Tuesday, June 19, 2007

சனிமூலை கட்டுரை
ராகவன் தம்பிகடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக, தில்லி போலீசார் தலைநகரின் வாகன ஓட்டிகளைப் பின்னித் தலைவாரிப் பேயடிக்கிறார்கள். ஒவ்வொரு போக்குவரத்துக் காவலரும் ஏதோ காலையில் தூங்கி எழுந்ததும் கோயிலுக்குப்போய் ""இன்று அதிகமான பேர் தவறு செய்து மாட்ட வேண்டும். அப்படி மாட்டினால் பக்கத்து வீட்டுக்காரன் பிள்ளைக்கும் சேர்த்து மொட்டை அடிக்கிறேன்'' என்று பெருமாளிடம் வேண்டிக் கொண்டு நிற்பதைப் போன்ற முகபாவனையுடன் தெருமுனைகளில் நிற்கிறார்கள். துள்ளித் துள்ளிப் பாய்ந்து பாய்ந்து ஓடி ஓடி குதித்துக் குதித்து அபராதச் சீட்டுக்களைக் கிழித்தெறிந்து வாகன ஓட்டிகளின் கைகளில் திணிக்கிறார்கள். யாராவது அந்தப் போக்குவரத்துப் போலீசின் கனவில் முந்தின இரவில் போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் அந்த எண்களையும் கூடக் குறித்து வைத்துத் துரத்திப் பிடிப்பது போல தலைநகரின் தெருவெங்கும் அலைகிறார்கள்.
தலைநகரம் எப்போதும் பெரிய இடங்களுடன் தொடர்பு உள்ளவர்கள் ஓங்கிச் செழிக்கும் நகரம். இந்திரா பார்த்தசாரதிதான் என்று நினைக்கிறேன். ஒரு புதினத்தில் எழுதியிருப்பார். தில்லியின் ஏதாவது ஒரு தெருமுனையில் நின்று எந்தத் திசையை நோக்கியாவது ஒரு செங்கல்லை ஓங்கி எறிந்தால் அது கண்டிப்பாக யாராவது ஒரு இணையமைச்சரின் மேல்தான் விழும் என்று. (வார்த்தைகள் சரியாக அப்படியே தரவில்லை. ஏறக்குறைய இந்த மாதிரி இருக்கும். நினைவில் வைத்து எழுதுவதால் கொஞ்சம் சொதப்பி இருக்கலாம்). இந்திரா பார்த்தசாரதி இப்படி எழுதியது எழுபதுகளின் இறுதி. அல்லது எண்பதுகளின் துவக்கமாக இருக்கலாம். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது எல்லோரையும் குதூகலமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம், வெள்ளை வேட்டி கட்டியவர்களுக்கெல்லாம், நேரு ஷெர்வாணி போட்டிருந்தவர்களுக்கெல்லாம் இணையமைச்சர் பதவியை வாரி வழங்கினார். அப்போது எங்கே பார்த்தாலும் யாராவது ஒரு இணையமைச்சர் அல்லது அவருடைய ஜால்ரா எங்காவது யாரிடமாவது எதற்காவது தகராறு செய்து கொண்டிருப்பார்.
அதே போல இன்றும் பல இடங்களில், ஏதாவது ஒரு அமைச்சருக்கும், அவருடைய உதவியாளருக்கும், அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும், அவருடைய கள்ளக் காதலிக்கும், என்றோ ஒருநாள் அந்த அமைச்சருடன் ரயிலில் பயணித்தவர் என்று சொல்லிக்கொண்டு யாரோ ஒருவர் ஏதாவது ஒரு போலீசுடன் எங்காவது ஒரு மூலையில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருப்பார்கள். ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ஒரு புதினத்தில் வருமே அது போல, "All are equal,but some are more equal" என்கிற விஷயம் தலைநகரின் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இப்போது அந்தக் கதை எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. யாராவது விதி அல்லது மதி கெட்டுப்போய் ஒரு சிறிய அளவில் போக்குவரத்து விதியை மீறி இருந்தாலும் வண்டியை நிறுத்தும் முன்னரே அபராதச் சீட்டை அவசரமாக எழுதிக் கிழித்துத் தயாராக வைத்துக்கொள்கிறார்கள் காவலர்கள். அப்படி விதியை மீறியவர் தனக்கு வேண்டிய பெரிய அதிகாரி அல்லது அமைச்சரின் உதவியாளரை உதவிக்குக் கூப்பிட்டு தொலைபேசியை அந்த அதிகாரியின் கையில் கொடுத்தாலும் அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே ""அபராதச் சீட்டைக் கிழித்துவிட்டேன். என்னால் ஒன்றும் செய்யமுடியாது. சிறிய தொகைதான். கொடுத்துவிடச் சொல்லுங்கள். அடுத்தமுறை நான் கொஞ்சம் (!) ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன்öö என்று படுபிரமாதமாக அல்வாவை சாலையோரத்திலேயே கிண்டி மிகச் சூடாகப் பறிமாறிவிடுகிறார்கள்.
ஒரு காலத்தில் வாகன ஓட்டிகளான நாங்களும் ரொம்பவும் தான் ரவுசு செய்து கொண்டிருந்தோம். வாகன விதிகளும் சாலை விதிகளும் எங்களுக்காக சமைக்கப்பட்டவை அல்ல என்னும் இறுமாப்பு எப்போதுமே எங்களைத் தொடர்ந்து வந்தது. அதுவும் சில முக்கியமான அமைச்சகங்களின் அடையாள அட்டை சட்டைப்பையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஒரு தைரியம் இருந்து கொண்டிருந்தது. அப்படி ஏதாவது விதிமீறல்களின் அடிப்படையில் காவலர்கள் வண்டியை நிறுத்தச் சொன்னால் உடனடியாக அந்த அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்து உடனே இடத்தைக் காலி செய்து கொண்டிருந்தோம் எங்களில் பலர். ஒரு சில காவலர்களுக்கு அந்த பேதமெல்லாம் கிடையாது. அவர்கள் எல்லோரையும் ஆண்டவனின் குழந்தைகளாகப் பாவித்து எல்லோரிடமும் வர்ஜா வர்ஜியமில்லாமல் பணவசூல் செய்து கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் அந்த அமைச்சகத்தின் அமைச்சர்களே எங்களைப் போல வாகனத்தைத் தவறாக ஓட்டி வந்து மாட்டியிருந்தாலும் அவர்களிடமும் ஒரு ஐம்பது ரூபாயாவது வாங்காமல் விட்டிருக்க மாட்டார்கள் சில விடாக்கொண்டர்களான காவலர்கள்.
ஒரு முறை சென்னையில் ஒருவழிப்பாதை என்று நிஜமாகவே தெரியாது வண்டியை ஓட்டி உள்ளே சென்றுவிட்டேன். காவலர் ஒருவர் பிடித்துவிட்டார். முதலில் நான் வெளியூர்க்காரன் என்றும் நுழையும்போது அந்த அறிவிப்புப் பலகையைப் பார்க்காததால் அப்படி ஒரு தவறு நேர்ந்து விட்டது என்றும் சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கிற மாதிரி இல்லை. ஒரு சில காவல் உயர் அதிகாரிகளின் பெயர்கள் எனக்குத் தெரியும். அவர்கள் பெயரைச் சொல்லித் தப்பிக்கலாமா என்று பார்த்தேன். விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு என்னை அவ்வளவாகத் தெரியாது. எனவே, அவர்களை எதற்கு வீணாகத் தொந்தரவு செய்ய வேண்டும் என்று நினைத்து என்னுடைய அலுவலக அடையாள அட்டையை எடுத்துக் காட்டினேன். நான் காட்டியது உண்மையாகவே வெளியூர்க்காரன் நான் என்பதை நிரூபிக்கத்தான். அந்தக் காவலர் அதை மிகவும் தவறாக எடுத்துக் கொண்டார். ""என்னை என்ன பயமுறுத்துறியா? டெல்லியிலே நீ என்னவா இருக்கே? அங்கேயிருந்து வந்த ஒரு அமைச்சருக்கே போனவாரம் என்ன ஆச்சின்னு பார்த்தே இல்லே? எதுக்கு உனக்கு இந்த வேலையெல்லாம்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். சில வேளைகளில் சிலரின் சிரிப்புக்கூட நடுமுதுகுத்தண்டில் ஒருமாதிரியான சிலிர்ப்பினை ஏற்றும். எனக்கும் சிலிர்ப்பு ஏகத்துக்கும் ஏறியது. சரி. சிறிய ஒரு போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு மத்திய அமைச்சரைப் போல அடிவாங்கவேண்டுமா என்ற சத்புத்தியுடன் அவர் கேட்ட தொகையை எடுத்துக்கொடுத்து விட்டு அவசர அவரசமாக வேண்டுமென்றே அவர் எழுதாத அபராதச் சீட்டைக் கூட வாங்கிக் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தேன்.
பாதை மாறுகிறது அல்லவா? சரி. தில்லிக்கு மீண்டும் வருவோம்.
தில்லியின் வாகன ஓட்டிகளான எங்களுக்கு சரியான கிளைப் பாதைகளில் வண்டியை ஓட்டிச் செல்வது என்பது இதற்குமுன் பல ஆண்டுகளாகக் கைவராத ஒரு விஷயம். ஒரு நாற்சந்தியில் வலப்புறமாகத் திரும்ப வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். வம்படியாக வண்டியை இடது ஓரத்தில்தான் நிறுத்தி வைத்துக் கொள்வோம். பச்சை விளக்கு விழுந்தவுடன் அழிச்சாட்டியமாக வண்டியை வலதுபுறமாகக் கொண்டு செல்வோம். பின்னால் இருக்கும் பல வாகன ஓட்டிகளின் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் ஏற்றி விட்ட ஒரு திருப்தி உள்ளுக்குள் இருக்கும். பின்னால் வரும் வாகன ஓட்டி சரமாரியாகத் திட்டுவான். குடும்பத்தில் உள்ள பெண்களையும் ஊரில் உள்ள பெண்களையும் சரமாரியாகத் திட்டுவான். ஆனால் அதுவெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது. ஆனாலும் சிரித்துக்கொண்டே எல்லோரையும் தொந்தரவு செய்வதில் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தோம்.
ஒரு முறை தில்லியின் ஒரு நாற்சந்தியில் சிகப்பு விளக்கு எரிந்ததும் எல்லா வண்டிகளும் நின்றன. ஒரு காரில் சுமார் ஏழு பையன்கள் அடைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அந்த நிறுத்தத்தில் ஸ்கூட்டர் ஓட்டி ஒருவர் இடதுபுற ஓரமாக மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தப் பையன்கள் உட்கார்ந்திருந்த காரின் இடது பக்கக் கதவைக் காரணமே இல்லாமல் ஒரு பையன் திறந்து மூடினான். ஸ்கூட்டர்காரர் நிலைதடுமாறிப் போனார். பதறிக்கொண்டே வண்டியைக் கிறீச்சிட்டு நிறுத்தினார். நிறுத்திய வேகத்தில் அந்தப் பையன்களைப் பார்த்துக் கத்தினார், ""உங்களுக்கு அறிவு ஏதாவது இருக்கா?'' உள்ளேயிருந்து ஒரு பையன் ""இவ்வளவு இருந்தா போதுமா பாரு'' என்று சொல்லிக்கொண்டே நீளமாக ஒரு பிச்சுவாக் கத்தியை அவர் முகத்தின் எதிரில் நீட்டினான். ஸ்கூட்டர் ஓட்டி மட்டுமல்ல. நிறுத்தத்துக்காக அங்கங்கு நின்று கொண்டிருந்த நாங்கள் எல்லோருமே பயத்தில் உறைந்து போனோம். அந்த ஸ்கூட்டர் ஓட்டி பதறிக்கொண்டே போய் நாற்சந்தியில் நின்றிருந்த ஒரு காவலரை அழைத்து விஷயத்தை சொன்னார். அவர் சொல்லச்சொல்ல விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியது. பையன்கள் இருந்த கார் காற்றைக் கிழித்து விரைந்தது. போகும் வேகத்தில் அந்தப் பையன்கள் ஸ்கூட்டர் ஓட்டியின் சகோதரியை மிகவும் பெரிய கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப்போனார்கள். அந்தக் காவலர் சிரித்துக்கொண்டே சொன்னார், ""ஏதோ இதுவரைக்கும் தப்பிச்சது நீங்க பண்ண புண்ணியம்னு எடுத்துக்கங்க. இந்நேரம் உங்களைப் போட்டுத் தள்ளியிருந்தா நீங்க எங்கே இருந்திருப்பீங்க? இந்த மாதிரிப் பசங்க கிட்டே எல்லாம் அதிகம் வச்சிக்காதீங்க என்று அன்புடன் தைரியமும் ஆறுதலும் சொல்லி அனுப்பினார்.
அதேபோல, தலைநகரின் ப்ளூலைன் பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில் விரிவாக எழுதவேண்டும். இவர்களைப் போலப் போக்குவரத்தை மீறுபவர்கள் உலகத்திலேயே எங்கும் இருக்கமாட்டார்கள். காசு கொடுத்துப் பயணம் செய்யும் பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள். இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு தொங்கிக் கொண்டே இருக்கும். இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எதுவும் கிடையாது. என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது ""வண்டி கிருஷ்ணகிரி போகுமா?'' என்று கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின்அவசரமாகக் கையை இழுத்து ""போகும் போகும். சீக்கிரம் ஏறு'' என்று வண்டிக்குள்ளே தூக்கிப் போட்டுக் கொள்வான். பத்து ரூபாய்க்குப் பயணச் சீட்டு கிழித்துக் கொடுப்பான். வண்டி கொஞ்ச தூரம் போனதும் நிறுத்தி அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான். ""இப்படியே கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும். அதுலே ஏறிப்போனா நீ சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்.'' அந்த ப்ளூலைன் வண்டியின் ஓட்டுனன் ஏமாளிப் பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால் புது தில்லி ரயில் நிலையம் வரும். இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன் பேருந்துகளின் பராக்கிரமம். இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ப்ளூலைன் பாதகர்கள் நாற்சந்திகளில் எப்போதும் சரியான பாதைப்பிரிவில் வண்டிகளை நிறுத்தியது கிடையாது.
இப்போது அதுபோலப் பாதைப் பிரிவுகளை மாற்றி நிறுத்துவதோ அல்லது நாற்சந்திகளில் நிறுத்தக்கோடுகளைத் தாண்டி வண்டிகளை நிறுத்துவதோ உடனடித் தண்டனைக்கு உள்ளாகும் அபராதங்களாக மாறிவிட்டன. அங்கங்கே அபராதம் விதித்து அபராதத் தொகைகளும் அங்கேயே வசூலிக்கப்படுகின்றன. இபபோது எல்லோரும் சரியான பாதைப்பிரிவுகளில் நிறுத்தக் கோடுகளுக்கு உட்பட்டு வண்டிகளை நிறுத்துகின்றனர்.
அதே போல ஒரு காலத்தில் எல்லாக் கார்களிலும் ஒரு மாதிரியான கருப்பு வண்ணத்தில் ஃபிலிம்கள் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டப்பட்ட கார்களில் உள்ளே இருந்து வெளியில் இருப்பது பார்வைக்குத் தெரியும். உள்ளேயிருப்பது வெளியில் இருந்து எதுவும் தெரியாது. இந்த வசதியை சிலர் கெட்ட காரியங்களுக்கு உபயோகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்படிப் ஊடுருவு பார்வை மங்கலாக்கப்பட்ட வாகனங்களில் ஓரிருமுறை பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அதில் ஓரிரண்டு அயல்நாட்டுப் பயணிகளும் இரையானார்கள். அப்போதிருந்து தில்லிப் போலீசார் கண்ணாடிகளில் ஃபிலிம்கள் ஒட்டப்பட்ட கார்களை நிறுத்தி அபராதம் விதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் பலர் தொடர்ந்து விதிமீறல்களில் விருப்பத்துடன் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்போது அந்தக் கதையெல்லாம் செல்லுபடியாகாது. துரத்தித் துரத்திப் பிடிக்கிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பல வாகனங்களும் மாட்டிக்கொள்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக சக வாகன ஓட்டிகளின் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் அதிகரிக்க, நாங்கள் வண்டியோட்டிக்கொண்டே கைப்பேசிகளில் பேசிக்கொண்டு திரிந்தோம். வண்டியை ஓட்டிக்கொண்டே வீட்டுக்குப் போன் செய்து தயிர் வேண்டுமா என்று கேட்பது போன்ற அற்பக்காரியங்கள் செய்து கைப்பேசி போன்ற அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அல்பத்தனமாக உபயோகித்தும், வேறு ஏதாவது தேவையில்லாத வம்புகளைப் பேசிக்கொண்டும் அவ்வப்போது விபத்துக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்துக்கொண்டிருந்தோம். இதற்கு எதிராகக் கொஞ்சம் கெடுபிடி வந்தது. தலைநகர் வாசிகளான நாங்கள் இதற்கெல்லாம் அசரவில்லை. காதில் பொருத்திக்கொண்டு பேசும் கருவிகளின் உதவியை நாடினோம். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ மறை கழண்டு போய் எங்களுக்கு நாங்களே பேசிக்கொண்டு போவது போலத் தோற்றமளிப்போம். இப்போது அதற்கும் வைத்துவிட்டார்கள் வேட்டு. காதில் பொறிகளை மாட்டிக்கொண்டு தனியாகப் பேசிக்கொண்டு சென்றாலும் உடனே நிறுத்தி ஒரு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறோம். இப்போது வாகனங்கள் ஓட்டும் போது காதில் ஒன்றும் மாட்டாமல் எங்களுக்கு நாங்களே கூட தனியாக எதையும் பேசிக்கொண்டு செல்ல முடியாது. வாகனங்கள் ஓட்டும்போது புகைபிடிக்க முடியாது. மது அருந்திவிட்டு வண்டியோட்ட முடியாது. மாட்டினால் பின்னிப் பிணைந்து விடுவார்கள்.ஆட்டோ ஓட்டிகள் சீருடை இல்லாமல் வண்டி ஓட்டினாலோ அல்லது பயணிகளிடம் தவறாக நடந்ததாக முறையீடுகள் வந்தாலோ உடனடியாகத் தண்டிக்கப்படுகிறார்கள். இப்போது போக்குவரத்துக் காவலர்கள் எப்போது, எங்கே, எப்படி, எதற்காக நிற்பார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. அப்படி வளைத்து வளைத்து அடிக்கிறார்கள். இதில் விளைந்த மிகப்பெரும் நன்மை என்னவென்றால் தலைநகரில் இப்போதெல்லாம் சாலை விபத்துக்கள் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன. ஒருவிதமான நிம்மதியுடன் வண்டியை ஓட்டிக்கொண்டும் வண்டிகளில் சவாரி செய்து கொண்டும் சற்றுப் பயம் குறைந்து காலம் தள்ள முடிகிறது.
இவை எல்லாவற்றையும் விட ஒருகாலத்தில் வண்டி ஓட்டும் உரிமங்களை மிகவும் எளிதில் வாங்கி விடலாம் என்ற நிலை இருந்தது. தில்லிக்குப் பக்கம் ஒரு ஊரில் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஸ்கூட்டர் ஓட்டும் உரிமத்துக்கு முன்னூறு ரூபாயும், கார் ஓட்டும் உரிமத்துக்கு ஐந்நூறு ரூபாயும் கனரக வாகனங்களுக்கு எழுநூறு ரூபாயும் தந்தால் போதும் என்று சொல்வார்கள். என் நண்பன் ஒருமுறை அப்படி ஏற்பாடு செய்யும் ஒரு மாமாவிடம், இரண்டாயிரம் கொடுத்தால் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் கிடைக்குமா? என்று நக்கலடித்து உதை வாங்க இருந்து தப்பித்தான். இப்போது தலைநகரில் ஒரு ஓட்டுனருக்கான உரிமம் வாங்குவது என்பது அத்தனை எளிமையான காரியம் இல்லை. பள்ளிப் பிள்ளைகளைப் போல பரிட்சை எழுத வைக்கிறார்கள். அப்போதே திருத்தி முடிவினை அறிவிக்கிறார்கள். நீங்கள் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் இந்த விதிமுறைகளில் இருந்து விடுபட முடியாது. தலைநகரின் யாரோ ஒரு பெரிய வீட்டின் பெண்ணோ அல்லது பையனோ அப்படியான தேர்வில் தேர்ச்சி பெறாததால் உரிமம் மறுக்கப்பட்டது என்று பேசிக்கொள்கிறார்கள். தலைநகரின் காவல்துறையும் போக்குவரத்துத் துறையும் இப்படிப் பல மாயங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
தலைநகரின் காவல்துறையில் பல தமிழர்கள் பல முக்கிய இடங்களில் தங்கள் பதவிகளுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். மாநகர்க் காவல் துறையின் உயர் அதிகாரிகளான ரங்கநாதனும், ஆனந்த மோகனும் ஜெகதீசனும் இன்னும் பல திறமைமிகு அதிகாரிகளும் தமிழர்களைத் தலைநகரில் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறார்கள். நான் மேலே சொல்லி வந்த மாயங்களிலும் மாற்றங்களிலும் இவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இந்த மாற்றங்கள் அத்தனையும் சமீபத்தில் தில்லி உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் என்கிறார்கள். எது எப்படியோ - தலைநகர் வாசிகளான எங்களை நெறிப்படுத்த வலுவான சாட்டைகள் புறப்பட்டிருக்கின்றன.
அந்த சாட்டைகளின் விறைப்பும் துடிப்பும் இப்படியே கொஞ்ச நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்றுதான் மனதாரத் தோன்றுகிறது.

1 comment:

 1. நான் தென் தில்லியில் வசிக்கிறேன். அலுவலகம் ஜவகர் பல்கலைக்க்குப் பக்கத்தில். போக்குவரத்து நெரிசல் எனப் பெரிதாய் சிக்கிக் கொண்டதில்லை. விமானநிலையம் போகும் வழியில் நாய் (NHAI)வேலை நடந்து கொண்டிருப்பதால் சில நேரம் தாமதமாவதுண்டு.

  என் பணி நிமித்தமாக க்ருஷி பவன், சாஸ்திரி பவன், சர்தார் வல்லபாய் படேல், போன்ற திருத்தலங்களுக்குச் செல்வதும் உண்டு. அங்கேயும் கூட போக்குவரத்துப் பிரசினைகளை சந்திப்பதில்லை.
  பொதுவாகவே தில்லி சாலைகள் விசாலமானவை. (இதைக் குறித்து தில்லி வந்த நாட்களில் ஒரு சென்னை வாசியாக நான் பொருமியதுண்டு)கரோல் பாக் போன்ற பகுதிகள், சில இடங்களில் உள்சாலைகள் விதிவிலக்கு.தில்லியின் ஆச்சரியங்களில் ஒன்று என்னவென்றால் அந்த மாநகருக்குள் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் மறைந்து கிடக்கும் கிராமங்கள். உதாரணம்: மெஹ்ருலி, மசூட்பூர். அங்கெல்லாம் சாலைகள் கிராம சாலைகளாகத்தான் இருக்கின்றன.

  பொதுவாகவே தில்லி அதிகாரம் படைத்தவர்களுக்கு, அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்குமாக உருவாக்கப்பட்ட நகரம். மற்றவர்கள் எல்லாம் இங்கே வெறும் துரும்பு.

  நகைச்சுவை இழையோட எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்
  அன்புடன்
  மாலன்

  ReplyDelete