Wednesday, June 13, 2007

தமிழ்ப்புலமை பதித்த நவீனத் தடங்கள்

(தில்லித் தமிழ்ச் சங்கத்தில் "தடம் பதித்த தமிழர்கள்" தொடர் சொற்பொழிவில் 2005ம் ஆண்டு இடையில் ஏதோ ஒரு மாதத்தில் வாசித்த கட்டுரை).


அனைவருக்கும் வணக்கம்.

பெரியவர் சுப்புடு தன்னுடைய இசை விமரிசனக் கட்டுரைகளில் தாளவாத்தியக் கருவிகளைப் பற்றி எழுதும்போது, குறிப்பாக கடத்தைப் பற்றி எழுதும் போது கடத்துக்கு எப்போதும் விஷ்ணு இலை என்கிற பிரயோகம் அடிக்கடி அவருடைய கட்டுரைகளில் வரும்.

பிராம்மண வீடுகளில் சிரார்த்தங்களில் பிதுர் கர்மா செய்யும்போது பிராமணர்களுக்கு அன்னம் படைக்கப்படும். திதி பிராமணர்களுக்கு அன்னம் படைக்கப்படும் வரிசையில் ஒரு இலையைத் தனியாகப் போட்டு வைத்திருப்பார்கள். அது விஷ்ணு இலை. விஷ்ணுவும் ஒரு பிரம்மணராக அந்த இலையில் சாப்பிடுவதாக ஐதீகம். மற்ற பிராமணர்களுக்கு பறிமாறுவதைப் போல அந்த இலைக்கும் பறிமாறல்கள் உண்டு. இலைநுனி உப்பு உண்டு. துக்குணியூண்டு எல்லாமே உண்டு. ஆனால் அந்த இலையில் யாரும் சாப்பிட மாட்டார்கள். அதனால் அந்த இலையில் எல்லாமே விட்டேற்றியாக எறியப்படும். அது பேருக்குப் போடப்பட்ட இலை. ஒரு ஐதீகத்தின் அடிப்படையில் போடப்பட்டு வேண்டாவெறுப்பாக, விட்டேற்றியாகப் பறிமாறப்படும் இலை. ஆனால் அந்த இலைக்குப் பெரும் ஐதீக மகத்துவம் உண்டு என்று சொல்லிக்கொள்வார்கள்.

தடம் பதித்த தமிழர்கள் என்னும் இந்தத் தொடருக்கு எப்போதும் வழங்கப்படும் புறக்கணிப்பையும் மிக அலட்சியமான மிகக்குறைந்த அளவிலான விளம்பரத்தையும் மீறி கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி நன்றியுடன் வணங்குகிறேன்.

உ.வே.சாமிநாத அய்யரைப் பற்றிப் பேசவேண்டும் என்று எனக்கு அன்புக் கட்டளையிட்டவர் புலவர் விசுவநாதன் அவர்கள். ஒவ்வொரு மாதக்கூட்டத்தின்போதும் அய்யரைப் பற்றி எப்போது பேசப்போகிறாய் என்று தொடர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தவர். அய்யரைப்பற்றி இன்று நான் பேச முக்கியக் காரணமாக இருந்த தோழர் விசுவநாதன் அவர்கள் சில சொந்தப் பிரச்னைகள் காரணமாக எதிர்பாராதவிதமாக தெற்குக்குப் போக நேர்;ந்ததால் இன்று அவருடைய தலைமை அமையாமல் போனது மிகவும் துரதிருஷ்டமான விஷயம். இந்த நேரத்தில் அவரை நான் மிகவும் நன்றியுடனும் வணக்கங்களுடனும் நினைவு கூருகிறேன்.

புலவர் விசுவநாதனின் இடத்தினை நிறைவு செய்ய இன்னொரு தமிழறிஞர் - தமிழ்ப்புலவர் தோழர் ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமை அமைந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். அய்யரைப் பற்றி நான் பேசும்போது தமிழ்க்கல்விக் குரிசில் ஒன்று இந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்பது எனக்குக் கிடைத்த கௌரவம். அவருக்கு என் நன்றி.

என்னுடைய நாடகப் பணிகளில் எனக்கு மிக அற்புதமான ஒத்துழைப்பினை நல்கி, என்னுடைய ஒவ்வொரு பணிகளிலும் பெருமையுடனும் மகிழ்வுடனும் மனம் கனிந்து தன்னைப் பெருமுனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டு என் செயல்பாடுகளுக்கு அங்கீகாரமும் கௌரவமும் அளித்து வரும் அற்புதக் கலைஞர் தோழர் முத்துராமலிங்கம். இந்த விஷ்ணு இலைக்கு வரவேற்பு பறிமாற ஒவ்வொரு கூட்டத்துக்கும் தவறாமல் வருகை தருகின்ற தோழர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர் ராஜன் போன்றவர்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டவன்.

இனி என் கட்டுரை.

தமிழ் மொழி வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு விஷயம் மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கும். 14ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை சுமார் அறுநூறு ஆண்டுகள் தமிழ் மொழியை மிகப்பெரும் அந்தகாரம் சூழ்ந்திருந்தது. அக்காலகட்டத்தினை மிகப்பெரிய இருள் என்று சொல்லாம். அந்த அலட்சிய இருள் தமிழ்மொழியை, அதன் கலாச்சாரத்தினை, அதன் இலக்கியச் செல்வங்களை ஒளிமங்கச் செய்திருந்தது. இருள் சூழ வைத்திருந்தது. தெலுங்கு, கன்னடம், உருது, ஆங்கிலம் சமஸ்கிருதம் போன்ற அன்னிய மொழிகள் ஆளுபவர்களாலும் மேட்டுக்குடியினராலும் அரியாசனத்தில் கொலுவைக்கப்பட்டன. தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நாட்டில் நிலவிய அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமிழர்கள் தொண்டூழியம் புரிவதற்காக, குற்றேவல்கள் செய்வதற்காக, கரும்புத் தோட்டங்களில், சுரங்கங்களில், கூலிகளாக அனுப்பப்பட்ட காலம். தமிழ்மொழி கூலியாட்களால் பேசப்படும் மொழி என்னும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட நேரம். தமிழ் சோறு போடாது என்று எள்ளி நகையாடிய மேட்டுக்குடியினர் ஆங்கிலத்தையும் சமஸ்கிருதத்தையும் பெருமையுடன் கற்றுவந்த காலம். தமிழ் தன்னுடைய தனித்தன்மையை இழந்து சமஸ்கிருதத்துடன் கலந்து மணிப்பிரவாளம் என்னும் கலப்பு மொழியில் எழுதப்படுவதே புலமைக்கு அடையாளம் எனக் கருதப்பட்ட காலகட்டம். பெரும்புலவர்கள் பெருமையுடனும் இறுமாப்புடனும் பெருங்காப்பியங்களை இயற்றி பீடுநடை போட்டுவந்த காலம் மறைந்து தமிழால் வறுமையைத் தேடிக்கொண்ட புலவர்கள் தங்களின் கொடும்பசியைப் போக்கிக்கொள்ள முட்டாள் ஜமீன்தார்களையும் முரட்டுச் சிற்றரசர்களையும் சார்ந்து பல்லிளித்துக் கையேந்தி, சுயமரியாதை தொலைத்து அவர்களைத் தங்களின் சீட்டுக்கவிகளால் துதிபாடவே தமிழைப்பயன்படுத்திக் கொண்டு வந்த காலம்.
அந்த காலகட்டத்தில்தான் அய்யர் தமிழ்ச் சூழலில் உதிக்கிறார்.

இசைக்குடும்பத்தை சார்ந்த முன்னோர்கள். தகப்பனார் ஊர் ஊராகச் சென்று கதாகாலட்சேபம் செய்து பிழைப்பு நடத்துபவர். ஏழ்மையான குடும்பச்சூழல். பிரபுக்களையும் ஜமீன்தார்களையும் சார்ந்து இயங்கவேண்டிய சூழல். அந்தச் சூழலில் சமஸ்கிருதம் படிப்பது உத்தமம். ஆங்கிலத்தில் படித்து உத்தியோகத்துப் போவது அதி உத்தமம். புத்திசாலித்தனம். ஆனால் அய்யர் தேர்ந்தது தமிழ்ப்படிப்பினை. அய்யருடைய தகப்பனாரும் தன் புதல்வனின் ஆசைக்குக் குறுக்கே நிற்கவில்லை. பல தமிழ்ப்புலவர்களின் வாசற்படிகள் ஏறி இறங்கித் தன் மகனுக்குத் தமிழ் கற்பிக்குமாறு வேண்டுகிறார். தன் மகன் தமிழ் படிக்க அனைத்து உற்சாகத்தினையும் நல்குகிறார். உதவிகளையும் வழங்குகிறார். அய்யரின் நவீனத்துவப் பயணத்தின் முதல் தடம் இப்படியாக அவருடைய தமிழ் ஆர்வத்தின் வழியாக அமைந்திருக்கிறது.

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத அய்யருக்கு குடும்பத்தினர் இட்ட பெயர் வேங்கடராமன். வேங்கடராமன் என்பது அவர் முன்னோர் பெயராக அமைந்ததால் அந்த வீட்டுப் பெண்கள் மட்டும் மரியாதை கருதி அதாவது முன்னோர்களின் பெயர் சொல்லக்கூடாது என்னும் மரியாதை கருதி சாமா என்று அய்யரை அழைத்திருக்கிறார்கள். அவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்ப்பாடம் கற்க மாணவராகச் சேர்ந்தபோதும் வேங்;கடராமன் என்னும் பெயர் அவருக்கு இருந்திருக்கிறது.

கடும் சைவரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை வேங்கடராமன் என்னும் வைணவப் பெயரைச் சொல்லி அழைக்கத் தயங்கியிருக்கிறார். அந்த வைணவப்பெயரை சொல்லி அழைக்க பிள்ளைக்கு மனம் இடம் தரவில்லை. ஆகவே 'சாமிநாதன்" என்னும் சைவப்பெயரைத் தன்னுடைய மாணாக்கரின் பெயராக மாற்றினார் அந்த ஆசிரியர் ஆசிரியர் இ;ட்ட அந்தப் பெயரே இறுதி வரை நிலைத்திருக்கிறது. தங்களுடைய மகனின் தமிழ்க்கல்வி அனைத்தையும் விட மேலானது என்று அந்த ஆச்சாரமான பிராம்மணக்குடும்பம் கருதி அந்தக் காலகட்டத்தில் மிகவும் நவீன சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

தன்னுடைய ஆசிரியரின் மீது அளப்பரிய மரியாதை கொண்டு இயங்கியிருக்கிறார் உ.வே.சா. தன்னுடைய ஆசிரியரைப் பற்றிய சுமார் எழுநூறு பக்க நூலில் ஓரிடத்தில் கூட அவர் தம் ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடவில்லை. மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிறந்தபோது அவருக்கு அவருடைய பெற்றோர்கள் பெயரிட்டதைக் குறிப்பிட்டுத்தானே ஆகவேண்டும்? அந்த இடத்தில் அவர் ஒரு அடிக்குறிப்பு எழுதுகிறார் -“பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்தெழுதுவற்கு அஞ்சுகிறேன்"".

உ.வே.சா.வுக்கு அமைந்த ஆசிரியர் சைவம் தொடர்பான தமிழ்நூல்களைத் தவிர ஜைனம், பௌத்தம் சார்ந்த தமிழ் நூல்களை சிறிதளவும் கருதாத சைவப்பற்று உள்ள ஆசிரியர். உ.வே.சா வுக்கு சைவ மடத்தின் ஆதீனகர்த்தர் ஆகியோரோடு நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவர். அந்த மாதிரியான சைவ மத சூழலிலும் சீவக சிந்தாமணி போன்ற சமண மத நூல்களைப் பதிப்பிக்கத் துணிந்திருக்கிறார் அவர். சீவக சிந்தாமணியை அச்சிட்டு வெளியிடும் பணியில் ஈடுபட்ட போது அதிலுள்ள பல பகுதிகளுக்கு அவருக்குப் போதுமான விளக்கம் கிடைக்க வில்லை. மாற்று மதத்தவரான சமணர்களை அணுகித்தான் ஆகணே;டும் என்கிற நிலை இருந்தது. சமணம் தொடர்பான நுட்பமான பொருள்களை அறிவதற்குச் சமணர்களை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டுசெயல்பட்டார் அவர். கும்பகோணத்தில் சமணர்கள் குடியிருந்த பகுதிக்குச் சென்றும் அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டும் தன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார். உதாரணத்துக்கு ஒரு அற்புதமான குறிப்பு ஒன்று அவருடைய என் சரித்திரத்தில் கிடைக்கிறது -

இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நாயின் காதுகளில் ஐந்தெழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட்டதாக எழுதியிருந்த ஒரு இடைச் செருகல் சீவக சிந்தாமணி சுவடியில் அய்யரின் கண்களில் தட்டுப்படுகிறது. இந்த செய்தியை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை அவர். சமண மதக் காவியத்தில் ஐந்தெழுத்து மந்திரம் ஓதும் செய்தி மிகவும் பொருத்தமற்றது என்கிற விஷயம் அவரை மிகவும் அலைக்கழித்திருக்கிறது. எங்கெங்கோ தேடியலைந்து ஒரு ஜைனப் பெண்மணியைக் கண்டு இதுகுறித்து சந்தேகங்கள் கேட்டு சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கும்போது அந்த நாயின் காதினில் ஓதப்பட்டது சமண மதத்தின் பஞ்ச நமஸ்காரம் எனத்திருத்தி எழுதினார் அவர்.

உ.வே.சாவுக்கு முன்னும் பின்னும் பதிப்புத் துறைகளில் ஈடுபட்ட பல சைவ மடங்களை சார்ந்தவர்கள் பிற மத நூல்களைப் பதிப்பிக்க முயலவில்லை. அய்யர் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்ததும் அவர் பரசமய நூல் ஒன்றைப் பதிப்பித்து விட்டார் என்று கடும் கண்டனக்குரல்கள் எழுந்திருக்கின்றன. பலர் மிகவும் கடுமையாகக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர். ஆனால் அய்யரின் மனோபாவம் எந்த இடத்திலும் மதம் சார்ந்ததாக அமையவில்லை. எந்த மத நூலாக இருப்பினும் அது தமிழ்நூல் பரப்பில் சிறப்புடைய ஒன்று என்னும் பொதுமைத் தன்மை கொண்ட பார்வை அவரிடம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது.

திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த சுவாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து என்னும் நூலை இயற்றியுள்ளார். அதில் சைவ நூல்களைத் தவிர பிற நூல்களைப் பயில்வோர்களை தம் வாழ்நாட்களை வீணாகக் கழிப்பவர்கள் என்று கூறுகிறார். சாமிநாத அய்யரின் ஆசிரியரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை தாம் எழுதிய குசேலோபாக்கியானம் என்னும் மிகச்சிறந்த நூலை தம் பெயரில் வெளியிடாமல் தேவராசப் பிள்ளை பெயரில் வெளியிட்டிருக்கிறார். சைவ மடம் சார்ந்து இயங்கிய அவர் வைணவ நூலொன்றை எழுதியதால் சைவப்பற்றுக் கொண்ட பிறரின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதாலேயே அதனை வேறொருவர் பெயரில் வெளியிட்டார் என்றும் சொல்வார்கள்.

இந்த சூழ்நிலையில் உ.வே.சா. அவர்களின் பொதுமைத்தன்மை கொண்ட பார்வையும் நவீனத்துவத்தையும் நாம் அணுகிப் பார்க்கவேண்டும். இத்தகைய சைவ சமயம் சார்ந்த பின்னணியில் இருந்து வந்த அவர்தான் 1898ல் மணிமேகலையைப் பதிப்பித்தார். சைவர்களால் புறக்கணிக்கப்பட்டும் காலஓட்டத்தால் பௌத்த மரபுகள் மறக்கப்பட்டும் விட்ட சூழ்நிலையில் அவர் மணிமேகலையை பதிப்பிக்க முயன்றிருக்கிறார். இதில் பல சிக்கல்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றன என்பதை அவருடைய நூலின் வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம். சமண நூலாகிய சீவக சிந்தாமணியை வெளியிட்டபோது தெரியாத செய்திகளை விளக்க சமண சமயத்தைச் சார்ந்த நண்பர்கள் கிடைத்தார்கள். புத்த மதமே இந்தியாவில் இல்லையே - புத்த மதம் தொடர்பான செய்திகளை எங்கே சரிபார்த்துக் கொள்வது என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. பழம் தமிழ் நூல்களில் புத்த மதம் தொடர்பான செய்திகளைத் தேடித் தொகுத்தார். நீலகேசியில் பௌத்த மதக் கண்டனமாக வரும் இடங்களிலிருந்தும் வீர சோழியத்திலிருந்தும் செய்திளை அறிந்து கொண்டார். சிவஞான சித்தியார் பரபக்கம் உள்ளிட்ட சைவ நூல்களில் வரும் பௌத்த மதம் குறித்த கண்டனக் கருத்துக்களிலிருந்து செய்திகளைத் தொகுத்திருக்கிறார். ஆனால் இவை அவருக்குப் போதுமானவையாக இல்லை.

இங்கு மிகவும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் அய்யருக்கு ஆங்கிலம் அறவே தெரியாது. ஆங்கிலப் படிப்பு அவருக்கு சுத்தமாக இல்லை. ஆனாலும் மானியர் வில்லியம்ஸ், மாக்ஸ் முல்லர், ஓல்டன்பர்க், ரைஸ் டேவில் போன்றவர்களின் ஆங்கிலப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி ரங்காச்சாரியார் என்னும் நண்பரைக் கொண்டு அவரைப் படிக்க வைத்து அர்த்தம் கேட்டு அதன் பின்னரே மணிமேகலை நூலை சிறப்பான பதிப்பாக வெளியிட்டார். ஒரு தமிழ்ப்புலவருக்கு இருந்த இந்த நவீனத்துவப் பார்வை மிகவும் பிரமிக்க வைப்பவை.

நண்பர்களின் மூலம் அய்யர் தொடர்ந்த ஆங்கில நூல்களின் தேடல்கள் நூல் பதிப்பில் ஆங்கிலேயர்கள் பெற்றிருந்த வளர்ச்சியை தொழில் நுணுக்கங்களை புரிந்து கொள்ள அவருக்கு உதவியிருக்கிறது. அவருடைய பல நூல்களில் உள்ள விரிவான பதிப்பு முகவுரைகளும் பல்வேறு வகையான அகராதிகளும் பலதரப்பட்ட அடிக்குறிப்புக்களும் நவீன உலகைப் புரிந்து கொண்டவராக அவரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

அய்யர் பல விஷயங்களை சாதாரண மக்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். அப்படிக் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி கட்டுரைகளாக வடித்துக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு இடையன் எறிந்த மரம் ஊரைச் சுடுமோ என்னும் பாடல் பற்றி அவர் அறிந்து கொண்டதைப்பற்றி அவர் எழுதியிருப்பது.

தன்னால் முடியாத செயலை முடியும் என்று கூறிவிட்டு இக்கட்டான நிலையில் இருப்பவனைக் குறிக்க ''இடையன் எறிந்த மரம்"" என்னும் பழமொழியை பழமொழி நானூறு குறிப்பிடுகிறது. பகைவனை வெல்லாமலும் உயிரைவிடாமலும் இருக்கும் தன் நிலைய ''இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன்"" என்று சீவகன் குறிப்பிடுவதாகச் சீவக சிந்தாணி ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. திருமாலின் திருவருளைப் பெறமுடியவில்லையே என்னும் ஏக்கத்தால் மனம் ஒடிந்தும் திருவருளைப் பெறுவோம் என்னும் நம்பிக்கையில் உயிர் வைத்துக் கொண்டு இருக்கும் தன் நிலையை ''இடையன் எறிந்த மரமே ஒத்திராமே"" என்று பெரியாழ்வார் தமது பெரிய திருமொழியில் குறிப்பிடுகிறார்.

இதில் நமக்குப் புலப்படுவது என்னவென்றால் இடையர்கள் மரம் வெட்டுவதில் ஏதோ ஒரு தொழில் நுட்பம் இருப்பதை இவை உணர்த்துகின்றன. இவ்விலக்கியச் செய்திகளைக் கற்றறிந்திருந்தாலும் உ.வே.சாவால் அதன் பொருளை தெளிவாக அறிந்து கொண்ண முடியவில்லை. 1937ம் ஆண்டில் திருப்பனந்தாள் மடம் சென்றிருந்த உ.வே.சா. அம்மடத்தின் மாடுகளைப் பராமரிக்கும் முதிய இடையர் ஒருவரை தற்செயலாக சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடையர் ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப்புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் இலைகளை எங்கள் வாளால் வெட்டுவோம். நாங்கள் வெட்டும்போது கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக் கொண்டு தழைகளைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும் மற்றக் கிளைகளைப் போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும் என்று உ.வே.சாவிடம் குறிப்பிட்டார். ''அவ்வாறு வெட்டும்போது கிளை அடியோடு விழும்படி வெட்டினால் என்ன"" என்ற உவேசாவின் கேள்விக்கு அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமல் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டு இருப்பதால் மறுபடியும் தழைக்கும்"" என்ற விடை அவருக்குக் கிடைத்தது.

இடையன் எறிந்த மரம் முழுதும் அறாமல் அறைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உவேசாவிடம் அந்த இடையரின் விடை ஏற்படுத்தியது.

இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன்

என்னும் சீவக சிந்தாமணியின் அடியும்

உயிரோடு இருந்தேனாய்ப் பகையை
வென்றேனுமல்லேன்உயிரை
நீத்தேனுமல்லேன்று கருதி மரத்தினேனென்றான்

என்னும் நச்சினார்க்கினியாரின் விசேட உரையும் அவர் நினைவுக்கு வந்திருக்கிறது. இடையன் வெட்டு அறா வெட்டு என்னும் பழமொழியை அந்த இடையர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த உரையாடல் குறித்து உவேசா ஓரிடத்தில்

இலக்கியங்களிலே இடையன் எறிந்த மரம் என்பதைப் படித்த உடனே கருத்து விளங்காது. அதற்கு விசேஷ உரை சொல்லி விளக்கினால்தான் தெரியவரும். ஆனால் அவன் கூறிய அந்தப் பழமொழி இலக்கியத்திற் கண்ட தொடர்மொழியாகிய பூட்டைத் திறக்கும் திறவுகோலாக விளங்குகிறது""
என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல சாதாரண மக்களிடமிருந்தே பல விஷயங்கைளக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பதை மிகவும் அற்புதமாக பல இடங்களில் தனிக்கட்டுரைகளாக விளக்கி எழுதியிருக்கிறார். இப்படிப் பாமரர்களிடம் இருந்து பல விஷயங்களை அறியமுடியும் என்பதை விளக்கி அவற்றைத் தனிக் கட்டுரைகளாக எழுதும் மனோபாவம் அந்தக் காலத்தில் அய்யரைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியவில்லை. குறிப்பிட்ட துறையில் விளக்கம் பெறுவதற்கு அந்தத் துறை சார்ந்த புலமை மட்டும் போதாது என்பதையும் முழுச் சமூகத்தையும் விழித்துப் பார்த்தாலொழிய தெளிவு பிறக்காது என்பதையும் புலமைக்குச் சமூகம் அயலிடம் அல்ல என்பதையும் உவேசாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ளலாம். புரிந்து கொள்ளலாம்.

தம்முடைய வாசகர்கள் பழம்பெரும் புலவர்கள் மட்டுமல்லாது பாமரப் படிப்பாளிகளும்தான் என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டிருந்தார். அதன் விளைவாக அவரது உரைநடை புலமை நடையிலிருந்து பத்திரிகை நடைக்கு மாறியது. கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் போன்ற அவருடைய நூல்களை வாசிக்க யாருக்கும் எவ்விதத் தமிழ்ப்புலமையும் தேவையில்லை. கதை கேட்கும் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். தமிழ்ப் புலமை நவீன வடிவம் கொண்டு ஒரு பத்திரிகையாளராக உருவெடுப்பதை உவேசாவின் உரைநடை எழுத்துக்களில் புரிந்து கொள்ளலாம்.

உவேசா கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று பதிப்புப் பணியை முழுநேர வேலையாக கைக்கொண்ட காலகட்டத்தில் தான் தமிழகத்தில் பத்திரிகைகள் வெகுசனத்தன்மை அடைந்து விரிவான தளத்தினை பெறத்துவங்கின. அந்த நேரத்தில் பத்திரிகைகள் தீபாவளி, பொங்கல் மற்றும் ஆண்டு மலர்களை வெளியிடத்துவங்கின. கௌரவமான பிரமுகர்களிடம் கட்டுரைகளைக் கேட்டு வாங்கி வெளியிடுவது ஒரு புதிய மரபானது. இந்தச்சூழலில் உவேசாவின் கட்டுரைகள் இடம்பெறாத சிறப்பு மலர்களே இல்லை என்கிற நிலை உருவானது. 1920களின் பிற்பகுதியிலிருந்து ஆனந்த விகடன், தினமணி, சுதேசமித்திரன், ஜெயபாரதி, ஹனுமான், தனவணிகன் முதலான இதழ்களின் மலர்களில் உவேசாவின் கட்டுரைகள் வெளிவந்தன. உவேசாவின் மாணவர் பா.தாவூத் ஷா என்னும் தமிழறிஞர் தம்முடைய தாருல் இஸ்லாம் மலரில் அய்யரின் கட்டுரை ஒன்றினை வாங்கி வெளியிட்டார். 1932ல் துவங்கப்பட்ட கலைமகளின் ஒவ்வொரு இதழும் உவேசாவின் எழுத்துக்களைத் தாங்கி வெளிவரத்துவங்கின. டி.கே.சி. மற்றும் கல்கி ஆகிய இருவரும் நேரில் சென்று வேண்டிக் கொண்டதற்கு இணங்க 1940 முதல் ஆனந்த விகடனில் என் சரித்திரம் என்னும பெயரில் தன் சுயசரிதத்தினை எழுதத் தலைப்பட்டார். மேலும் அக்காலத்தில் பாடநூல்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்டுரை நூல்களிலும் உவேசாவின் கட்டுரைகள் மறுபதிப்பிடப்பட்டு வெளிவந்தன. அய்யருடைய மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் தவிர பிற உரைநடை நூல்கள் அனைத்தும் பத்திரிகைகளில் வெளிவந்து பின்னரே நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. மரபு வழிப்பட்ட தமிழ்ப்புலவராக விளங்கிய உவேசா பாமர மக்களை நோக்கி மிக எளிய உரைநடையில் எழுதத் தலைப்பட்டது பின்னணியில் அந்தத் தமிழ்ப்புலமையின் நவீனத்துப் பார்வை தெளிவாகிறது. இது அவருடைய காலகட்டத்தில் காணக்கிடைக்காத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே போல இசையில் ஆய்வு செய்பவர்களுக்கு மிகப்பெரிய சுரங்கத்தையே விட்டுச் சென்றுள்ளார் அய்யர். இசையில் அதிகப்பழக்கம் வைத்துக் கொண்டால் இலக்கண இலக்கியத்தில் தீவிரமாகப் புத்தி செல்லாது என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளை அறிவுறுத்தியவுடன் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசை பயின்று வந்ததை உவேசா கைவிட்டு விட்டார் என்றாலும் வாழ்நாள் முழுதும் இசையில் உள்ள ஈடுபாடு அவரை விடவில்லை. அவர் எழுத்து நெடுக இசையின் அதிர்வுகளை நாம் உணரலாம். இசை சார்ந்த பல உருவகங்கள் அவர் எழுத்தில் இறைந்து கிடக்கின்றன. மொழி அமைதியையும் சுருதி சுத்தத்தையும் இணைத்துக் காட்டும் எது தமிழ் கட்டுரை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. கர்நாடக இசையாக கட்டமைக்கப்படுவதற்கு முன்னர் தமிழகத்தில் சாஸ்திரிய சங்கீதம் பற்றிய விரிவான பதிவுகளை உவேசாவிடம் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ணபாரதியார், மகா வைத்தியநாதையர், முத்துசாமி தீ~pதர் வேங்கடராம பாகவதர் ஆகிய இசைவிற்பன்னர்களின் வரலாறுகளை கலைமகளில் தொடராக எழுதி வெளியிட்டு பின்னர் அவைகளை தனி நூல்களாகவும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

பல்வேறு புராணங்களை அவைகளைப் பாடியவர்களிடமே பாடம் கேட்டுப்பயின்ற உவேசா பல ஊர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளும் மிகவும் சுவையானவை. புராணம் சார்ந்த தலச்சிறப்புக்களோடு வேறு பல செய்திகளையும் தொகுத்துச் சொல்வது அவருடைய ஊர்கள் பற்றிய கட்டுரைகளின் தனிச்சிறப்பாகும். இந்த வகையில் அரியலூர், உடையார்பாளையம், திருமலைராயன் பட்டினம், கும்பபோணம், பெரும்புலியூர் ஆகிய ஊர்களைப்பற்றிய அவருடைய பதிவுகள் பல நவீனத்தடங்களைப் பதித்துச் செல்வன என்று சொல்லலாம். நான் குறிப்பிடும் இந்த அனைத்துக் கட்டுரைகளும் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் கிடைக்கின்றன. ஒரு நாடகத்தன்மையோடு அமைந்த அவருடைய உரைநடை மிகவும் இலக்கியச் செழுமையோடும் அவருடைய காலத்தில் மிகவும் நவீனப் பார்வை கொண்டவைகளாகவும் விளங்கின. குறிஞ்சிப்பாட்டின் வரிகளை அவர் கண்டு அடைந்ததைப் பற்றிய கட்டுரையின் பெயர் உதிர்ந்த மலர்கள். பாமர வாசகர்களைக் கவர அவர் தந்த சில தலைப்புக்கள் கிர்ர்ர்ரனி, டிங்கினானே என்ற தலைப்புக்கள் அக்காலத்தில் மிகவும் நவீனத்தன்மை கொண்டவை. ஒரு அசாத்தியமான நகைச்சுவை உணர்வு அவருடைய கட்டுரைகளில் அடிநாதமாக மிளிர்ந்து கொண்டிருக்கும்.

அவருடைய கட்டுரைகளில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ச்சமூகமும் அச்சமூகத்தின் மாற்றங்களும் பதிவாகி முக்கிய வரலாற்று ஆவணங்களாக - ஆதாரங்களாக விளங்குகின்றன. உவேசாவைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சொன்னது மிகவும் சரியாக இருக்கும் என்று படுகிறது. ராஜாஜி ஓரிடத்தில் சொல்கிறார்:

மகத்தான ஒரு காரியத்தை அவர் ஒருவரே 30, 60 வருஷ காலத்தில் செய்திருக்கிறார். இம்மாதிரி வேலையைப் பல்கலைக்கழகத்திடம் விட்டால் 2 கமிட்டிகள் போடுவார்கள். 10 பேர் ஒரு கமிட்டியில் இருக்கவேண்டும். அதற்காகக் காரியாலயம், சிப்பந்திகள், இதர செலவுகளாகும். அப்போதும் வேலை ஒரு மாதிரியாகத்தான் செய்து முடிக்கப்படும்.

ஆனால் அய்யர் அவர்களோ தாம் ஒருவாராக காகிதம், வண்டிச் செலவும் இதரர் தராமல் ஏடுகளைத் தாமே தலையில் சுமந்து வந்து வேலையைப் பூர்த்தி செய்துள்ளார்...

பழைய நூல்களை அழியாமல் காப்பாற்றித் தந்தவர் அவர். தமிழ்நூல்களின் உபபிரம்மா எனலாம் அவரை புத்;தகங்களைத் தேரில் வைத்துச் சென்று விழாக்களைக் கொண்டாடுவது மட்டும் போதாது. அவற்றை உபபோகிக்கவேண்டும். விஷயம் தெரிந்து படிக்கவேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் பார்க்கவேண்டும். உவேசா தீவிரமாகப் பணியாற்றிய காலத்தில் அதாவது ஆங்கிலேய ஆட்சியில் தமிழ் வளர்க்க அரசாங்க ஆதரவு எல்லாம் கிடையாது. ஜி.யு.போப்பின் ஆராய்ச்சிகளுக்கு அன்றைய சென்னை அரசாங்கம் பணத்தை வாரி இறைத்தது. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது. அந்த உதவிகள் எவையும் அய்யருக்குக் கிட்டவில்லை. அன்றைய சைவ மடங்களும், நம்மூர் சிற்றரசர்களும், பிரபுக்களும் தான் அவருடைய ஆய்வுகளுக்கு உதவியிருக்கிறார்கள். இதுகுறித்து பாரதி உவேசாவை மனம் கனிந்து பாராட்டியிருக்கிறார் :

கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப்புலவன் என்றும்
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்காலமெல்லாம் புலவோர் பாயில்துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்இறப்பின்றித் துலங்குவாயே

என்றும் வாழ்த்துப்பா பாடியிருக்கிறார் பாரதி. தமிழர்களாகிய நாம் அவரை தமிழ்த்தாத்தா என்றெல்லாம் சொல்லிப்புகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் காலச்சுவடு பத்திரிகை வெளியிட்ட உவேசா 150 சிறப்பிதழில் நா.விச்வநாதன் பெயரில் வெளியிடப்பட்டிக்கும் கடிதம் அய்யருக்கு நாம் அளித்திருக்கும் இடத்தினை மிகவும் தெளிவாக்குகிறது. அந்தக் கடிதம் கீழ்க்கண்டவாறு செல்கிறது.


உவேசாவுக்கு யோக ஜாதகமில்லை போலும். தமிழ்த்தாத்தாவிற்கு ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று ஆறு ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் - பாஜக - காங்கிரஸ் என எல்லா அரசுகளுக்கும் எழுதி எழுதி ஓய்ந்து போயாகி விட்டது. மிகுந்த முயற்சியெடுத்துப் பல தடவை முயன்று தமிழகத்திற்கு வந்த மத்திய அமைச்சர்கள் சிலரையும் நேரடியாகப் பார்த்து லிகிதம் கொடுத்துப் பார்த்தாகி விட்டது. இப்போது காலச்சுவடு உவேசாவை நினைவு கொள்வது லேசான உற்சாகத்தைத் தருகிறது.

... ... ...

தலைசிறந்த தமிழறிஞருக்கு உரிய மரியாதையைப் பெற்றுத்தர தமிழகத்துத் தமிழறிஞர்கள் எவரும் முன்வரவில்லை. உவேசா பதிப்பித்த தமிழ்நூல்களை வைத்துக் கொண்டு முனைவர், முதுமுனைவர் என சன்னத்துப் பெற்றுக் கொண்டவர்கள் செய்திருக்க வேண்டும். தமிழ் சார்ந்தவர்களின் தனிப்பட்ட சில குண விசேஷங்களையும் விகாரங்களையும்தான் இந்த அலட்சியம் புலப்படுத்துகிறது. உவேசா பிறந்த குலம் இதற்கெல்லாம் காரணமானால் தமிழனின் அடையாளம் மேன்மையனதல்ல என்றுதான் சொல்லவேண்டும்.
அபரிமிதமான அரசியல் செல்வாக்குள்ள தமிழ் எழுத்தாளர் - கவிஞர் யாரேனும் உவேசாவுக்கு ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட முன்வந்தால் நல்லது.


உவேசாவின் 150 ஆவது ஆண்டில் ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கும் மேற்கண்ட கடிதம் தமிழர்களாகிய நம்முடைய மிக அற்புதமான நன்றியறிதலைப் புலப்படுத்துகிறது. நம் நன்றி உணர்வுக்கு மிகவும் அற்புதமான சான்றாக விளங்குகிறது.


நன்றி. வணக்கம்.

1 comment:

  1. சுவாரசியமான விசயங்களை அறிந்து கொண்டேன்.. இடையர் தொழில்நுட்பம் இயற்கை சார்ந்த விசயம் மிக அருமையான செய்தி.

    ReplyDelete