Thursday, June 14, 2007

போர் நாய்



உருது சிறுகதை
ஸதத் ஹஸன் மண்ட்டோ
ஆங்கிலம் வழி தமிழில் -ராகவன் தம்பி

பல வாரங்களாக வீரர்கள் பதுங்கு குழிகளில் தயார் நிலையில் காத்திருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. எந்த சண்டையும் நிகழவில்லை. யாரும் யாரையும் சுட்டு வீழ்த்தவில்லை. ஏதோ சடங்குக்காக செய்வது போல, சில ரவுண்டுகள் இருபுறமும் தினமும் பரஸ்பரம் வானத்தை நோக்கிச் சுட்டுக் காண்பித்துக் கொண்டார்கள்.
காட்டுப் பூக்களின் அடர்ந்த வாடையுடன் காற்று சற்றுக் கனமாக இருந்தது. அடர்ந்த புதர்களிலும் பதுங்கு குழிகளிலும் ஒளிந்து காத்துக் கொண்டிருந்த வீரர்களைப் பற்றி அந்தக் காற்று எதுவும் கவலைப்படவில்லை. எப்போதும் போலப் பறவைகள் கானம் பாடிக் கொண்டிருந்தன. மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தன. வண்டுகள் ஒருவிதமான சோம்பேறித் தனத்துடன் ரீங்கரித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

எப்போதாவது வெடிக்கும் துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் இசைக் கலைஞனின் வாசிப்பில் சடாரென்று ஏதோ அபஸ்வரம் தட்டியது போல பறவைகள் ஒருவிதமாகத் திடுக்கிட்டுக் கிளம்பி பிறகு அமைதியாகத் தங்கள் இடங்களில் அமர்ந்தன. அது செப்டம்பர் மாதம் முடிவடையும் நேரம். ஏதோ கோடையும் குளிர்காலமும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதைப் போல சூடாகவும் இல்லாமல் குளிரும் அடிக்காமல் ஒருவிதமான மந்த நிலையில் இருந்தது. நீலவானில், பருத்திக் குவியலைப்போன்ற மேகங்கள், தொங்கு பாலங்களைப் போல அங்கங்கு சோம்பேறித்தனத்துடன் மிதந்து கொண்டிருந்தன.

எந்த முடிவுக்கும் வராது, எதுவும் நடக்காது போய்க்கொண்டிருந்த அந்த முடிவிலாப் போர் தந்த அயர்ச்சியில் இரு தரப்பிலும் வீரர்கள் களைத்துப் போகத் துவங்கினார்கள். அவர்கள் பதுங்கியிருந்த இரு குன்றுகளும் ஒரே உயரத்திலும் ஒன்றையொன்று நேர் எதிர்ப்பார்வையில் நிமிர்ந்து பார்த்து நின்றிருந்தன. கீழே, பள்ளத்தாக்கில், ஒரு தெளிய நீரோடை நெளிந்து செல்லும் பாம்பினைப் போல, வளைந்து சுழித்துச் சென்றது.

இந்தச் சண்டையில் வான் படையை ஈடுபடுத்தவில்லை. இருபுறமும் மிகவும் கனரகமான ஆயுதங்களோ பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பிரம்மாண்டமான தீயை மூட்டுவார்கள். இருபுறமும் சிப்பாய்கள் உரத்துப் பேசிக்கொள்வது இரவுகளில் இருபுறமும் குன்றுகளில் எதிரொலிக்கும்.

கடைசி வட்டம் தேனீரை அப்போதுதான் குடித்து முடித்திருந்தார்கள். தீ தணிந்திருந்தது. வானம் தெளிவாக இருந்தது. காற்றில் சிலிர்ப்பு கூடியிருந்தது. காற்றில் கதிர்ச் சருகுகள் கருகும் வாடை கூடியிருந்தது. இரவுப் பாதுகாப்பில் இருந்த ஹர்நாம் சிங்கைத் தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் ஏற்கனவே தூங்கிப் போயிருந்தார்கள். இரவு இரண்டு மணிக்கு அடுத்த ஆளாகப் பணியை ஏற்றுக் கொள்வதற்காக கண்டா சிங்கைத் தட்டி எழுப்பி விட்டு நெட்டி முறித்துவிட்டுக் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான் ஹர்நாம் சிங். ஆனால் தூரத்தில் தென்படும் நட்சத்திரங்களைப் போல, தூக்கம் அவனை விட்டு வெகுதொலைவில் விலகியிருந்தது. உறங்குவதற்கு முயற்சித்தான். ஒரு பஞ்சாபி நாடோடிப் பாடலை மெல்லிய குரலில் பாடத் துவங்கினான்.

எனக்கொரு ஜோடி செருப்பு வாங்குஎன் அன்பே நட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பே...உன் எருமையை விற்க வேண்டுமென்றாலும்எருமையை விற்றுநட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பேஅந்தப் பாட்டு இதமாக இருந்தது அவனுக்கு. அவனை சற்று உணர்ச்சி வசப்படவும் வைத்தது. எல்லோரையும் ஒவ்வொருவராக எழுப்பினான். எல்லோருக்கும் இளையவனான பன்டா சிங், ஹீர் ராஞ்சாவின் காதல் பாடலைப் பாடத் துவங்கினான். அது பஞ்சாபி மொழியின் அமரத்துவம் பெற்ற, சோகமும் காதலும் நிறைந்த அமரக் காவியம். அடர்ந்த சோகம் அனைவரையும் கவ்விக் கொண்டது. அந்தப் பாடல் சுமந்த சோகத்தின் பரப்பை அந்தக் குன்றும் உள்வாங்கி அமைதியாக நின்று கொண்டு இருந்தது போல இருந்தது.

அங்கு கவ்வியிருந்த சோகமானதொரு மனநிலையை ஒரு நாயின் குரைப்பு சிதற வைத்தது.

"இந்த நாய்க்குப் பொறந்தது எங்கிருந்து முளைச்சது''? என்று ஜமேதார் ஹர்நாம் சிங் உறுமினான்.

நாய் மீண்டும் குரைத்தது. அந்தக் குரைப்பு வெகு அருகிலிருந்து கேட்பது போல இருந்தது. புதர்கள் சலசலக்கும் ஓசை கேட்டது. பன்டா சிங் புதர்களுக்குள் தேடிக்கொண்டு சென்றான். சிறிது நேரத் தேடலுக்குப் பின் கையில் ஒரு நாய்க்குட்டியோடு வெளிவந்தான். அது மிகவும் பரபரப்பாக வாலை ஆட்டிக்கொண்டு இருந்தது.

"இவனை நான் அந்தப் புதருக்குப் பின்னால் கண்டுபிடிச்சேன். சார் தன்னோட பேரு ஜ÷ன்ஜ÷ன் னு சொல்றார்.'' எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள்.

நாய் ஹர்நாம் சிங்கை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு சென்றது. அவன் தன்னுடைய பையிலிருந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து அதனை நோக்கி வீசினான். நாய் முகர்ந்து பார்த்து உண்ணப் போகும் நேரம், குனிந்து வெடுக்கென்று பிஸ்கெட்டைப் பறித்துக் கொண்டான்.""இரு... நீ பாகிஸ்தானி நாயாக இருந்தாலும் இருக்கலாம்''

எல்லோரும் சிரித்தார்கள். பன்டா சிங் நாயைத் தடவிக் கொடுத்து ஹர்நாம் சிங்கிடம், ""ஜமேதார் சாஹிப், ஜ÷ன் ஜ÷ன் ஒரு இந்திய நாய். எங்கே உன் அடையாளத்தை நிரூபி?'' என்று நாய்க்கு ஆணையிட்டான். நாய் அவனை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.

""பாரு. இப்படி வாலை ஆட்டறதெல்லாம் அடையாளம் ஆகாது. எல்லா நாயாலேயும் வாலாட்ட முடியும்'' என்றான். நாயின் வாலுடன் விளையாடியபடியே பாவம். இது ஒரு ஏழை அகதியாக இருக்கலாம் என்றான் பன்டா சிங்.ஹர்நாம் சிங் தன் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்துத் தரையில் வீசினான்.
எல்லா பாகிஸ்தானிகளையும், நாய்கள் உட்பட எல்லோரையும் சுடப்போகிறேன்.''ஒரு சிப்பாய் உரக்கக் கூவினான், ""இந்தியா ஜிந்தாபாத்.''

பிஸ்கட்டில் வாய் வைக்கப்போன நாய் மிரண்டு போய் பின் வாங்கியது. வாலைத் தொடைக்குள் சொருகிக்கொண்டு மருண்ட பார்வையுடன் அதே இடத்தில் உறைந்து நின்றது.

""உன்னோட சொந்த நாட்டுக் காரங்ககிட்டேயே பயப்படுவியா? இந்தா... ஜ÷ன் ஜ÷ன் இன்னொரு பிஸ்கெட் சாப்பிடு.''இருட்டறையில் யாரோ சுவிட்சைத் தட்டி விட்டது போல, பளீரெனக் காலைப்பொழுது புலர்ந்தது. குன்றுகளிலும் தித்வால் பள்ளத்தாக்கிலும் வெளிச்சம் படர்ந்தது. அந்தப் பள்ளத்தாக்கு அப்படித்தான் அழைக்கப்பட்டது.மாதக்கணக்கில் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இருதரப்பிலும் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தது.

பைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ஹர்நாம் சிங். எதிர்த் தரப்பில் புகை எழும்புவதை அவனால் பார்க்க முடிந்தது. இவர்களைப் போலவே எதிரிகளும் காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாகிஸ்தான் ராணுவத்தின் ஹிம்மத் கான் தன்னுடைய மிகப்பெரிய மீசையைத் திருகிக் கொண்டே தித்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் வயர்லெஸ் ஆபரேட்டர் உட்கார்ந்து தங்கள் பிளாட்டூன் கமாண்டரிடம் ஆணைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடிகள் தள்ளி, தனக்கு முன்னால் துப்பாக்கியை செங்குத்தாக நிறுத்தி வைத்துக் கொண்டு பாறையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் சிப்பாய் பஷீர். அவன் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.நேற்றிரவை எங்கே கழித்தாய்?என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்?தனக்குத் தானே ரசித்து மிகவும் உரத்துப் பாடத் துவங்கினான். வரிகளை மீண்டும் மீண்டும் ரசித்துப் பாடினான்.
சுபேதார் ஹிம்மத் கான் உரக்கக் கூச்சலிடுவது சற்று தூரத்தில் கேட்டது.""நேத்து ராத்திரி எங்கே பொழுதைக் கழிச்சே''?ஆனால் இது பஷீரை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல. ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து அப்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் அவன். அந்த நாய்க்குட்டி சிலநாட்களுக்கு முன்பு எங்கிருந்தோ வந்து இவர்களுடன் ஒண்டிக்கொண்டது. பிறகு ஒருநாள் திடீரென்று எங்கோ காணாமல் போய் மீண்டும் இப்போது செல்லாக்காசு போல எங்கிருந்தோ திரும்பி வந்திருக்கிறது. பஷீர் புன்னகையுடன் நாயைப் பார்த்துப் பாடினான் -நேற்றிரவை எங்கே கழித்தாய்?என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்?நாய் பதில் ஒன்றும் சொல்லாது வெகுவேகமாக வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கான் நாயை நோக்கி ஒரு கல்லை விட்டெறிந்தான். ""முட்டாள் நாயே''... வெறுமனே வாலாட்டிக்கிட்டு இருக்கத்தான் உன்னால முடியும்"".""அது கழுத்துலே என்ன மாட்டியிருக்கு?'' பஷீர் கேட்டான். ஒரு சிப்பாய் நாயைப் பிடித்து அதன் கழுத்தில் கட்டியிருந்த பட்டையைக் கழற்றினான். பட்டையில் ஒரு அட்டைத் துண்டு ஒன்று கட்டியிருந்தது.
""அதுலே என்ன எழுதியிருக்கு?'' அவ்வளவாகப் படிக்கத் தெரியாத சிப்பாய் ஒருவன் ஆர்வத்துடன் கேட்டான்.பஷீர் ஒரு எட்டு முன்னே சென்று அதில் எழுதியிருப்பதைப் படித்துக் காட்ட முயற்சி செய்தான். ""அதுலே... எழுதியிருக்கு... ஜ÷ன்ஜ÷ன்.''சுபேதார் ஹிம்மத் கான் அவனுடைய மீசையை ஒருமுறை திருகிவிட்டு ""இது ஏதாவது ஒரு சங்கேதமாக இருக்கணும். உனக்கு ஏதாவது புரியுதா பஷீர்?'' என்று கேட்டான்.""ஆமாம் சார். அது சொல்லுது... ""நான் ஒரு இந்திய நாய்.''""அப்படின்னா என்ன அர்த்தம்?'' சுபேதார் கேட்டான்.""ஒருவேளை ஏதாவது போர் ரகசியமாக இருக்கலாம்'' குசுகுசுவென்று சொன்னான் பஷீர்.""இதுலே ஏதாவது ரகசியம்னு இருந்தா...
அந்த வார்த்தை ஜ÷ன்ஜ÷ன் லே தான் ஏதாவது ரகசியம் ஒளிஞ்சிருக்கணும்.''ஒரு சிப்பாய் குருட்டாம்போக்காக அடித்துப் பார்த்தான்.மிகுந்த கடமையுணர்வுடன், முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு பஷீர் மீண்டும் உரக்கப் படித்தான். ""ஜ÷ன்ஜ÷ன்'' - இது ஒரு இந்திய நாய்.சுபேதார் ஹிம்மத் கான் உடனே வயர்லெஸ் சாதனத்தை எடுத்துத் தன்னுடைய பிளாட்டூன் கமாண்டரைத் தொடர்பு கொண்டு பரபரப்புடன் பேசத்துவங்கினான். ஒரு நாய் தங்கள் பதுங்கிடத்தில் திடீரெனப் பிரவேசித்ததையும் அதே போல இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரவெல்லாம் எங்கோ சென்று மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி வந்ததைப் பற்றியும் சொல்லத் துவங்கினான்.""என்ன சொல்ல வர்றே?'' பிளாட்டூன் கமாண்டர் எரிச்சலுடன் கேட்டான்.சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் வரைபடத்தை மிகவும் கவனமாகப் படிக்கத் துவங்கினான். பையிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் ஒன்றை எடுத்து பஷீரிடம் கொடுத்தான்.இப்போ இதுலே அந்த சீக்கியர்களோட பாஷையான குர்முகியிலே எழுது""என்ன எழுதட்டும் சார்'' பஷீருக்கு ஒருவகையான உத்வேகம் பிறந்தது. ஷ÷ன்ஷ÷ன்... ஆமாம்.. அதுதான் சரி. இந்தியாவின் ஜ÷ன்ஜ÷ன் னுக்கு இந்த ஷ÷ன் ஷ÷ன் தான் சரியான பதிலடியாக இருக்க முடியும்.""பிரமாதம்'' ஆமோதிப்பதைப்போல சொன்னான் சுபேதார் ஹிம்மத் கான். ""அப்புறம் இதையும் சேர்த்துக்கோ - இது ஒரு பாகிஸ்தான் நாய்.''சுபேதார் தானே அந்தக் காகிதத்தை ஒரு கயிற்றில் கோர்த்து நாயின் கழுத்துப் பட்டையில் கட்டிவிட்டான். ""இப்போ நீ உன் குடும்பத்தோட போய் சேர்ந்துக்கோ.''அந்த நாய்க்கு சிறிது சாப்பிடக் கொடுத்து விட்டு அதனைத் தடவிக்கொண்டே இது பாரு தோஸ்த்... துரோகம் மட்டும் கூடாது. இங்கே துரோகத்துக்குத் தண்டனை மரணம் மட்டுமே... தெரிஞ்சிக்கோ...

நாய் வாலாட்டிக்கொண்டே சாப்பிடுவதைத் தொடர்ந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத் கான் இந்தியப் படைகள் பதுங்கியிருந்த திசையைக் காண்பித்து உரக்கக் கத்தினான்...

""நம்முடைய எதிரிகளுக்கு இந்த செய்தியை எடுத்துப்போ. ஆனா திரும்பி வந்துடணும். இது உன்னுடைய படைத் தளபதியோட கட்டளை... போய் வா...''

நாய் வாலை ஆட்டிக்கொண்டே இரு குன்றுகளையும் பிரிக்கும் பள்ளத்தாக்கை நோக்கி பலத்த காற்று வீசும் அந்த மலைப் பாதையில் விரைந்து ஓடத் துவங்கியது. சுபேதார் ஹிம்மத் கான் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து திடீரென்று வானத்தை நோக்கி சுடத்துவங்கினான்.மறுபக்கம் பதுங்கியிருந்த இந்தியப் படை வீரர்கள் குழம்பிப்போனார்கள். எப்போதும் இல்லாது இன்று இத்தனை காலையிலேயே இப்படி ஒன்று நடப்பது அவர்களைக் குழப்பியது. ஏற்கனவே அயர்ச்சி அடைந்திருந்த ஜமேதார் ஹர்நாம் சிங் உரக்கக் கூச்சலிட்டான் ""நாமும் திருப்பிக் கொடுப்போம்.''

இருதரப்பும் சுமார் அரைமணி நேரத்துக்கு தேவையற்ற குண்டு வீச்சைப் பரஸ்பரம் பறிமாறிக்கொண்டன. ஜமேதார் ஹர்நாம் சிங் ஓரு வழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள உத்தரவிட்டான். தன்னுடைய நீளமான முடியைக் கண்ணாடியைப் பார்த்து வாரிக் கொண்டான். ஞாபகம் வந்தது போல, பன்டா சிங்கைப் பார்த்துக் கேட்டான் ""அந்த ஜ÷ன் ஜ÷ன் நாய் எங்கே?''""ஒரு பழமொழி இருக்கே... இந்த நாய்களாலே வெண்ணெயை ஜீரணம் பண்ணிக்க முடியாது'' தத்துவார்த்தமாக பதிலளிக்க முயற்சித்தான் பன்டா சிங்.

காவல் பணியில் இருந்த சிப்பாய் ஒருவன் உரக்கக் கத்தினான். ""அதோ அங்கே வருது பாரு''""யாரு?''

அது பேரு என்ன? ஜ÷ன்ஜ÷ன்?

""அது இங்கே என்ன பண்ணுது'' என்றான் ஹர்னாம் சிங்.

பைனாகுலரில் நோட்டமிட்டுக் கொண்டே, ""நம்மைப் பார்த்து இங்கே வருது'' என்றான்.

சுபேதார் ஹர்னாம் சிங் அவனிடமிருந்து பைனாகுலரைப் பிடுங்கிக் கொண்டான். ஜ÷ன்ஜ÷ன்தான். சரி. அது கழுத்துலே ஏதோ பட்டை கட்டி இருக்கு. ஆனா... ஒரு நிமிஷம்... அது அந்த பாகிஸ்தான் பகுதியிலே இருந்து இல்லே வருது... மாதர்சோத்...

கோபத்துடன் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்து சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாய்க்கு மிக அருகில் உரசிச் சென்று ஒரு பாறையில் மோதியது. நாய் சடாரென்று நின்றது.

அந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் வெடிச்சத்தம் கேட்டு தன்னுடைய பைனாகுலரை எடுத்து நோட்டம் விட்டான். நாய் இவர்கள் இருக்கும் பக்கம் நோக்கித் திரும்பி ஓடிவந்தது. ""வீரர்கள் எப்போதும் போர்க்களத்தை விட்டு ஓடுவதில்லை. முன்னேறிப்போய் உனக்குக் கொடுத்த வேலையை செய்து முடி'' என்று உரக்கக் கூச்சலிட்டான். நாயை பயமுறுத்துவதற்காக ஏதோ ஒரு திசையை நோக்கி சுட்டான். ஹர்னாம் சிங்கும் அதே நேரம் நாயை நோக்கி சுட்டான். மீண்டும் நாயை மிக நெருக்கமாக உரசிக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. நாய் காதுகளை விறைப்பாகத் தூக்கி வைத்துக்கொண்டு பிடறியில் கால்பட ஓடத் துவங்கியது. இந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் சுடத் துவங்கினான். அவனுடைய துப்பாக்கிக் குண்டுகள் நாய் ஓடும் பாதையில் அங்கிருந்த பாறைகளைத் தாக்கிய வண்ணம் சிதறி வெடித்துத் துரத்தின.

இது மெல்ல, இருதரப்பு சிப்பாய்களுக்கும் இடையேயான விளையாட்டாக மாறத் துவங்கியது. நாய் மரண பீதியில் வட்டமடித்து ஓடிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கானும் ஹர்நாம் சிங்கும் இருதரப்பிலும் நின்றுகொண்டு இடிபோல சிரித்துக்கொண்டிருந்தார்கள். நாய் ஹர்நாம் சிங்கை நோக்கி ஓடத் துவங்கியது. அவன் மிகப் பெரிய வசவு ஒன்றை உரக்கக் கத்தி விட்டு நாயை நோக்கிச் சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலைத் தாக்கியது. நாய் வலியில் ஊளையிட்டது. மரண வேதனையில் கத்திக்கொண்டே ஹிம்மத் கான் இருக்கும் திசை நோக்கி ஓடியது. அந்தத் தரப்பில் இருந்தும் குண்டு மழை பொழிந்தவாறு இருந்தது. ""தைரியமான ஆம்பளையா இருக்கணும். இந்தப் போரிலே காயம் பட்டா அது உன்னுடைய தைரியத்தை இழக்க வைக்கக் கூடாது. உன்னுடைய கடமைக்குக் குறுக்காலே எந்த மரண பயமும் இருக்கக் கூடாது. போ. இன்னும் முன்னேறிப் போ'' என்று கர்ஜித்துக் கொண்டே நாயை நோக்கி சுடத் துவங்கினான்.

நாய் ஓட்டத்தை நிறுத்தித் திரும்பியது. அதனுடைய ஒரு கால் செயலிழந்து போனது. ஹர்னாம் சிங் இருக்கும் திசை நோக்கித்தவழத் துவங்கியது.

ஹர்னாம் சிங் மிகக் கவனமாகக் குறி பார்த்து சுட்டான். நாய் செத்து மடிந்தது.

சுபேதார் ஹிம்மத் கான் வருத்தத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டான். ""வீர மரணம் தழுவி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தான்.

ஜமேதார் ஹர்னாம் சிங் இன்னும் சூடாக இருந்த அந்தத் துப்பாக்கியின் குழலைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, ""நாய்க்குப் பிறந்தது நாய்ப்பாடு பட்டு செத்துத் தொலைஞ்சது'' என்றான்.

No comments:

Post a Comment