Tuesday, June 19, 2007

தமிழிசை வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள் - தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

அனைவருக்கும் வணக்கம்.

இந்தத் தொடரின் ஐந்தாவது கூட்டத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

தமிழிசை குறித்து ஆய்வு செய்யும் யாரும் தாண்டிச் செல்ல முடியாத ஒரு பெயர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். உண்மையான தமிழிசை இயக்கம் ஆபிரகாம் பண்டிதரில் இருந்துதான் தொடங்குகிறது என்று சொல்லலாம். ஆனால் தங்கள் வசதிக்காக யாரும் சொன்னதில்லை. சொல்வதில்லை. பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆய்வின் வழியாக தமிழிசையே இன்று தமிழகத்திலும் இந்நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கிவரும் பல இசை வடிவங்களுக்கு முன்னோடி என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். தன் வாழ்க்கையையும் தன் வாழ்நாளில் ஈட்டிய அனைத்துச் செல்வத்தையும் தமிழிசை ஆய்வுக்கு அர்ப்பணித்துத் தடம் பதித்த முன்னோடி ஆபிரகாம் பண்டிதர்.


நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள சாம்பூர் வடகரை சம்புவனோடை என்னும் சிற்றூரில் 2-8-1859ல் பிறந்தவர் ஆபிரகாம் பண்டிதர். இவருடைய பெற்றோர்கள் முத்துசாமி நாடார் - அன்னம்மாள். குணபாண்டியன் வம்சத்தை சேர்ந்தவர்


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுரண்டையில் பள்ளிக்கல்வியை முடித்த பண்டிதர் அப்பள்ளியிலேயே ஆசிரியப்பணியும் புரிந்தார்.
அவருடைய தாய் மற்றும் தந்தைவழி பாட்டனார்கள் மிகச்சிறந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களாக விளங்கினார்கள். இசையிலும் ஆர்வம் கொண்டு விளங்கினார்கள். அந்த வழியில் ஆபிரகாம் பண்டிதருக்கும் சித்த மருத்துவத்தில் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. தன்னுடைய பதினேழாவது வயதில் 1877ல் வைகைக் கரையில் அமைந்துள்ள சுருளி மலைப்பகுதிக்கு சென்று சித்த மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார்
அச்சமயம் கருணானந்த ரிஷி என்னும் மகரிஷியின் தொடர்பு கிட்டியது. அது அவரை சித்த மருத்துவ முறைகளில் ஆய்வுகளை மேலும் தீவிரப்படுத்தத் தூண்டியது. கருணானந்த ரிஷி, பண்டிதருக்கு பல சித்த மருந்துகள் பற்றிய குறிப்புக்களையும் செய்முறைகளையும் கற்றுக்கொடுத்து இன்று வரை மிகவும் புகழ் பெற்று விளங்கும் கருணானந்த மருந்துகளை உலகுக்கு வழங்கினார் என்று சொல்வார்கள்.


1882ல் ஞானவடிவு பொன்னம்மாள் என்னும் பெண்மணியை மணந்தார். திருமணத்துக்குப்பின் இருவரும் தஞ்சையின் லேடி நேப்பியர் பெண்கள் பள்ளியில் பண்டிதர் தமிழாசியராகவும் அவருடைய துணைவியார் தலைமை ஆசிரியையாகவும் பணிபுரிந்தார்கள். ஆசிரியப்பணி மட்டுமல்லாது தஞ்சைவாசிகளுக்கு பண்டிதர் தயாரித்த கருணானந்த மருத்துவமுறையின் மூலம் அற்புத சிகிச்சைகள் அளித்து அவர்களுக்கு மிகவும் உறுதுணையாகவும் விளங்கினார். 1911ல் ஞானவடிவு பொன்னம்மாள் இயற்கை எய்தினார். பின்னர் பாக்கியம்மாள் என்னும் பெண்மணியை பண்டிதர் மணந்தார்.


பண்டிதரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் இராமலிங்க அடிகளார், மாயூரம் தேசிக விநாயகம் பிள்ளை, வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள், மகாகவி பாரதியார், உ.வே.சாமிநாத அய்யர் போன்றவர்கள்.


இந்திய சித்த மருத்துவத்தில் பண்டிதருக்கு இருந்த ஆர்வம் மெல்ல மெல்ல அவரை மருத்துவமுறைகள் சொல்லப்பட்டிருக்கும் இலக்கியங்களின் பால் ஈர்த்தது. 1890ல் அவர் தன்னுடைய ஆசிரியத்தொழிலில் இருந்து விலகி முழுநேர மருத்துவ ஆய்வாளராக முடிவு செய்தார். இந்த சித்த மருத்துவ ஆய்வுகளையும் மக்களுக்கு அவர் அளித்து வந்த சிகிச்சைகளையும் அவர் மனிதநேய அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டார். பண்டிதரின் கருணானந்த மருந்துகளின் புகழ் முழு தென்னிந்தியா மட்டுமல்லாது இலங்கை, பர்மா போன்ற இடங்களிலும் பரவியது. பண்டிதரின் கடும் ஆய்வின் பயன்கள் இப்பகுதி மக்களுக்கு மிகுதியாகக் கிடைத்தன என்று சொல்லலாம். சஞ்சீவி குளிகை, கோரோசனை குளிகை மற்றும் ஆகர்ண சஞ்சீவி குளிகை போன்றவை மிகவும் பிரசித்தமான மருந்துகள். இதில் பெரும் பொருளீட்டினார் பண்டிதர்.


மூலிகைத் தாவரங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பண்டிதர் கருணானந்தபுரம் என்னுமிடத்தில் ஒரு சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் ஒரு மூலிகைப் பண்ணையை நிறுவி தன்னுடைய மூலிகை ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினார். தன்னுடைய பண்ணையில் நவீன வேளாண்மை ஆய்வுகளையும் மேற்கொண்டு மிகப்பெரிய ஒரு ரோஜாத் தோட்டத்தை உருவாக்கினார். இக்காலகட்டத்தில் புதுவகை பயிர்வகைகளை வேளாண்மை செய்வதிலும் அக்காலத்திலேயே காற்றாடிகள் நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் பண்டிதருக்கு பெருத்த ஆர்வம் இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து சோளத்தையும், இமயப்பகுதிகளிலிருந்து கோதுமையையும் தன் பண்ணையில் விளைவித்தார். இவருடைய பண்ணையில் ஆய்வுகள் வழி உருவாக்கிய கரும்பு மிகவும் பிரசித்தி பெற்றது. சித்த வைத்தியம், நவீன வேளாண்மை இவைகளுடன் அக்காலத்திலேயே மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றையும் நிறுவினார்.


பண்டிதரின் விவசாய ஆராய்ச்சிகளுக்காக, அன்றைய பிரிட்டிஷ் அரசு அவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கி கௌரவித்தது. மாண்டேகு பிரபு போன்றவர்கள் பண்டிதரை நேரில் சந்தித்து அவருடைய வேளாண்மை ஆய்வுகள் குறித்து தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.


பண்டிதரின் உள்ளொளி தமிழிசையின் மேல் படர்ந்தது பற்றிய முக்கியமான கட்டத்துக்கு வருவோம்.


தன் இளம் வயதிலேயே இசை மீது அமைந்த இயற்கையான ஆர்வத்தின் காரணமாக பண்டிதர் திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் அடிப்படை இசை பயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை பயின்றிருக்கிறார். (இந்த நாதஸ்வர வித்வானின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை). அதேபோல தஞ்சாவூரிலிருந்த ஒரு இசை அறிஞரிடம் இந்துஸ்தானி இசையும் பயின்றுள்ளார் பண்டிதர். இசை நிகழ்ச்சிகள் நடத்தவில்லையாகிலும் பல ராகங்களை மிகவும் எளிதாகப் பாடும் பயிற்சியை தன் பிற்கால ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு கற்றறிந்துள்ளார் பண்டிதர்.


அவர் காலத்தில் வாழ்ந்த வள்ளலார், மாயூரம் தேசிக விநாயகம் பிள்ளை, வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் போன்றவர்களின் தொடர்பினால் அந்த ஆர்வம் மேலும் கொழுந்து விட்டு படர்ந்திருக்கிறது. உ.வே.சாமிநாதய்யர் பிற்காலத்தில் சிலப்பதிகார நூலைப் பதிப்பித்த போது அதில் வரும் தமிழிசையின் கூறுகளை அவருக்கு விளக்கி அரங்கேற்றுக்காதையில் பொதிந்துள்ள வழக்கொழிந்த சொற்களையும் பல அரிய தகவல்களையும் அரும்பத உரைக்காரர் மற்றும் அடியார்க்கு நல்லார் உரைகள் மூலம் அவருக்கு விளக்கினார் பண்டிதர்.


நடுவயதுக்குப் பின்னர், தன்னுடைய மருத்துவத் தொழிலின் பரபரப்புக்கு இடையில் இசை கற்க முனைந்திருக்கிறார் பண்டிதர். இதற்கு இடையில் 1901ல் தஞ்சையில் தமிழறியுஞ்சங்கம் என்கிற அமைப்பினை நிறுவி தன்னுடைய மக்களையும், உற்றார் உறவினர்களையும் உறுப்பினர்கள் ஆக்கி அவர்களுக்குக் கட்டுரைகள் எழுதுதல், சொற்பொழிவாற்றுதல், இசைபயிலுதல், நாடகங்களை அரங்கேற்றுதல் போன்ற பல நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலைகளிலும் மிடற்றிசை, யாழிசை, கின்னரி இசை, மேல்நாட்டு இசை, கதாகாலட்சேபம் போன்றவைகளில் தக்க ஆசிரியர்களை நியமித்து தமிழறியுஞ்சங்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு பல கலைகளைப் பயில வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்.


இந்த வகுப்புக்களின் போது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்ட பிறமொழி கீர்த்தனைகளின் புரிபடாத்தன்மையால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லாது அமைந்ததைக் கண்டு வருந்தியிருக்கிறார் பண்டிதர். இதுவே பின்னாளில் அவருக்குத் தமிழிசை குறித்த ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு வழிவகுத்திருக்கிறது. தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாக அவரை செயல்படவைத்திருக்கிறது.


இதில் பண்டிதர் உடனடியாக செய்தது என்னவென்றால், குழந்தைகளுக்கான அந்த வகுப்புக்களில் பாடப்பட்ட தெலுங்கு, சம்ஸ்கிருத கீர்த்தனைகளுக்கு தமிழ்வடிவம் அமைத்து அந்தப் பிறமொழி கீர்த்தனைகள், வர்ணங்கள், ஸ்வரகதி போன்றவைகளை தமிழில் மொழிபெயர்த்து பாக்களை இயற்றினார். பிற்காலத்தில் இவ்வாறு 15 வர்ணங்கள், 25 ஸ்வர கதிகள், இருநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் ஆகியவற்றுக்குத் தமிழ்ப்பாக்களை இயற்றி சுமார் ஒரு நூறு பாடல்களுக்கு பாலை, கேள்வி, பாணி (சுருதி, ஸ்வரம், லயம்) போன்ற குறிப்புக்களுடன் கருணாமிருதசாகரத் திரட்டு என்கிற இசைப்பாநூலை 1907ல் வெளியிட்டார்.


யதார்த்தமான கலையின் மீது காதல் கொண்ட நெஞ்சத்தால் சும்மா இருக்க முடியாது. பண்டிதர் ஓரிடத்தில் ''மற்றொருவர் இயற்றிய இசைப்பாக்களிலுள்ள பண்ணாளத்திகளாகிய வர்ணமெட்டுக்களில் வேறொருவர் தமிழ்ப்பாக்களை அமைத்துப்பாடுவது இரவல் சீலையை உடுத்துக் கொண்டு கலியாணப்பந்தலில் மினுக்குதலை ஒக்கும்"" என்று குறிப்பிடுகிறார். இது அவரை நீண்ட காலம் உறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.


கலைகளில் மேன்மையை நாடும் எந்த மனத்தினாலும் சும்மா இருக்க முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். பண்டிதரின் ஆர்வம் இசை ஆய்வுகள் குறித்த திசையில் பயணித்திருக்கிறது. எனவே பண்களில் பண்ணாளத்திகளை இயற்றும் விதிமுறைகளை அறிந்து கொள்ள முனைந்தார். தமிழ் இசையியலை மறுகண்டுபிடிப்பு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். தெலுங்கில் இருந்த இசைக்குறிப்புக்களுக்கும் தமிழில் மரபுவழியாகப் பயிலப்பட்டு பாடப்பட்ட இசைக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருப்பதைக் கண்டார். இதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு ஐந்து வருட காலத்தில் சுமார் ஆறு இசை மாநாடுகளை அவர் தஞ்சையில் நடத்தியிருக்கிறார். தன்னுடைய மருத்துவத்தொழில் மூலம் கிடைத்த வருமானத்தை இதற்காக செலவு செய்தும் சில சமயங்களில் தன்னுடைய சில சொத்துக்களை விற்றும் இந்த இசை மாநாடுகளை அவர் நடத்தியிருக்கிறார். இம்மாநாடுகளை நடத்துவதற்காக சங்கீத வித்யா மஹாஜன சங்கம் என்னும் அமைப்பினை தஞ்சையில் நிறுவினார். இந்த சங்கீத வித்யா மஹாஜன சங்கத்தில் கோனேரிபுரம் வைத்யநாத அய்யர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர் போன்றோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். இப்படி பல்வேறு பாடகர்களையம் இசை நிபுணர்களையும் இம்மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். இதற்கான அனைத்தையும் தன் சொந்த செலவில் செய்தார். அந்த மாநாடுகளின் அடிப்படையில் இசை குறித்த தன்னுடைய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.


பரதரின் 'நாட்டிய சாஸ்திரம்" சாரங்கதேவரின் 'சங்கீத ரத்னாகரம்" முதலிய பிறமொழி நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இல்ககியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத் தமிழ்நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் தன் ஆய்வுகளில் இவைகளையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைகுறித்த செய்திகள், இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய கர்நாடக இசை ராகங்கள்தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வுகள் மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டுபண்ணும் முறை, பாடும் முறை ஆகியற்றை பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து செயல்முறையிலும் விளக்கிக்காட்டினார்.


முதலில் பண்டிதர் ஆய்வுகளை சுரம் குறித்த அடிப்படைகளை ஒட்டித் தொடங்கினார். வேங்கடமகியின் "சதுர்த்தண்டி பிரகாசிகை" என்ற நூலில் 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இங்குள்ள சங்கீதம் அறிந்த பெரியவர்களுக்கு தெரிந்திருக்கும். மேளகர்த்தா என்பது தமிழிசையில் தாய்ப்பண். அதாவது அடிப்படை ராகம் என்று பொருள். இன்னும் விளங்கச் சொல்லவேண்டுமென்றால் பிற ராகங்களைப் படைக்கும் தன்மை உடைய மூல ராகம். (பநநெசயவiஎந) இந்த மேளகர்த்தா ராகங்களிலிருந்து பிறந்தவை ஜன்யராகங்கள். இந்த 72 மேளகர்த்தா ராகங்களில் 16 சுத்த மத்திம ராகங்களும் 16 பிரதி மத்திம ராகங்களும் மட்டுமே மேளகர்த்தா ராகங்களாக விளங்கக்கூடிய தகுதி உண்டு என்று பண்டிதர் கண்டுபிடித்துச் சொன்னார். பிற ராகங்கள் உண்மையில் நடைமுறையில் இல்லை. பாடினால் சுகமாகவும் இல்லை. புது ராகங்களை உருவாக்கும் விரிவுடனும் இல்லை என்று நிரூபித்தார். எனவே அடிப்படை சுருதிகளை ஒட்டி பண்டிதரின் ஆய்வுகள் அமைந்திருந்தன.


அடுத்தபடி ராகபுடம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார் பண்டிதர். இசை ஆய்வாளர் மம்மது தன் சொல்புதிது பேட்டியில் சொல்கிறார் - ''நம்முடைய மரபிலே ராகங்கள் எப்படி உருவாகின்றன. எப்படி ராக சஞ்சாரம் செய்யலாம் என்று முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் பண்டிதர் அவர்களே. உள்மையில் அவருக்குமுன் ராக சஞ்சாரம் குறித்து ஒரு மரபான திறமை மட்டுமே நமக்கு இருந்தது. சுவரங்கள் ஏன் எதற்கு ஒரு குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரியாது. அதை பண்டிதர் கண்டுபிடித்து சொன்னார். அதை அறியாததனாலேயே நம்முடைய இசையில் முன்னகர்வு இல்லாமல் இருந்தது. புதியபுதிய சாத்தியங்கள் அருகி காணப்பட்டன. பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஒரு ராகத்தை ஆலாபனை செய்தால் அலுப்பு ஏற்படும் நிலைமை இருந்தது. ராகபுடை முறையை பண்டிதர் கண்டறிந்தபோது ஒன்று தெளிவாகியது. அது காலம் காலமாக தமிழில் இருந்து வந்ததுதான். அதாவது இந்த ராகங்கள் அனைத்துமே தமிழ் மரபில் உள்ளவை" (சொல்புதிது: இதழ்-3)


தன் இசை ஆய்வுக்காக ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத்தேர்ந்தார். பியானோ, ஆர்கன் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். வீணையையும் பியானோவையும் ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தார். தோழர் மம்மது தன் பேட்டியில் கூறுகிறார் - வீணையில் 12 பாண மெட்டுக்கள் 12 ஸ்வரஸ்தானங்கள் உண்டு. பியானோவிலும் அப்படித்தான். பியானோவில் கீழ் வரிசையில் உள்ள வெள்ளக்கட்டைகளை மட்டும் வரிசையாக அழுத்தி வர சங்கராபரணத்துக்கான சுவரக்கோர்வை வரும். வீணையில் அப்படி நேர் ஸ்வரங்களை மீட்டினாலும் சங்கராபரணம்தான் வரும். கிறிஸ்துவப்பாடல்கள் பொதுவாக பியானோ, ஆர்கன் முதலியவற்றில் வாசிப்பதற்காக இசையமைக்கப்பட்டவை. பல கிறிஸ்தவப்பாடல்கள் சங்கராபரண ராகத்தில் அமைந்துள்ளன. கிறிஸ்துவ தேவாலயங்களில் வாசிக்கப்படும் இசையில் அதிக அளவு சங்கராபரணம் உள்ளதை குறைந்த அளவு சங்கீத பரிச்சயம் உள்ளவர்களும் கூட மிகவும் எளிதாகக் கண்டுபிடிக்கலாம். மேற்கத்திய இசையில் சங்கராபரண சுவரங்களை ஸி மேஜர் என்று அழைப்பார்கள். தமிழிசையில் சங்கராபரணத்தை செம்பாலை என்கிறார்கள். இந்த செம்பாலைதான் மேற்கத்திய இசைக்கும் அடிப்படை என்று பண்டிதர் நிறுவினார். பொதுவாக அனைத்து இசைகளுக்கும் அடிப்படைப்பாலை இந்த சங்கராபரண சுவரக்கோர்வைகள்தான். தமிழிசையிலும் அடிப்படைப்பாலையாக செம்பாலையைத்தான் கைக்கொள்கிறார்கள்.


அதேபோல தமிழிசையே வடக்கில் இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 1916ல் பரோடாவில் நடைபெற்ற இசைமாநாட்டில் கலந்து கொண்டு இதுகுறித்த தன்முடிவுகளைப் பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புக்களை இவரது இரு புதல்விகள் வீணையில் இசைத்து நிரூபித்துக் காண்பித்தனர். இது குறித்து 1916 மார்ச் 29 இந்து நாளிதழில்

''ஒரு ஸ்தாயியில் வெகுகாலமாய் வழங்கி வரும் 22 ஸ்தானங்களுக்குப் பதிலாக 24 சுரஸ்தானங்கள் இருக்கின்றன என்று ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரவர்கள் சொல்லியிருப்பதை ரூபாகரப்படுத்தினதானது எல்லோரது மனத்pலும் ஒருவிதக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. அந்த சுருதிஸ்தானங்களை வீணையின் மூலமாகவும் வாய்ப்பாட்டின் மூலமாகவும் அவர்கள் குமாரத்தி மரகதவல்லியம்மாள் ருசுப்படுத்தினதானது எல்லோருக்கும் பரம சந்தோஷத்தை உண்டு பண்ணியது. அதில் ஒருவராவது குற்றம் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒவ்வொருவரும் அந்த ஸ்வரஸ்தானங்களைக் கேட்டு மகிழ்ந்தது மல்லமல் அந்த அம்மாளின் சாரீரத்தையும் கேட்டு மகிழ்ந்தார்கள்.பண்டிதரின் இந்த பரோடா மாநாட்டு உரையைக் குறித்து மைசூர் வைணிக சிகாமணி வீணை சேஷண்ணா, விஜயநகர அரசவை இசைக்கலைஞர் வெங்கட்ராமானந்தர், மற்றும் பரோடாவின் திவான் போன்றவர்கள் ஆதரித்தாலும் சி.ஆர் ஸ்ரீனிவாச அய்யங்கார், பண்டிட் சுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் தங்களின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.


இப்படியாகத் தன்னுடைய பதினைந்து ஆண்டுக்கால பெரும் உழைப்பின் விளைவாக இசை ஆய்வுகளைத் தொகுத்து தன் வாழ்நாள் சாதனையாக கருணாமிருத சாகரம் என்கிற ஒரு அற்புதமான நூலை 1917ல் தன்னுடைய சொந்த அச்சகத்தில் தன் சொந்த செலவில் பதிப்பித்தார். 1395 பக்கங்களை உடைய இந்த நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வாளர்களுக்கு மிகப்பெரும் பொக்கிஷமாக பயன்பட்டு வருகிறது. அகத்தியம், இந்திரகாளியம், குணநூல், கூத்த நூல், சயந்தம், செயிற்றியம் போன்ற பல வழக்கொழிந்த நூல்கைளப்பற்றிய குறிப்புக்களும் கருணாமிருதசாகரத்தில் கிடைக்கப்பெறுகின்றன. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பினையும் பண்டிதரே செய்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுகுறித்து உறுதியான சான்றுகள் எதுவும் என்னிடம் இல்லை.


ஆபிரகாம் பண்டிதர் தொடக்கி வைத்த விவாதங்கள் இசையரங்குகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மதுரை பொன்னுசாமி பிள்ளை, சென்னை வீரபாண்டியன், மற்றும் முனைவர் கௌசல்யா, வீபகா.சுந்தரம் போன்ற அறிஞர்கள் பண்டிதர் குறிப்பிட்ட 24 சுருதிகள் அடிப்படையில் சாத்தியமாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படாது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.


31-8-1919ல் பண்டிதர் உயிர் நீத்தார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது புதல்வி திருமதி மரகதவல்லி துரைப்பாண்டியன் கருணாமிருத சாகரம் இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார். பண்டிதரின் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய மூத்த மகன் சுந்தரபாண்டியன் அவரது இசைநூல்களை பிழைதிருத்தம் செய்து வெளியிட்ட இசை ஆய்வாளர். இன்னொரு மகன் திரு வரகுணபாண்டியன் பாணர்கை வழி என்னும் இசைநூலை வெளியிட்டவர். இந்த நூல் தமிழ்ச்சங்க நூலகத்தில் உள்ளது.


தமிழில் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத்தினைத் தொடர்ந்து விபுலானந்தர் இயற்றிய யாழ்நூல், கு.கோதண்டபாணிபிள்ளை இயற்றிய பழந்தமிழ் இசை, கு.கோதண்டபாணிபிள்ளை இயற்றிய ஐந்திசை விளக்கம், இசைப்பேரறிஞர் எஸ்.ராமநாதன் இயற்றிய சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம், சிலப்பதிகாரத்து இசைத்தமிழ், சாம்பமூர்த்தி அவர்களின் தென்னிந்திய இசை, வி.ப.க.சுந்தரம் அவர்களின் தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழ் இசைக் களஞ்சியம், கோமதி சங்கரன் எழுதிய இசைத்தமிழ் இலக்கண விளக்கம் டாக்டர் சேலம் விஜயலட்சுமி எழுதிய சிலப்பதிகாரத்தில் இசைச் செய்திகள் போன்ற அற்புதமான நூல்கள் பண்டிதரைத் தொடர்ந்து தமிழிசை ஆய்வாளர்களுக்கு பயன்பட்டு வருகின்னறன. இவர்களுக்கு அடித்தளம் அதை;துத் தந்தவர் ஆபிரகாம் பண்டிதர். மதுரையில் தற்போது தமிழிசை ஆய்வாளராக உள்ள திரு.மம்மது அவர்களும் ராஜபார்ட் நடிகர் ராஜாமுகம்மது அவர்களும் பல அரிய செய்திகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றனர். இவர்களையும் தமிழ் சமூகம் புறமொதுக்கியே வைத்துள்ளது.


மறைக்கப்பட்ட தமிழிசை வரலாற்றின் மறுபிறப்புக்குக் காரணமானவர் ஆபிரகாம் பண்டிதர்தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. பண்டிதரின் கருணாமிருத சாகரம் இன்றும் இசை ஆய்வு செய்யும் யாராலும் முதலில் மேற்கோள் கொள்ளப்படும் நூலாகும். சொல்புதிது இதழில் ராஜபார்ட் நடிகரும் தமிழிசைப்பாடகருமான ராஜாமுகமது சொல்வது போல பல தமிழறிஞர்களுக்கு ஆபிரகாம் பண்டிதரின் இடம் என்ன என்றே தெரியவில்லை. அவருடைய நூல் கருணாமிருத சாகரம் ஒரு அடிப்படை ஆய்வு என்றும் புரியவில்லை.


பிற்காலத்தில் தமிழிசை என்ற பெயரில் தமிழில் பாடப்படும் கர்நாடக இசைக்காக ஒரு இயக்கத்தினை நடத்தியதாக கொண்டாடப்பட்டு வரும் கல்கியும் ராஜாஜியும் மறந்தும் கூட எங்கும் பண்டிதரின் பெயரினை உச்சரிக்கவில்லை. தமிழிசை ஆய்வுக்காகவே தன் பொருளையும் ஆயுளையும் அர்ப்பணித்த ஆபிரகாம் பண்டிதரும் அவரைத் தொடர்ந்து யாழ்நூல் எழுதிய விபுலானந்த அடிகளாரும் எந்தத் தமிழ்பாட்டுக்காரர்களின் கடைக்கண் பார்வையில் பாக்கியத்தினை அடைந்ததில்லை. அதே போல

தமிழையே தன் மூச்சாக பல்லாண்டுகளாக சுவாசித்து வருவதாக பாவனை செய்து வந்து தமிழ்க்கலாச்சாரத்துக்கு இன்றைய அதன் அசிங்கமான முகத்தை வழங்கிய பெருமையும் புண்ணியமும் கொண்ட திராவிட இயக்கத் தலைவர்களும் கலைஞர்களும் பொதுவுடமை வீரர்களும் சிறுபத்திரிகை பேரறிஞர்களும் பண்டிதர் குறித்து சொல்லக்கூடிய அளவில் இந்த சமூகத்துக்கு ஏதும அறிமுகங்கள் செய்து வைக்கவில்லை. பல்லாண்டுகளாக

இது மிகவும் கசப்பான வரலாற்று உண்மையாகும். இது போன்ற பல கசப்பான உண்மைகளை பல நிலைகளிலும் விழுங்கித்தான் தமிழ்த்தாய் தன் கலைக்கு வளம் சேர்த்துக்கொண்டு வருகிறாள்.

நன்றி. வணக்கம்.

ஆபிரகாம் பண்டிதர் குறித்த பல அடிப்படைத்தகவல்களை எனக்கு நண்பர் அனந்தகிருஷ்ணன் வழியாக அனுப்பி வைத்து உதவிய தமிழிசை ஆய்வாளர்
மம்மது அவர்களுக்கு என் நன்றிகள்.

இதில் நான் உபயோகப்படுத்திய நூல்களின் பட்டியலை நேரம் கருதிப்படிக்கவில்லை. அந்த எல்லா நூலாசிரியர்களுக்கும் இணையதளங்களில் கட்டுரைகள் எழுதியவர்களுக்கும் என் நன்றிகள்.
ஆபிரகாம் பண்டிதர் குறித்தும் தமிழிசை வரலாறு குறித்தும் ஒரு விரிவான கருத்தரங்கினை தில்லித்தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்தால் அது இங்குள்ள பல இசை ஆய்வாளர்களுக்கும் இசைவாணர்களுக்கும் மிகவும் பயன்வாய்ந்ததாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. தென்னகத்திலிருந்து இசை ஆய்வாளர்களை வரவழைத்து கருத்துச்செறிவு மிகுந்த ஆய்வுக்ட்டுரைகள் வாசிக்கப்படும் கருத்தரங்குக்கான திட்ட வரைவு வரையப்படவேண்டும்.


தமிழிசை அறிஞர் மம்மது மற்றும் ராஜாமுகம்மது போன்றவர்கள் தலைநகருக்கு அழைக்கப்படவேண்டும். எல்லாம் வல்ல இறைவனும் எல்லாம் அறிந்த சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மனது வைக்கவேண்டும்.

பிரார்த்தனையில் எனக்கு நம்பிக்கை உண்டு. நன்றி.

No comments:

Post a Comment