Thursday, June 14, 2007

சனிமூலை


ராகவன் தம்பி

இந்த உலகத்தில் எனக்குத் தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கலாம் என்று குத்து மதிப்பாக, ஏன் ஸ்பஷ்டமாகவே ஒரு கணக்கு எடுத்துப் பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் உதித்தது. சரி. முழுக்கவும் அறைகுறையாகவும் தெரியாத விஷயங்கள் என்று கணக்கு எடுத்துப் பார்க்க ஒரு வெள்ளைத் தாளை எடுத்துப் பட்டியலாக எழுதுகிறேன் என்று வைத்துக் கொண்டால் குறைந்தது பத்து முனிஸிபாலிடி குப்பை லாரிகள் கொள்ளுமளவுக்கு வெள்ளைத் தாள்கள் எனக்குத் தேவைப்படலாம். அல்லது எனக்குத் தெரியாத விஷயங்களை நேர்மையுடன் வரிசைப் படுத்தி ஒரு பட்டியலாக எழுதிப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு காகிதச் சுருளை எடுத்துக் கொண்டால் புது தில்லியின் பஸந்த் சாலையில் தொடங்கி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை வரை அந்தக் காகிதச் சுருள் நீளலாம்.

அதே நேரத்தில் எனக்குத் தெரிந்த விஷயங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பட்டியல் இடுவதற்கு வடக்கு வாசலின் ஒரு பக்கத்தை எட்டாகக் கிழித்து வரும் காகித அளவு போதுமானதாக இருக்கலாம். அதுவும் முழுக்கத் தெரிந்த விஷயம் ஏதாவது இருக்கிறதா என்று பட்டியல் இடுவதற்கு ஒரு அழகான நடுத்தர வயதுப் பெண்மணியின் உள்ளங்கையில் ஒரு பால் பாயிண்ட் பேனாவை வைத்து எழுதும் அளவுக்குத் தான் விஷயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அப்படி எனக்குத் தெரியாத விஷயங்களின் பட்டியலில் முதல் இடம் எதற்குக் கொடுக்கலாம் என்று கேட்டால், கிரிக்கெட் விளையாட்டு பற்றிய என்னுடைய ஞானம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. மிகச் சிறிய வயதிலிருந்தே எந்த விளையாட்டும் எனக்கு சுவாரசியம் தந்தது இல்லை. பள்ளிப் பருவத்திலும் வாரத்துக்கு இருநாட்கள் மாலையில் கிடைத்த கட்டாய விளையாட்டுப் பாடங்கள் மிகப் பெரிய நரக வேதனையாக இருக்கும். அந்த நேரத்தில் மரத்தடியில் ஒளிந்து நின்று கொண்டு அமல்ராஜ் வாத்தியார் கண்ணில் பட்ட நேரத்தில் கன்னம் சிவக்க அறைகள் வாங்கியதுண்டு. மிகவும் சுவாரசியமாக சரித்திரம் மற்றும் ஆங்கிலப் பாடங்கள் எடுத்த எங்கள் பெருமாள் ராசு வாத்தியாரிடம் நாடகங்கள் பற்றியும் கவிதைகள் பற்றியும் தெரிந்து கொள்ள மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறேன். பெருமாள் ராசு சார் சிறந்த விளையாட்டு வீரரும் கூட. அவருக்குத் தெரியாத விஷயங்கள் மிகவும் குறைவாக இருக்கும். என்னுள் இருக்கும் இசை, கலை, நாடகம் போன்ற விஷயங்களிலான ஆர்வமும் ஊக்கமும் எங்கள் பெருமாள் ராசு மற்றும் ஜெகன்மோகன் வாத்தியார் போன்ற ஆசான்கள் எனக்கிட்ட பிச்சை. எனக்குக் கிட்டும் எல்லாப்புகழையும் இவர்களின் காலடியில் என்றும் சமர்ப்பித்து வருகிறேன். ஊரில் சந்திக்கும்போது காலில் விழுந்து வணங்கும்போது விழிநீர்த் திரையில் பளபளக்கும் கண்களுடன் என் தலைமீது கைவைத்து ஆசிகள் அளிப்பார் பெருமாள் ராசு வாத்தியார். இவர்களைப் பற்றி என்றாவது தனியாக நிறைய எழுத வேண்டும்.
பெருமாள் ராசு வாத்தியார் அப்போது எல்லா மாணவர்களுக்கும் தன் வீட்டில் சிலம்பம் கற்றுத் தருவார். தீ வளையத்தில் தாண்டும் வித்தையை சொல்லித் தருவார். சுற்றி நிறைய பேரை நிற்க வைத்து சிலம்பம் சுழற்றச் சொல்லி ஒவ்வொரு தாக்குதலையும் மிகவும் லாவகமாக சமாளிக்க சொல்லிக் கொடுப்பார். வேர்க்க விறுவிறுக்க பேட்மின்டன் விளையாட சொல்லித் தருவார். வாலிபால் விளையாட வைப்பார். இப்படி விளையாட்டுப் பக்கம் என்னை யாராவது இழுக்க நினைக்கும்போது பிள்ளை பிடிப்பவனைப் பார்த்து ஓடுவதைப் போல ஓடுவேன். நிஜமாகச் சொல்வதானால் விளையாட்டுக்குக் கூட மைதானத்தின் பக்கம் ஒதுங்காதவன் நான்.
சரி. கிரிக்கெட்டுக்கு வருவோம். மேலே கூறிய விஷயங்களின் அடிப்படையில் கிரிக்கெட் பற்றி எவ்வித ஆர்வமும் வளர்த்துக் கொள்ளாமல் வளர்ந்து விட்டேன். எல்லோரும் மணிக்கணக்கில் மூக்கு விடைக்க கிரிக்கெட் பற்றிப் பேசும்போது ஒன்றுமே நடக்காதது போல முகத்தை வைத்துக் கொண்டு காபி குடித்துக் கொண்டிருப்பேன். அல்லது தெருப்பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். சில சமயம் என்னுடைய பராக்கிரமம் தெரியாமல் அவர்களில் யாராவது என்னிடமே என்னுடைய மேன்மையான கருத்தினைக் கேட்பார்கள். அவர்களுக்குக் கேட்கும் பொறுமை இருந்தால் எனக்குக் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற உண்மையை சொல்லுவேன். அவர்களில் சிலர் நான் அவர்கள் பேசுவதை மறுக்கிறேன் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு மேலும் என்னை வதை செய்வார்கள். அதனால் பொதுவாக எங்காவது அதிகம் பரிச்சயம் இல்லாத நண்பர்கள் இடையில் அமர்ந்திருக்கும்போது கிரிக்கெட் பற்றிப் பேச்சு துவங்கினால் அந்த இடத்தில் ஏதோ கலவரம் துவங்கப் போவதைப் போல அவசரமாக இடத்தைக் காலி செய்து ஓடி விடுவேன். கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தெரிந்த ஒன்றிரண்டு பெயர்கள் - கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டென்டுல்கர் போன்று அடிக்கடி விளம்பரங்களில் முகம் காட்டும் கிரிக்கெட்காரர்கள் முகம் மட்டுமே எனக்குத் தெரியும். அதுவும் சச்சின், கவாஸ்கர் போன்றவர்களை என்றாவது நேரில் பார்க்கும்போது அவர்கள் மீசை வைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது எம்.ஜி.ஆர் வில்லன்கள் வீடுகளில் நுழையும்போது கன்னத்தின் மீது சிறிய மச்சம் வைத்திருப்பாரே - அதுபோல ஒரு மச்சம் வைத்துக் கொண்டிருந்தாலும் எனக்கு அடையாளம் தெரியாது.
ஒருமுறை சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் என்று பேசிக்கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கும் போதே அவர் பெயரை மறந்து விட்டேன். ஒருநாள் டிவியில் அவர் முகம் பார்த்தபோது அவர் பெயரை அடியில் போட்ட போது தெரிந்து கொண்டேன். அது பற்றி கிரிக்கெட் அபிமானியான ஒரு நண்பனிடம் இதைச் சொன்னபோது õõஉன்னை எந்த செருப்பால் அடித்தாலும் தீராதுöö என்று தீராத கோபத்துடன் சொன்னான். என்னை செருப்பால் அடிக்க எத்தனையோ காரணங்கள் அவனுக்கு அடிக்கடி கிடைத்துக் கொண்டிருந்தாலும் இது ஏதோ மிகவும் சிறந்த காரணமான ஒன்றாக அன்று எடுத்துக் கொண்டான் என்று நினைக்கிறேன்.
அதே போல இன்னொரு சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். தில்லிக்கு வருவதற்கு முன் கிருஷ்ணகிரியில் நாங்கள் குடியிருந்த பழையபேட்டை நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் ஒரு மாமா குடியிருந்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவருடைய முகபாவனையை எப்போதும் கோபத்தில் இருப்பதைப் போலவே பராமரித்து வைத்துக் கொண்டிருப்பார். அவ்வளவு சுலபத்தில் யாரும் அவரிடம் நெருங்க முடியாது. எந்தப் பிறவியின் பயனோ தெரியாது என்னைப் பார்த்தால் அவர் முகம் மலரும். எதையாவது பேசுவார். ஏதாவது சினிமா பற்றிக் கேட்பார். அப்போது மெல்லிசைக்குழுக்களில் தாளக்கருவிகள் வாசித்துக் கொண்டிருந்தேன். õõஎங்கும் கச்சேரிக்குப் போகவில்லையாöö என்று கேட்பார். õõநீ ஒரு நாளைக்குப் பெரிய ஆளா வருவே பார்öö என்பார்.
ஏதோ ஒரு நாளின் காலை நேரம் எனக்கு மிகவும் பொல்லாததாக அமைந்திருந்தது. எதிரில் வந்தவர் என் சைக்கிளை நிறுத்தச் சொல்லி, õõஇன்னிக்கு பதினொறு மணிக்கு இந்தியா - இங்கிலாந்து மேட்சு. லீவ் போட்டு வீட்டில் ரேடியோவில் கேட்கப்போறேன். நீ வரியாöö? என்றார். நான் மிகவும் உற்சாகமாக, õõஇன்னிக்கு யார் சார் ஓப்பனிங்?öö என்றேன்.அவருடைய உற்சாகமெல்லாம் ஒரு நொடியில் வடிந்து முகம் மிகவும் சோகமாகவும் சலிப்பாகவும் மாறிவிட்டது. "உன் கிட்டே போய் சொன்னேன் பாரு" என்று ஆழ்ந்த வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே வீடு வரை போனார்.
அன்று மாலை என்னுடைய உற்றார், உறவினர், நண்பர்கள், பகைவர்கள், நான் ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த பெண்கள், அவர்களுடைய பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகள் என்று எல்லோரிடமும் என்னுடைய ஞானத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். "கக்கூஸ் கழுவக்கூட லாயக்கில்லாத கம்மனாட்டி இவன்" என்று எல்லாரிடமும் திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு என்னுடன் பேசுவதை அதிகமாகக் குறைத்துக் கொண்டார்.
இந்தக் கிரிக்கெட் விளையாட்டினால் என்னுடைய தேசபக்தியே கேள்விக்குறியான நேரங்களும் உண்டு. நான் பணி புரிந்த அமைச்சரகத்தில் என்னைத் தவிர அநேகமாக எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது தீவிரமான ஆர்வம் இருந்தது. அதுவும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் நாட்களில் அநேகமாக யாரும் அலுவலகத்துக்கு வரமாட்டார்கள். மாலை நேரங்களில் விளையாட்டு இருந்தால் மதியம் கிளம்பி விடுவார்கள். அந்தப் பெரிய கட்டிடத்தில் தனியாக இருக்க மிகவும் பயமாக இருக்கும். மறுநாள் காலையில் என்னைக் கேட்பார்கள் விளையாட்டைப் பார்க்க வில்லையா என்று. õõஇல்லைöö என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். நான் ஏதோ பாகிஸ்தானில் இருந்து வந்தவனைப் போல, õõதில்லிக்கு வந்து இந்திய அரசாங்கத்தில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் இவனுக்கு தேசத்தின் மீது பற்று கிடையாதுöö என்பான் ஒருவன். இன்னொரு பஞ்சாபி, "தெற்கில் மதராஸிகள் அதிகமாக ராவணனைப் பூஜை செய்கிறவர்கள். அதனால் அவர்களுக்கு இந்தியா ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணமோ பிரார்த்தனையோ கிடையாது" என்று தன் ஆராய்ச்சியின் முடிவினை அவிழ்த்து விடுவான்.
அதனால் கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் நானும் மாட்ச் பார்க்கப் போவதாக சொல்லிக் கொண்டு ரீகல் திரையரங்கில் சினிமா பார்க்கப் போய்விடுவேன்.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு சம்பவம் - 1983 என்று நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கான போட்டி நடக்கிறது. கோல்மார்க்கெட்டில் நண்பனின் வீட்டில் கலர் டிவி இருந்தது. திருமணமாகாத நண்பர்கள் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர். எல்லோரும் கிரிக்கெட் ஆர்வலர்கள். என்னுடைய அறைத்தோழன் சுந்தர், "தனியே என்ன பண்ணப் போறே. சும்மா வந்து சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக்கோடா. போட்டி விடிய விடிய நடக்கும். நாம அங்கேயே தூங்கி விட்டுக் காலையில் போகலாம்" என்றான். அங்கேயே சாப்பிட்டோம்.
இரவு போட்டி துவங்கியது. வெஸ்ட் இன்டீசும் இந்தியாவும் ஆடுகின்றனர். நண்பர்கள் எல்லோரும் நகத்தைக் கடித்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். நான் ஒவ்வொருத்தராக ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். என்னிடம் பேச யாரும் தயாராக இல்லை. "மாமா, மூடிக்கிட்டு மாட்ச் பாரு. எங்களைத் தொந்தரவு செய்யாதே" என்றார்கள். சரி. எதற்கு வம்பு என் பேச்சைக் கேட்க யாருமே தயாராக இல்லையே என்று டிவிக்கு முன்னால் தரையில் ஒரு பாயை விரித்து ஒரு போர்வையை எடுத்து முகம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். எல்லோரும் ஆட்டத்தின் இறுதி நேரக் கணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அறையெங்கும் திவிரமான இறுக்கம். போட்டியைப் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களில் திடீரென ஒருவனுக்கு அந்த அறையில் அனைவருக்கும் நடுவில் தூங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து வெறி கிளம்பி விட்டது. "உலகமே ஒத்தைக் கால் விரல்லே நின்னு இப்போ என்ன ஆகப்போகுதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கு. இந்தப் பரதேசி நாயி ஒரு கவலையும் இல்லாம தூங்கறான் பாரு" என்று என்னுடைய இடுப்பில் ஓங்கி மிதித்தான்.பதறி அடித்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் எழுந்து உட்கார்ந்தேன். அறை முழுதும் ஒருவனை ஒருவன் மாறி மாறிக் கட்டிப் பிடித்துக் கை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வெளியில் பலமாக பட்டாசு வெடிக்கும் ஆரவாரம். ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்த என்னிடமும் ஒருவன் வந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்னைக் கட்டிப் பிடித்து "நாம ஜெயிச்சிட்டோம்டா மாமா" என்றான்.
மீண்டும் எதையாவது சொல்லி அடுத்தவன் வேறு யாரிடமாவது உதை வாங்கும் தைரியம் இல்லை எனக்கு. "அப்படியா? வாழ்த்துக்கள்" என்று சொல்லி விட்டு மீண்டும் போர்வையைத் தலையோடு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன்.
இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கான போட்டியில் இந்தத் தொந்தரவே கிடையாது. என்னிடம் யாரும் அதிகம் கிரிக்கெட் பற்றிப் பேசமாட்டார்கள். ஏன்? விஷயம் தெரிந்த பலரும் கூட இந்த முறை தங்களுக்குள் ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment