Tuesday, June 19, 2007

க.நா.சு. என்றொரு பிரம்மராக்ஷஸ்...

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்
தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.

70களின் இறுதியில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இது

மிகவும் புகழ்பெற்ற இந்தி கவிஞர் அமரர் ஹர்வன்ஷ் ராய் பச்சனின் டெல்லி வீட்டுக்கு ஒரு தமிழ் எழுத்தாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். தேநீர் முடித்து உரையாடல்கள் தொடர்கின்றன. அப்போது வீட்டுக்குள்ளிருக்கும் மாடிப்படிகள் வழியாக ஒரு உயரமான இளைஞன் இறங்கி வருகிறான். தங்களைக் கடந்த தன் மகனை அழைத்து அந்தத் தமிழ் எழுத்தாளருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் ஹர்வன்ஷ் ராய் பச்சன்.

''இவன் என் மகன் அமிதாப். . இவனை நீ அடிக்கடி எங்காவது பார்த்திருக்கலாம்.""
''அப்படியா? ரொம்ப சந்தோஷம். நான் இதுவரை பார்த்ததில்லையே! ரொம்ப நல்லது. உன்னை சந்தித்தில் மிகவும் மகிழ்ச்சி. என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?""
ஐயா, நான் இந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்""
''அப்படியா? ரொம்ப நல்ல விஷயம். அது சரி, பிழைப்புக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?""
அமிதாப் பச்சனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தன் எதிரில் நிற்பது என்ன மாதிரி மனிதர் என்று அவருக்குப் புரியவில்லை அவருக்கு.
ஷோலே போன்ற மெகா திரைப்படங்களில் நடித்துக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. நாட்டின் அனைத்துத் தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் காலடியில் கொட்டி அவருடைய கால்ஷீட்டுக்காக தவமிருந்த நேரம். இப்படிப்பட்ட கேள்வியை அவர் யாரிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு,
''ஐயா, பிழைப்புக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. இன்று இந்தியாவில் திரைப்படங்களில் நடிக்க கோடிக்கணக்கில் தொகை வாங்கும் ஒரே நடிகன் நான்தான்"" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அதை சரியாகக் காதில் போட்டுக்கொள்ளாமல் ஹரிவன்ஷ் ராயிடம் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன்னுடைய உரையாடலைத் தொடங்கினார்
அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற கேள்வியைக் கேட்ட முதியவர்.
அவர்தான் க.நா.சு.

அவருக்கு இலக்கியம் மட்டுமேதான் தெரியும். அது ஒன்று மட்டுமேதான் அவருக்குக் குறி. அது ஒன்று மட்டுமேதான் அவருடைய மூச்சு. அதைப்பற்றியேதான் எப்போதும் பேச்சு. முப்பதுகளின் துவக்கத்தில் தொடங்கிய இலக்கிய வாழ்வின் மீதான அவருடைய பிடிப்பு 80களின் இறுதியில் இதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்துக் குளிர்கால இரவில் இறுதி மூச்சு அடங்கும் வரை எவ்வித ஓய்வும் இல்லாது தொடர்ந்தது.
(அவருக்கு எல்லாம் தெரியும். அது வெறும் தஞ்சாவூர் குசும்பு என்று சொல்லும் அவருடைய நண்பர்களும் உண்டு. அதுவும் க.நா.சு.தான்.)
க.நா.சு. என்று அறியப்படும் கந்தாடை நாராயணசாமி அய்யர் சுப்பிரமணியன் என்கிற தஞ்சை மாவட்டத்தின் திருவாலங்காடு கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த இலக்கிய இயக்கம் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழில் ஒரு தரமான இலக்கியத்தை மட்டுமே குறியாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தினை மிகவும் கடுமையான ஒரு தடத்தில் அமைத்துக் கொண்டது. வெங்கட்சாமிநாதன் சொன்னதுபோல இலக்கியத்தைக் காக்க எழுந்த ஒரு பூதமாக அது எழுந்தது.
அந்த பிரம்மரா~ஸ் தரமில்iலாதவைகளை எவ்விதத் தயக்கமும் இன்றி அடித்துத் துவம்சம் செய்கிற ஒரு பரம்பரையை, ஒரு எழுத்து முறையை, உருவாக்கிச் சென்றது. தரம் குறைந்தவைகளைப் பற்றி எவ்விதத் தயக்கமும் இன்றி எடுத்துச் சொல்லலாம் என்னும் தைரியத்தை உருவாக்கித் தந்து விட்டுச் சென்றது.பிறந்ததிலிருந்தே வசதியான வாழ்க்கை முறை. படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தால் மட்டும் போதும். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற தைரியத்தையும் வசதிகளையும் கொடுத்த ஒரு அதிசயமான தகப்பன்.
அந்த அற்புதமான குடும்பச்சூழலின் விளைவினால் கிடைக்கப்பெற்ற உலக இலக்கியங்கள் படிப்பதற்கான வசதிகள். உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆங்கில எழுத்தாளனாகத் தன் மகன் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு அரணாக நின்று உலக இலக்கியங்களைப் படிப்பதற்கான வசதிகளை மனமுவந்து செய்து கொடுத்த தந்தை.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்கேன்டினேவியன், ஸ்வீடிஷ்; போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்ட ஆர்வம். மாணவப்பருவத்திலேயே West Wind, Argossy Bloomed Horn போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்த இலக்கிய ஆர்வம்.

இவைகள் அனைத்தையும் மீறி பாரதியை தன்னுடைய முன்னோடியாகக் கொண்டு, அவருடைய எழுத்துக்களை ஆதர்சமாகக் கொண்டு, திருப்புவனம் வ.ராமசாமி மற்றும் பி.எஸ்.ராமையா போன்ற அக்கால தமிழ் இலக்கியவாதிகளால் உற்சாகம் ஊட்டப்பெற்றதனால் தன் மகனை ஆங்கில எழுத்தாளனாக்கப் போகிறேன் என்ற கனவில் மிதந்த தகப்பனின் ஆசைகளை புறமொதுக்கி தமிழில் எழுதப்போகிறேன் என்று கிளம்பும் தைரியம் அந்த பிரம்ம ரா~ஸ_க்கு இருந்தது.

எழுதப்போகிறேன். அந்த எழுத்தை மட்டுமே நம்பி வாழப்போகிறேன் என்று கையில் ஒரு டைப்ரைட்டர், கத்தை கத்தையாகக் காகிதங்கள், தான் செய்து வைத்த மொழிபெயர்ப்புக்கள் போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு தன்னுடைய இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு சென்னைக்கு ரயில் ஏறியது அந்த பிரம்மரா~ஸ். அன்றைக்குத் தொடங்கிய அந்தப்பயணம், அந்தத் தேடல் எண்பதுகளின் இறுதியில் டெல்லியின் ஒரு குளிர்கால இரவில்தான் முடிவடைந்தது.
பொதுவாகவே எதிலுமே தரத்தினை மதிக்காது தரமற்ற இழவுகளைத் தலையில் வைத்துக் கொண்டாடி மழுங்கிப்; பழகிப்போன இந்தத் தமிழ்ச் சூழலுக்கு அந்த பிரம்மரா~ஸ் அளித்த தன்னலமற்ற பங்களிப்பு இன்று எந்த அளவுக்கு நினைக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனை தரும் விஷயமாகும். தமிழர்கள் தன்னிடமுள்ள தரமான உன்னதங்களை அறிந்து கொள்ளாது, அதைப்போற்றி மதிக்காது தரமற்றவைகளின் சாரத்தில் ஊறித்திளைப்பது மிகவும் சோகமான விஷயம் என்று அடிக்கடி கநாசு சொல்லி வந்ததை அவருடைய விஷயத்திலேயே நிரூபித்து நன்றிக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கி வருகிறது தமிழ்ச் சமூகம்.

தமிழில் இதுவரையில் யாருமே எட்டுவதற்கு முயற்சிக்காத பன்முகப் பரிமாணங்களுடன் இயங்கி வந்தது அந்த பிரம்மரா~ஸ். தமிழ்ச்சிறுகதை வரலாறு எழுதும் யாரும் தள்ளிவைத்து முன்னே செல்லமுடியாத வண்ணம் தடங்களைப் பதித்த சிறுகதைகள், தமிழின் நாவல் வரலாறு எழுதும் யாரும் தங்களுடைய பட்டியலில் கட்டாயமாகச் சேர்த்தே ஆகவேண்டிய பொய்த்தேவு, சர்மாவின் உயில் போன்ற பல அற்புத நாவல்கள், தமிழின் நவீன கவிதையின் துவக்க நிலையில் பிரதானப்படுத்தக்கூடிய அழகியல் கவிதைகள், உலக இலக்கியங்களைத் தமிழிலும் தமிழின் உன்னதங்களை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்த காலம் வேண்டி நின்ற, காலத்தைத் தாண்டிய படைப்புக்கள், இலக்கியத்தில் தரத்தினை மட்டுமே இலக்காக வற்புறுத்தி நிற்கும் பிடிவாதத்துடன் தன்னுடைய விமர்சனங்களை இலக்கியத்துக்கு ஒரு இயக்கமாகக் கொண்டு இயங்கியது அந்த பிரம்மரா~ஸ்.

படைப்பாளியாக மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்திருக்க வேண்டிய க.நா.சு. ஒரு விமரிசகராக தன்னை மாற்றிக்கொண்டதால் மிகப்பெரிய தியாகத்தையே செய்திருக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அவருடைய இயங்குதளத்தை விமரிசித்த பலரும். இது உண்மையும் ஆகும்.
என் நாவல்களின் மூலம் என் வாழ்க்கை முழுவதையும், என் சிறுகதைகள் மூலம் என் வாழ்க்கையின் குறிப்பிட்ட சிறு பரப்பையும் என் கவிதைகள் மூலம் என் அகவடிவமைப்பையும் காண முயலுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது என்று ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார் க.நா.சு. அவர் அறிந்த சாத்தனூர் கிராமமும் அதன் ரத்தமும் சதையுமான மனிதர்களும் அவருடைய படைப்புக்களில் பல இடங்களில் வரும். அவருடைய நாவல் மற்றும் சிறுகதைகளில் வரும் நான் க.நா.சு.தான். அந்த நான் தான் கதையை நடத்திச் செல்லும். பொய்த்தேவு நாவல் அவருடைய ஊரில் இருந்த ஒரு செல்வந்தர் குறித்துத்தான் என்றும் நாவலை எழுதி முடித்து அந்த மனிதரிடமே காண்பித்ததாகவும் க.நா.சு. சொல்வார். அதைப்படித்து விட்டு அந்த செல்வந்தர் 'நான் சாமியாராக எல்லாம் போக மாட்டேன்"" சிரித்துக்கொண்டே சொல்வாராம். க.நா.சு வின் கதை மாந்தர்கள் எல்லாம் அவர் பார்த்த அவருடன் வாழ்ந்த ரத்தமும் சதையுமான மனிதர்களே என்று சொல்லலாம்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் நேரடியான படைப்பு. 15 பக்கங்கள் மொழிபெயர்ப்பு. 10 பக்கங்களுக்குக் குறையாமல் ஆங்கிலத்தில் எழுதுவது என்பதை தன்னுடைய தினசரி வாடிக்கையாக இருந்தே ஆகவேண்டும் என்கிற குறிக்கோளுடன் ஒழுங்குடன் இயங்கி வந்திருக்கிறார் க.நா.சு என்று சொல்வார்கள். இதனை பின்னாளில் அவரை விமர்சித்தவர்கள் அவரைப் பற்றி நிலவி வந்த பல டுநபநனெயசல வயடமள களில் இதுவும் ஒன்று சொல்வார்கள். ஆனால் அவர் விட்டுச் சென்ற இன்றும் பெட்டி பெட்டியாய் குவிந்து கிடக்கும் இன்னும் அச்சேறப்படாமல் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் அதில் உள்ள நிஜத்தைச் சொல்லும். எழுதுவதில் இருந்த ஈடுபாட்டை அந்த எழுத்துக்கள் அச்சேறுவதில் க.நா.சு என்றும் காண்பித்ததில்லை. கணக்கில் பார்க்கப்போனால் புதுமைப்பித்தனை விட அதிகமான அளவில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார் க.நா.சு. என்று தஞ்சை பிரகாஷ் சொல்கிறார். சுந்தரராமசாமியும் தன்னுடைய க.நா.சு. நினைவோடையில் க.நா.சு. கவிதைகளை மிகவும் அழகாக நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைப்பார் என்றும் தான் பார்த்தே சுமார் 25 நோட்டு புத்தகங்கள் இருக்கும் என்றும் சொல்கிறார். நானும் பார்த்த அளவில் உறங்கச் செல்லும் முன் அவர் எழுதாமல் உறங்கியதில்லை. உறக்கத்தில் உயிர் பிரிந்த அந்த இரவிலும் கூட வெகுநேரம் எழுதிவிட்டுத்தான் உறங்கச் சென்றிருக்கிறார்.
க.நா.சு. பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் சொல்வது உண்டு. விகடன் பதிப்பாளர் எஸ்.எஸ் வாசனிடம் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்தபோது மற்றவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேச்சு வந்ததாம். அப்போது க.நா.சு., வாசனிடம் இவர்கள் எல்லாம் என்ன எழுதுகிறார்கள். இதோ பாருங்கள் என்று பன்னிரெண்டு விறுவிறுப்பான சம்பவங்களை ஒரு மணி நேரத்தில் எழுதிக் கொடுத்தாராம். அவைகளைப் படித்து வியந்து போன வாசன் ''இப்போதே 200 ரூபாய் சம்பளத்தில் விகடனில் ஒரு வேலையை உடனடியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னதை மறுத்து வெளியேறினாராம் க.நா.சு.
விகடனில் வேலையை மறுத்த க.நா.சு. விருப்பத்துடன் பணிபுரிந்த பத்திரிகைகள் -

கு.ப.ராஜகோபலனின் கிராம ஊழியன்
சாலிவாஹனின் கலாமோகினி
கு.அழகிரிசாமியின் மலர்கள்
கோவிந்தனின் சக்தி
எம்.வி.வெங்கட்ராமின் தேனீ
திருலோக சீதாராமின் சிவாஜி
வ.ரா.வின் மணிக்கொடி
பின்னர் தானே நடத்திய சந்திரோதயம், சூறாவளி, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள்.
தீவிர படைப்பாளியாக இருந்த க.நா.சு. விமரிசகராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில்தான். தன்னுடைய 'எழுத்தும்" விமர்சனமும் என்னும் கட்டுரையில் முனைவர் செ.ரவீந்திரன் சொல்லியிருப்பதுபோல எழுத்துவின் தோற்றத்தை ஒட்டி தமிழ் விமர்சன உலகில் காலடி எடுத்து வைத்த ஒரு புதிய இளைய தலைமுறையினர்கள் எல்லோரும் க.நா.சு.வுக்குக் கடமைப்பட்டவர்கள். க.நா.சு. என்னும் இலக்கிய சக்தியின் பாதிப்பில் உருவானவர்களே. மதிப்பீடுகள் பற்றிக் கவலை கொள்ளாத தமிழ் சமூகத்தில் விமர்சனம் பற்றி க.நா.சு. சொல்லி வந்தவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தும் எவ்விதத் தயக்கமோ பின்வாங்கலோ இல்லாது அந்த பிரம்மரா~ஸ் தரத்தினை வேண்டி நின்ற இயக்கமாக இலக்கிய விமரிசனத்தை மாற்ற உழைத்தது. க.நா.சு.வினால் பாதிக்கப்பட்டு இலக்கிய விமர்சனத்தில் நுழைந்ததாக செல்லப்பாவும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.
விமர்சனத்தில் நுழைய நேர்ந்ததைப் பற்றிக் க.நா.சு.வே ஒரு இடத்தில் ''ஒரு மௌனியையோ புதுமைப்பித்தனையோ உணர்ந்து கொள்ளாமல் தமிழர்களில் பெரும்பாலோரும் கல்கியையும், குமுதம் கதைகளையும் பாராட்டத் தொடங்கி விடுகிறார்களே, ஒரு ஷண்முகசுந்தரத்தை அறிந்து கொள்ளாமல் ஒரு அகிலனைப் பாராட்டத் தொடங்கி விடுகிறார்களே என்றுதான் நான் விமர்சனத்துறையில் ஈடுபட ஆரம்பித்தேன்"" என்று சொல்கிறார்.
பத்திரிகைகளில் வரும் எழுத்துக்களெல்லாம் இலக்கியம் ஆகிவிடாது. லட்சம் பேர் படித்தாலும் இலக்கிய அந்தஸ்து பெறாத அவை வெறும் குப்பைகள்தான் என்று அடித்துப்பேசியும் எழுதியும் வந்தார் க.நா.சு. அதே நேரம் பண்டிதத்தின் மேல் எவ்வித மரியாதையையும் காட்டவில்லை அவர். மாறாக அவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.
தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்த விமர்சனங்களை தமிழ் பத்திரிகைகள் மட்டுமல்லாது Illustrated Weekly of India, Mirror, Blitz, Debonair, Indian Literature, Thought, Quest போன்ற ஆங்கிலப்பத்திரிகைகளிலும் The Statesman, Hindustan Times, Hindu போன்ற நாளிதழ்களிலும் தன்னுடைய விமர்சனங்களை எழுதி வந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் கிஸான் டிரஸ்ட் என்னும் அமைப்பு நடத்தி வந்த ரியல் இன்டியா என்னும் வாரப்பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஒரு பதினைந்து வருடங்கள் அமெரிக்கத் தூரதரகத்துக்காக மொழிபெயர்ப்புப் பணிகளை செய்திருக்கறார் அவர். இது அவர் வயிற்றுப்பாட்டுவிமர்சனத்துக்கு வெகுவாக உதவியிருக்கிறது என்று தில்லித் தமிழ் எழுத்;தாளர் சங்க செயலர் ராஜாமணி அடிக்கடி சொல்வார். லிபி என்கிற ஆங்கிலப்பத்திரிகையையும் தொடங்கி சில காலம் நடத்தியிருக்கிறார் க.நா.சு. அவருடைய கருத்துக்களைச் சொல்லும் களமாக இலக்கிய வட்டம் என்னும் பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார் க.நா.சு.
க.நா.சுவின் இந்த விமர்சனங்கள் கடும் எதிர்ப்புக்களைத்தான் அவருக்குத் தேடித்தந்தன. ஒருபுறம் காங்கிரஸ்காரர்கள் - தூய இலக்கியவாதிகள் - திராவிட இயக்க எழுத்தாளர்கள் - பொதுவுடமை எழுத்தாளர்கள் போன்றவர்கள் அவரை மிகவும் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்க அடிவருடி என்றும் பார்ப்பன துரோகி என்றும் பல பத்திரிகைகளில் மிகவும் அன்புடன் வருணிக்கப்பட்டார் க.நா.சு.

1969ல் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் விமர்சகர்கள் தமிழ் எழுத்தாளர்களை மிகவும் துச்சமாகக் குறிப்பிடுகிறார்கள். தமிழ் மொழியையே அவமானப்படுத்தி விடுகிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை மறுத்து அவர்கள் தரும் விமர்சனத்துக்கு நேர்மாறான விமர்சனத்தை நாம் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் - என்பது அந்தத் தீர்மானம். இது யாரைக்குறித்த தீர்மானம் என்பதை சொல்லத் தேவையில்லை.
இவருடைய விமர்சனக்கலை என்ற புத்தகத்தைப் பற்றி ஓரிடத்தில் ''அது ஒரு தொந்தரவான புத்தகம்"" என்று ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு. சரஸ்வதி பத்திரிகையில் எழுதி வந்த விமர்சனங்கள் திமுகவுக்காக எழுதிப்பிழைத்தவர்களால் மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது திமுக தலைவராக இருந்த சி.என்.அண்ணாத்துரை, க.நா.சு.வின் விமர்சனங்கள் பற்றி ''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று தம்பி நீ உணர வேண்டும்"" என்று அக்கட்சியின் தொண்டரப்பொடிகளிடையே இன்றும் கூட மிகவும் பரவலாக புழங்கப்படும் உரையை ஆற்றினார்.
துரதிருஷ்டவசமாக அத்தொண்டரடிப்பொடிகள் எந்த மாற்றான் மல்லிகையையும் நுகரும் மனநிலையில் எப்போதும் இருந்ததில்லை. அவரைப் பார்ப்பன துரோகி என்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் வசைபாடி தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாற்றினார்கள்.
அதேபோல க.நா.சுவின் அடியொற்றி வந்த பிற்கால விமர்சகர்கள் அவருடைய விமரிசன முறையை கடுமையாக எதிர்த்தார்கள். அவருடைய பட்டியல் விமரிசன முறை பலபேர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது. அடிக்கடி அவர் பட்டியல்கள் மாறிக்கொண்டிருப்பது நேர்மையற்ற செயல் என்று விமர்சனம் வைத்தார்கள்.
இவைபற்றியெல்லாம் க.நா.சு. எவ்வித எதிர்வினையையும் காண்பித்துக் கொண்டதில்லை. தூற்றல்களால் துளியும் பாதிக்கப்படாது தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் தமிழில் நிலைத்து நிற்க முடியும் என்பது க.நா.சு வால் மட்டுமே முடிந்த காரியம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
''நானே ஒரு கடுமையான விமர்சகன் என்று பெயர் வாங்கிக் கொண்டவன். எனக்குப்பின் வந்த விமர்சகர்கள் இன்னும் கடுமையான விமர்சகர்கள் ஆகியுள்ளது பற்றியும், அவர்கள் என்னையே கடுமையாக விமர்சிப்பது குறித்தும் என்னளவில் திருப்திதான்"" என்று அவர் தன்னுடைய முன்னுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியும் ஒருவர் தன்னைப்பற்றிய எதிர்மறையான விமரிசனங்களால் பாதிக்கப்படாமல் இருக்கமுடியுமா என்று பல சமயங்களில் வியந்திருக்கிறேன். இந்த நேரத்தில் நகுலன் எழுதிய ஒரு வசன கவிதை நினைவுக்கு வருகிறது.
--கநாசு ஒரு மோசமானவிமரிசகர்,
அவருக்குவிமரிசனம் எழுதத் தெரியாது.
கநாசுவுக்கு நாவல்எழுதத் தெரியாது
கநாசுவுக்குக் கட்டுரைஎழுத வராது.
அவர் யாரைப் பற்றியும்
உருப்படியாகப் பாராட்டியதில்லை.
கநாசுவுக்குக் கவிதை தெரியாது
கநாசுவுக்கு சுயசரிதை எழுதத் தெரியாது
எழுதித்தோற்றார்.
கநாசுவுக்கு விரிசனம்சரியாக வராது.
அது சரி,
என்னுடைய அந்தக் கவிதைபற்றி
கநாசு என்னசொல்லியிருக்கிறார்?
கொஞ்சம் சொல்லுங்களேன் -
இக்கவிதை முற்றிலும் நிஜமே. கநாசுவைக் கடுமையாக சாடிய பல இலக்கிய ஜாம்பவான்களும் அவர் தூக்கி எறியும் பாராட்டுக்களுக்காக யாசகம் கேட்டு நின்றனர். பாராட்டு கிடைக்காத போது தூற்றித் திரிந்தனர். எனக்குத் தெரிந்தே ஒரு இலக்கிய மாமேதை எந்த ஜென்மத்திலோ தான் செய்த நற்பயன் விளைவாக ஒரே ஒரு கதையை நன்றாக எழுதியதை கநாசு எங்கோ பாராட்டியிருந்தார். உடனே ''அனைவரையும் விமர்சிக்கும் கநாசுவே என் கதையை அங்கீகரித்து விட்டார். இனி எவனும் என் கதையைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது"" என்று பலரிடம் பெருமிதப்பட்டுக் கொண்டார். அதுநாள் வரை பாப்பாரப் பயலாக இருந்த கநாசு ஒரே இரவில் விமரிசக வித்தகராக மோட்சம் பெற்றார். இப்படி பல நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஞானரதம் என்று நினைக்கிறேன். அதில் தமிழ் இலக்கிய சூழல் பற்றிய ஒரு கட்டுரையில் வெங்கட்சாமிநாதன் பற்றி 'சினிமாவைப் பற்றி அதிகமாக எழுதி விமர்சகர்களாகப் பிராபல்யம் அடைந்த வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள்... என்ற ஒரு வரியை எழுதியிருந்தார். (இது சரியான வரியல்ல. ஏறக்குறைய இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.) வெங்கட்சாமிநாதன் கையெழுத்துப்பிரதியில் சுமார் 65 பக்கங்கள் கொண்ட மீண்டும் பிராபல்யம் தேடி என்கிற கட்டுரையை அதற்கு பதிலாக எழுதி, அதனை ஞானரதத்தில் வெளியிட வேண்டும் என்று க.நா.சுவைக் கேட்டுக் கொண்டு ஒரு கடிதமும் கொடுத்தார். . இதை நானும் என் நண்பன் சுரேஷ் சுப்பிரமணியமும் சென்னைக்கு விடுமுறையில் சென்றபோது க.நா.சுவிடம் சேர்ப்பித்தோம். நாங்கள் அங்கு உட்கார்ந்து இருந்தபோதே அந்த 65 பக்கங்களையும் கண்களை இடுக்கிக் கொண்டு படித்து முடித்தார் க.நா.சு. பிறகு ஒரு நக்கலான புன்சிரிப்புடன், ''நான் ஒரு வரி எழுதினேன். என்னை 65 பக்கத்துக்கு கிழிச்சிருக்கான் சாமிநாதன்"" என்று அதை எங்களிடம் திருப்பிக் கொடுத்தார். எந்த வன்மமும் இல்லை. எவ்விதக் கொதிப்பும் இல்லை. அதற்கு அடுத்து என் வீட்டில் நேர்ந்த ஒரு சந்திப்பில் வெங்கட்சாமிநாதனுடன் மிகவும் சௌஜன்யமாக உரையாடிக்கொண்டிருந்தார் க.நா.சு. வெங்கட்சாமிநாதனும் மிகவும் பெருமதிப்பு காண்பித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வயதுக்கு எனக்கும் சுரேஷ_க்கும் அது மிகவும் ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது.
இப்போதும் நான் எதிர்கொள்ளும் சில எதிர்மறையான விமரிசனங்களைத் தாங்கமுடியாமல் முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு குரங்காட்டம் போடும் பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சு போன்ற நிறைகுடங்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தவறிவிடுகிறேன் என்பதை உணர்கிறேன். அது எல்லோருக்கும் கைகூடும் வரமல்ல என்றும் நேர்மையுடன் நம்புகிறேன்.
நானறிந்த வரையில் க.நா.சு.விடம் என்னையும் என் சமகால நண்பர்களையும் மிகவும் ஆகர்ஷித்தது படிப்பது குறித்த அவருடைய பார்வையும் அதைத் தொடர்ந்த அவருடைய அயராத உழைப்பும்தான் என்று நினைக்கிறேன். எழுதுவதற்கு ஒரு பயிற்சி என்பது போல படிப்பதற்கும் ஒரு பயிற்சி கண்டிப்பாகத் தேவை என்று வற்புறுத்தி வந்தார் கநாசு. புத்தகங்கள் படிக்க அலைந்தார். புத்தகங்கள் பற்றிப்பேச ஆள்தேடி அலைந்தார். கட்டுக்கட்டாக நூலகங்களிலிருந்து நூல்களை சுமந்து கொண்டு திரிவார். சென்னையிலோ அல்லது டெல்லியிலோ சாலையில் அவரை சந்தித்த எவரும் அவர் ஏதாவது ஒரு நூலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையிலோ அல்லது நல்ல காப்பியைத் தேடிச் செல்லும் வேளையிலோ அவரைக் குறுக்கிட்டு இருப்பார்கள். இந்தத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் எந்தெந்தப் புத்தகங்கள் எந்தெந்த மூலையில் கிடைக்கும் என்பது அவருக்கு மிகவும் அத்துபடியாக இருந்தது. புத்தகங்களுக்கு விமர்சனம் எழுத ஒன்றும் கிடைக்காவிட்டால் பதிப்பாளர்களைத் தேடியலைந்து நூல்களைத் தேடி வாங்கி விமர்சனம் எழுதியிருக்கிறார். ஒரு நூலுக்கு மதிப்புரை எழுதும் முன் 3 முறை அதனைப் படிப்பதாக அவரே சொல்வார்.
ஒரு முறை கௌதம சித்தார்த்தனின் மற்றும் பன்னீர் செல்வன் போன்ற இரு இளைஞர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பினை இரவோடு இரவாகப் படித்துவிட்டு அவைகளின் மதிப்புரையையும் எழுதி விடிவதற்காகக் காத்திருந்து தன் மாப்பிள்ளை மணியை அழைத்துக் கொண்டுவந்து லோதி காலனியில் இருந்த என் வீட்டுக்கு வந்து அதைக் கொடுத்து உடனடியாக அந்தக் கட்டுரையை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த மதிப்புரை வெளியானதும் அதன் நறுக்கினை தனக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்ட தீவிரம் நினைவில் வரும் பல சந்தர்ப்பங்களில் கண்களின் ஓரத்தில் நீரினை வரவழைக்கும்.
படித்துக் கொண்டே இருந்தார். ஒரு கண் முழுக்கப் போய்விட்டது. இன்னொன்றும் முக்கால் போய்விட்டது. அப்போதும் படித்துக் கொண்டிருந்தார். இனியாவது ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள் என்று எல்லோரும் அவரை வற்புறுத்தினார்கள். அவர் படிப்பதை நிறுத்தவில்லை. ஆபரேஷனை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தார். பிறகு அதற்குத் தேவையே இல்லாமல் போய்விட்டது.
அதேபோல அவர் மேற்கொண்ட பயணங்கள். இந்தியாவில் அவர் சுற்றிப்பார்க்காத ஊரே இல்லை என்று சொல்லலாம். எந்த ஊரில் எந்தக் கடையில் காப்பி நன்றாக இருக்கும் என்றும் சொல்வார். நிறைய வெளிநாடுகளிலும் பயணம் செய்திருக்கிறார். உலக அளவில் இலக்கிய ஆர்வலர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். ஆலட்ஸ் ஹக்ஸ்லி, ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆல்பர் காம்யூ, ழான் பால் சார்த்தர் போன்றவர்கள் அவருடைய நண்பர்களாக இருந்தனர். சார்த்தரை சந்தித்த பாதிப்பில் கொஞ்ச நாட்கள் பைப் புகைத்துக் கொண்டிருந்தார்.
இறப்பதற்குக் கொஞ்ச காலம் முன்னர் கூட நண்பர்ளை சந்திக்கும்; பொருட்டு உடல் நலத்தையும் கண்பார்வைக் குறைவினையும் பொருட்படுத்தாது ஊர்ஊராக பயணங்கள் மேற்கொண்டார். அவருடைய அந்திம காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியாக அவரை நியமித்திருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பல நண்பர்களை சந்திக்கவும் நிறைய எழுதவும், படிக்கவும் உபயோகித்துக்கொண்டார். சாகித்ய அகாடமி அலுவலகத்துக்கு மிகவும் பிரயாசைப்பட்டு அலைந்து புதுமைப்பித்தனைப் பற்றிய ஒரு தேசியக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்தார். அக்கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார்.
அவர் நட்பினை மதித்தவிதமும் அவரை அறிந்த எல்லோரிடமும் பிரபலமான விஷயம். தன்னுடைய குடும்பத்தையும் மிகவும் ஆழமாக நேசித்தார். தன்னுடைய மகள் ஜமுனா மீதும் மாப்பிள்ளை மணி மீதும் பேத்திகளின் மீதும் அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்.
இறப்பதற்கு முன் சென்னையில் தங்கியிருந்து குங்குமம், தாய், துக்ளக் போன்ற பல வெகுஜன இதழ்களில் இலக்கியத்திறனாய்வு பற்றியும், படைப்பாளிகள் குறித்தும் பல கட்டுரைகளை எழுதி வெகுஜன அளவில் ஷண்முகசுந்தரம், சிதம்பரசுப்பிரமணியம், திருலோகசீதாராம் போன்ற அரிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தினார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டது. அது குறித்தும் நண்பர்களிடம் சொல்லும்போது கேடயத்தை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். அந்தப்பணம் வந்தால் எனக்குக் கொஞ்சம் உபயோகமாக இருக்கும் என்று சொல்லி வருவார். அவர் சொன்னது போலவே இலக்கியத்தில் ஆர்வமும் சாகித்ய அகாடமி மேல் பெருமதிப்பும் உள்ள திருடன் ஒருவன் இரவு கநாசுவின் மாப்பிள்ளை மணியின் காரில் மறந்து வைத்துவிட்டுப் போயிருந்த சாகித்ய அகாடமி நினைவுப் பரிசை விருது அளிக்கப்பட்ட அன்று இரவே திருடிக் கொண்டு போய்விட்டான்.
கநாசு என்கிற பிரம்மரா~ஸ் பற்றி எவ்வளவு சொன்னாலும் ஒரு நிறைவு இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு முழு அளவிலான நூலையே எழுத வேண்டியிருக்கும். சுந்தரராமசாமி தன்னுடைய நினைவோடையில் செய்தது போல. தஞ்சை பிரகாஷ் சாகித்ய அகாடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுதியது போல.
இதுபோன்ற கூட்டத்தில் கொஞ்சமாக எடுத்து வைப்பது அவருடைய நினைவுக்கு செய்யும் முழுமையான அஞ்சலியாக இருக்காது என்று நம்புகிறேன்.
அவருடைய நண்பன் ஒருவன் தன்னுடைய முட்டாள்தனமான ஆர்வமிகுதியில் அவரிடமே ஒருமுறை சொன்னான் -
நீங்கள் செத்துப்போனால் என்னுடைய இரங்கல் உரையை "Death of a Raja Rishi" என தலைப்பிட்டு எழுதுவேன் என்று..

அதற்கும் சிரித்துக் கொண்டே ''death of a Rakshas" என்று எழுதினாலும் யாருக்கும் ஒன்றும் தெரியப்போவதில்லை என்று சொன்னது அந்த பிரம்மரா~ஸ்.

அந்த பிரம்மரா~ஸின் இடம் இன்று வரை பலரின் நெஞ்சங்களில் வேறு யாராலும் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.
நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment