Tuesday, June 12, 2007

சனிமூலை


சனிமூலை

ராகவன் தம்பி

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை கைப்பேசியை கைத் தவறுதலாக எங்கோ போக்கடித்து விட்டேன். இப்படிப் போக்கடிக்கும் விஷயத்திலும் சின்ன சுவாரசியங்கள் கூடிய சம்பவங்கள் பல இருக்கின்றன என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.

கைப்பேசியை மனிதன் கண்டுபிடித்து அது இந்தியாவுக்குள் இறக்குமதி ஆன ஏறத்தாழ முதல் நாளிலிருந்தே உபயோகிக்கத் துவங்கியவர்களில் நானும் ஒருவன். முதன் முதலாக வைத்திருந்த கைப்பேசியை அவ்வளவு சுலபமாகப் போக்கடித்து விட முடியாது. அவ்வளவு பிரம்மாண்டமானது அது. அந்தக் காலத்தில் முதியவர்களைக் காட்டில் விட்டு விட்டு வந்து விடுவார்களாம். வடக்கில் வீட்டில் உள்ள கடவுள் படங்களும் சிலைகளும் பழையதாகிப்போனால் ஏதாவது ஆலயத்திலோ அல்லது அரச மரத்தின் அடியிலோ வைத்து விட்டு வந்து விடுகிறார்கள். அது போல அந்தக் கைப்பேசியையும் எங்காவது எடுத்துப் போய் வேண்டுமென்றே விட்டு விட்டு வந்தால்தான் அது நம்மை விட்டுப்போகும். தவறிக் கால் மேல் போட்டுக்கொண்டால் கட்டை விரல் நகம் எகிறிவிடும். அந்த அளவு பெரியது அது.

காலப்போக்கில் பெரிய கைப்பேசிகள் போய் அன்டெனா இல்லாத மிகச்சிறிய கைப்பேசிகள் வந்தே போதும் அதையே ரொம்ப நாட்கள் வைத்திருந்தேன். என்னுடைய மகள்கள் தினமும் அதை மாற்றச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த வற்புறுத்தல் சிறிய சண்டைகளாகவும் மாறிக்கொண்டிருந்தன. ஒரு நாள் என் இளைய மகள் அந்தக் கைப்பேசியைத் தூக்கிக் கொண்டு அவள் பள்ளிக்கோ அவளுடைய தோழிகளின் முன்னாலோ வரக் கூடாது என்று நிபந்தனை விதிக்கத் துவங்கினாள். சரியாக சொல்லி வைத்தது போல என்னுடைய சகோதரி மகன் டாக்டர் பத்மநாபன் சிங்கப்பூரிலிருந்து மிகச் சிறிய அன்டெனா வைத்த ஒரு சிறிய கைப்பேசியை அனுப்பி வைத்தான்.

இடையில் ஒரு விஷயத்தையும் இங்கு சொல்லியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் எனக்குக் குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பழக்கம் என்றால் சும்மா ஒரு இன்பத்துக்காகக் குடிப்பது என்றல்ல. குடியே என்னைக் குடிக்கத் துவங்கிய காலம். இரவு நேரங்களில் நானும் என்னுடைய ஸ்கூட்டரும் எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் என்பதைக் காலையில் தூங்கி எழுந்து நீண்ட நேரத்துக்கு யோசித்தாலும் சுலபமாக நினைவுக்கு வராது. மனைவியையும் குழந்தைகளையும் என்னையும் ஏமாற்றிக் குடித்துக் கெட்டு அலைந்து கொண்டிருந்த நேரம். மாலை ஆறு மணிக்கு மேல் என்ன நடந்தது என்று முழுக்க நினைவில் இல்லாத மாலைகள் ஒரு வாரத்துக்கு ஏழு நாட்களுக்கு மேல் இருந்திருக்கலாம். அப்படி இருந்தும் ஒரு தடவை கூட என்னுடைய குறுஞ்செய்தி சாதனங்களையோ கைப்பேசிகளையோ எங்கும் தொலைத்தது கிடையாது. போதை தெளிந்து எழும் காலைவேளைகளில் படுக்கையில் என் அருகில் மிகவும் சமர்த்தாக என் கைப்பேசியும் உருண்டிருக்கும்.
அன்னையின் அருளும் சத்குருநாதன் திருவடியின் பெருங்கருணையும் என்னைக் குடிப்பழக்கத்திலிருந்து முழுக்க விடுவித்துப் பல ஆண்டுகள் உருண்டு விட்டன. ஆனால் போதையில் எதையும் எப்போதும் கைத்தவறுதலாகக் தொலைக்காதவன் முழு நினைவில் பல விஷயங்களைத் தொலைத்து வருவது இன்று வரை விடை கிடைக்காத ஒரு புதிராக இருக்கிறது. இடுப்பில் கயிறு வைத்துக் கட்டிக்கொண்டு போனாலும் எங்காவது ஏதாவது தொலைந்து போகிறது. அதில் பிரதானமானவை இந்தக் கைப்பேசிகள். யாராவது நண்பர்களிடம் இப்போதெல்லாம் என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொடுத்தால் கண்களில் நிரம்பி வழியும் கேலியுடன் ஒருவகையான நம்பிக்கையில்லாமல் ""குறித்துக் கொள்கிறார்கள். இது எவ்வளவு நாளுக்கு இருக்கும்?'' என்று கேள்வி கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள். சில நண்பர்கள் ஒரு படி மேலே போய் அகாலத்தில் தொலைபேசியில் அழைத்து ""ஏம்பா, இப்போ உன்னோட நம்பர் இதுதானே?'' என்று கேட்டு ரத்தக் கொதிப்பை ஏற்றுவார்கள்.
இந்தியாவில் இயங்கும் அத்தனை கைப்பேசி இணைப்பு நிறுவனங்களையும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன். (இந்த முறை எண்ணை மாற்றவில்லை. பழைய எண்ணே தொடர்கிறது).

இந்த முறை தொலைத்தது மிகவும் சுவாரசியமான வகையில் வயிற்றெரிச்சல் பட வைக்கும் கதை. ரொம்ப நாட்களாக என்னிடம் பாடல்கள் மற்றும் படங்களைப் பதிந்து வைத்துக்கொள்ளும் வசதிகளோ மற்ற எந்த வசதிகளோ இல்லாத மிகச் சாதாரண கைப்பேசி சாதனங்களையே வைத்திருந்தேன். அவற்றைக் கைப்பேசி சாதனம் என்று விஷயம் தெரிந்த யாரிடமாவது சொன்னால் கன்னம் பழுத்து விடும். கைப்பேசி சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடுவதால் மிகப்புராதனமான, வெறுமனே பேச மட்டுமே உபயோகத்தில் இருந்த கைப்பேசிகளை உபயோகித்துக் கொண்டிருந்தேன். அதற்கு மேல் அதற்கு உபயோகம் இல்லை என்பதால் மிக நவீனமான வசதிகள் உள்ள கருவிகள் எதையும் வாங்கவில்லை. இது போன்ற விஷயங்களிலும் எனக்காக ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்கும் விஷயத்திலும் அதிகம் செலவழிக்க மனது வராத மஹா கஞ்சப் பிரபு நான். எவ்வளவு தொலைத்தாலும் மீண்டும் ஏதாவது ஒரு பழைய கைப்பேசிக் கருவியே என்னிடம் வைத்திருப்பேன். நாளடைவில் மீண்டும் என் மகள்களிடம் பேச்சு வாங்கும் ஒரு விஷயமாக என்னுடைய கைப்பேசிக்கருவிகள் திகழ்ந்து கொண்டிருந்தன. என்னுடைய பெரிய மகள் பாரதி நாட்டிய வகுப்புகள் எடுத்துப் பணம் ஈட்டத் துவங்கிய முதல் மாதத்தில் எனக்கொரு கைப்பேசிக் கருவியை வாங்கிக் கொடுத்தாள். அது மிக நவீன வசதிகள் கொண்ட மோட்டாரோலா கருவி. அதில் பாடல்களைப் பதிந்து கொள்ளலாம். நமக்கு வேண்டும் படங்களைப் பதிந்து கொள்ளலாம். படங்கள் எடுக்கலாம். பேச்சுக்களைப் பதிந்து கொள்ளலாம். பெருமையிலும் மகிழ்ச்சியிலும் மனது நெகிழ்ந்து தளும்பிக் கரைபுரளும் ஆனந்தத்துடன் அந்தக் கைப்பேசிக் கருவியைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டிருந்தேன். மனதுக்குப் பிடித்த பாடல்களைப் பதிவு செய்து கொண்டேன். கிருஷ்ணகிரி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் படத்தையும் என் குருதேவரின் படத்தையும் அந்தக் கைப்பேசியின் முகப்புப் படமாகப் பதிந்து கொண்டேன். யாராவது என்னை தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் கதிரி கோபால்நாத் மத்யமாவதியில் கரைந்து கரைந்து ஸ்வர லஹரியை மிதக்க விடுவார்.இந்த சந்தோஷம் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை. ஒரு நாள் காலை நேரத்தில் வீட்டில் மத்யமாவதி ஒலித்தது. அலட்சியத்துடன் கைப்பேசியை எடுத்த போது கை தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் கைப்பேசிக் கருவியின் திரை இருண்டு போனது. படமோ, எண்களோ அல்லது பெயர்களோ எதுவும் தெரியவில்லை. அழைப்புக்கள் கிடைத்தன. பேச முடிந்தது. ஆனால் எல்லாமே ஒரு இருட்டறைக்குள் நடப்பது போல நடந்து கொண்டிருந்தது. சகிக்காமல் அதை பழுது பார்க்க கஃபார் மார்க்கெட்டுக்கு எடுத்துப்போனேன். நியாயப்படி அதை மோட்டாரோலா நிறுவனத்தின் பழுதுபார்க்கும் மையத்துக்கு எடுத்துச் சென்றிருக்க வேண்டும். எங்கள் ஊரில் ""துட்டு குடுத்து சூனியம் வச்சிக்கிறது'' என்று சொல்வார்கள். அந்த வேலையை செய்தேன். கஃபார் மார்க்கெட்டுக்கு விதி என்னை இழுத்துச் சென்றது. பழுது பார்த்தவன் கருவியை இம்சித்து என்னென்னவோ செய்து கொஞ்சம் சரி பார்த்துக் கொடுத்தான். ஆனால் ஒரே மாலையில் அதன் ஒலி சுத்தமாக அடங்கி விட்டது. மீண்டும் எடுத்துக்கொண்டு ஓடினேன். விட்டுவிட்டுப்போகச் சொன்னான். போனேன். கெடு வைத்த நேரத்தில் இருந்து பலமுறை தவறி இன்று நாளை என நாட்களைக் கடத்தி பிறகு நிறுவனத்திடமே பழுது பார்க்கச் சொல்லி என்னிடம் திருப்பிக்கொடுத்தான். நிறுவனத்தினர் பழுது பார்க்கப் பத்து நாட்களாவது ஆகும் என்று சொன்னார்கள். வடக்கு வாசலில் பணி புரியும் செந்தில், வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய வெளியூர் தொலைபேசி இங்கு காரியமில்லாமல் வெறுமனே இருப்பதால் அவன் அதை வைத்துக்கொண்டு தன்னுடைய கைப்பேசியை என்னிடம் கொடுத்தான். தொலைக்கும் என்னுடைய பழக்கத்தை நன்கு அறிந்த அவன் ஒருவிதத் தயக்கத்துடனும் பயத்துடனே என்னிடம் தன் கைப்பேசிக் கருவியைக் கொடுத்தான். ""தொலைஞ்சு போனா எனக்குப் புதுசு கிடைக்கும் சார்'' என்று என்னிடம் சொல்வது போல அவனுக்கு அவனே ஆறுதலும் தைரியமும் சொல்லிக் கொண்டான். ஒரு மாலைவேளை ஜன்பத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் திரும்பி வந்து ""உங்க மொபைல் கீழே விழுந்திருக்கு பாருங்க'' என்று சொல்லி விட்டுப்போனார். குலைநடுக்கம் ஏற்பட்டது எனக்கு. செந்திலிடம் என் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சரி. அடுத்த ஆளைப்பிடிப்போம். நண்பர் முத்துக்குமாரின் மனைவி தேன்மொழியிடம் ஒரு கைப்பேசி சும்மா இருக்கிறது என்று தெரிந்தது. சும்மா விடலாமா? அதைத் தொலைக்க வேண்டாமா? கேட்டுப்பார்த்தேன். கொஞ்ச நாட்களுக்கு வேண்டும் என்று. அவர்கள் இருவரும் என்மீது அபரிமிதமான அன்பை வைத்திருப்பவர்கள். முத்துக்குமார் யதார்த்தாவின் சாம்பசிவா நாடகத்தில் திறம்பட நடித்தவர். தேன்மொழி வடக்கு வாசல் ஏற்பாடு செய்யும் விழாக்கள் அனைத்திலும் ஓடியாடி உதவிகள் செய்பவர். கேட்டதும் கொடுத்து விட்டார்கள். என்னுடைய மோட்டாரோலா திரும்பி வர நாட்கள் எடுத்ததால் அவர்களின் கைப்பேசிக் கருவி என்னிடமே இருந்தது.
என் மோட்டாரோலா பழுது பார்க்கும் மையத்திலிருந்து திரும்பி வருவதற்கு ஒரு நாள் முன்னர் தேன்மொழியின் கைப்பேசியைத் தொலைத்து விட்டேன்.
இந்தத் தடவை அதைத் திருடியவன் அல்லது எடுத்தவன் குறியீட்டு எண் அட்டையை எடுத்து நசுக்கி எறிந்து விட்டிருக்கவேண்டும். அழைப்புக்கள் மௌனத்தையே பதிலாக மாற்றிக்கொண்டிருந்தன.
இதற்கு முன் கிருஷ்ணகிரியில் என் கைப்பேசியைத் தொலைத்த போது உடனடியாக எண்களை அழுத்தித் தொடர்பு கொண்டேன். ஒருவன் எடுத்தான். அவனுக்குச் சொன்னேன். ""இது தில்லி எண். உனக்கு எந்த வகையிலும் பயன்படாது. அழைப்புக்களுக்குப் பதில் சொல்வதற்கும் அதிகக் கட்டணம் ஆகும். ரிலையன்ஸ் இணைப்பு ஆனதால் குறியீட்டு எண் அட்டையையும் மாற்றிக்கொள்ள முடியாது. கருவி வேறு எண்ணை மாற்றிக்கொள்ள உபயோகப்படாது. அந்த எண்ணை உபயோகிக்க வேண்டுமென்றால் உனக்கு அதிகம் செலவாகும்'' என்றேன். அவன் ""உங்க சொத்து எனக்கு எதுக்கு? இன்னும் அரை மணி நேரத்துலே கூப்பிடுங்க. எங்கே வந்து தருவேன்னு உங்களுக்குச் சொல்றேன்'' என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான். அரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டேன். எந்த வகையிலும் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத கோபத்தில் அவன் காரிமங்கலம் அருகே இறைந்து கிடக்கும் நிறைய பாறைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்து அந்தக் கருவியை நசுக்கியிருக்க வேண்டும். அல்லது பென்னேஸ்வர மடம் ஆற்றில் அதைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். ""இணைப்புக்கு எட்டாத தூரத்துக்கு'' அந்தத் தொலைபேசி போய்விட்டதாக ஒரு பெண் குரல் ஒலித்தது.
இந்த முறை அப்படி நடக்கவில்லை. எடுத்தவன் அல்லது திருடியவனிடம் பேசும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. காவல்துறைக்கு முறையீடு செய்து, தொலைபேசி நிறுவனத்திடம் முறையீட்டைப் பதிவு செய்து குறியீட்டு எண் அட்டையின் நகல் ஒன்றைப்பெற்று அதே எண்ணை (9968290295) மீண்டும் பெற்றுக்கொண்டேன். தேன்மொழிக்குப் புதிய கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சரி. எல்லாக் கதையையும் விட்டுத் தள்ளுவோம். இப்போது இப்படிப் புலம்புகிறோமே - கைப்பேசி இல்லையென்றால் உலகமே இல்லை என்பது போல நடுக்கமுறுகிறோமே - அது இல்லாதபோதும் எல்லாமே போய்க்கொண்டுதானே இருந்தது?
குருதேவரின் வாழும் கலை யோகப்பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சி முகாமில் சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்டேன். அந்தப் பயிற்சியின் முக்கிய அம்சமே ஒரு வாரத்துக்குக் கடைப்பிடிக்கும் கட்டாய மௌன விரதம். ஒரு வாரம் யாரிடமும் பேசக்கூடாது. சைகையில் கூடப்பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. செய்தித்தாள்கள் வாசிக்கக் கூடாது. அந்த முகாமில் கலந்து கொள்வதற்கான பிரதானமான நிபந்தனை என்னவென்றால், யாரும் கைப்பேசிகளை எடுத்து வரக்கூடாது. எட்டு நாட்களுக்குக் கைப்பேசிகளை மறக்க வேண்டும். யாரிடமும் தொடர்பு கொள்ளக்கூடாது. முகாமில் கலந்து கொண்ட பலரும் இரவில் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் மௌன விரதத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாக உரத்த குரலில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். பயிற்சி வகுப்புக்கள் முடித்து இரவில் கைப்பேசியில் மனைவிகளுடனும் காதலிகளுடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பயிற்சி முகாமில் கைப்பேசியைத் தவிர்க்க வேண்டும் என்னும் நிபந்தனை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. கட்டாயமாக விதிக்கப்பட்ட மௌனத்தால் உலகமே புதிதாகத் தோன்றியது. மனதெல்லாம் கழுவி விட்டதைப் போல நிஷ்களங்கமாக இருந்தது. ஒரு வாரம் கைப்பேசியைத் தொடவில்லை. அப்போதும் உலகம் ஒரு பிரச்சினையும் இல்லாது மிகவும் நன்றாகத் தான் இயங்கிக்கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். கைப்பேசி இல்லாமல் ஒன்றும் கெட்டுவிடவில்லை. பயிற்சி முகாம் முடிந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்து கைப்பேசியின் துணையுடன் நிறையப் பொய்களைச் சொல்வதைத் தொடர வேண்டியதாகிப் போயிற்று. சொல்ல வருவதை நேராகவும் கோர்வையாகவும் இந்த ஜென்ம்த்தில் சொல்லப் போவதில்லை. சொல்லவும் முடியாது என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment