தி ஊடகத்தில் செயல்படுத்தினார் ஆதித்தனார்.

பத்திரிகையாளர்களுக்காக ஒரு அருமையான இதழாளர் கையேடு என்னும் நூலை வெளியிட்டார் ஆதித்தனார். அது இன்றும் பத்திரிகையாளர்களுக்கு அற்புதமான வழிகாட்டி நூலாக விளங்கி வருகிறது.

தந்தியின் முதல் தொழிலாளி என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வார் ஆதித்தனார். அவர் செய்த இன்னொரு அற்புதமான புதுமை என்னவென்றால் அந்தக் காலத்தில் பத்திரிகை அச்சிடும் இயந்திரங்களை ஓட்டுவதற்கு பெரும்பாலான பத்திரிகைகளில் வெள்ளைக் காரர்களையே வேலைக்கு வைத்திருந்தார்கள். படித்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே எந்திரங்களை இயக்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆதித்தனார் இந்த வேலைகளுக்கு
உள்@ர்த் தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்தினார். அச்சுக் கோர்க்கவும் அச்சு இயந்திரங்களை இயக்கவும் உள்@ர் மக்களுக்குப் பயிற்சி அளித்தார்.

அவருடைய புதல்வர் சிவந்தி ஆதித்தனுக்கு பத்திரிகைத் துறையில் என்னென்ன பிரிவுகள் உண்டோ அத்தனை துறையிலும் பயிற்சிகள் அளித்தார். அச்சுக்கோப்பாளராக, அச்சிடுபவராக, பார்சல்கள் கட்டுபவராக, நிருபராக, துணை ஆசிரியராக பல நிலைகளில் பயிற்சி அளித்தார். இன்று அவர் குடும்பத்தினர் அனைவருமே பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆதித்தனார் துவக்கிய தினத்தந்தி என்னும் அணையாவிளக்கினை இன்றும் சுடர் விட்டு பிரகாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றினைப் புரட்டிப் பார்க்கும்போது பல ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பத்திரிகைகளுக்கு மிகவும் எளிமையான தமிழை எழுதச் சொல்லி வற்புறுத்திய ஆதித்தனார் சங்க இலக்கியங்களிலும் பண்டிதத் தமிழிலும் நல்ல புலமை பெற்று இருந்திருக்கிறார். அவர் சுதேசமித்திரனுக்கு எழுதிய ஒரு சில கட்டுரைகள் மட்டுமே மூத்த எழுத்தாளர் ரகமி அவர்களின் முயற்சியில் கிடைத்துள்ளன. அந்தக் கட்டுரைகள் ஒரு ஆழ்ந்த அரசியல் ஆய்வுக்குத் தேவைப்படும் பண்டிதத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆதித்தனார் தான் நடத்திய தமிழன் வார இதழில் பண்டிதத் தமிழில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
ஆதித்தனாரின் அரசியல் சார்புகள் மாறி மாறி இருந்திருக்கின்றன. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினை தீவிரமாக ஆதரித்தார். அந்த இயக்கத்துக்காக தானே மூவாயிரம் ரூபாய்கள் அளித்து நிதி திரட்டுவதைத் துவக்கினார். காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு, பின்னர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு, தனித்தமிழ்நாடு கோரிக்கையில் ஈடுபாடு என்று பல நிலைகளில் அவருடைய சார்பு நிலைகள் பயணித்துள்ளன. சென்னை புதுப்பேட்டை ஊழியர் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக பதவி வகித்த ஆதித்தனார் அந்தப்பகுதியின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இரவுப்பள்ளிக்கூடத்தினை நடதத்தியிருக்கிறார். இன்று அந்த புதுப்பேட்டையில் ஆதித்தனாருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. சிலை அமைக்கப்பட்டிருக்கும் அந்தச் சாலைக்கு ஆதித்தனார் சாலை என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று சேது சமுத்திரக் கால்வாய் என்று அமர்க்களப்படும் விஷயத்தை அன்றே ஆதித்தனார் தன்னுடைய பல கட்டுரைகளில் வலியுறுத்தி வந்திருக்கிறார். அந்த இடத்தில் ஒரு கால்வாய் அமைக்கவேண்டும் என்றம் இந்தக் கால்வாயின் இருகரைகளிலும் தமிழன் வாழ்கிறான் என்பதால் அதனைத் தமிழன் கால்வாய் என்று அழைக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். இன்றும் அதனைத் தமிழர் கால்வாய் என்று பெயரிட கோரிக்கைகள் வைக்கலாம்.

ஆதித்தனாரின் வாழ்க்கை தமிழகத்தின் வரலாற்றுடன் ஒன்றிணைந்தது. அதனுடன் பின்னிப்பிணைந்தது. தமிழகத்தில் நடந்த மொழிப்போரில் பங்கேற்றார். பட எரிப்புப்போரில் பங்கேற்றார். சிறை சென்றார். 1966ல் மாத்தூரில் நடந்த விவசாயத்தோழர்களின் போராட்டத்தில் பங்கேற்றதனால் கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். கைவிலங்கிடப்பட்ட ஒரே தமிழக அரசியல் தலைவர் ஆதித்தனார்தான். 1947 முதல் 1953 வரை தமிழ்நாடு மேலவை உறுப்பினராக இருந்தார். 1957 முதல் 1962 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1964ல் மீண்டும் மேலவையில் தன் பணியினைத் தொடர்ந்தார். 1967ல் சட்டப்பேரவையின் அவைத்தலைவர் ஆனார். அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை ஆதித்தனார் தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவை நடைமுறை விதிகள் என்ற பெயரில் தனி நூல் வெளியிட்டார். தமிழ்நாடு மேல் சபையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தத போது நீர் இறைக்கும் தொழிலாளர்களை மிகவும் பாதித்த பனைமர வரியை நீக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு அன்றைய அரசு ஒப்புக்கொள்ளாததால் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னாளில் அவ்வரி நீக்கப்பட்டது. கோயில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடுக்க மசோதா கொண்டு வந்து அச்சட்டம் வர அடிகோலினார்.

பதினாறு பிள்ளைகள் பெற்ற பெரும் குடும்பங்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார் ஆதித்தனார். இது தமிழினம் பெருகவேண்டும் என்று அவர் கொண்ட பேரவாவின் வெளிப்பாடு. 1981 மே 24ம் தேதி ஆதித்தன் அமரர் ஆனார்.

இந்த மாபெரும் மனிதர் நம் தமிழ்ச்மூகத்துக்குப் பல உன்னதங்களைத் தந்திருக்கிறார். பல மேன்மைகளைத் தந்திருக்கிறார். காங்கிரஸ்காரர்களின் பண்டிதத் தமிழுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் அடுக்கு மொழித் தமிழ்க் கொடுமைக்கும் இடையில் சிக்கித் தவித்த தமிழனுக்கு அவனுக்கான எளிய தமிழினை அடையாளம் காட்டினார். ஆனால் இந்த மாமனிதர் செய்த மிகப்பெரிய ஒரு தவறு என்னவென்றால் அவர் ஒரு தமிழராகப் பிறந்ததுதான்.

இவர் ஒரு கன்னடியராகவோ மலையாளியாகவோ இருந்திருந்தால் அவருடைய இனம் அவரை தேசிய அளவில் அடையாளம் காண வைத்திருக்கும். கொண்டாடியிருக்கும். இந்திக்காரராக இருந்திருந்தால் தேசிய அளவில் அவர் பெயரில் பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கும். ஊடகப்பயிற்சிப் பள்ளிகளில் அவர் பெயர் சொல்லப்பட்டிருக்கும். பல ஊடகப்பயிற்சிக்கூடங்கள் அவர் பெயரில் துவக்கப்பட்டிருக்கும். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிய ஒரே காரணத்துக்காகத் தகுதியே இல்லாத பலர் இன்று உடுக்கடித்து மேடையேற்றப்படுகிறார்கள். வேறு எந்த மொழியிலும் காண முடியாத அரிய ஒரு சாதனையை புரட்சியை தமிழகத்தில் மலரவைத்த இந்த மாபெரும் மனிதரின் நினைவாக ஒரு தபால் தலை வெளியிடப்படுவதற்குக் கூட கன்னித்தீவின் சிந்துபாத் போல தமிழன் காத்திருக்க வேண்டியிருந்தது. நீண்ட காலங்களுக்குப் பிறகு ஆதித்தனார் நினைவில் ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

1 comment:

  1. ஓம்.அன்புடையீர் வணக்கம்.
    உயர்திரு பாகவதரின் அந்திம காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் எனும் பீடி நகரத்தின் சக்கரவர்த்தி த்.பி. சொக்கலால் ராம்சேட்அவர்களின் ஒரே இளவரசர் வள்ளல் திரு ஹரிராம் சேட் என்பவருடன் வாழ்ந்தார்.

    முக்கூடல் நகரம் காலையில் பாகவதரின் "ஜீவப்பிரியே ஸ்யாமளா" என்னும் பாடலைக்கேட்டுத்தான் கண்விழிக்கும்.

    சொக்கலால் சங்கீத சபா எனும் குழு சுமார் ஐம்பது பேருடன் ஒரு பேருந்துவில் அனைத்து நவீன இசைக்கருவிகளுடன் பறந்துசென்று மூலை முடுக்குகளிலெல்லாம் இசை மழை பொழிவிகும்.

    .. இதைப் போன்று திண்டுக்கல் அங்குவிலாஸ் புகையிலை நிறுவனத்தின் இளவல்களும் ஒரு சபா நடத்திவந்தனர்.. திரு ஹரிராம்சேட் அவர்களின் நண்பனாக உற்ற ஆசானாக பாகவதர் இருந்தார். இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் கச்சேரிசெய்வார்கள். உச்ச ஸ்தாயியில் பாடவேண்டிய இடங்களில் ஹரிராம்சேட் அவரோடு இணைந்து மேலே மேலே போய்ப் பாடி மிகவும் மெருகேற்றி கச்சேரியின் உச்ச நிலையினை அடையும்.

    திரு என்.எஸ்.கே.யும் அவ்வப்போது திருமதி டி.ஏ. மதுரம் அவர்களுடன் அங்கு வருவார்கள். பாகவதரின் பிந்நாள்களில் வெளிவந்த திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை என்பதாலும் விருத்தாப்பியமும் சேர்ந்து ஒரு மேதை முடங்கிவிட்டார்.
    பவளக்கொடி நாடகம் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவின் போது பள்ளி மைதானத்தில் நடக்கும்.
    பாகவதர் உச்ச ஸ்தாயியில் பாட வேண்டிய இடங்களில் அருகே திரை மறைவில் அமைத்துள்ள தொங்கவிடப்பட்ட கயிற்றைக் கையில் பிடித்துக் கொண்டு பாடுவார்.
    குரலில் தேன் கசியும். பார்ப்போர் கண்களில் கண்ணீர் பெருகும்.. உடன் ஹரிராம்சேட்டும் சேர்ந்து குரல் கொடுப்பார். மேலே பாடமுடியவில்லை என்ற கழிவிரக்கம் பாகவதரின் முகத்தில் தெரியும். அத்துடன் தன்னைப் போஷித்து தக்க சமயத்தில் குரல்கொடுத்து தாங்கும் அன்புக்கு உளமகிழ்ந்த புன் முறுவலால் நன்றியுடம் நோக்கும் அந்த விழிகள் என் க்ண் முன்னே இப்போதும் தெரிகின்றது.
    அன்புடன்,வெ.சுபிரமணியன்,ஓம்.

    ReplyDelete