Thursday, June 14, 2007

ஆனந்த குமாரஸ்வாமி

ராகவன் தம்பி


அனைவருக்கும் வணக்கம்.

தெருக்கூத்துக் களங்களில், நாடக வெளிகளில் நாடக ஒத்திகைகளின் கணங்களில் நான் உயிருடன் இருப்பதை உணர்கிறேன். நாடகங்களுக்காக வேலை செய்யும் கணங்களில் நான் உயிருடன் இருப்பதை உணர்கிறேன். அவைகளை என்னுடைய உயிருடைய கணங்கள் எனக் கருதுகிறேன் என்று நான் பலமுறை என்னுடைய பேட்டிகளில் கூறி வருவது உண்டு.
அதைப்போலவே கடந்த சில மாதங்களாக இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடருக்கான முனைப்புகளில் ஈடுபடத் துவங்கியபின் எனக்குக் கிடைத்து வரும் அக தரிசனங்கள் எண்ணிலடங்காதவை. நான் பிரவேசிக்கும் உலகங்கள் பிரமிக்க வைப்பவை. பல நேரங்களில் நெகிழ்ச்சியைத் தருபவை. அற்புதமான சரித்திரங்களின் பாட்டையில் என்னைப் பயணிக்க வைப்பவை. ஒப்பில்லாத வாழ்க்கை நெறிமுறைகளை எனக்குக் காட்டியவை. இதுவரை நான் இந்தத் தொடருக்குப் பேசுவதற்காகத் தேர்ந்தெடுத்த ஒவ்வொரு மாமனிதர்களின் வாழ்க்கையின் பல நுண்ணிய கணங்களின் தரிசனங்கள்; எனக்குப் பரவசம் அளித்தவை. தில்லித் தமிழ்ச்சங்கம் அளித்த இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடரின் தயாரிப்புகளுக்கான கணங்களில் எனக்குக் கிட்டிய தரிசனங்கள் தந்த பரவசங்கள் எண்ணற்றவை. இந்தப் பரவசமான கணங்களை தரிசிக்கக் காரணமாக இருந்து வரும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இந்த அற்புதமான கணத்தில் தலைவணக்கத்துடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தத் தொடருக்கு ஆழ்ந்த படிப்பறிவும் மிகவும் விரிவான சிந்தனையும் உள்ள தோழர்கள் திரு.ஜி.பாலச்சந்திரன், முனைவர் செ.ரவீந்திரன், பி.அனந்தகிருஷ்ணன் மற்றும் மிகப்பரந்த மனப்பான்மை கொண்ட தோழர் வசந்தகுமார் போன்றவர்கள் தலைமை தாங்கி சிறப்பித்ததும்; எனக்குக் கிடைத்த அற்புதமான வரம் என்று சொல்வேன்.

திரு.அனந்தகிருஷ்ணன் அவர்களின் Tiger Claw Tree புதினம் பெங்குவின் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டபோது அதைப்பற்றி விமரிசனம் செய்த அசோகமித்திரன் ''ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்"" என்று பாராட்டினார். அந்தப் புதினம் காலச்சுவடு பதிப்பகத்தினரால் புலிநகக்கொன்றை என்னும் பெயரில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பு மிகவும் அற்புதமான ஒன்று. அதனை மொழிபெயர்த்ததும் திரு.அனந்தகிருஷ்ணன் அவர்களே. காலச்சுவடு மற்றும் உயிர்மெய் இதழ்களில் இவர் எழுதி வரும் விரிவும் ஆழமும் தேடும் கட்டுரைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளவை. பல நிலைகளில் அறிவுசார்ந்த தளங்களில் பயணிப்பவை. இவருடைய விசாலமான படிப்பும் ஞானமும் என்னைப்போன்ற சாதாரணர்களின் பொறாமையை அடிக்கடி சம்பாதிப்பவை. இன்று இந்தக் கூட்டத்துக்கு இவருடைய தலைமை அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக எடுத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொடருக்காக நூல்களின் உதவியை நாடும்போது தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திலிருந்து பல அரிய நூல்களை மலர்ந்த முகத்துடன் எடுத்துத் தந்து உதவும் தமிழ்ச்சங்கத்தின் நூலகர் தோழர் பாலாஜிக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இவர் இந்த சங்கத்தின் நூலகராகக் கிடைத்தது மிகவும் அற்புதமான விஷயம். இவருடைய பணிகளில் யாரும் அதிகம் குறுக்கிடாமல் இருந்து இவரை சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்கும் பட்சத்தில் தமிழ்ச் சங்க நூலகம் மிகப்பெரிய அளவில் பலருக்கும் பயனளிக்கும் அற்புதமான நூலகமாகப் பரிமளிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.

பல நேரங்களில் நான் கேட்காத நேரத்திலும் பல அரிய நூல்களை எனக்கு நினைவூட்டி அந்த அரிய நூல்களை நான் கேட்காமலேயே என்மேல் கொண்ட அன்பினால் எனக்கு எடுத்துத் தரும் பெரியவர் வெங்கடேசன் அவர்களின் அன்பில் நான் பலநேரங்களில் நெகிழ்ந்திருக்கிறேன். அவருக்கும் நான் எப்போதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இந்தத் தொடருக்காக எனக்குப் பலவகைகளிலும் ஊக்கம் அளித்த மிக நல்ல உள்ளம் அவருடையது. மிகவும் நன்றி.

இனி நான் -

தமிழுக்கும் சமூகத்துக்கும் கலைக்கும் அளப்பரிய காரியங்களைச் செய்த பல மாமேதைகளைப் பற்றிய சிந்தனைகளோ அக்கறைகளோ ஏதாவது ஒரு வகையில் அரசியல் சார்பு இருந்தால் ஒழிய வெகுஜன அளவில் யாருக்கும் கிட்டியதில்லை. அந்த மாமனிதர்களைப் பற்றிய பல அரிய தகவல்களும் செய்திகளும் அறிமுக அளவில் கூட பல தமிழர்களுக்குக் கிட்டுவதில்லை. அரசியல் சார்புகளோ அல்லது திரைப்படம் அல்லது ஊடகங்கள் தரும் மாயைகளின் பலம் இருந்தால் தமிழனுக்குக் குப்பைக்கூளங்கள் கூட மாபெரும் காவியம் ஆகும். குப்பையான சிந்தனைகள் கூட தமிழனுக்கு தத்துவ முத்துக்களாக மாற்றம் பெறும். இங்கு எவ்விதத் தகுதியும் இல்லாதவன் கலைஞனாகவும் தலைவனாகவும் போற்றப்படுவான். அரசியல் சார்பு அல்லது திரைப்பட மாயை இந்த இரண்டும் கிடைக்கப் பெறாத பல உன்னதங்கள் அலட்சிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பதுதான் தமிழனின் சமூக வாழ்வில் நிரூபணமான நிகழ்வுகள். அந்த மாமனிதர்களைப் போன்ற எந்த உன்னதமான பெருநிகழ்வுகளும் தமிழனின் வாழ்வில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாது. இதுபோன்ற ஒரு துரதிருஷ்டவசமான வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஆனந்தகுமாரஸ்வாமியைப் பற்றித் தமிழ்கூறும் நல்லுலகம் கொண்டிருக்கும் பரிச்சயமும்.

ஆனந்தகுமாரஸ்வாமியைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்குக் கிட்டியது அன்னம் பதிப்பகம்;; முன்- எண்பதுகளில் வெளியிட்ட தோழர் வெங்கட்சாமிநாதனின் கலை வாழ்க்கை அனுபவம் வெளிப்பாடு என்னும் ஒரு கட்டுரைத் தொகுப்பின் வழியாகத்தான் என்பது என் நினைவுக்கு வருகிறது. ஆனந்த குமாரசாமி வாழ்க்கைச் சரிதம் - சில குறிப்புகள் என்னும் வெங்கட்சாமிநாதனின் கட்டுரை - அது கட்டுரையாக அல்ல - ஆனந்த குமாரசாமியின் வாழ்க்கை சரிதம் எழுதுவதில் ஈடுபட்டுள்ள அவருடைய நண்பர் ஒருவர் அதை எழுதும் முறைபற்றி, ஆனந்த குமாரசாமி பற்றி அந்த நண்பர் மலைமலையாகக் குவித்துவைத்துள்ள அத்தனை செய்திகளையும் விஷயங்களையும் வகைப்படுத்தி எழுத உதவுவதற்கு வேண்டிய யோசனைகளை வெங்கட்சாமிநாதனிடம் கேட்டபோது அவர் அந்த நண்பருக்கு எழுதிய கடிதம் நான் முன்னர் குறிப்பிட்ட வெங்கட்சாமிநாதனின் கலை, வாழ்க்கை, அனுபவம் வெளிப்பாடு என்னும் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. இக்கடிதத்தில் ஒரு விஷயத்தை சாமிநாதன் குறிப்பிட்டு இருப்பார் ''குமாரசாமியின் வாழ்க்கையின் ஆரம்பத்தை, ஒரு பெரிய மாளிகையின் முன் அடியெடுத்து வைப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அதோ உங்கள் முன்வாசலின் முன்கதவைப் பார்;க்கிறீர்கள். அதன் அருகில் சென்று அதனைத் திறக்கிறீர்கள். திறந்ததுமே அந்த மாளிகையின் ஒரு பகுதி, ஒரு கூடம் உங்கள் பார்வையில் படுகிறது. அது எவ்வளவோ பொருட்களை உங்கள் முன் வைக்கிறது. இந்த அறிமுகங்கள் மூலம் இன்னும் பல அறிமுகங்கள் உலகங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவற்றின் வழியே ஒரு ஆச்சரியத்துடன் பின் தொடர்வீர்களானால் அப்பகுதிகள் அனைத்தும் ஒன்றினை ஒன்று இணைத்து மாளிகையின் முழுமைய உங்களுக்கு உணர்த்திச் செல்லும் ஆனந்தகுமாரசாமியின் சஞ்சாரத்தின் வழியே நீங்களும் சஞ்சரிப்பீர்கள். இது முற்றிலும் நிஜம் என்பது ஆனந்தகுமாரசாமி குறித்து ஒரு சொற்பொழிவு தயார் செய்யும்போது நிதரிசனமாக உணரமுடிகிறது. ஆனந்தகுமாரசாமி பற்றி முழுமையாகவும் நியாயமாகவும் சொல்வது அல்லது பதிவு செய்வது என்பது நிஜமாகவே ஒரு நூலாகத்தான் முடியவேண்டும் - அது ஆனந்த குமாரசாமியின் நினைவு சஞ்சாரங்களைப் பின் தொடர்ந்து செல்லும்போது. அவரது எழுத்துக்களை அவரது தரிசனங்களை முழுமையாக பின்தொடரும்போது அவரைப்பற்றி எழுதப்படும் எல்லாமே முழுமையடையாத ஒன்றாகவேதான் இருக்கும். அந்த அளவு ஆழமும் செறிவும் கொண்டது ஆனந்தகுமாரஸ்வாமியின் கலைப்பயணம். அவருடைய கலை தரிசனங்கள்.

குமாரசாமி இந்தியாவிலும் ஈழத்திலும் ஒரு தேசபக்தராகவும், இந்தியவியல் ஆராய்ச்சியாளராகவும் கலை வரலாற்றாளராகவம் சிறந்த படிப்பாளராகவும், கிழக்கத்திய கலாரசனைகளை சிந்தனைகளை பாரம்பரியத்தின் செழுமையினை மேற்குக்கு சரியான வகையில் அறிமுகப்படுத்திய முதல் கருத்தாளராக அறியப்படுகிறார்.

ஆனந்த குமாரசாமியின் தந்தையார் சர்.முத்துகுமாரஸ்வாமி முதலியார் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி நகரிலிருந்து இலங்கையின் கொழும்புவில் குடியேறியவர். பின்னாளில் இலங்கையின் குடியுரிமை பெற்று இலங்கை சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். இவர் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இலங்கையின் மிகவும் புகழ் வாய்ந்த வழக்கறிஞராக இருந்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசியாரால் சர் பட்டம் கொடுக்கப்பட்ட முதல் ஆசியர் முத்துக்குமாரசுவாமி அவர்கள். 1874ல் இவர் தமிழ் அரிச்சந்திரா நாடகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரிட்டிஷ் அரசியாரிடம் வாசித்துக் காண்பித்தாராம். தாயுமானவர் பாடல்கள் பலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அச்சிட்டு உள்ளார் முத்துக்குமாரசுவாமி முதலியார். பின்னாளில் எலிசபெத் க்ளே பீவி என்னும் ஆங்கிலேயப் பெண்மணியை லண்டனில் சந்தித்து காதல் வயப்பட்டு அவரை மணம் புரிந்து கொண்டார். எலிசபெத் கிளே பீவி தன் கணவருடன் கொழும்புவில் மணவாழ்க்கை துவங்கினார். முத்துக்குமாரசுவாமி-எலிசபெத் கிளே பீவி தம்பதியருக்கு 1877ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஒரு ஆண்மகவு பிறந்தது. ஆனந்தா கென்டிஷ் குமாரசாமி என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிடுகிறார்கள். கென்டிஷ் என்பது அவர்களுடைய குடும்பப்பெயர்.

ஆனந்தகுமாரசாமி பிறந்த இரண்டு வருடங்களுக்குப்பின் அவருடைய தகப்பனார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக இலங்கையை விட்டுக் குடிபெயர்ந்து தன்னுடைய மகனை சிறந்தமுறையில் வளர்க்க லண்டனுக்கு அழைத்துச் செல்கிறார் அவருடைய தாயார். முருகபக்தரான முத்துக்குமாரசுவாமியை மணந்த எலிசபெத் கிளே பீபியும் தன்னை முழுக்க ஒரு இந்துப் பெண்மணியாக அடையாளம் கண்;டார். இந்துமத வாழ்க்கை நெறிகளை கடைப்பிடிக்கலானார். முருகன் வழிபாடு எலிசபெத் கிளேயின் தினசரி வழக்கமானது. ஆனந்தகுமாரசாமிக்கு அவருடைய தாயாரின் வழியாக இந்து மதத்தின் மீதும் இந்து மத வழிபாட்டின் மீதும் அறிமுகம் கிடைத்தது. தாயார் வழியாக இந்தியாவின் ஆன்மீகப் பெரியவர்கள் பற்றிய கதைகள் ஆனந்தகுமாரசாமிக்குக் கிட்டியது. தமிழகத்தைப் பற்றியும் தமிழகத்தின் தொன்மக் கதைகளைப் பற்றியும் எலிசபெத் கிளே தன்னுடைய கணவர் முத்துக்குமாரசுவாமியிடம் கேள்விப்பட்டதை மகனுக்கு ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கினார். இது இந்தியா பற்றிய அவருடைய ஆர்வத்துக்கு மேலும் தீவிரம் ஊட்டியது. இந்து மதம் பற்றிய ஆர்வத்தையும் தூண்டியது. இது இளம் ஆனந்தகுமாரசுவாமியின் நெஞ்சகத்தில் பல ஒரிய ஓவியங்களைத் தீட்டத் துவங்கின. ஆனந்த குமாரசுவாமியும் இளம் வயதில் முருகன் வழிபாடும் சிவன் வழிபாடும் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களின் மீதும் ஈடுபாடு கொண்டார்.

1889ல் கல்லூரி வாழ்க்கையின் போதும் ஆனந்தகுமாரசாமிக்கு இந்தியாவைப் பற்றிய தேடல்கள் தொடர்ந்தன.. கல்லூரியின் நூலகங்கள் மற்றும் லண்டன் நகரத்தின் புகழ்வாய்ந்த நூலகங்களில் இவருடைய தேடல்கள் தீவிரமாக வளர்ந்தன. 1909ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பட்டப்படிப்பில் சேர்;ந்தார். . அங்கும் புவியியல் பாடங்கள் தவிர ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், புராணங்களின் மேல் அவருடைய ஆர்வம் தொடர்;ந்தது. இந்திய புராணங்கள் மற்றும் வேதங்களின் மேல் அவருக்கிருந்த ஆர்வம் அவருடைய புவியியல் படிப்புக்கு எந்த இடையூறாகவும் இருக்கவில்லை. அவர் தேர்ந்தெடுத்த பாடத்திலும் முதல் மாணவராக பல்கலைக் கழகத்தில் தேர்ச்சியடைந்தார். இந்தியத் தொன்மக் கலைகளின் மீதும் இந்து மதத்தின் மீதும் பேரார்வம் கொண்ட இன்னொரு மாணவி ஈதெல் மேரியை லண்டன் நூலகத்தில் ஆனந்தகுமாரசாமி அடிக்கடி சந்திக்க அது காதலாகி பின்னர் திருமணத்தில் முடிந்தது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் புவியியல் பாடத்தில் அவர் டாக்டரேட் பட்டம் பெற்றார். பின்னர் டாக்டர் ஆனந்தகுமாரஸ்வாமியாக மீண்டும் இலங்கை திரும்பினார். இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தாயாருடன் இலங்கையை விட்டு லண்டன் குடிபுகச்சென்ற அந்தத் தமிழ்க்குழந்தை இருபத்து மூன்று வருடங்களுக்குப் பின் தன் தந்தையார் பெயரும் புகழும் சம்பாதித்த அதே இலங்கையின்; புவியியல் துறையில் மேலதிகாரியாக தன் மனைவியுடன் திரும்பி வந்து புதிய வாழ்வைத் துவங்கியது. அங்கு அவருடைய வாழ்க்கை, பிழைப்பு - புவியியல் ஆய்வு சார்;ந்ததாக இருந்தாலும் அவருடைய ஆர்வங்கள் வேறு எங்கெங்கோ பயணித்தன. அங்கு அவர் செய்த ஆய்வுகளும் தயாரித்த ஆய்வு முடிவுகளும் ஒரு நுண்ணிய அறிவும், மூல கற்பனைத் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் அவரை நிரூபித்தாக சொல்வார்கள். தன்னுடைய உத்தியோக நிமித்தமாக இலங்கையின் பல குகை அழிவுப்பகுதிகளை பார்வையிட்டார் ஆனந்தகுமாரசாமி. புவியியல் நிபுணராக அவரது அலைச்சல்கள் பல்வேறு புராதன சரித்திரச் சின்னங்களையும் சிதைவுகளையும் அவரை எதிர்கொள்ள வைத்தன. அந்தப் புராதன சரித்திரச் சின்னங்கள், சிற்பங்களில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாட்டினை ஏற்படுத்தின.
இப்படிக் கலைகளுடன் ஆனந்தகுமாரசாமிக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு சிற்பங்களுடன் நிகழ்ந்திருக்கிறது. கலைத் தத்துவம், பண்பாடு, தனிமனிதனின் கலைத்திறன், பண்பாட்டுச் சரித்திரம், ஒரு இனத்தின் சரித்திரம், மதம், உலகளாவிய ஒரு தத்துவப்பார்வை, சமூக ஆளுமை போன்ற எத்தனையோ பல்வேறு உலகங்களை தன்னுள் அடக்கியது சிற்பக்கலை. இந்த சிற்பக்கலையின் அருகாமை ஆனந்தகுமாரசாமிக்குள் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. இது அவருடைய வாழ்க்கைப் பாதையை முற்றிலுமாக மாற்றியது என்று சொல்லலாம். அந்த பிரம்மாண்டமான கலை வடிவங்களின் பிரம்மாண்டத்தைப் பற்றி, ஆளுகையைப் பற்றி உலகத்துக்கு சொல்ல வேண்டும் என்கிற வேட்கையை உருவாக்கிக் கொண்டார் அவர். தன்னுடைய மனைவியின் உதவியுடன் சுமார் நான்கைந்து வருடங்கள் அவர் இலங்கையின் புராதனக் கலைகளைப் பற்றிய ஒரு திட்டவட்டமான ஒரு முறையான ஆய்வினை மேற்கொண்டார். தன்னுடைய மனைவியின் உதவியுடன் அவருடைய Medieval Sinhalese Art (மத்திய கால சிங்களக் கலை) என்னும் அற்புதமான நூல் பதிக்கப்பட்டது. கீழைநாடுகளை எந்த நாகரிகமும் இல்லாத, கலாச்சார மேம்பாடோ, கலையழகோ கொண்டிராத காட்டுமிராண்டிப் பகுதிகளாக எண்ணிக் கொண்டிருந்த மேலை நாட்டினரின் தவறான பார்வையை விலக்கி கீழை நாடுகளின் அற்புதமான கலாச்சாரம், கலை பற்றிய ஒரு சரியான புரிதலை மேற்கத்திய நாடுகளுக்குத் தந்தது இந்த நூல். அந்த வகையில் மேற்கத்திய நாட்டாரின் கண்களைத் திறந்து நம்மைப் பற்றிய ஒரு சரியான பார்வையைக் கொடுத்தது இந்தத் தமிழர்தான் என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயமாக இருக்கவேண்டும். கீழைநாடுகளைப் பற்றிய கலைக் கண்ணோட்டம் குறித்து முதல் தடத்தினை இப்படிப் பதித்தார் ஆனந்தகுமாரஸ்வாமி.

இலங்கையின் கலாச்சாரம், கலைகள் பற்றிய அவருடைய ஆய்வுகள் மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்த அவருடைய நூலைத் தொடர்ந்து இந்தியக் கலைகளின் மீதும் தன்னுடைய ஆய்வுப் பணிகளைத் தொடங்கினார் அவர். இந்தியக் கலைப்படைப்புக்களின் தத்துவார்த்த அடிப்படைகளைப் பற்றியும் அவை நம்முள் விரிக்கும் மெய்ஞான தரிசன உலகம் பற்றியும் முதன் முதலாகப் பேசியவர் ஆனந்தகுமாரசுவாமி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்திய சுவர்ச்சித்திரங்களைப் பற்றி, இந்திய சிற்றோவியங்களைப் பற்றி ஏதும் அதிகம் பேசப்படும் அளவுக்குத் தெரியாத காலத்தில் சொல்லப்போனால் கீழ்த்தேய இந்திய ஓவியங்களுக்கும் கலைப்படைப்புக்களுக்கும் அவை மிகவும் மேன்மையான கலைப்படைப்புக்கள் என்ற அங்கீகாரத்தினை உலக அளவில் பெற்றுத்தந்தவர் ஆனந்தகுமாரசுவாமி என்றுதான் சொல்லவேண்டும். இலங்கையில் அவர் எதிர்கொண்ட தொல்பொருள் சிதைவின் சிற்பங்கள் இந்தியச் சிற்ப வளத்தின் பின்னணிக்கும் இந்திய ஓவிய வளப்பின்னணிக்கும் ஒரு சந்திப்பைத் தூண்டி அவரை அஜந்தா எல்லோரா என்று இந்தியாவுக்கு இழுத்து வருகிறது.

இந்த ஆய்வுகளுக்காக ஆனந்தகுமாரசுவாமி கற்ற மொழிகள் பல. பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரீக், சம்ஸ்கிருதம், பிராகிருதம், பாலி மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளை அவர் வலிந்து கற்றிருக்கிறார். ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருந்த மொழிகள் ஸ்பானிஷ், டட்ச், பெர்சியன், மற்றும் சிங்களம் போன்ற மொழிகளாகும். இந்த மொழிகளில் பெரும் பாண்டித்யமும் பெற்றிருந்தார்.

ஆனந்தகுமாரசுவாமியின் மொழிகள் மற்றும் கலைகள் பற்றிய தேடல்கள் அவருடைய குடும்ப வாழ்வினை வெகுவாகப் பாதித்தன. அவருடைய மனைவி அவரை விட்டுப் பிரிந்து மீண்டும் லண்டன் சென்;றார். தன் ஆய்வுகளிலேயே தன்னுடைய கவனத்தைத் தொடர்ந்தார் ஆனந்தகுமாரசுவாமி. ஒரு கலைவெறி கொண்டு இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பயணித்தார். ரிஷிகேசத்திலும் ஹரித்வாரிலும் அலைந்தார். ராஜஸ்தான் நாட்டுப்புறக்கலைஞர்களைத் தேடிப்பயணித்தார். வங்க ஓவியர்கள் பலரை சந்தித்தார். பல விரிவான ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய வண்ணம் சென்றது அவருடைய வாழ்வு. பயணங்களின் இடையில் சந்தித்த ரத்னா தேவி என்னும் இலங்கைப் பெண்ணை மணந்;தார்.

அவர் இலங்கையில் ஏற்றிருந்த பொறுப்பு வாய்ந்த புவியியல் துறையின் மேலாளர் பதவி அவருடைய இந்தியப் பயணங்களுக்குப் பெரும் இடையூறாக இருந்திருக்கிறது. எனவே அந்தப் பதவியைத் துறந்தார். தன்னுடைய ஆய்வுகளை மிகவும் சுதந்திரமாகத் தொடர்ந்தார்;. மிக நெருக்கடியான ஆய்வுப்பணிகளுக்கு இடையிலும் சிலோன் சோஷியல் ரிஃபார்ம் சொசைட்டி என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றினைத் துவங்கி சமூகப் பணியாற்றினார். சிலோன் நேஷனல் ரெவ்யூ என்னும் செய்தித்தாளைத் துவங்கி சமூக அக்கறையுடன் பல விஷயங்களை மக்கள் இடையில் எடுத்துச் சென்றார்.
துணைவியார் ரத்னா தேவியுடன் ஐரோப்பா மற்றும் பல கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்தில் பிராட் கேம்டன் என்னும் இடத்தில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவி அவருடைய பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். இந்தியாவின் அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளிலும் அவருடைய ஆய்வுப்பணி மீண்டும் தொடர்ந்தது.

1910ல் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அவரை மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளாக்கியது. சர்.ஜார்ஜ் பர்ட்வுட் என்னும் கலை விமரிசகர் மேலை மற்றும் கீழை நாடுகளின் கலைகளைப் பற்றிய ஒரு சொற்பொழிவு ஆற்றினார். கீழை நாடுகளின் கலைஞர்கள் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைப் படைத்தார்கள். ஆனால் அழகியல் பற்றி ஒன்றும் தெரியாமல் அவர்கள் அவைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு புத்தரின் சிலையை எடுத்துக்கொண்டால் அது வெறும் மரத்தூளினால் உருட்டிப்போடப்பட்ட பட்டாணி உருண்டைகளாத்தான் எனக்குக் காட்சியளிக்கின்றன என்று பர்ட்வுட் அலட்சியமாகவும் கேவலமாகவும் இந்திய சிற்பக் கலையைப் பற்றி குறிப்பிட்;டார். இது ஆனந்தகுமாரசாமியை மிகவும் வேதனையும் கொதிப்பும் அடைய வைத்தது. பர்ட்வுட் போன்ற விமர்சகர்கள் கீழை நாடுகளின் கலைகளின் மேன்மைகளைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் என்றும் தங்களுடைய நாட்டில் உலவும் கலை குறித்த பார்வைகள் சார்ந்தே அவர்கள் இயங்குகிறார்கள் என்றும் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார். இந்த மேற்கத்திய கலை விமர்சகர்களுக்கு இந்தியக் கலைகளின் மேன்மையைப் பற்றித் தெளிவாகச் சொல்லியாக வேண்டும் என்று தீர்மானித்தார்.
பர்ட்வுட்டின் அலட்சியமான பார்வைக்கு பதில்தரும் வண்ணம் Origin of the Buddha Image என்னும் நூலை உடனடியாக எழுதி வெளியிட்டார். இது உலகின் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இதைத் தொடர்ந்து தன்னுடைய எழுத்துப் பணியை மிகவும் தீவிரமாகத் தொடர்ந்தார். இந்தியக் கலைகளின் மீது தொடர்ச்சியாக பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி உலகினரின் கவனத்தை இந்தியக் கலைகளின் மீது பதிய வைத்தார். அவருடைய Art and Swadeshi என்னும் நூல் பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. The Arts and Crafts of India and Ceylone என்னும் 250 பக்கங்கள் கொண்ட நூலை தானே விளக்க ஓவியங்கள் வரைந்து வெளியிட்டார். அந்த நூல் இந்திய சிற்பக் கலைகள், சிற்றோவியங்கள், கைவினைக் கலைப்பொருட்கள் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகிறது.
இது தமிழ்ச்சங்க நூலகத்தில் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டு பல வருடங்களுக்கு முன் இருந்தது. பகுதிநேரத் தொழிரலாக தமிழ்ச்சங்க நூலகத்தில் நூல்களைத் திருடும் கலை ஆர்வலர்கள் யாராவது திருடாமல் இருந்திருந்தால் இப்போதும் இருக்கவேண்டும். சாகித்ய அகாடமி நூலகத்தில் இது இருக்கிறது. ஆனால் இரவலுக்கு கிடைப்பதில்லை.

1917ம் வருடம் ஆனந்தகுமாரசாமியின் வாழ்வில் மிகவும் முக்கியமான காலகட்டமாக அமைந்தது. அவர் பாஸ்டன் நுண்லை அருங்காட்சியகத்தில் இந்திய, பாரசீக மற்றும் இசுலாமிய க் கலைகளின் மீதான ஆய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் சகோதரி நிவேதிதா அம்மையாரை சந்தித்தார். மார்கரெட் ஈ நோபிள் என்னும் ஐரிஷ் பெண்மணியான அவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக சகோதரி நிவேதிதாவாக பெயரும் மதமும் மாறினார். சகோதரி நிவேதிதாவுடன் இணைந்து ஆனந்தகுமாரசுவாமி Myths of the Hindus and Buddhists என்னும் நூலை வெளியிட்டார். அமெரிக்காவில் இருந்து மேற்கத்திய உடைகள் உடுத்தினாலும் அவருடைய முருகன் மற்றும் சிவ வழிபாடுகள் தொடர்ந்தன. அவருடைய தலைப்பாகையும் நெற்றியில் பட்டையான விபூதியும் அமெரிக்காவில் அப்போது மிகவும் பிரபலம் அடைந்ததாகச் சொல்வார்கள்.

அமெரிக்காவில் ஆனந்தகுமாரசுவாமியின் வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் வெற்றியடைந்த ஒன்று. ஆனாலும் மனத்தளவில் அவரை மிகவும் சோர்வடையச் செய்த சம்பவங்களும் அங்குதான் நிகழ்ந்தன. அவருடைய மகன் நாரதர் விமான விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். மகன் இறந்த சோகத்தில் அவருடைய மனைவியும் மிகவும் உடலும் மனமும் சோர்ந்து படுக்கையிலேயே நாட்களைக் கழித்து இறந்துபோனார். இசைக் கலைஞரான அவருடைய புதல்வி ரோகிணியும் அமெரிக்கர் ஒருவரை மணந்து அவரை விட்டு விலகிச் சென்றார். இந்த சம்பவங்கள் ஆனந்தகுமாரசுவாமியின் வாழ்வில் மிகப்பெரிய இடியாக விழுந்தன. தனிமையில் அவர் பகவத் கீதை மற்றும் உபநிஷத்துக்களின் துணையை நாடினார். எழுத்து மட்டுமே அவருடைய இன்னொரு துணையானது.

இந்த காலகட்டத்தில் தான் அவருடைய The Dance of Shiva, Transformation of Nature in art, Christian and oriental Philosophy of Art, History of Indian and Indonesian Art, Buddha and the Gospel of Buddhism என்னும் இன்று வரை பேசப்படும் நூல்களை வெளியிட்டார். தி டேன்ஸ் ஆஃப் சிவாவின் தமிழ் மொழிபெயர்ப்பும் புத்தரைப் பற்றிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் மிக சமீபத்தில் மறுபதிப்புக்கள் வெளிவந்துள்ளன. மீண்டும் ஒரு வெறியுடன் படைப்புலகில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் டோனா லூஸா என்னும் அர்ஜென்டினியப் பெண்மணியை சந்தித்தார். விதவையான இப்பெண்மணி மிகவும் துயருற்றிருந்த ஆனந்தகுமாரசாமிக்குப் பல வகைகளில் ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்தார். ஆனந்தகுமாரசாமியின் பல நூல்களையும் கட்டுரைகளையும் பதிக்கும் பணியில் இவர் மிகவும் உதவியாக இருந்தார். பின்னாளில் இந்தப் பெண்மணியை மணந்து கொண்டார் ஆனந்த குமாரசுவாமி. இவர்களுக்கு ராம குமாரசுவாமி என்னும் ஆண்குழந்தை பிறந்தது. ராமகுமாரசுவாமி அமெரிக்காவில் தற்போது ஆல்பெர் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மிகவும் புகழ் வாய்ந்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்தியத் தத்துவங்கள் குறித்தும் மதங்கள் குறித்தும் பல கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனந்தகுமாராசுவாமியின் முழுமையான வாழ்வும் அருங்கலைகளின் மீதான ஆய்வுகளுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்ட ஒன்று. அவருடைய இறுதிக்காலங்களிலும் கூட அவர் கலைகளைப் பற்றிய தீவிரப் பார்வைகள் கொண்டே இயங்கி வந்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்திருந்தாலும் அவருடைய உயிர் இந்தியாவில்தான் அலைந்து கொண்டு இருந்தது என்று சொல்வார்கள். அவருடைய மனவெளி எங்கும் இந்தியா, அதன் ஓவியங்கள், நாட்டியம், நாடகம், இசை, சிற்பங்கள், இலக்கியம், மற்றும் பண்பாடு என்று என்று ஒவ்வொரு நாடித்துடிப்பிலும் ஒலித்துக் கொண்டு இருந்தது.


அவர் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. அவரிடம் சலனப்படக் காமிராவும் இருந்தது. அந்தக் காலத்திலேயே பல குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அவருடைய ஒரு படத்தில் ஜப்பானிய கெய்ஷாப் பெண்கள் தங்கள் நடனங்களின் முத்திரைச் சிறப்புக்களை அவற்றின் நுட்பங்களை அவருக்கு விளக்குகிறார்கள். அவர் காலத்தில் இருந்த தேவதாசிகள் சதிர் ஆடுகிறார்கள். அக்காலத்திய நாட்டிய பாணிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த சலனப்பட நறுக்குகள் சித்தானந்த தாஸ்குப்தாவின் 'சிவனின் நடனம்" படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெங்கட்சாமிநாதன் குறிப்பிடுகிறார். ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையைப் பற்றியும் ஒரு திரைப்படம் எடுத்திருக்கிறார். மேலை நாடுகள் மற்றும் கீழை நாடுகளின் பலவகை நாட்டிய பாணிகளை அறிந்தவர் அவர். அதில் ஆழ்ந்த ஞானம் அவருக்கு இருந்திருக்கிறது. நாட்டிய முத்திரைகளைப் பற்றி அவர் தனியே ஒரு நூல் எழுதியிருக்கிறார். (மிரர் ஆஃப் கெஸ்சர்ஸ்) நாட்டியக் கலைஞர் உதயஷங்கர் தனக்கு முதன்முதலாக நாட்டியத்தைப் பற்றிய ஒரு சரியான பரிச்சயத்தை ஏற்படுத்தியது ஆனந்தகுமாரசாமியின் இந்த நூல்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எல்லா தத்துவ மரபுகளையும் அறிந்தவர் ஆனந்தகுமாரசுவாமி. எல்லா நுண்கலைகளும், கிராமிய ஆதிகுடிகளின் கலைகள் உட்பட அனைத்து வகைக் கலைகளின் மீதும் ஆழ்ந்த ஞானம் கொண்டு இயங்கியவர்.


பாஸ்டனில் மிகவும் தீவிரமாக ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்த தீவிரமான காலகட்டத்தில் தன்னுடைய 80வது வயதில் 8 செப்டம்பர் 1947 அன்று இந்த உலகை விட்டு நீங்கினார் ஆனந்தகுமாரஸ்வாமி. இந்தியாவையே நினைத்து ஏங்கிக்கொண்டிருந்த ஒரு ஜீவன் அமெரிக்காவில் அடங்கியது. அவருடைய விருப்பப்படி அவருடைய அஸ்தியை அவருடைய மகன் ராம குமாரஸ்வாமி கங்கையில் கரைத்துப் போனார்.

குமாரசுவாமியின் முதிர்ச்சி பெற்ற பெரும்பான்மையான எழுத்துக்களை ஒரே ஒரு தலைப்பின் கீழ் வைக்கலாம். அதாவது பாரம்பரியம். இன்று நாம் பாரம்பரியம் என்ற வார்த்தைக்குக் கொண்டிருக்கும் பொருளோ அல்லது நம் பழக்கவழக்கங்களோ அல்ல ஆனந்தகுமாரஸ்வாமி குறிக்கும் பாரம்பரியம். அது அனாதியான அகில உலகத்தன்மையினைக் கொண்ட பாரம்பரியம். உலகில் தோன்றிய அனைத்து உண்மையான மதங்களுக்கும் இந்த மதங்களால் சீரமைக்கப்பட்ட சமூகங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கும் பாராம்பரியம்தான் ஆனந்த குமாரஸ்வாமி சுட்டிக்காட்டிய பாரம்பரியம்.

தொடக்கத்திலிருந்தே மேலை நாடுகள் கீழைத்தேசங்கள் மீது செலுத்திய செல்வாக்கை கண்டனம் செய்தவர்களில் முன்னோடியாக விளங்குகிறார் அவர். இந்தியக் கலைகளின் மீதான வெளிச்சத்தை மேலை நாடுகளுக்குப் பாய்ச்சிய இவர் தன்னை ஒரு தமிழனாக அடையாளம் காண்பதில் மிகவும் பெருமை அடைந்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்து ஆங்கிலத்திலேயே எழுதி வந்திருந்தாலும் தாய்மொழிக் கல்வி பற்றிய அவருடைய கருத்துக்கள் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றன. ஓரிடத்தில் அவர் சொல்கிறார் -
எந்தவித அடிவேரும் அற்ற மேலெழுந்த நிலையில் என்னவென்று குறிப்பிட முடியாத பழமைத் தொடர்பு முற்றாக அறுக்கப்பட்ட மனிதனை ஒரு தலைமுறை ஆங்கிலக் கல்வி உருவாக்கிவிடும். இவ்விதம் தோற்றுவிக்கப்படும் அறிவாளி கிழக்கிற்கோ மேற்கிற்கோ பழமைக்கோ வருங்காலத்திற்கோ தேவைப்படாத வெறுத்து ஒதுக்கப்படுபவனாகவே காட்சியளிப்பான்.ஓரிடத்தில் தன்னை ஒரு தமிழனாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து அவர் சொல்வது :

என்னுடைய பெருவிருப்பம் நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஆகையால் நீங்கள் என்னை ஒரு தமிழனாகவும் நண்பனாகவும் ஏற்று இருப்பதற்காக உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது ஆங்கிலேயனாக வந்தேன். இப்போது நான் இந்தியத் தாயின் புதல்வனாக மறுபிறப்பு எடுத்து ஒரு குழந்தை தன் பெற்றோருடன் செல்கின்ற மாதிரி உங்களிடம் வந்துள்ளேன். என் வாழ்நாளின் பெரும்பாகத்தை நான் இங்கிலாந்தில் கழித்த போதிலும் இங்கு வந்ததற்குப் பின் எங்களின் பண்பாட்டின் சிறப்பினை உணர்ந்துள்ளேன். ஆகையால் எங்களில் பலர் மேல்நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதனால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதை நீக்க என்னால் ஆன முயற்சிகளையும் செய்து வருகிறேன்.மேலைநாடுகளில் அவருடைய இயங்குதளங்கள் செயல்பட்டபோதிலும் இந்தியக் கலைகளின் மீதான அவருடைய மாளாக்காதல் அவரை ஒரு இந்தியனாக அடையாளம் காண்பதில் அவருக்குப் பெருமை தந்திருக்கிறது. ஒரு தமிழனாக அவர் தன்னை அடையாளம் காணும்போது அவருக்கு மாளாத உவகையை அளித்துள்ளது. இது அவருடைய பல கட்டுரைகளில் வெளிப்படுகிறது. அவரைப் பற்றி வரும் எந்த ஒரு கட்டுரையிலும் ஆய்விலும் உலகின் கலை ஆய்வாளர்கள் பலராலும் தவறாமல் குறிப்பிடப்படுகிறது.

உலகின் பாரம்பரியத்தில் தன்னுடைய பாரம்பரியத்தினையும் தன்னுடைய பாரம்பரியத்தில் உலகப் பாரம்பரியத்தையும் கண்டு நம் கற்பனைகளுக்கும் எட்டாத விரிவினையும் ஆழத்தையும் கொண்டு இயங்கிய உலகத்தமிழன் என்று ஆனந்த குமாரஸ்வாமி குறித்து ஒவ்வொரு தமிழனும் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

மிகவும் பெருமைப்படுகிறேன்.

நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment