Saturday, June 23, 2007

கோமல் என்னும் மாமனிதர் பாகம் 3


யதார்த்தாவின் எப்போ வருவாரோ நாடகத்திலிருந்து ஒரு காட்சி

ராகவன் தம்பி

கோவை சுபமங்களா நாடகவிழாவில் கலந்து கொள்ள நாங்கள் சென்றபோது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்களுடன் சென்ற இதழில் முடித்திருந்தேன். பொதுவாக நான் கலந்து கொண்ட இரண்டு நவீன நாடக விழாக்களில் (மதுரை மற்றும் கோவை) நவீன நாடகப்புரவலர்களும் நாடக வேந்தர்களும் ஆடிய ஆட்டங்களையும் பந்தாக்களையும் காட்டிய படங்களைப் பற்றியே சுமார் பத்து இதழ்களில் தனியாக எழுதலாம். அவற்றில் காதல், வீரம், சோகம், மர்மம் போன்ற எல்லாம் கலந்து ஒரு மூன்றாந்தரத் தமிழ் சூப்பர் ஹிட் படத்துக்கு ஈடான சுவாரசியத்துடன் விஷயங்கள் வரலாம். அவை இப்போதைக்கு வேண்டாம். விஷயத்துக்கு வருகிறேன்.

நண்பரின் ஏற்பாட்டில் ஆறு தனித்தனி அறைகளை எங்களுக்காக ஒதுக்கிக் கொண்டோம். நாங்கள் தங்கியிருந்த விடுதி வளாகத்திலேயே உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த விழாவுக்காக அங்கு தங்கியிருந்த எல்லாரையும் விட்டு மிகவும் முக்கியமான விருந்தினர் ஒருவருடன் தினமும் காலையிலும் நண்பகலிலும் உணவருந்த அந்த விடுதிக்கு வருவார் கோமல். அது என்னுடைய மகள் பாரதி. அப்போது அவளுக்கு சுமார் எட்டு வயதிருக்கும். எப்போ வருவாரோ நாடகத்தில் தீபாவுடன் கூடையை சுமந்து வரும் சிறுமியாக நடித்தாள். அந்த நாடகத்தின் முழு வசனங்களும் அவளுக்கு மனப்பாடமாக இருந்தது. ""பாரதி எங்கே?'' என்று தேடிவந்து அழைத்துப்போவார். அவளை முறைப்பெண் மற்றும் எப்போ வருவாரோ நாடகங்களின் வசனங்களை சொல்லச் சொல்லி முகத்தில் பெருமையும் பூரிப்பும் ததும்ப உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார். ஏதோ சர்க்கஸ் காட்டுவது போல எல்லோரையும் கூப்பிட்டுக் காட்டுவார். பாரதியை மீண்டும் மீண்டும் வசனங்கள் சொல்லச் சொல்லிக் கேட்டு ரசிப்பார். விழாவில் மாலை நாடகம் முடிந்ததும் இரவில் தவறாது நடக்கும் சோமபான விருந்துகளின் போது எங்கள் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்.

துஷ்டர்களைக் கண்டு தூர இருப்பதுபோல விலகி இருந்து ஏதாவது முக்கிய வேலைகள் இருந்தால் மட்டும் யாரிடமாவது எனக்கு விஷயத்தை சொல்லி அனுப்புவார். அரைகுறை நினைவில் இருக்கும் யாராவது ஒரு புண்ணியவான் அதை மிகவும் விஸ்தாரமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டு இரண்டு நாட்கள் கழித்து என்னிடம் சொல்வான். நாங்கள் கோவை சென்ற மூன்றாவது நாள் எங்கள் நாடகம். புதிதாகத் திருமணம் முடித்து குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நடிக்க எங்களுடன் வந்திருந்த ஜாநி சுரேஷ் நாடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் அதீதக் காய்ச்சலுடன் குளிர் நடுக்கத்துடன் படுத்திருக்கிறான். நள்ளிரவில் ஜøரம் ஏகமாக ஏறியிருக்கிறது. அவன் மனைவி தீபா மிகவும் பயந்து விட்டாள். வெளியில் நின்று அழுது கொண்டிருக்கிறாள். எங்களைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. அப்படி தொந்தரவு செய்திருந்தாலும் எங்களால் என்ன செய்ய முடிந்திருக்கும் என்று தெரியவில்லை. எங்களில் பலரை யாராவது நிதானமான ஒருவர் கழிப்பறை வரை அழைத்துச் சென்று மீண்டும் படுக்கைக்குக் கொண்டுவந்து விடும் ஆரோக்கியமான நிலை. நள்ளிரவில் கோமலுக்கு யார் மூலமாகவோ தகவல் தெரிந்திருக்கிறது. சுமார் ஒரு மணியிருக்கும். பரபரப்பாக வேட்டியை மடித்துக் கட்டி அண்ணாமலையை உடன் அழைத்துக்கொண்டு விடுதிக்கு ஓடி வந்திருக்கிறார். உடனடியாக சுரேஷை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிக் கொடுத்து அவனுக்குச் சற்று ஆசுவாசமானதும் அறையில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அப்போது நள்ளிரவு சுமார் இரண்டரை மணியிருக்கும். நாங்கள் பக்கத்து அறையில்தான் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். எங்கள் அறைப்பக்கம் கூட அவர் வரவில்லை. இந்த விஷயமும் இருநாட்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. இப்போதும் இதைப்பற்றி என்றாவது நினைத்துக் கொள்ளும்போதோ அல்லது யாரிடமாவது சொல்லும்போதோ சுரேஷ் மற்றும் தீபாவின் கண்கள் தளும்பிப் போவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.கோவை நாடகவிழா முடிந்தது. சென்னைக்குக் கிளம்ப வேண்டும். நானும் பாரதியும் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருக்க என் மனைவியும் இளைய மகள் அபிநயாவும் என் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார்கள். சகோதரரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பவும் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு போகவும் அவர் வீட்டுக்குப் போனேன்.

அப்போது நாங்கள் தங்கியிருந்த அறைகளுக்கு வாடகையை செலுத்த என் நண்பர் தன்னுடைய உதவியாளரை விடுதிக்கு பணத்துடன் அனுப்பியிருந்தார். அந்த உதவியாளர் பணம் செலுத்த விடுதிக்கு சென்றபோது அவருக்கு முன்னால் கோமல் அங்கு போய் அவர் பணம் செலுத்துவதைத் தடுத்து ""அவங்க எங்க விருந்தாளிங்க. நீங்க எதுக்கு பணம் கட்டணும்?'' என்று உரிமையுடன் சண்டை போட்டு எங்கள் ஆறு அறைகளுக்குமான பணத்தை செலுத்தியிருக்கிறார். இது நாங்கள் சென்னைக்கு ரயிலில் செல்லும்போது குணசேகரனோ பெரியசாமியோ எனக்கு சொன்னது. அதற்கு முன் நான் என் நண்பர்தான் எங்களுக்காக பணம் செலுத்தியிருக்கிறார் என்று எல்லோரிடமும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் தங்கிய அந்த ஆறு அறைகளும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தவை அல்ல.

நாங்கள் எங்களுக்காக ஏற்பாடு செய்து கொண்டவை.கோமல் அந்த விடுதியில் எங்களுக்காக செலுத்தியது விழாக்குழுவினரின் பணமா அல்லது அவருடைய சொந்தப் பணமா என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அநேகமாக கோமலின் சொந்தப் பணமாகத் தான் இருந்திருக்கும்.நாங்கள் தில்லியிலிருந்து கிளம்பும்போது கோமல் ஒன்றும் சொல்லவில்லை. கோவையில் எப்போ வருவாரோ நாடகம் முடிந்ததும் சென்னையில் கிருஷ்ணகான சபாவில் ஒரு மேடையேற்றத்தை ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். சுபமங்களாவும் பரீக்ஷô ஞாநியின் அமைப்பும் சேர்ந்து இந்த ஏற்பாட்டினை செய்திருப்பதாக சொன்னார். கிருஷ்ணகானசபா நிகழ்ச்சிக்கு முன்தினம் சோழா கலைக் கிராமத்தின் ஓவியர்கள் வளாகத்தில் கூத்துப்பட்டறை ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. அதற்கும் வந்திருந்தார் கோமல். கிடைத்த மிகச்சிறிய இடைவெளியில் மிகவும் அற்புதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் சுபமங்களாவும் பரீக்ஷôவும். நல்ல கூட்டம் வந்தது. சென்னையின் அனைத்து எழுத்தாளர்களும் திரைத்துறை மற்றும் நாடகத்துறையைச் சேர்ந்த பலரையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார் கோமல். இயக்குநர் பாலச்சந்தர், எழுத்தாளர் சுஜாதா ஆகியோரும் வந்திருந்தனர். கிருஷ்ணகான சபாவில் பாலச்சந்தர் மேடையேறி இந்த நாடகத்தைப் பாராட்ட வேண்டும் என்று மிகவும் பரபரத்தார் கோமல். அது நடக்கவில்லை. சுஜாதா மிகவும் நல்ல ஒரு விமர்சனத்தை குமுதத்தில் எழுதினார். தமிழகத்தின் பல பத்திரிகைகளில் விமர்சனம் வந்தது. இந்திரா பார்த்தசாரதி அள்ண்க்ங் பத்திரிகையில், வடக்கில் இருந்து வந்த இவர்களிடமிருந்து தமிழகத்தின் நவீன நாடகக்காரர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று எழுதினார். இந்தப் பெருமையெல்லாம் கோமல் என்னும் அற்புதமான நண்பர் வழியாகக் கிடைத்த ஒரு பெரும் வரமாக எப்போதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்திரா பார்த்தசாரதி சொன்னது போல, யதேஷ்டமாகக் கற்றுக்கொண்டாகி விட்டது என்றோ என்னவோ, அதற்குப்பிறகு தமிழகத்தில் நடந்த எந்த நவீன நாடக விழாவுக்கும் யதார்த்தாவுக்கு அழைப்பு வரவில்லை. சொல்லப்போனால் தமிழ் நாடகம் பற்றி எங்காவது எழுத நேர்ந்த போதெல்லாம் நவீன நாடகப்புலவர்கள் முடிந்தவரை என்னையும் யதார்த்தாவையும் கவனத்துடன் தவிர்த்தார்கள். இன்னும் தவிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் ஒரு நவீன நாடகப் பத்திரிகை தில்லியில் இருந்து ஒரு தில்லி நாடக சிறப்பிதழை வெளியிட்டது. அந்த தில்லி நாடக சிறப்பிதழில் மறந்து கூட நேர்காணல்களிலோ கட்டுரைகளிலோ யதார்த்தாவைப் பற்றியோ என்னைப்பற்றியோ ஒரு வார்த்தை கூட எங்கும் பதிவு செய்யப்படாமல் மிகவும் ஆழ்ந்த எச்சரிக்கை உணர்வுடனும் நேர்மையுடனும், ஜாக்கிரதை உணர்வுடனும் தயாரிக்கப்பட்டு அந்த இதழ் வெளிவந்தது.

மேலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் மேடையேற்றிய நாடகங்களின் ஆசிரியரே இரு தொலைக்காட்சி நேர்காணல்களில் அவருடைய குழுவைத்தவிர வேறு யாரெல்லாம் அவருடைய நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார்கள் என்னும் கேள்விக்கு அயல்நாட்டு இயக்குநர்களையும் தமிழ் தெரியாத சில இயக்குநர்களின் பெயர்களையும் பெருமையுடன் பட்டியல் இட்டார். அவருடைய பல நாடகங்களை கடன் வாங்கி தில்லியில் மேடையேற்றிய நானோ யதார்த்தா நாடகக்குழுவோ அப்போது அவருடைய நினைவில் வரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கவில்லை.
அதேபோல மைய அரசு நாடகங்களுக்கு அளிக்கும் உதவித் தொகைக்கும் நாடக விழா பங்கேற்புகளுக்கும் என்னுடைய விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டபோது தமிழகத்தின் நவீன நாடக வித்தகர்கள் இங்கு வந்து அரங்கேற்றிய உட்டாலங்கடி வேலைகளைப் பற்றி பிற்காலத்தில் அறிந்து கொள்ள நேரóந்தது.

அதே நேரத்தில் நான் பலநேரங்களில் மிகக்கடுமையாக எதிர்த்து சண்டையிட்ட வெங்கட்சாமிநாதன் யதார்த்தாவின் நாடக முயற்சிகளை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். வெகு சமீபத்தில் நான் மிகவும் நெகிழ்ந்துபோன விஷயம் என்னவென்றால் அவருடன் என்னுடைய சண்டை உச்சகட்டத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் அவருடைய தொகுப்பு ஒன்றில் என்னைப் பற்றி அவர் எழுதிய பல கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து பதிப்பகத்துக்குக் கொடுத்திருக்கிறார். சென்னையின் தமிழினி பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டிருக்கிறது. தன்னிடம் கோமல் எப்போதும் என்னைப் பற்றி மிகவும் பெருமையாகத்தான் பேசுவார் என்று அடிக்கடி சொல்வார் வெசா. அதைத் தன்னுடைய எழுத்துக்களிலும் பதிவு செய்திருக்கிறார்.

இதையெல்லாம் சற்றுத் தடம் மாறி இங்கு பதிவு செய்வதன் காரணம் மீண்டும் கோமலின் மேன்மையைப் பற்றிச் சொல்வதற்கே. நான் கேட்காமலே எனக்கு இவ்வளவும் செய்த கோமலுக்கு நான் எதையும் எப்போதும் செய்யவில்லை. அவர் எப்போதும் எதையும் என்னிடம் கேட்டதில்லை. எந்த ஜென்மத்தின் கடனை எனக்கு அவர் அடைக்க வந்தார்? இனி வரும் பல ஜென்மங்களுக்கு எனக்குப் பெரிய கடனை அவர் விட்டுப் போயிருக்கிறாரே?

இதை இங்கு பதிவு செய்யும்போது உண்மையிலேயே என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தக் கண்ணீர்த் துளிகள் மட்டுமே என் மேல் அத்தனை அக்கறையும் அன்பையும் செலுத்திய ஒரு ஆன்மாவின் பாதங்களில் நான் சமர்ப்பிக்கும் எளிய காணிக்கை என்று நேர்மையுடன் நம்புகிறேன்.அவருடைய இறுதிநாட்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லி முடிக்கவேண்டும். அவருடைய இறுதி நாட்களில் நான் அவரைப் பார்க்க வில்லை. கிடைத்த ஓரிரு சந்தர்ப்பங்களில் அவரைப் பார்க்கும் தைரியமும் எனக்கு வரவில்லை. அவரை அப்படிப் பார்க்க நான் விரும்பவில்லை. அந்த சோக நினைவுகளை இன்னும் ஒரு மாதத்துக்குத் தள்ளிப் போடலாம் என்று இருக்கிறேன்.

No comments:

Post a Comment