Tuesday, June 12, 2007

மண்ணெண்ணெய் வாடை







மொழிபெயர்ப்புச் சிறுகதை



பஞ்சாபி மூலம் - அம்ருதா ப்ரீதம்

ஆங்கிலம் வழி தமிழில் - ராகவன் தம்பி

நன்றி - தி லிட்டில் மேகஸின்



வெளியே பெட்டைக்குதிரை ஒன்று கனைக்கும் ஒலி கேட்டது. அதன் கனைப்பை அடையாளம் கண்டு கொண்ட குலேரி விரைந்து வெளியே ஓடினாள். அது அவளுடைய சொந்தக் கிராமத்திலிருந்து வந்த குதிரை. ஏதோ பிறந்த வீட்டின் கதவைக் கட்டிக் கொள்வதைப் போல, அந்தக் குதிரையின் கழுத்தில் தன் தலையை அழுந்தப் பதித்துக் கொண்டாள்.

குலேரியின் பெற்றோர் சம்பா கிராமத்தில் வசித்து வந்தனர். அது அவளுடைய கணவனின் கிராமத்தில் இருந்து சில மைல்கள் தூரம் இருந்தது. அவளுடைய கணவனின் கிராமம் சரியான மேட்டில் அமைந்திருந்தது. கீழ்நோக்கி இறங்கி வளைந்து சரிந்து செல்லும் சாலை அது. மேட்டின் ஒரு புள்ளியில் இருந்து பார்க்கும்போது பாதத்தின் அடியில் ஏதோ ஒரு புள்ளியாகத் தெரியும் அவளுடைய சம்பா கிராமம். குலேரிக்கு தன் கிராமத்தின் நினைப்பு வரும்போதெல்லாம் கணவன் மானக்கை உடன் அழைத்துக்கொண்டு தூரத்தில் தெரியும் அந்தப் புள்ளி வரை செல்வாள். சூரிய ஒளியில் சம்பா கிராமத்தின் வீடுகள் ஒளிர்வதை சிறிது நேரம் பெருமையுடன பார்த்துவிட்ட நெஞ்சம் ஒளிர அந்தப் பெருமையைச் சுமந்து தன் கணவன் வீடு திரும்புவாள்.

ஒவ்வொரு வருடமும் அறுவடை எல்லாம் முடிந்தபின், குலேரிக்குத் தன்னுடைய பெற்றோருடன் கொஞ்ச நாட்களைக் கழிக்க கணவன் வீட்டில் அனுமதி கிடைக்கும். அவளை சம்பாவுக்கு அழைத்து வர ஒரு ஆளை லக்கட் மண்டிக்கு அனுப்பியிருந்தார்கள் அவளுடைய பெற்றோர். இவளைப்போலவே, சம்பாவை விட்டு வெளியே திருமணம் கட்டிக்கொடுக்கப்பட்ட இவளுடைய இரண்டு சிநேகிதிகளும் அந்த வருடம் அதே நேரத்தில் சம்பாவுக்கு வந்திருந்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த சந்திப்பை அந்தப் பெண்கள் எல்லோரும் எதிர்நோக்கியிருப்பார்கள். தங்களுடைய அனுபவங்கள், சந்தோஷங்களை மணிக்கணக்கில் பகிர்ந்து கொள்வார்கள். ஒன்றாக சேர்ந்து எல்லாத் தெருக்களையும் சுற்றுவார்கள். பிறகு அறுவடைப் பண்டிகையும் இருக்கும் அவர்களுக்கு. இந்தப் பண்டிகைக்கு எல்லாப் பெண்களுக்கும் புதிய ஆடைகள் கிடைக்கும். தங்களின் துப்பட்டாக்களுக்குப் புதுச் சாயம் ஏற்றி, கஞ்சி போட்டு, ஜிகினாப் பொடி தூவித் தயார் செய்து வைத்திருப்பார்கள். கண்ணாடி வளையல்களும், வெள்ளியில் காதுக்கு வளையங்களையும் வாங்கிக் கொள்வார்கள்.

குலேரி எப்போதும் அறுவடைக்காக நாட்களை எண்ணிக்கொண்டிருப்பாள். மழைக்கால மேகங்களை இலையுதிர்காலத்தின் தென்றல் காற்று விலக்கி உள்ளே பிரவேசிக்கும்போதே சம்பாவில் இருப்பதைப் போன்ற ஒரு சுகமான உணர்வினைப் பெற்றுவிடுவாள் குலேரி. தினசரி வேலைகளை முடித்துவிட்டு, கால்நடைகளுக்குத் தீனியைப் போட்டு முடித்து, கணவனின் பெற்றோர்களுக்காக உணவு சமைத்து வைத்துவிட்டுத் தன்னுடைய பெற்றோரின் கிராமத்தில் இருந்து தன்னை அழைத்துப் போக யாராவது வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று உட்கார்ந்தபடி கணக்குப்போடத் துவங்குவாள். இது மீண்டும் அவள் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வருடாந்திரப் பிரயாணம் கிளம்புவதற்கான நேரம். குதிரையை மிகவும் வாஞ்சையாகத் தடவிக் கொடுத்து விட்டுத் தன் பிறந்த வீட்டின் வேலைக்காரனான நத்துவை வரவேற்று உபசரித்து மறுநாள் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டாள்.தான் அடைந்த பரவசத்தை விவரிக்க குலேரியிடம் வார்த்தைகள் இல்லை. முகபாவம் ஒன்றே போதுமானதாக இருந்தது. அவளுடைய கணவன் மானக், ஹøக்காவின் புகையினை உள்வாங்கி ரசிக்கும் மனநிலையில் இல்லை - அல்லது மனைவியை விட்டுப் பிரிவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என இருவிதமாகவும் இருந்தது அவனுடைய முகபாவம்.

"திருவிழாவுக்காக நீ சம்பா வருவே இல்லையா?" ஒரே ஒரு நாளுக்காக இருந்தாலும் நீ கண்டிப்பாக அங்கே வரணும்" என்று அவள் வாதாடினாள்.மானக் தன் ஹøக்காக் குழலைப் பக்கத்தில் வைத்துவிட்டு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு ஏன் பதில் சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கே?" - குலேரி சற்றுக் கோபத்துடன் கேட்டாள்.

"உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா?"

"நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்குத் தெரியும். நான் என்னைப் பெத்தவங்களைப் பார்த்து வர ஒரு வருஷத்துக்கு ஒருமுறைதான் போறேன்"

"அது சரி. இதுக்கு முன்னே உன்னை எப்போவும் போகவேணாம்னு நான் தடுத்தது கிடையாது".

"பிறகு இந்த வருஷம் மட்டும் ஏன் என்னை இப்படி நிறுத்தப் பார்க்குறே?"

அவள் பதில் கேட்டு நச்சரித்தாள். "இந்த ஒரு தடவை மட்டும்" கெஞ்சினான் மானக்.

"உங்க அம்மாவே ஒண்ணும் சொல்லலை. நீ ஏன் என் வழியிலே குறுக்குலே வர்றே?" குழந்தைத் தனமாகப் பிடிவாதம் பிடித்தாள் குலேரி.

"எங்கம்மா... " எதையோ சொல்ல வந்து வார்த்தைகளை விழுங்கினான் மானக்.

நெடுநாட்களாகக் காத்திருந்த அந்தக் காலை நேரத்தில் விடிவதற்கு வெகுநேரம் முன்னரே கிளம்புவதற்கு எத்தனமாக இருந்தாள் குலேரி. குழந்தை எதுவும் இல்லாததால் தன் பிறந்த வீட்டுக்கு எடுத்துச் செல்வது அல்லது மாமனார் மாமியாரிடம் விட்டுச் செல்வது போன்ற பிரச்சினைகள் ஏதும் அவளுக்கு இல்லை. அவள் மானக்கின் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு இருந்தபோது நத்து குதிரைக்குக் கடிவாளம் பூட்டித் தயார் செய்து கொண்டான். மாமனாரும் மாமியாரும் குலேரியின் தலையை அன்புடன் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்கள்.õõகொஞ்ச தூரம் வரைக்கும் உன்னோட வர்றேன்öö என்று மானக் அவளுடன் கிளம்பினான்.வெளியில் காலடி பட்டதும் மகிழ்ந்து போனாள் குலேரி. தன் துப்பட்டாவுக்கு அடியில் மானக்கின் புல்லாங்குழலை ஒளித்து வைத்திருந்தாள்.

கஜியார் கிராமத்துக்குப்பின் சாலை, சம்பாவை நோக்கி செங்குத்தாக இறங்கியது. அங்குத் துப்பட்டாவிலிருந்து புல்லாங்குழலை வெளியே எடுத்து அவனிடம் கொடுத்தாள் குலேரி. மானக்கின் கைகளைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டு இப்போ இதை நீ வாசிக்கணும்" என்றாள்.

நினைவுகளில் எங்கோ தொலைந்து போயிருந்த மானக் அவள் சொல்வதைக் கவனித்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை.

"ஏன் வாசிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே?" என்று ஆதங்கத்துடன் கேட்டாள் குலேரி.

ஒரு வேதனையான பார்வை ஒன்றை வீசினான் மானக். நடுக்கத்துடன் உதடுகளில் புல்லாங்குழலைப் பொருத்திக்கொண்டு ஒரு மாதிரியான வேதனை நிறைந்த ஒலியைத் தன் புல்லாங்குழலில் எழுப்பினான்.

"குலேரி... தயுவ செய்து நீ ஊருக்குப் போகாதே. இந்தத் தடவை மட்டும் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். தயவு செய்து போகாதே" என்று வேதனை கலந்த குரலில் அவளைக் கெஞ்சினான். வாசிப்பதை மேலும் தொடர இயலாதவனாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு புல்லாங்குழலை அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.

"நான் ஏன் போகக்கூடாது? திருவிழா அன்னிக்கு எங்க ஊருக்கு வா. அன்னிக்கே நாம ரெண்டு பேரும் உங்க ஊருக்குத் திரும்பப் போயிடுவோம். சத்தியமா அதுக்கு மேலே ஒரு நாள் கூட சம்பாவில் நான் தங்கவே மாட்டேன்".

மானக் மீண்டும் அவளை ஒன்றும் கேட்கவில்லை.

சாலையோரம் இருவரும் ஒதுங்கினார்கள். இருவரும் தனியாகப் பேசுவதற்கு ஏதுவாகக் குதிரையைப் பிடித்துக்கொண்டு நத்து சற்று முன்னே எட்டு வைத்துப்போனான். இதே சாலையில் இதே நேரத்தில் சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன் தானும் தன் நண்பர்களும் திருவிழாவில் கலந்து கொள்ள சம்பா செல்வதற்காக ஒன்று கூடியது மானக்கின் நினைவில் வந்து போனது. இந்தத் திருவிழாவில்தான் மானக்கும் குலேரியும் ஒருவரை ஒருவர் முதன் முதலாகப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் இதயங்களை இங்குதான் பரிமாறிக்கொண்டார்கள். பிறகு ஒருநாள் அவளைத் தனியாக சந்திக்கும் வாய்ப்பு வந்தபோது அவளுடைய கைகளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, "நீ இன்னும் முத்திப்போகாத சோளக்கதிர் மாதிரி இருக்கே - பார். முகம் முழுக்கப் பால் வடியுது".

அவன் கைகளை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டு "முத்தாத சோளத்துக்கு ஆடுமாடுதான் பறக்கும்" என்றாள்.

"மனுஷங்களுக்கு நல்லா சுட்ட சோளக்கதிர்தான் ரொம்பப் பிடிக்கும். உனக்கு வேணும்னா எங்க அப்பா அம்மா கிட்டே போய் என்னோட இந்தக் கை வேணும்னு கேட்டுக்கோ" என்றாள்.

மானக்கின் பந்தங்களுக்கு இடையே, கல்யாணத்துக்கு முன்பே மணப்பெண்ணுக்கான விலையை பேசி முடிவு செய்வது சம்பிரதாயம். குலேரியின் தகப்பனார் தன்னிடம் எவ்வளவு தொகை கேட்பான் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் மிகவும் பதட்டமாக இருந்தான் மானக். ஆனால் குலேரியின் தகப்பன் நகரங்களில் வாழ்ந்தவன். வசதியாகவே இருந்தான். தன்னுடைய பெண்ணைக் கொடுப்பதற்கு எந்தத் தொகையும் கேட்கப்போவதில்லை என்றும் நல்ல குடும்பத்தில் இருந்து வரும் ஒரு நல்ல பையனைப் பார்த்துத் தன் பெண்ணைக் கொடுத்து விடுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தான். மானக் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் விடை தருவதாக அவன் தீர்மானித்தான். உடனடியாக குலேரி - மானக் திருமணம் நடந்தேறியது. ஆழ்ந்த யோசனையில் இருந்த மானக் தோளின் மீது குலேரியின் கை பட்டதும் யோசனையில் இருந்து விடுபட்ட வெளிவந்தான்.õõஎன்ன பலமான யோசனையிலே இருப்பலே இருக்கே?öö குறும்பாக அவனைச் சீண்டினாள் குலேரி.மானக் பதில் ஒன்றும் சொல்லவில்லை. குதிரை பொறுமையிழந்து கனைத்தது. மீதி செல்லவேண்டிய தூரம் நினைவுக்கு வந்தவளாக குலேரி சட்டென எழுந்து நின்றாள்.

" இங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் நீலமணிக் காடு பற்றி உனக்குத் தெரியுமா?" அவள் கேட்டாள்.

"அதுவழியா போறவங்க எல்லோரும் காது செவிடாகி விடுவாங்களாம் தெரியுமா உனக்கு?"

"ஆமாம்."

"எனக்கு என்னமோ நீ அந்த நீலமணிக் காடு வழியா போயிருப்பியோன்னு தோணுது. நான் என்ன சொன்னாலும் உன் காதுலே ஒண்ணும் விழமாட்டேங்குதே"

"ஆமாம் குலேரி. நீ சொல்றது சரிதான். நீ சொல்றது எதுவுமே என் காதுலே விழத்தான் மாட்டேங்குது" ஆழ்ந்த பெருமூச்சு விட்டான் மானக்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் நினைப்பு இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. "நான் போறேன். நீ வீட்டுக்குத் திரும்பு. ரொம்ப தூரம் வந்துட்டே" குலேரி அக்கறை நிரம்பிய குரலில் சொன்னாள்.

"நீ இவ்வளவு தூரம் நடந்துட்டே. குதிரை மேலே ஏறிக்கோ" என்றான் மானக்.

"சரி. இந்தப் புல்லாங்குழலை எடுத்துக்கோ".

"இல்லை. உன்னோடவே வெச்சிக்கோ"

"திருவிழா நாள் அன்னைக்கு நீ அங்கே வந்து வாசிப்பியா?"

புன்முறுவலித்துக் கொண்டே கேட்டாள் குலேரி.

அவளுடைய கண்கள் ஒளிர்ந்தன. மானக் ஒன்றும் சொல்லாது முகத்தைத் திருப்பிக் கொண்டான். சற்று வருத்தத்துடன் தோளைக் குலுக்கிக் கொண்டு சம்பா செல்லும் பாதையில் தொடர்ந்தாள் குலேரி. மானக் தன் வீடு செல்லும் பாதையில் திரும்ப நடக்கத் துவங்கினான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் கயிற்றுக் கட்டிலில் தொப்பென்று சரிந்து வீழ்ந்தான் மானக்.

"எதுக்கு இவ்வளவு நேரம்?"

ஆச்சரியத்துடன் கேட்டாள் அவனுடைய தாய்.

"சம்பா வரைக்கும் போய் வந்தியா என்ன?"

"சம்பா வரைக்கும் போகலே. மலை உச்சி வரைக்கும் போய் வந்தேன்." கனத்த குரலில் சொன்னான் மானக்.

"ஏண்டா கிழவி மாதிரி குரல் உடைஞ்சி போறே?" கடுமையான குரலில் சொன்னாள் - "ஆம்பிளையா இருடா".

மானக் கடுமையாகத் திருப்பிக்கொடுக்க நினைத்தான். "நீ பொம்பளைதானே. ஒரு மாத்தத்துக்காக நீ ஏன் ஒரு பொம்பளை மாதிரி எப்போவாவது அழக்கூடாது?" என்று கேட்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

மானக்குக்கும் குலேரிக்கும் கல்யாணம் முடிந்து ஏழு வருடங்கள் ஓடிப்போயின. இன்னும் அவள் ஒரு குழந்தையை சுமந்தபாடில்லை.

மானக்கின் தாயார் ரகசியமாக ஒரு தீர்மானம் செய்திருந்தாள்.

"இந்தக் கஷ்டகாலம் எட்டாவது வருஷத்தைத் தாண்ட விடமாட்டேன்"

தன்னுடைய தீர்மானத்தை உண்மையாக்குவது போல அவள் தன் மகனுக்கு ஒரு இரண்டாவது மனைவியை ஏற்பாடு செய்ய ஐந்நூறு ரூபாய் கொடுத்த வைத்திருந்தாள். புது மருமகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக குலேரி தன் தாய் வீட்டுக்குப் போகும் நேரத்தை அவள் எதிர்பார்த்திருந்ததை மானக் தெரிந்து வைத்திருந்தான்.

தாய்க்குக் கீழ்ப்படிந்த மகனாக, சம்பிரதாயத்துக்குக் கட்டுப்பட்டவனாக, மானக்கின் உடல் அந்தப் புதுப்பெண்ணின் தாபத்துக்கு ஈடுகொடுத்தது. ஆனால் உள்ளுக்குள் அவனுடைய மனது மரணித்திருந்தது.
ஒரு நாள் விடியற்காலையில் மானக் வீட்டு வாயிலில் உட்கார்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். அவனுடைய பழைய சிநேகிதன் பவானி வீட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தான். "ஏய் பவானி... இந்தக் காலை நேரத்துலே அப்படி அவசரமாக எங்கே போய்க்கிட்டிருக்கே?"
பவானி நின்றான். அவனுடைய தோளின் மீது ஒரு சிறிய கட்டு ஒன்று இருந்தது. இவனைத் தவிர்ப்பது போல, "குறிப்பாக எங்கேயும் இல்லே" என்று பதில் கொடுத்தான் பவானி.

"அப்படியா? ஆனா எங்கேயோ குறிப்பா கிளம்பின மாதிரிதான் தெரியுது. சரி. கொஞ்சம் புகை போட்டுட்டுப்போறியா?" என்று கேட்டான் மானக்.
மானக் அருகில் மண்டிபோட்டு அமர்ந்தவாறு புகை பிடிக்கும் சிலும்பைக் கையில் வாங்கிக்கொண்டான் பவானி. "நான் திருவிழாவுக்காக சம்பா போயிக்கிட்டு இருக்கேன்"

பவானியின் வார்த்தைகள் மானக்கின் இதயத்தில் ஊசியைச் செருகியது போல இறங்கியது.

"திருவிழா இன்னைக்கா?"

"ஒவ்வொரு வருஷமும் இந்தத் தேதிக்குத்தான் திருவிழா வருது"

வறட்சியாகப் பதிலளித்தான் பவானி. "என்ன மறந்து போனியா? ஏழு வருஷத்துக்கு முன்னாலே நாம எல்லோரும் அங்கே இருந்தோமே?"

மிகவும் சங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டான் மானக். பவானி என்ன சொல்ல வருகிறான் என்பது அவனுக்குப் புரிந்தது. சற்று நேரத்து மௌத்துக்குப் பின் பவானி சிலும்பைக் கீழே வைத்துவிட்டு அந்தக் கட்டைத் தூக்கிக் கொண்டு கிளம்பினான். அவனுடைய புல்லாங்குழல் அந்தக் கட்டில் இருந்து துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது. மானக்கிடம் சொல்லிக்கொண்டு அவன் கிளம்பினான்.

பவானி பார்வையில் இருந்து மறையும் மட்டும் மானக்கின் கண்கள் அந்தப் புல்லாங்குழலின் மீது நிலைத்து வெறித்தது. மறுநாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பவானி திரும்பி வருவது தெரிந்தது. ஆனால் மானக் அவனைத் தவிர்த்து வேண்டுமென்றே அவன் பக்கமே திரும்பாது வேறுவழி பார்த்து நடந்து போனான். பவானியுடன் பேசுவதையோ அல்லது திருவிழாவில் நடந்தது பற்றித் தெரிந்து கொள்ளவோ அவன் விரும்பவில்லை. ஆனால் பவானி வேறுவழியாக சுற்றிவந்து மானக் எதிரில் குத்திட்டு உட்கார்ந்து கொண்டான். அவனுடைய முகம் ஒளியிழந்து அடர்ந்த சோகம் படர்ந்திருந்தது.

"குலேரி செத்துட்டா" மிகவும் தட்டையான குரலில் சொன்னான் பவானி.

"என்ன?"

உன்னோட ரெண்டாவது கல்யாணத்தைப் பத்திக் கேள்விப்பட்டதும் குலேரி மண்ணெண்ணை ஊத்தித் தீ வெச்சிக்கிட்டா"
மானக் மாளாத வேதனையில் சொல்லிழந்து கனமான அமைதியில் ஆழ்ந்து போனான். தன் உயிரே பற்றி எரிவது போல உணர்ந்தான். அவனால் வெறுமனே எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது. நாட்கள் கழிந்தன. தோட்டத்தில் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான் மானக். தனக்கேதும் விருப்பம் இல்லாததுபோல, அளிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட உணவை உண்டு வந்தான். எங்கோ தூரத்தில் வெறித்த கண்களுடன், கண்களில் எவ்வித பாவமும் இன்றி, ஒளியிழந்து, உயிரிழந்த சடலமாக வாழ்ந்து வந்தான்.

"நான் இந்த ஆளுடைய மனைவியே கிடையாது. எதுக்காகவோ அவர் கல்யாணம் பண்ணிக்கிட்ட ஏதோ ஒரு பொண்ணு நான்" என்று பார்த்தவளிடமெல்லாம் புலம்பி வந்தாள் அவனுடைய இரண்டாவது மனைவி.

ஆனால் மிகவிரைவில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள். மானக்கின் தாயாருக்கு தன்னுடைய புது மருமகளின் மீது மிகவும் திருப்தியாகவும் வாஞ்சையாகவும் இருந்தது. மானக்கிடம் அவனுடைய மனைவியின் உடல்நிலை பற்றி எடுத்துச் சொன்னாள். ஆனால் அவன் ஒன்றும் புரியாதது போல நடந்து கொண்டான். கண்களில் எப்போதும் ஒரு வெறித்த பார்வையைப் பொருத்திக் கொண்டு நடமாடிக்கொண்டிருந்தான்.
அவனுடைய நடவடிக்கையைக் கொஞ்ச நாட்களுக்கு சகித்துக் கொள்ளுமாறு தன்னுடைய மருமகளுக்கு அடிக்கடி அறிவுரை கொடுத்துக் கொண்டிருந்தாள் அவன் தாயார். குழந்தை பிறந்து அவனுடைய மடியின் மீது கொஞ்சுவதற்குக் கொடுத்ததும் அவன் முழுக்க மாறிப்போவான் என்று மருமகளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். மானக்கின் மனைவிக்கு ஒரு மகன் பிறந்தான். மிகுந்த குதூகலத்துடன் மானக்கின் தாயார் குழந்தையைக் குளிப்பாட்டி, நல்ல ஆடைகளை அணிவித்து அவன் மடியில் குழந்தையைக் கிடத்தினாள்.
மடியில் கிடத்தப்பட்ட குழந்தையை வெறித்துப் பார்த்தான் மானக். எப்போதும் போலவே எவ்வித உணர்ச்சியும் இன்றி முகத்தை வைத்துக்கொண்டிருந்தான் அவன். திடீரென அந்த வெறித்த கண்கள் கருமேகமாக இருண்டன. உணர்ச்சிகள் மரத்துப்போன அந்த வெற்றுக் கண்களில் கலவரம் படர்ந்தது. ஊரே கிடுகிடுக்கும் வண்ணம் வீறிட்டு அலறத் துவங்கினான்.
õõகுழந்தையை யாராவது எடுத்துக்கிட்டுப்போங்கöö அவனுடைய கதறல் அந்த ஊரின் எல்லாச் சுவர்களிலும் மோதி எதிரொலித்தது. õõஎடுத்துக்கிட்டுப் போங்க. ஐயோ... எனக்கு வேணாம். எடுத்துக்கிட்டுப்போங்க. இவன் மேலே ஒரேயடியா மண்ணெண்ணெய் வாடை அடிக்குது. தயவு செய்து யாராவது தூரமா எடுத்துப்போங்க...

No comments:

Post a Comment