Saturday, June 23, 2007

கோமல் என்னும் மாமனிதர் - பாகம் 2



யதார்த்தாவின் "முறைப்பெண்" நாடகத்திலிருந்து ஒரு காட்சி
ராகவன் தம்பி





இந்த மாதிரி உதிரியாக சில நினைவுகளை எழுதத் துவங்கும்போது வருடம், மாதம் போன்ற தகவல்களை மிகவும் துல்லியமாக ஞாபகத்தில் வைத்திருப்பது ரொம்பவும் கஷ்டமான காரியம். சில சமயங்களில் குன்ஸôவாக எதையாவது எழுதி விட்டு கொஞ்ச நாட்கள் கழித்து வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்துக் கொறித்து விட்டுக் கசக்கிப் போடும் முன் யதேச்சையாக இதைப் படிப்பவர்கள் யாராவது உடனே தவறைச் சுட்டிக் காட்டி மானத்தை வாங்கிவிடுவார்கள். அதனால்தான் இந்தப் பகுதியில் முடிந்த வரை வருடங்களைக் குறிப்பிட்டு எழுதாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது.

சரி. 1991லிருந்து 1994க்குள் ஏதோ ஒரு மாதத்தின் காலை வேளை. அலுவலகத்துக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் கோமல். ""உங்க பேட்டையிலேதான் இருக்கேன். நேத்து வந்தேன். கொஞ்சம் அவசரமாக அசோகா ஓட்டல் வரை வரமுடியுமா?""ஏதோ அன்றைய தினம் விடுப்பு எடுக்கக் கடவுளே கொடுத்த வரமாக நினைத்து சந்தோஷப்பட்டு அசோகா ஓட்டலுக்கு ஓடினேன். கொஞ்சம் பதட்டமாக இருந்தார் கோமல். அந்த ஆண்டு தேசிய விருதுகளுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் அவர் இருந்தார். தேர்வுகளுக்கான திரையிடலில் கலந்து கொள்ள வந்திருந்தார். அரசாங்கத்தின் எத்தனையோ விசித்திரமான போக்குகளில் ஒன்று, இது போன்ற அழைப்பின் பேரில் தில்லிக்கு வரும் கலைஞர்களை அழைத்து அவர்களின் ரத்தக்கொதிப்பை ஏற்றி வைத்து ஊருக்குத் திருப்பி அனுப்புவது. சென்னையிலிருந்து இங்கு வர விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். அசோகா ஓட்டல் மாதிரி பெரிய இடங்களில் தங்க வைப்பார்கள். எல்லா இடங்களுக்கும் அரசு கார் அழைத்துப்போகும். ஆனால் தினப்படி மட்டும் சிரார்த்தம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்குக் கொடுப்பது போல ஏதோ ஒரு தொகையை உறையில் போட்டு ஊர் திரும்பும்போது கொடுப்பார்கள். மற்றதெல்லாம் அந்தக் கலைஞர்களே யாராவது சொந்தக் காரர்கள் வீடுகளில் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பணக்காரக் கலைஞர்கள் அல்லது அரசியல் செல்வாக்குள்ள கலைஞர்களே இந்த மாதிரி காரியங்களுக்கு அதிகம் வருவார்கள். அவர்களுக்கு எந்தப்பிரச்னையும் இருக்காது. வந்த இடத்தில் ஒன்றிரண்டு வேலைகளையும் முடித்துவிட்டு சில்லறையோடு ஊர் திரும்புவார்கள். கோமல் மாதிரியானவர்கள் வருவது மிகவும் குறைச்சல். எப்படியோ அந்த வருடம் அவர் தவறி வந்துவிட்டார்.அரசு நிறுவனத்தின் இந்த அற்புத விதிமுறைகளுக்கு அறிமுகமாகாத அவர் அசோகா ஓட்டல் வந்து இறங்கிய உடனே சேவகனை அழைத்து தான் அணிந்திருந்த சகல வகையான காதி வஸ்திரங்களையும் துவைக்கக் கொடுத்து. ஒரு காஃபி மற்றும் காலை உணவைப் பணித்து விட்டு குளிக்கச் சென்றிருக்கிறார். குளிதóது விட்டுத் திரும்பியபோது ஓட்டல் சேவகன் காலை உணவு. காஃபி மற்றும் ஒரு வெடிகுண்டை பில் வடிவில் அறையில் வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறான். அதுதான் அவர் என்னைப் பதட்டத்துடன் அழைத்ததன் பின்னணி.

மகாதேவ் சாலையில் அமைந்துள்ள திரையரங்கின் பின்புறத்திலேயே ஒரு சலவைத் தொழிலாளி இருக்கிறார். கோமல் இங்கு தங்கும் வரை அங்கேயே துணிகளைத் துவைக்கக் கொடுக்கலாம். காபி டிபன் போன்றவற்றை என் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றேன். ""உங்க வீட்டுலே அவங்களும் வேலைக்குப்போறாங்க. தொந்தரவு தர வேண்டாம். வேறு எங்காவது பாருங்கள்'' என்றார். பொதுவாக எப்போதும் கோமலுக்கு மட்டும், அவரை அழைத்துப்போக வரும் அரசு வண்டி மிகவும் தாமதமாக வரும். எனவே அவரை நானே துணி வெளுக்கப்போடவும் சிற்றுண்டி கழிக்கவும் வெளியில் அழைத்துப்போவதாக பரஸ்பரம் ஏற்பாடு செய்து கொண்டோம்.

என்னிடம் ஒரு இளம் பச்சை நிற ஸ்கூட்டர் இருந்தது. மிகப் பழையது. ஓடுவதற்கு பெட்ரோல் ஊற்றிவதைத் தவிர அந்த வண்டிக்கு வேறு எதுவும் நான் செய்ததில்லை. கோல் மார்க்கெட்டில் என் வீட்டில் உதைத்துக் கிளப்பினால் ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் எனக்காகக் காத்திருக்கும் யாருக்காவது நான் கிளம்பி விட்டேன் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு சத்தம் போடும் அந்த ஸ்கூட்டர். சரியாக சொன்ன நேரத்தில் ஓட்டலில் கீழே எனக்காகக் காத்திருப்பார் அவர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஏதாவது ஒரு நடிகனை தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்க, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அந்த ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து வருவார். வழியில் நார்த் அவென்யூ அல்லது சற்றுத் தள்ளி ஆந்திரா பவனில் கிடைக்கும் கண்றாவியான இட்லியை சாப்பிட்டு விட்டு திரைப்படங்கள் பார்க்கப்போவார். மதியம் நடுவர்களுக்கு அங்கு பலமான விருந்து நடக்கும். ஆனால் எனக்காகக் காத்திருந்து யு.என்.ஐ. கேன்டீனில் தட்டைக் கையில் ஏந்திச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் படம் பார்க்க ஓடிப்போவார். அந்த ஆண்டு தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத திறமையான கலைஞர்களுக்காகவும் திரைப்படங்களுக்காகவும் தேர்வுக்குழுவில் நிறைய சண்டை போட்டார் கோமல் என்று நடுவர்களில் ஒருவர் அப்புறம் சொன்னார்.

கோமலுக்குத் தேர்வுக்குழு வேலை முடிந்தது. ஊர் கிளம்பவேண்டும். பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது உடைகள் மற்றும் வீட்டுக்கு ஏதாவது சாமான்கள் வாங்கிப்போகவேண்டும் என்றார். அடிவயிற்றில் புளியைக் கரைத்தது எனக்கு. வழக்கமாக இந்த ஆட்டத்துக்கு நான் போவதில்லை. நம் ஊரிலிருந்து வருபவர்களுக்கு யாராவது பொருளாதார நிபுணர்கள் அங்கேயே சொல்லி அனுப்புவார்கள் þ தில்லியில் எங்கு எந்தப் பொருளை வாங்கினாலும் கடைக்காரன் கேட்பதில் கால் பங்குக்கு பேரம் பேசி வாங்கலாம் என்று. அதை எந்த இடத்தில் அமல்படுத்தலாம் என்னும் விவஸ்தை இல்லாமல் நம் ஆட்களும் ஏதோ உலகச் சந்தையில் ஆயுதங்களை பேரம் பேசி வாங்குவது போன்ற பாவனையில் தயாராக வருவார்கள். அஜ்மல்கான் ரோட்டில் முதல் தாக்குதல் தொடங்கும். கடைக்காரன் சொன்ன விலையைக் கால் விலைக்குக் குறைத்துக் கேட்பார்கள். அந்தக் கடைக்காரன் நம் வீடு, பக்கத்து வீடு, நம்முடைய ஊர் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவான். திராவிடக் கட்சிகளின் பெருங் கருணையால் இந்தி புரிந்து கொள்ள முடியாத நம்ம ஊர் பரப்பிரம்மங்கள் ""கடைக்காரன் என்ன சொல்கிறான்'' என்று தெய்வீகப் புன்னகையுடன் நம்மைக் கேட்பார்கள். இவை போன்ற சங்கடங்களால் யார் கூப்பிட்டாலும் இந்த வியாபாரத்துக்கு மட்டும் நான் போவது கிடையாது. இதுபோன்ற வேலையைத் தவிர்க்கக் கைவசம் நிறையப் பொய்களை வைத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து விட்டுத் தப்பித்து விடுவேன்.

கோமலிடம் என்னால் அந்தப் பொய்களை சொல்ல முடியவில்லை. இறைவனை வேண்டிக்கொண்டே அவருடன் கடைகளுக்குப் போனேன். எதற்கும் தனியாகப் போகவேண்டாமே என்று தட்சிணபாரத சபை மற்றும் யதார்த்தாவின் பல நாடகங்களில் நடித்த எஸ்.கே.எஸ்.மணியிடம் கேட்டேன். அவரும் கோமலின் மிகச் சிறந்த நண்பர். க.நா.சுவின் மாப்பிள்ளை. இப்போது தமிழ் சினிமாவில் அவர் பாரதி மணி. உடனே கார் எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால் கோமலிடம் ஒன்று சொல்லி விட்டேன். அவர் தானாக எதுவும் பேரம் பேசக்கூடாது என்றும் எங்களுடைய சாமர்த்தியத்தில் நம்பிக்கை இருந்தால் நாங்கள் பேசும் விலையைக் கொடுத்து பொருட்களை அவர் வாங்கவேண்டியிருக்கும் என்றும் சொன்னேன். சிரித்துக் கொண்டே மணியின் கையைப் பிடித்துக் கொண்டார். முதலில் ஜன்பத் கடைத்தெருவில் நிறைய கடைகள் ஏறி இறங்கினார். ஒன்றும் வாங்க வில்லை. பாரம்பரியக் கலைப்பொருட்கள் விற்கும் கடைகளுக்கும் சென்றார். அவை முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மட்டுமே ஏறி விலை கேட்க சாத்தியமாகும் கடைகள். கோமலுடைய கசங்கிப்போன கதர் வேட்டி சட்டை மற்றும் என்னுடைய லக்ஷ்மிகரமான முகத்தைப் பார்த்த கணத்திலேயே கடைக்காரர்கள் எங்களுக்கு விலை சொல்லி எதுவும் பயனில்லை என்ற பாவனையில் வேறு ஏதோ வேலையைப் பார்ப்பதுபோலவும் கடைப்பையன்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவதிலும் ஈடுபடத் துவங்கினார்கள். மணி, ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்துக்கொண்டு வெளியில் நின்று பைப் புகைத்துக்கொண்டிருந்தார். ஐந்தாறு கடைகள் ஏறி இறங்கியதும், இது நமக்கான கடைகள் இல்லை போலிருக்கே நாம கரோல்பாக் போகலாமா என்றார் கோமல். போனோம்.

அங்கும் ஐந்தாறு கடைகள் ஏறி எதுவும் வாங்காமல் வெளியில் வந்த கோமலின் கண்களில் பிளாட்பாரத்தில் இருந்த பழைய புத்தகக் கடை ஒன்று கண்ணில் பட்டது. உடனே தரையில் அமர்ந்து புத்தகங்களைத் தேடத் துவங்கினார். மிகப் பழைய ஆங்கில நாவலாசிரியர்களின் நூல்களைக் கண்டதும் ஏதோ திருவிழாவில் காணாமல் போய்க் கிடைத்த குழந்தைகளை அணைக்கும் ஆர்வத்துடன் அந்த நூல்களை அள்ளிக்கொண்டார். இப்படியாக நான்கைந்து பழைய புத்தகக் கடைகளில் ஏறி கை நிறைய புத்தகங்களை அள்ளிக் கொண்டார். ஓரிரண்டு ஆயத்த ஆடைகளை வாங்கிக் கொண்டார். அது அவருடைய நாடகக் குழுவில் உள்ள ஒரு நடிகரின் குழந்தைகளுக்கு என்று சொன்னார்.

தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கும் வீட்டுக்கும் சென்னையில் ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பார்.ஊருக்குக் கிளம்பிப்போனதும் ஒரு நாள் திடீரென்று அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. சுபமங்களாவும் ஸ்ரீராம் சிட்பண்ட் நிறுவனமும் இணைந்து கோவையில் நாடக விழா நடத்தப்போவதாகவும் ஏதாவது ஒரு நாடகம் கொண்டு வரமுடியுமா என்று கேட்டார். நாங்கள் இறுதியாக மேடையேற்றியது எஸ்.எம்.ஏ.ராமின் ""எப்போ வருவாரோ?''. அதன் முதல் மேடையேற்றத்தில் பங்கேற்ற பலர் இப்போது தில்லியில் இல்லையென்றும் புதிய ஆட்களை வைத்து மீண்டும் தயாரிப்பது சற்றுக் கடினம் என்றும் கூறினேன். அவர் கேட்கத் தயாராக இல்லை. நீங்கள் ஏதாவது செய்து அவசியம் வரவேண்டும் என்றார். ஒவ்வொரு இரவும் ஒன்பது மணியானால் கோமல் தொலைபேசி வரும். என்ன செய்தீங்க? என்று கேட்பார். எஸ்.கே.எஸ்.மணி, குணசேகரன் போன்ற நண்பர்கள் தைரியம் அளித்தார்கள். செய்யலாம் என்று தீர்மானித்தோம். அவசர அவசரமாக ஒத்திகைகளைத் துவங்கினோம். சொல்லப்போனால் எங்கள் ஒத்திகைகள் புகைவண்டியிலும் தொடர்ந்தன.

சுபமங்களாவின் மேலாளரோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸின் மேலாளரோ, யாரோ ஒருவர் எங்களை கோவை ரயில் நிலையத்திலிருந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிக்கு அழைத்துப்போய் நாங்கள் தங்கவேண்டிய அறையைக் காண்பித்தார். அதை அறை என்று சொல்வதை விட குதிரை லாயம் போன்ற எவ்வித வசதிகளும் இல்லாத பெரிய கூடம். முதல் பார்வையிலேயே அது எனக்குப் பிடிக்க வில்லை. அதற்கு ஓரிரண்டு காரணங்களும் இருந்தன. எங்கள் குழுவில் தீபாவும் ஜாநி சுரேஷøம் புதிதாய்த் திருமணமான தம்பதியர்கள். திருமணமாகி ஒரு வாரத்துக்குள் எங்களுடன் நாடகத்தில் பங்கேற்க வந்துவிட்டனர். அவர்களை அதுபோன்ற அறையில் இப்படி மற்றவர்களுடன் தங்கவைப்பது மகாபாவம். அடுத்து டாடாவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்யநாதன். மிகவும் வயதானவர். அடுத்து மணி. இவர்களைப்போன்ற மூத்தவர்களின் வசதிகளையும் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக நவீன நாடக அறிஞர்களாகிய எங்களுக்கு விழா நடக்கும் நாட்களின் இரவுகளில் கோஷ்டி சேர்த்துக்கொண்டு மது அருந்தியே ஆகவேண்டும் என்கிற எழுதப்படாத விதியும் அப்போது இருந்தது. அந்தக்காரியத்துக்கான மங்கள லட்சணங்கள் எதுவும் அந்த அறையில் இல்லை. எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்த மேலாளரிடம் சொன்னேன். இயக்குநர்களுக்காகத் தனியாக அறைகள் வேறு விடுதியில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்றும் நான் போய் அங்கு தங்கிக்கொள்ளலாம் என்றும் மற்ற லௌகீக விஷயங்களை அந்த அறையிலும் வைத்துக்கொள்ளலாமே என்று சொன்னார். எனக்கு எங்களுடைய பட்டாளத்துடன்தான் தங்கவேண்டும். தனி அறை வேறு விடுதியில் வேண்டாம் என்றேன். இந்த விடுதியிலும் தனியறை என்று எனக்காக ஒதுக்கினால் எல்லோருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கான உத்தரவு தனக்கு இடப்படவில்லை என்றும் ஏதொன்றும் கோமலிடம் பேசிக்கொள்ளலாம் என்றுமலிó சொன்னார். நான் கோமலைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதற்குள் மணி என்னிடம், ""நீ கோமல் கிட்டே ஏதாவது துடுக்காப் பேசிடுவேடா. இப்போ பேசவேணாம். வேறு ஏதாவது யோசிக்கலாம்'' என்றார். எனக்கு உடனடியாக கோவையில் என் நண்பர் ஒருவரின் ஞாபகம் வந்தது. மிகவும் செல்வாக்கான மனிதர். பெரிய பணக்காரர். அவரைத் தொடர்பு கொண்டு உடனே பேசினேன். அவர் தொலைபேசியில் விடுதியின் மேலாளரைத் தொலைபேசியில் கூப்பிட்டு நான் எத்தனை அறைகள் கேட்கிறேனோ அவற்றை உடனே ஒதுக்கித் தருமாறு சொல்ல. எங்கள் அனைவருக்கும் சுமார் ஆறு தனி அறைகள் ஒதுக்கப்பட்டன. இப்போது இதுவல்ல விஷயம். எனக்குத் தெரிகிறது. கோமலை விட்டு எங்கோ நழுவுகிறேன். ஆனால் இந்த சம்பவத்தை இங்கு சொல்ல நினைத்தது கோமலின் மேன்மையை நினைத்துக் கொள்ளத்தான். இதையும் சொன்னால்தான் கோமலின் தாராள மனம் புரியும். அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment