Friday, June 22, 2007

கொடுமுடி தந்த கோகிலம் - கே.பி.சுந்தராம்பாள்

ராகவன் தம்பி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை

அனைவருக்கும் வணக்கம்.

உலக அரங்கில் பொதுவாக ஒரு குற்றச்சாட்டு மிகவும் வலுவாக நிலவி வருகிறது. அது இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு மிகவும் குறைவு என்பது. அதிலும் தமிழர்களுக்கு எல்லோருக்கும் உரியதற்கு மேல் மிகப் பெரும் உண்டு. தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஞாபகசக்திக் குறைச்சலும் தனிக்குணமாக அமைந்தது. அதன் நேரடி நிரூபணம் தேர்தல் நேரங்களில் நிகழும் அதிரடியான உட்டாலங்கடி அணிமாற்றங்கள். தானைத்தலைவர் வேறு ஏதாவதாக ஆகிவிடுவார். அன்பு சகோதரி ராவணணின் சகோதரியாக மாறிவிடுவார். சுருக்கமாக நேற்றைய சரித்திரம் பற்றிய பிரக்ஞை இன்று நமக்கு இருப்பதில்லை.

விமரிசகர் வெங்கட்சாமிநாதன் சொல்வது போல, பிராபல்யத்தின் முன், அதிகாரத்தின் முன், வாழ்க்கை மதிப்புக்களை நாம் அறவே மறந்து விடுகிறோம். ஏதோ ஒரு திறமையின் மூலம் (அத்திறமை அத்துறை சார்ந்ததாக இல்லாமலேயே இருக்கலாம்) ஒரு துறையில் ஒருவர் பிராபல்யமும் பணபலமும் பெற்று விட்டால் அவர் அத்துறைக்கு “சேவை செய்தவராகக் கொண்டாடப் படுகிறார். அவர் சமூகத்துக்கு அத்துறைக்கு கொடுத்ததுதான் என்ன என்று நாம் யோசிப்பதில்லை. இன்றைய சினிமா மற்றும் அரசியல் துறைகளில் பெரும் சக்திகளாகக் காணப்படுபவர்கள் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். வெறும் பிராபல்யமும் ரசிகக் கூட்டமும் ஒருவருடைய கலை மேதைமையை நிர்ணயிப்பதில்லை என்கிற உண்மையை நாம் பல வருடங்களாக ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறோம்.

என்னுடைய நேரடிப் பார்வையில் நிகழ்ந்த ஒரு நகைச்சுவைக் காட்சியை இங்கு குறிப்பிட்டால் தவறாகாது என்று நினைக்கிறேன். திரைப்படங்களில் ஆபாசமான, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வரிகளைப் பாடி திரைப்படங்களில் பிராபல்யம் அடைந்த ஒரு பாடகியை ஒரு நிகழ்ச்சியில் அந்தப் பெண் தான் படித்த பள்ளிக்குப் பெருமை சேர்த்திருப்பதாக மேடையில் மிகவும் பெருமிதத்துடன் அறிவிப்பு செய்தார்கள் சில பள்ளி ஆசிரியைகள். இது மிகவும் வேதனை கலந்த நகைச்சுவையாக அன்று எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

எனவே தமிழ்ச் சமூகத்தில், பிராபல்யம் - அதைத் தொடர்ந்த பலத்தின் முன்னால் மேடையேற்றும் நகைச்சுவைக்காட்சிகள் மிகவும் அதிகம். இத்தனை கதையையும் ஏன் சொல்கிறேன் என்றால் தமிழின் அரசியல் மற்றும் திரையுலகின் பிரபலங்களில் பெரும்பாலோர் நாம் மதிக்கத் தேவையில்லாதவர்கள். அவர்கள் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள். இதற்கு நேர் எதிரான குணம் கொண்ட சிலர் நேற்றைய வரலாற்றில் இருந்தார்கள். அவர்களுடைய திறன் அவர்கள் கலையின் மீதும், மொழியின் மீதும், தேசத்தின் மீதும் கொண்டிருந்த அப்பழுக்கில்லாத பற்று அவர்கள் வாழ்ந்த துறைக்கு வளம் தந்தது. அவர்கள் பதித்த தடங்கள் என்றும் நம் நினைவில் நீங்காமல் நிற்க வேண்டியவை. இந்தத் தடங்கள் நம் வரும் தலைமுறைக்கு நாம் சேமித்து வைக்கும் ஒரு நிதியாகப் பாவிக்க வேண்டியவை.

நேற்றைய வரலாற்றில் செவ்வனே வாழ்ந்து தன்னுடைய தனிப்பட்ட திறனாலும், தேசப்பற்றினாலும் கலையின் மீது கொண்ட காதலினாலும் மிகவும் தனித்த தடங்களைப் பதித்தவர் கே.பி.சுந்தராம்பாள் அம்மையார். கொங்குநாடு தமிழுக்குப் பல தங்கங்களைத் தந்துள்ளது. சி.விஜயராகவாச்சாரியார், பி.சுப்பராயன், டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் (இவர் பெண் கல்வியை முதன்மைப் படுத்தியவர்), நாமக்கல் கவிஞர், பெரியார் ஈ.வெ.ரா, அய்யாமுத்து கவுண்டர், கொடுமுடி கே.பி.சுந்தராம்பாள் போன்ற பல தங்கங்களை நமக்குக் கொங்கு தந்துள்ளது. கரூருக்கு அருகில் உள்ள பாண்டி கொடுமுடியில் ஒரு சிறு குடிலில் அக்டோபர் 11, 1908 ல் பிறந்தவர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள். நாவுக்கரசராலும், ஞானசம்பந்தராலும் பாடல் பெற்ற ஸ்தலம் கொடுமுடி. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு ஒரு திருப்பதிகம் அருளியிருக்கிறார். இவருடைய தந்தையாரைப் பற்றிய குறிப்புக்கள் எங்கும் கிடைக்கவில்லை. மிகவும் ஏழைக்குடும்பம். ஐந்து வயது சுந்தராம்பாளை அழைத்துக் கொண்டு அவருடைய தாயர் பாலாம்பாள் கரூரில் குடியேறினார். குரலும், சங்கீத ஞானமும் சுந்தராம்பாளுக்கு இயற்கை அளித்த கொடை. முறையான பாடாந்திரங்கள் ஏதுமின்றி, கேள்வி ஞானத்திலேயே பாட்டுத்திறனை பாங்கு படுத்திக் கொண்டார். ஏற்கனவே சொன்னது போல மிக வறிய குடும்பம். உடல் நலம் குறைந்த தாயார். எட்டு வயதுச்சிறுமியான சுந்தராம்பாள், தன் தாயாருக்கும் பணிவிடைகள் செய்து, கரூரைக் கடந்து செல்லும் ரயில் வண்டிகளில் ஏறி தன் இனிய குரலால் பாடல்கள் பாடி பயணிகள் பாராட்டி அளிக்கும் தொகையினைக் கொண்டு அந்தக் குடும்பம் வாழ்ந்திருக்கிறது. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், பேசும்படம் பத்திரிகைக்கு எழுபதுகளில் அளித்த ஒரு பேட்டியில், ரயில் பயணத்துடன் என் இசைப்பயணம் தொடர்ந்திருக்கிறது. மிகக்கடுமையாக இரைச்சலிடும் ரயில் வண்டியில் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் பாடியதால் அந்த இரைச்சலுக்கு சவால் விட்டு என் குரல் வளர்ந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, எந்த குருவிடமும் சென்று பாட்டு கற்றுக்கொள்ளும் அளவு வசதியில்லாத நிலை. எனவே கொடுமுடியை சுற்றி நடக்கும் நாடகங்களும் அவற்றில் பாடி நடித்த நடிகைகளும், நடிகர்களும் அவருக்கு மானசீக குருவாக அமைந்திருக்கின்றனர்.

எந்தப் பாடலைக் கேட்டாலும் அது எந்த சுருதியில் அமைந்திருந்தாலும் ராகமும் சுருதியும் வழுவாது அப்படியே பாடிக் காட்டும் வல்லமை பெற்று இருந்திருக்கிறார் கேபிஎஸ் அவர்கள். அவருடைய இசைவாழ்க்கை துவங்கிய காலத்தில் பாட்டுத்தான் நாடகம். பாடடை வைத்துக் கொண்டு என் பெயர் கொடுத்தாலுலிó பாட்டு ஒன்றுதான் எஞ்சி நிற்கும். நாடக மேடையை இசை வல்லுநர்கள்தான் ஆக்கிரமித்து இருந்திருக்கின்றனர். எனவே நாடகப் பார்வையாளர்களுக்குப் பாட்டுத்தான் நாடகமே. பின்னாளில் திரைப்படங்களிலும் இது தொடர்ந்திருக்கிறது.

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், முசிரி சுப்பிரமணிய அய்யர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, என்.சி.வசந்தகோகிலம், எம்.கே.தியாகராஜபாகவதர், சின்னப்பா, ஹொன்னப்பா பாகவதர், கொத்தமங்கலம் சீனு போன்ற சிறந்த பாடகர்கள் திரைப்படங்களிலும் ஜொலித்தார்கள். 10 வயது சுந்தராம்பாள் ரயிலில் வழக்கம் போல பாடிச் சென்று கொண்டிருக்கிறார். அந்த ரயில் வண்டியில் அன்று சுந்தராம்பாளின் விதியும் சேர்ந்து பயணித்திருக்கிறது. அந்தக்கால நாடக நடிகரும், தயாரிப்பாளருமான நடேச அய்யர் அந்த வண்டியின் ஒரு பெட்டியில் பயணித்திருக்கிறார். மிகவும் அற்புதமாகப் பாடிச் செல்லும் ஒரு பெண். நிரவல்களை அநாயாசமாக அள்ளி வீசுகிறாள். கமகங்கள் அவள் காலடியில் சேவகம் செய்யக் காத்து உடன் பயணித்து வருகிறது. பாடிச் செல்லும் சுந்தராம்பாளைப் பின் தொடர்ந்து சென்று கேட்கிறார் அய்யர்,

"நான் உனக்கு வழி காட்டுகிறேன். என்னுடன் வருவாயா?''

எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சிறுபெண் தலையாட்டுகிறது. தமிழிசை வரலாற்றில் ஒரு புதிய தடம் அந்த ஓடும் புகை வண்டியில் பிறக்கிறது. தன்னுடைய தாயாருடன் மீண்டும் நடேச அய்யரை சந்திக்கிறாள் அப்பெண். நடேச அய்யர் அந்தப் பெண்ணையும் அவள் தாயார் பாலாம்பாளையும் கரூரில் மூத்த போலீஸ் அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி அய்யரிடம் அழைத்துப் போகிறார். கிருஷ்ணசாமி அய்யர் மிகவும் வித்தியாசமான ஒரு போலீஸ் அதிகாரி. கலைகளை நேசித்தவர். நாடகங்களை ஆதரித்தவர். இசையை சுவாசித்தவர். அவரும் அந்தப் பாடச் சொல்லிக் கேட்கிறார். அந்தப் பெண்ணிடம் ஒளிந்துள்ள திறமை அவரை வியப்படைய வைக்கிறது. உடனே கரூரில் முகாமிட்டிருந்த பி.எஸ்.வேலு நாயரின் நாடகக் குழுவில் கே.பி.சுந்தராம்பாளை சேர்த்துவிடுகிறார்.

இப்படியாக சுந்தராம்பாளின் நாடக மேடைப்பிரவேசம் 1917ல் வேலு நாயரின் குழுவினர் நடத்தி வந்த நல்லதங்காள் நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஏழாவது குழந்தையாக வேடமேற்றுத் தொடங்கியது. அதன் பிறகு அவருடைய கலைப்பயணம் பல சிகரங்களைத் தொட்டுச் சென்றது. இவருடைய பாடல்களைக் கேட்டு ஆண்டிப்பட்டி ஜமீந்தார் 9 பவுன் சங்கிலியைப் பரிசளித்தார். இவர் மேலும் இசையை மெருகேற்றிக்கொள்ள பொருளுதவியும் வழங்க இசைந்தார்.மிக அநாயசமான மேல் ஸ்தாயி சஞ்சாரம். பாசாங்குகள் இல்லாது வெளிப்படும் உணர்ச்சிகள். மிகத் தெளிவான உச்சரிப்பு. இசைத்தமிழை அழகுப் பதுமைகள் சிங்காரித்த சிங்காதனத்தில் ஏற்றி அழகு பார்த்தார் கே.பி.எஸ். கே.பி.எஸ்ஸின் இசை ஜாலம் நாடக மேடையைத் தன் வசம் வைத்து பல ரசிர்களை வசீகரித்து வந்தது. ஏற்கனவே ஓரிடத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதுபோல இசைக்கலைஞர்கள் நாடகமேடைகளை ஆண்ட நேரமது. கன்னையா கம்பெனியின் எஸ்.ஜி.கிட்டப்பா, எஸ்.ஜி.சுப்பையா பாகவதர், தேவுடு அய்யர், காதர் பாட்சா, ரத்னாபாய், அனந்தநாராயணன், செல்லப்பா, பாஸ்கரதாஸ், ராவ் பகதூர் ராமானுஜாச்சாரியார், டாக்டர் நடேசன், டாக்டர் ஸ்ரீனிவாசராகவன், சுந்தரராஜன், ஆச்சார்யா, கிருஷ்ணசாமி அய்யங்கார் போன்றோர் தமிழ் நாடக மேடையின் சக்ரவர்த்திகளாகவும் முடிசூடா மன்னர்களாகவும் பட்டத்து அரசிகளாகவும் உலா வந்த நேரம். சுந்தராம்பாளின் புகழ் பல மேடைகளில் பல நகரங்களில் கிராமங்களில் பரவியது. கடல் கடந்தும் அவருடைய நாடகங்கள் பேசப்பட்டன.

அதே நேரத்தில் நாடக மேடைகளின் முடிசூடா மன்னராக எஸ்.ஜி.கிட்டப்பா தன்னுடைய அற்புதமான குரல் வளமையினாலும் இனிமையினாலும் அனைவரையும் கிறங்கடித்துக் கொண்டிருந்தார். அவரும் காதர் பாட்சா என்னும் ஆர்மோனியக் கலைஞரும் சேர்ந்து வாசித்துப் பாடும் இனிமையைக் கேட்க பல கிராமங்களில் இருந்து வண்டிகளைக் கட்டிக்கொண்டு ரசிகர்கள் வருவார்களாம். எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு சுந்தராம்பாளின் குரல் வளமையைப் பற்றிய செய்தி செல்கிறது. அவரை சந்திக்க மிகவும் ஆவல் கொள்கிறார் கிட்டப்பா. அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள கொழும்புவில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் சுந்தராம்பாள். அவருடைய நடிப்பையும் பாடலையும் கேட்க கொழும்பு விரைகிறார் கிட்டப்பா. அந்த சந்திப்பு காதலாக மலர்கிறது. இரு காந்தர்வர்களும் மணவாழ்வில் இணைந்தனர்.

கிட்டப்பாþசுந்தராம்பாள் நாடகங்களுக்கு மவுசு இன்னும் அதிகமாகக் கூடியது. நல்லதங்காள், கண்டிராஜா, செüந்தரி போன்ற ஸ்பெஷல் நாடகங்கள் சக்கைப் போடு போட்டன. கே.பி.எஸ்.தாணு அம்மாள் குழுவிலும் இருவரும் இணைந்து ஸ்பெஷல் நாடகங்கள் மேடையேற்றினர். கிட்டப்பாþசுந்தராம்பாள் இருவரும் ராகமாலிகையில் வல்லவர்கள்.

ஸ்ரீ வள்ளி திருமணத்தில் அவர்களுடைய ராகமாலிகையில் அமைந்த தர்க்கப்பாடல்கள் மிகவும் பிரசித்தம். (கிட்டத்தட்ட உருது கவாலி போல இருக்கும். இப்போதைக்கு வழக்கத்தில் இல்லை) (கோடையிலே இளைப்பாறி...) 

சுந்தராம்பாளைப் பற்றிப் பேசும் இந்த மேடையில் கிட்டப்பாவைப் பற்றி சொல்லாமல் போவது மிகப்பெரிய பாவமாகும் என்று நினைக்கிறேன்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. அக்ரகாரத்தின் அதிசயம் என்று அண்ணாவால் புகழப்பட்ட வ.ரா. என்று அழைக்கப்படும் வ.ராமசாமியின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன். ""நூறு ரூபாய் கொடுத்து குழந்தைகளுக்கு சங்கீதம் பயிற்றுவித்தாலும் முழுசாக ஒரு கீர்த்தனையாவது உருப்படியாக அவர்களுக்குப் பாடவமாவதில்லை. ஆனால் பத்து மைல் நடந்து இரண்டணா டிக்கெட் வாங்கி தரையில் உட்கார்ந்து கிட்டப்பாவின் நாடகம் பார்த்த மாட்டுக்காரப் பையன்கள் அழகாகப் பாடத் துவங்கிய விந்தையைக் கண்டு நான் ஆனந்தப்பட்டிருக்கிறேன்.(கலையும் வாழ்க்கையும்)கிட்டப்பா தோன்றும் வரையில் பாமரர்களுக்கு சங்கீதம் தேவையில்லை என்பது போல வித்வான்கள் நடந்து வந்தார்கள். ஆனால் பாமரனுக்கும் ரசிகத் தன்மை உண்டு என்று நிரந்தர உண்மையை நிலைநாட்டிய பெருமை கிட்டப்பாவை சேரும்.இதுவும் வ.ரா.கிட்டப்பா பிறந்தது 1906. சொல்லப்போனால் இந்த ஆண்டு அவருக்கான நூற்றாண்டு. இதை தமிழ் அமைப்புக்கள் எத்தனை விமர்சையாககக் கொண்டாடி வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம் இல்லையா.


இப்போது என்னுடைய இந்த உரையின் துவக்கப் பத்திகளைப் பற்றி உங்கள் நினைவுகளை பின்னோக்கிக் கொண்டு வாருங்கள். கிட்டப்பா சுந்தராம்பாள் ஜோடி மிகவும் பிரசித்தம் கிட்டப்பா ஏற்கனவே மணம் முடித்தவர். ஆயினும் அவருக்கு உற்ற மனைவியாக சுந்தராம்பாள் அவருடைய மற்றொரு குடும்பத்தையும் உயிராக நேசித்தார். இடையறாத குடிப்பழக்கம் கிட்டப்பாவின் உடல்நிலையை பாதித்துக் கொண்டிருந்தது. சில நேரங்களில் சுந்தராம்பாள் மேல் காட்டிய ஆதிக்கபூர்வமான உறவு இருவருக்கும் இடையில் சில விரிசல்களை அடிக்கடி ஏற்படுத்தியது. சுந்தராம்பாள் அம்மையார் கிட்டப்பாவுடன் அடிக்கடி பிணக்கு ஏற்பட்டு கரூர் சென்று விடுவார். நாங்கள் கோவை செல்லும் வழியில் அம்மையாரை அவருடைய கரூர் வீட்டில் சந்தித்து வருவோம்.. எனக்கு அவர் ஒரு தாயின் பரிவுன்புடன் பல தனிப்பாடல்களை கற்றுத் தந்திருக்கிறார், என்று அவ்வை தி.க.சண்முகம் தன்னுடைய மேடை நாடக நினைவுகள் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.


கிட்டப்பா சுந்தராம்பாள் மணவாழ்வு சில வருடங்களே நீடித்தது. 1932ல் கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே இறந்தார். கிட்டப்பா இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் தன்னுடைய அன்புக்கணவர் கடனாளியாகப் போகக்கூடாது என்று உடனடியாக 18000 ரூபாய் எடுத்துச் சென்று அவருடைய வீட்டுக்கு ஓடியவர் கே.பி.எஸ். கிட்டப்பா மறைந்தபோது சுந்தராம்பாளுக்கு வயது 27. .அன்றிலிருந்து வெண்ணிற ஆடை உடுத்தி, வெண்ணீறு அணிந்து இளமையைத் துறந்து முதுமையைப் பூண்ட இன்னொரு காரைக்காலம்மையாரை இருபதாம் நூற்றாண்டு கண்டது. கிட்டப்பா ஒரு பிராமணர். அவரை சுட்டெரித்தார்கள். அவருக்கென நினைவாலயம் இல்லை. ஆனால் தன்னையும் தன்னுடைய வெண்கலக் குரலையும் கிட்டப்பாவுக்கு எழுப்பப்பட்ட நடமாடும் நினைவாலயமாக மாற்றிக்கொண்டார் சுந்தராம்பாள். அந்த நினைவாலயத்தின் ஆலய மணியாகத் தன் குரலை மாற்றினார். இறைப்பணி மற்றும் தேசப்பணிக்கு மட்டுமே அக்குரலை அர்ப்பணம் செய்தார். வெண்கலக்குரலின் மகிமையில் நாடகம் மற்றும் திரையிசை பக்தி இசையாக மலர்ந்தது. கிட்டப்பாவின் மறைவுக்குப் பின் எந்த நாடகத்திலும் பங்கேற்காமல் ஒரு துறவு நிலையைப் பூண்டார் சுந்தராம்பாள். ஆனால் அவருக்குள் ஒரு தேசிய உணர்ச்சி எப்போதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தியும் எஸ்.சத்தியமூர்த்தியும் அவருக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கினார்கள்.


அந்நாளில் தமிழ்நாடகங்கள் தேசிய உணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் களங்களாக விளங்கின. கலைஞர்கள் அன்று சமூகத்தினரால் மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். நகரின் முக்கியப்பகுதிகளில் அவர்களுக்கு வீடு கிடைக்காது. திருமணம் செய்து கொள்ள பெண்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் அரசியல் ஈடுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தை வழங்கியது. எனவே கலை மேடைகள் எல்லாம் அரசியல் மேடைகளாக வேஷம் கட்டிக்கொள்ளத் துவங்கின. சத்தியமூர்ததி போன்ற தலைவர்கள் கலைஞர்களை அரசியல் வழியில் நெறிப்படுத்தி வந்தனர். சதாவதானி கிருஷ்ணசாமிப் பாவலர், விசுவநாததாஸ், மதுரை பாஸ்கரதாஸ், எம்.ஆர்.கமலவேணி, கே.பி.ஜானகி அம்மாள், எம்.எஸ்.விஜயாள், எம்.என்.ராசம்மா, எம்.சாரதாம்பாள் போன்ற கலைஞர்கள் நேரிடையாக சுதந்திரப் பிரச்சாரத்துக்கு மேடைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். 1931ல் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் காளிதாஸ். இது புராணப்படமாக இருந்தாலும் பல இடங்களில் காந்தியக் கொள்கை மற்றும் ராட்டை பற்றி தெளிவாக பேசியது. சுந்தராம்பாள் நடித்த மணிமேகலை நாடகத்தில், கதைப்படி ஒரு கட்டத்தில் சோழ மன்னனைக் கைது செய்யப்படும் மணிமேகலை சிறையில் அடைக்கப்படுகிறான். தேசபக்தர்கள் சிறை வைக்கப்பட்ட நேரம். சுந்தராம்பாள் பாடினார்


சிறைச்சாலை இதென்ன செய்யும்
சரீராபிமானம் இலா
ஞான தீரரை
சிறைச்சாலை என்ன செய்யும்?


இந்தச் சூழலில், சத்தியமூர்த்தியின் வற்புறுத்தலின் பேரில் சுதந்திரப் போரில் கலந்து கொண்டார் கே.பி.எஸ். தமிழ் நாடகங்கள் அவருடைய சுதந்திரப் போர்க்களங்களாக மாறின. 1937ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தன் பிரச்சாரத்தைத் துவக்கினார் கே.பி.எஸ்.
1934ல் திருநெல்வேலியில் நடந்த டிஸ்ட்ரிக்ட் போர்டு தேர்தலில் கோதைநாயகியம்மாள் என்னும் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் மிக நீண்ட உரையாற்றியது பல இடங்கில் பதிவாகியுள்ளது. அந்தத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி மாபெரும் தோல்வியத் தழுவியது. கிட்டப்பா மறைவுக்குப் பின் வேறு எந்த ஆண் நடிகருடன் நடிப்பதில்லை என்னும் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருந்த சுந்தராம்பாளை சத்தியமூர்த்தி மனது மாற வைத்தார். ஜெமினி நிறுவனத்துக்காக 1935ல் நந்தனார் திரைப்படம் எம்.எல்.டான்டன் இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்தது. தன்னைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று தன்னுடைய சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தினார் அவர். அந்தக் காலத்தில் யாராலும் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாத சம்பளம் அது. அதையும் தர வைத்து சுந்தராம்பாளை நடிக்க சம்மதிக்க வைத்தார். இதுபற்றி ஓரிடத்தில் சுந்தராம்பாள், ""நந்தனார் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஆண் நடிகர் தேவைப்படாததாலும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சிபாரிசு செய்ததாலும் தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படும் என்பதாலும் நந்தனார் படத்தில் நடிக்க சம்மதித்தேன்'' என்று கூறியிருக்கிறார். 1935ல் வெளியான அந்தப்படத்தில் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் வேதியராக நடித்தார். 

அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பல கிராமபோன் ரிகார்டுகளை வழங்கினார் கே.பி.எஸ். கட்சிக்கும் எக்கச்சக்கமான தொகையை நிதியாக வழங்கினார். ஒரு முறை சத்தியமூர்த்தி அவர்கள் காந்தியுடன் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். கரூர் அருகில் அவர்கள் பயணித்த கார் பழுதடைந்தது. மகாத்மாவை அழைத்துக் கொண்டு சுந்தராம்பாள் வீட்டுக்கு வருகிறார் சத்தியமூர்த்தி. அம்மையார் காந்தியாருக்கு தங்கத்தட்டில் உணவு பறிமானார். காந்தியார் விளையாட்டாக வெறும் சாப்பாடு மட்டும்தானா? கட்சிக்கு ஒன்றும் நிதி கிடையாதா? என்று சிரித்துக்கொண்டே கேட்க, அந்த தங்கத்தட்டை உடனடியாக ஏலம் விட்டு கிடைத்த பணத்தை காந்தியார் வசம் நிதியாக ஒப்படைத்தார் அம்மையார். ஓரிடத்தில் மகாத்மா இவரை அன்புள்ள சகோதரி என்று விளித்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்தப் பெருமை கிடைக்கப்பெற்ற தமிழகத்தின் ஒரே பெண்மணி சுந்தராம்பாள் அம்மையார்தான்.கலைஞரை மகனே என்று அழைத்தது. பிறகு தொடர்ச்சியாக ஊர் ஊராக காங்கிரஸ் மற்றும் கதர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அம்மையார். கதராடையைத் தனக்கு நிரந்தரமாக்கிக்கொண்டார். தானே நூற்று நெய்த துணியை விற்பனை செய்தார். ஊர் ஊராக தேசபக்திப் பாடல்களை முழங்கினார். 1951ல் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அம்மையார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராவது அதுவே முதல் முறையாகும். இந்தியாவிலேயே எந்தக் கலைஞருக்கும் கிட்டாத ஒரு முதல் பெருமை அம்மையாருக்குக் கிட்டியது.


1940ல் மணிமேகலை. 1953ல் ஜெமினியின் அவ்வையார் படத்தில் நடித்தார். சுமார் ஏழு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த படம் அது. அதில் இருபது பாடல்களைப் பாடி நடித்தார். பிறகு பூம்புகார்.  பிறகு அவர் நடித்த திருவிளையாடல், கந்தன் கருணை, மகாகவி காளிதாஸ், உயிர்மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் போன்ற படங்கள். இப்படங்களில் அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே முத்துக்கள்தான். ஆனால் குறிப்பிட்ட ஒரு பாடலை இங்கு சொல்லியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். திருவிளையாடல் (1965) படத்தில் அவர் பாடிய பழம் நீ அப்பா என்ற பாடலை ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவு மேதை ரங்கசாமி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் þ அம்மையார் மேல் ஸ்தாயியில் பாடும்போது அதை சரியான வகையில் அதிர்வுகள் இல்லாமல் ஒலிப்பதிவு செய்ய நம்மால் இயலாது. அதற்கான கருவிகள் இன்னும் வரவில்லை. ஆனால் ஏதோ செய்கிறோம்'' என்று சொல்லியிருப்பது அம்மையாரின் குரல் வளத்துக்கு தொழில் நுணுக்கக் கலைஞர்கள் தந்த கட்டியம். தனித்த வாழ்க்கையிலும் நிறை வாழ்வு வாழ்ந்தவர் அம்மையார். எத்தனையோ லட்சங்கள் ஈட்டினாலும் தன் வீட்டில் தானே சமைத்துப்போட்டு உறவினர்கள் குழந்தைகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்து அவ்ர்களை வளர்த்தெடுத்து இறை பக்தியில் எஞ்சிய நாட்களைக் கழித்தார்.

1964ல் தமிழிசை சங்கம் அவருக்கு தமிழ் இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கி கெüரவித்தது. அதைத் தொடர்ந்து 1969ல் ஒரே நேரத்தில் சிறந்த பாடகருக்கான மாநில விருது மற்றும் மைய அரசின் விருது அவருக்குக் கிடைத்தது. இதுவும் முதன் முறையாக நடந்தது. 1970ல் மைய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது.

இறுதி நாட்களில் வெறும் திருநீற்றை மட்டும் அவர் உண்டு வாழ்ந்ததாக சில இடங்களில் குறிப்புக்கள் இருக்கின்றன. இது எந்த அளவில் உண்மை என்று தெரியவில்லை. 1980ல் அம்மையார் காலமானார். இசையையும் தமிழையும் இறையுணர்வையும் தேசியத்தையும் தன் மூச்சாகக் கொண்ட அந்தக் கோகிலம் தன் இசையால் காற்றுடன் கலந்தது. தமிழ் நாடக மேடைகளில் இணைந்து ரீங்கரித்த கந்தர்வனைத் தேடிப்பறந்து சென்றது. மொழியும் அந்நியம், இசை அமைப்பும் வேறானது என்பதையெல்லாம் கடந்து லதா மங்கேஷ்கர் போன்ற வேற்று மொழி இசைக்கலைஞர்களையும் தன் இசையால் கவர்ந்தவர் சுந்தராம்பாள்.

தன் தனிப்பட்ட திறமையால், தன்னுடைய ஆளுமையை தன்னுடைய துறை மீது, சமூகத்தின் மீது, வாழ்ந்த காலத்தின் மீது பதித்தவர் அவர். வெறும் பாடகி மட்டும் அல்ல அவர். சமூகத்தோடு மக்களோடு தன்னைக் கரைத்துக் கொண்டு காலத்தின் குணத்தை மாற்றியவர் அந்தக் கோகிலம்.

நன்றி.
வணக்கம்.

1 comment:

 1. வணக்கம், கே.பி.சுந்தராம்பாள் பற்றிய ஒரு ஆக்கத்திற்கான குறிப்புக்களை தேடியபோது, உங்கள் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. குறிப்புக்கள் தேடுவதை விட்டுவிட்டு இதையே 'களவாடி விடலாமோ' என்று பட்டது.

  முழுமையாய் இல்லாவிட்டாலும் அங்குமிங்கும் சில தகவல்களை எடுத்திருக்கிறேன்.

  ஒரு லட்சம் ஊதியம் அவருக்கு வழங்க்கப்பட்டது, நந்தனாருக்கா அல்லது ஔவையார் திரைப் படத்துக்கா என்பதில் குழப்பமாக இருக்கிறது.

  இசைஞான பேரொளி பத்மசிறீ சுந்தராம்பாளில் ஔவையார் என்று கூறப்பட்டுள்ளது.

  நல்லதொரு பதிவு இது நன்றிகள்

  ReplyDelete